மோதல் முகாமைத்துவத்தினை இரு நிலைகளில் வரையரை செய்யலாம். முதலாவது குறிப்பிட்ட எல்லைக்குள் மோதல் கட்டுப்படுத்தப்படல். இதன்மூலம்,மோதலினால் ஏற்படக்கூடிய அழிவுகளை கட்டுப்படுத்த அல்லது தடுக்க முடிகின்றது. இன்னோர் வகையில் கூறின், மோதல் வளர்ச்சியினைக் குறைத்து அதனை சமாளிக்கக்கூடிய நிலையில் வைத்திருக்கின்ற தந்திரோபாயத்தினை முகாமைத்துவம் எனலாம். மோதல் முகாமைத்துவம் தொடர்பான இவ்விளக்கம் மோதல் குறித்த எதிர்மறையான அணுகுமுறையிலிருந்தே பெறப்படுகின்றது. இவ்விளக்கத்தில் வெற்றிகரமான மோதல் முகாமைத்துவம் அறிவுபூர்வமானதும், சாத்தியமானதுமான ஆட்சியினுடைய திறமையாகக் கருதப்படுகின்றது. மோதல்கள் எந்தவொரு சமூகத்திலோ, நாட்டிலோ தவிர்க்க முடியாததாகும். அதேவேளை அதனை நீக்கவும் முடியாது. அதனால், மோதலினைக் கட்டுப்படுத்தி, சமாளிக்கக்கூடிய வகையில் சில உபாயங்களைக் கையாள்வதையே மோதல் முகாமைத்துவம் எனலாம். இரண்டாவதாக மோதலினை நேர்நிலையாக நோக்குவதாகும். இது மோதலினை ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற இலக்குகள், விருப்புகள் என்பவற்றின் இடைத்தொடர்பூடாக நோக்குகின்றது. மோதல் ஜனநாயக எல்லைக்குள் இருக்கும்வரை மோதல் முகாமைத்துவத்தில் ஆரோக்கியமான விவாதங்கள்,பேச்சுவார்த்தைகள் என்பன முக்கிய பங்குவகிக்கின்றன. வன்முறை அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றாயினும், மோதல் உத்வேகமான சமூக மாற்றம்,முன்னேற்றம் என்பவற்றினுடைய ஆரம்பமாகவும் கொள்ளப்படுகின்றது. இவ்வகையில் மோதல் முகாமைத்துவம் என்பது நேர்நிலையாக, ஆக்கபூர்வமான வேறுபாடுகளைக் கையாளுகின்ற ஒன்று எனலாம். மோதல் முகாமைத்துவத்தினைப் பரிந்துரைப்பவர்கள் மோதல்த் தீர்விற்கான தந்திரோபாயத்தினையே வேண்டி நிற்கின்றனரேயன்றி, மோதலினைத் தவிர்க்கும் முறையையல்ல. இன்னோர்வகையில் கூறின் ஒன்றையொன்று எதிர்க்கின்ற சக்திகளைக் கூட்டுச் செயற்பாட்டின் மூலம் ஒன்றிணைத்து மோதலினை ஆக்கபூர்வமான வழியில் சமாளிக்கக்கூடிய வழிவகைகளை முகாமைத்துவம் வேண்டி நிற்கின்றது எனலாம். ஷற்மன் (Zartman) என்பவர் மோதல் முகாமை, தீர்வுகள் என்ற இரண்டு பதங்களையும் உள்நாட்டு ஆயுதப் பிணக்குகளை மையமாக வைத்துப் பின்வருமாறு விளக்குகின்றார். “தீர்வு என்பது மோதல்களை ஏற்படுத்தும் காரணிகளை நீக்குதல் அதாவது பொதுவாக இருதரப்பினர்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துதலாகும். முகாமையானது மோதல்களை அல்லது தகராறுகளை ஏற்படுத்தும் காரணிகள் கொடுக்கும் நெருக்கடிகளை நீக்குதல், சமனிலைப்படுத்தல், அல்லது கட்டுப்படுத்தலாகும்” என்கின்றார்.
முகாமை என்பது இரு தரப்பினரின் மோதலை அளவிடுதல், ஒரு தரப்பினரை மறு தரப்பினரிற்காக சமநிலைப்படுத்தல், இரு தரப்பினரையும் சிறுகாலப்பகுதிக்குத் தனிமைப்படுத்தல்,அல்லது மோதல் தொடர்பான பதில் மகாநாடுகளை நடாத்துதல் எனலாம். மேலும், முகாமையானது மோதல்கள் நெருக்கடிகளாக வெடிப்பதைத் தடுக்கின்றது. எனவே மோதல் முகாமைத்துவமானது மோதல்கள் உச்சக்கட்டத்தையடையாது நெருக்கடி நிலைமைகளைச் சமாளிப்பதற்கான தந்திரோபாயமாகவே கொள்ளப்படுகின்றது எனலாம்.
இனமோதல் முகாமைத்துவம் தொடர்பாகக் கல்வியியலாளர்கள் கணிசமான அளவு கருத்துக்களை அண்மைக்காலங்களில் முன்வைத்துள்ளனர். இனமோதல்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்களை இனம் காட்டுவதாக இவைகள் உள்ளன. இனமோதல்கள் பெரும்பாலும், எதிர்காலம் பற்றிய பயம் நிறைந்ததாகவும், இனமோதல் முகாமைத்துவமானது தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் எதுவுமின்றி நீடித்துச் செல்லும் பண்பு கொண்டவைகளாகவும் உள்ளன. வினைத்திறனான இனமோதல் முகாமைத்துவமானது சிறுபான்மையினரின் பௌதீக, கலாசாரப் பாதுகாப்புக்களை மீள் உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். மேலும், சிறுபான்மை இனக்குழுக்களுடன் அதிகாரப்பகிர்வு ஊடான நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல், ஜனநாயக விடுதலை, பிராந்தியத் தன்னாட்சி, உரிமைகளை உத்தரவாதப்படுத்தல், ஒருங்கிணைவு போன்றவற்றையும் மீள் உத்தரவாதப்படுத்த வேண்டும். சமாதான உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிடின் மோதல்கள் மீண்டெழலாம். பின்னர் இவை இனமோதல் முகாமைத்துவத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துவதாக இருக்கும்.
மோதல்கள் எல்லா சமூகத்திலும், நாடுகளிலும் காணப்படும் பொதுவானதொன்றாகும். மோதல்களை இல்லாதொழிக்க முடியாது. அதேநேரம் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதனையே மோதல் முகாமைத்துவம் என்கின்றார்கள். அதாவது, மோதலினை ஏற்படுத்துகின்ற காரணிகளைத் தடுத்தல், மோதல்களைத் தீர்ப்பதற்கான தந்திரோபாயங்களைக் கையாளுதல் ஆகிய வழிமுறைகளில் மோதல் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. மோதல் முகாமைத்துவ அணுகுமுறையின் அடிப்படையில் உலகின் பல்வேறு மோதல்களுக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினைக் காணலாம்.