யார் இந்தப் “பிள்ளை”

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.14, 2013.09.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக கண்டிறிந்து அலுவலகம் திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவரது இலங்கை விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஒருசில அரசியல்வாதிகளின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் மத்தியில் இவரது விஜயம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இவரது விஜயத்தின் பின்னர், இவரின் வரலாறு தொடர்பான கதையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. சிலர் இவரைத் தென்னாபிரிக்காவினைச் சேர்ந்தவர் எனவும், சிலர் இவரை இந்திய வம்சாவழி தமிழ் பெண் எனவும், சிலர் இவரைத் தமிழ் மக்களுக்குச் சார்புடையவர் எனவும்; கூறுகின்றனர்.தென்னாபிரிக்கப் பெண், இந்திய வம்சாவழி தமிழ் பெண், தமிழ் மக்களுக்குச் சார்புடையவர் எனப் பலரும் பலவாறு கூறினாலும் அவருடைய மனஉணர்வு,எண்ணங்கள்,சிந்தனைகள் யாவும் தென்னாபிரிக்க இனப்பாகுபாடு, பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்;றினால் பாதிக்கப்பட்டதாகவேயிருந்தது. அரசியல் காரணங்களுக்காக யார் எதனைக் கூறினாலும் இதுவே உண்மையாகும். இவரது இப்பின்னனியூடாகவே இலங்கையில் இவர் மேற்கொண்ட விஜயத்தினையும் அவரின் செயற்பாடுகளையும் ஆராய வேண்டும்.

வரலாறு

நவநீதம்பிள்ளை 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நேட்டல் மாகாணத்தில் (Natal Province) டர்பன் நகரில் (Durban) வறிய தமிழ் குடும்பத்தில் பிறந்தவராகும். இவருடைய தந்தையார் பேருந்து ஓட்டுனராகும். இவர் 1965 ஆம் ஆண்டு உள்ளுர் இந்திய சமுதாயத்தின் உதவியுடன் சட்டத்தரணியாகிய கேபி பிள்ளை (Gaby Pillay) என்பவரைத் திருமணம் செய்திருந்தார். 1963 ஆம் ஆண்டு கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர், 1965 ஆம் ஆண்டு சட்டமானிப்பட்டத்தினையும், 1982 ஆம் ஆண்டு ஹாவார்ட் சட்டக் கல்லூரியில் முதுதத்துவமானிப் பட்டத்தினையும், 1988 ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். ஹாவார்ட் சட்டக்கல்லூரியில் கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட முதலாவது தென்னாபிரிக்கப் பிரஜையும் இவரேயாகும்.

தென்னாபிரிக்காவில் இன ஒடுக்குமுறை நிலவிய காலத்தில் வெள்ளையரல்லாத சட்ட வல்லுனர்கள் நீதிபதியின் வழக்குரை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவரது காலத்தில் இனப்பாகுபாடு மிகவும் உச்சத்தில் இருந்தது. இதனால் தென்னாபிரிக்காவிலுள்ள சட்டநிறுவனங்கள் எதுவும் இவருக்கு தொழில் வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் 1967 ஆம் ஆண்டு நேட்டல் மாகாணத்தில் சட்டப்பயிற்சிக்கான நிலையம் ஒன்றை இவர் சுயமாக நிறுவினார்.அத்துடன் இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவிய முதலாவது வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராகவும், கறுப்பினத்தவர்கள் மீதான சித்திரவதைக்கு எதிராகவும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வறிய கறுப்பின அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தனது சட்டநிபுணத்துவத்தைப் பயன்படுத்தியிருந்தார். 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தினைப் பயன்படுத்தி நவநீதம்பிள்ளையின் துணைவர் கேபி பிள்ளை அவர்கள் 1971 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சட்டத்திற்கு முறையற்ற விதத்தில் தனது கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக விவாதித்து அவரை நவநீதம்பிள்ளை விடுதலை செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏனைய கறுப்பின அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் பேராடியிருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் தாக்கத்தினை, வேதனையினை, அதன் விளைவுகளை வாழ்க்கையில் நன்கு அனுபவித்திருந்தவர் என்ற வகையில் இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் இவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது.

1973 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளை வென்றெடுத்தல், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு என்று ஒர் நிறுவனத்தினை தென்னாபிரிக்காவில் உருவாக்கினார்.

1995 ஆம் ஆண்டு ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பதவிக்கு வந்த பின்னர் தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பினை வரைவதில் முக்கிய பங்கெடுத்திருந்தார். அதேநேரம் தென்னாபிரிக்காவில் இனம்,சமயம்,பால் அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுப்பதற்கான விதிகளை அரசியல் யாப்பில் சேர்ப்பதற்குத் தேவையான பங்களிப்புக்களைச் செய்திருந்தார்.

நெல்சன் மண்டேலா தனது ஆட்சிக்காலத்தில் வெள்ளை இனத்தவரல்லாத முதலாவது பெண் மேல் நீதிமன்ற நீதிபதியாக நவநீதம்பிள்ளையினை நியமித்திருந்தார். இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டு நீதி மன்றத்திற்குள் நுழையும் போது “நீதிபதியின் வழக்குரை மண்டபத்திற்குள் முதல்தடவையாக தான் நுழைகிறேன்” என நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.

மேல்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ருவென்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இவரை ஐக்கிய நாடுகள் சபை நியமனம் செய்திருந்தது. இந்நீதிமன்றத்தில் எட்டு வருடங்கள் பணியாற்றிய நவநீதம்பிள்ளை நான்கு வருடங்கள் இதன் தலைவராகவும் பணியாற்றியிருந்தார். இந் நீதிமன்றத்தின் தனியொரு பெண் நீதிபதியாகவும் பணியாற்றியிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட உண்மையினைக் கண்டறியும் நிபுணர்கள் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகிய யஸ்மின் சூக்கா (Yasmin Sooka) நவநீதம்பிள்ளையின் நெருங்கிய நண்பியாகும்.சூக்கா நடாத்திய மனித உரிமைகளுக்கான அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகராக நவநீதம்பிள்ளை கடமையாற்றியிருந்தார். நாடுகடந்த நியமநீதி (Transnational Justice) என்னும் சர்வதேசச் சஞ்சிகையில் நவநீதம்பிள்ளை தொடர்ந்து எழுதிவந்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவாராகத் தெரிவு செய்யப்பட்டார்.ஆயினும்,இப்பதவியை விட்டு விலகி 2008 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை நியமனம் செய்யப்பட்டார். மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும். ஆயினும் இவரது பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டிலிருந்து மேலும் இரண்டு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இப்பதவியைப் பொறுப்பெடுத்தக் கொண்ட பின்னர் “எங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களோ அவர்களின் குரலாக நான் ஒலிப்பேன்” எனக் கூறியிருந்தார்.

சுருக்கமாகக் கூறின் இவர் இந்திய தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த தென்னாபிரிக்கப் பிரைசையாகும். தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தைச் சேராத மேல் நீதிமன்ற முதலாவது பெண் நீதிபதியாகவும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ருவன்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவமுடையவராகும்.

இப்பின்னணியில் இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தும் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மனித உரிமைகள் தொடர்பாகத் தான் கண்டறிந்த விடயங்களை வாய்மொழி அறிக்கையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 24வது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கவுள்ளார்.

24 வது கூட்டத்தொடர்

2013 ஆண்டு புரட்டாதி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 24 வது கூட்டத்தொடர் 27ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இக்கூட்டத்தொடரினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை “இலங்கைக்கு தான் உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட விஜயத்திற்கு அனுமதியளித்து, சமய சகிப்புத் தன்மை, நல்லாட்சி, சட்ட ஆட்சி போன்ற விடயங்கள் உட்பட பரந்தளவிலான மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் உண்மை நிலைமைகளைக் கண்டறிவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தான் அவதானித்த விடயங்களை இக் கூட்டத்தொடரின் இறுதியில் சமர்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை, இலங்கையில் தன்னைச் சந்தித்துக்கொண்ட மனித உரிமைப் பாதுகாவலர்கள், செய்தியாளர்கள், சாதாரண பொதுமக்கள் போன்றவர்கள் அச்சுறுத்தட்டதாகவும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் தான் உடனடிக் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்”.

இலங்கையில் நவநீதம்பிள்ளையினைச் சந்தித்துச் சாட்சியமளித்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், செய்தியாளர்கள், சாதாரண பொதுமக்கள் போன்றவர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிவாவிற்கான தூதுவர் எலின் சம்பர்லைன் டொன்கா (Eileen Chamberlain Donahoe) “நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ததை ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான சவால்களை எதிர் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் நுட்ப உதவிகளை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்விஜயத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள்,நீதித்துறை,நல்லாட்சி தொடர்பாக கவனம் செலுத்த முடிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி “நவநீதம்பிள்ளையினைச் சந்தித்து சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக தனது கவலையினைத் தெரிவித்ததுடன்,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று ஜேர்மனி “நவநீதம்பிள்ளையினைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக தாம் திகைப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், இவ்விஜயத்தின் மூலம் இலங்கையிலுள்ள அச்சுறுத்தல் மட்டத்தின் அளவினை அறிந்து கொள்ள முடிந்ததாகத் தெரிவித்துள்ளது.” “அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுதல் வேண்டும்” என ஒஸ்றியா கேட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த இலங்கைப் பிரிதிநிதி ரவிநாத் ஆரியசிங்கா (Ravinatha Aryasinha) “ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தாமல் தனது கடமையினை நடுநிலையுடன் நிறைவேற்ற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிக்கு இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.நவநீதம்பிள்ளையினைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாகும். மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாக்கும் கடமை இலங்கை அரசாங்கத்திற்குள்ளது.எத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான ஆதாரங்களை நவநீதம்பிள்ளை சபையில் சமர்பிக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

வாதத்திறமையினால் இலங்கையின் நற்பெயரை இவ்வாறு தொடர்ந்து பாதுகாக்க முடியாது. பொறுப்புகூறுகின்ற நல்லாட்சிப்பண்புகள் ஆட்சியாளர்களிடம் உருவாகவேண்டும் அல்லது அவ்வாறானவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணைக்குழு, காவல்துறை, நீதித்துறை என்பன காணமல் போனோர்கள் தொடர்பாக சுதந்திரமாக விசாராணை செய்யக் கூடிய வகையில் பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் அல்லது சர்வதேச மனித உரிமை நியம விதிமுறைமைகளுக்குக் கட்டுப்படக் கூடிய வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதேபோன்று அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்றவர்களின் பெயர் பட்டியலை உடனுக்குடன் பகிரங்கப்படுத்த வேண்டும். குறிப்பாக யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பாகப் பொறுப்புக் கூறுவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த நான்கு வருடங்களாக வலியுறுத்தி வருகின்றது.இதற்கு இலங்கை அரசாங்கம் பொருத்தமான வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல்போவதை தடுப்பதற்கு பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படாத வரை ஒருபோதும் குற்றங்களைத் தடுக்க முடியாது. நல்லிணக்கத்தினை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டுமாயின் முதலில் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறவேண்டும். காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தமது உறவுகள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றார்கள். உண்மைக்கும்,நீதிக்குமான நல்லெண்ணங்களே எல்லா மக்களினதும் ஆதரவினைப் பெற்றுத்தரும் என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளும் போதே நாட்டில் நல்லாட்சி உருவாக முடியும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,535 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>