மோதல்கள் சமூகமட்டத்தில் தோன்றுகின்றன. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், பற்றாக்குறைகள், கருத்து வேறுபாடுகள் என்பன மோதல்களைத் தோற்றுவிக்கின்றன. இம் மோதல்கள் இறுதியில் சமூக மாற்றத்திற்குக் காரணமாகின்றன. இன்னோர் வகையில் கூறின் மோதல் என்பது மனித இனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இலக்குகளை அடைய முற்படும் போது எழுகின்றது. குழுக்கள், சமுதாயங்கள், வர்க்கங்கள், தேசங்கள், அரசுகள் என்பவைகளூடாக மனித இடையூடாட்டம் நிகழுகின்ற போது, அதிகாரம் ,வளம், செல்வம், அந்தஸ்த்து என்பனவற்றில் நிகழும் போட்டி காரணமாக மோதல் எழுகின்றது.
எவ்வாறாயினும் மோதலினை இயற்கையாகவே நாம் எதிர்மறையாகக் கருதுகின்ற போதிலும், சமூகக் கோட்பாடுகள் மனித விவகாரங்களில் மோதலின் வகிபாகம் தொடர்பாகப் போட்டியான மதிப்பீடுகளையே எமக்கு வழங்குகின்றன. உதாரணமாக மாக்சிசச் சமூக கோட்பாட்டில் வர்க்க மோதலானது பிரதான இயங்கியலாக மனித சமூக முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்திச் செல்கின்றது. அதாவது வர்க்க மோதல்கள் சமூகத்தை முன்னேற்றும், மாற்றும் அதியுயர் அபிவிருத்தி நிலைக்கு உந்துகின்ற சக்தியாகும். ஒரு சமூகத்திற்குள் தோன்றும் மோதல் இன்னோர் சமூகத்தை தோற்றுவிப்பதுடன், அது முன்னைய சமூகத்தை விட முன்னேற்றமானதாகவும் உள்ளது. இவ்வகையில் மோதல்கள் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றது என்பது மாக்ஸ்சின் கருத்தாகும். இதேபோன்று ஏனைய செல்வாக்கு மிக்க சமூகக் கோட்பாடுகள் மோதல் “சமுக மாற்றத்தில் பயனுடைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன” எனக் கூறுகின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த சமூகவியலாளரான ஜோர்ஜ் சிமெல் (George Simmel) தனது சமூக மோதல் (Social Conflict) என்னும் நூலில் “மோதல்கள் பலதரப்பட்ட தேக்க நிலைகளைத் தடுக்கின்றது. மேலும், பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்டக்கூடிய மூலமாகவும் உள்ளது. இது ஒன்றைப்பற்றி பரீட்சிக்கின்ற, மதிப்பீடு செய்கின்ற செயற்பாட்டுப் பகுதியாகவும் உள்ளது. மோதல் ஏனைய குழுவிலிருந்து ஒரு குழுவினை எல்லையிட்டுக் காட்டுகின்றது. இதன்மூலம் தனிப்பட்டவர்களையும், குழுக்களையும் ஸ்தாபிக்க உதவுகின்றது. அதேநேரம் வெளிப்புறமான மோதல்கள் உள்புற ஒற்றுமையினை வளர்க்கின்றன” எனக் கூறுகின்றார்.
கோசர் 1950களின் தசாப்தத்தில் இதேமாதிரியான வாதத்தினை முன்வைத்தார். தளர்ந்த கட்டமைப்பைக் கொண்ட, திறந்த சமுதாயங்களில் நிகழும் பகைவர்களுக்கிடையிலான பதட்டத்திற்குத் தீர்வினையடைதலே மோதலின் நோக்கமாகும். எனவே மோதல் உறுதியான மற்றும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. இது ஒரு சமூகத்தின் வழமையான செயற்பாட்டைப் பலப்படுத்தவும், மீளமைக்கவும் உதவுகின்றது. அதிருப்தியை குறித்துக்காட்டி ஒற்றுமையினை மீளக்கட்டியெழுப்புகின்றது. எனவே சமூகத்தில் ஏற்படும் மோதல்கள் சமூகத்தைச் சீர்படுத்துவதாகவே இருக்கும். மேலும் கோசர் கூறும்போது சமூகத்தின் ஒரு குழுவினுள் அதிகாரச்சமநிலையினை தொடர்ச்சியாகப் பராமரிக்கவும், அல்லது தொடர்ச்சியாக மறுசீரமைக்கவும் மோதல்கள் உதவுகின்றன எனக்கூறுகின்றார். மோதலாளர்கள் ‘மோதல்களின் விளைவுகள் மூலம் அதிருப்தியடைந்து, வீழ்ச்சியடைந்துவிட்டோம் என்று உணரும் பட்சத்தில்தான் மோதல்கள் மூலம் அழிவு ஏற்படுகின்றது என்ற உண்மை உணரப்படும். அதேபோலவே ‘முரண்படுபவர்கள் மோதல்களின் விளைவுகள் மூலம் திருப்தியடைந்து நாம் நினைத்தவற்றை மோதல்கள் மூலம் அடைந்துவிட்டோம் என்று உணரும் பட்சத்தில் மோதல்கள் மூலம் நன்மையான விளைவுகள் உண்டாகின்றன என்ற உணர்வு ஏற்படுகின்றது.
மோதலாளர்களின் கௌரவமான அதிகாரமானது மோதலினூடாக உறுதி செய்யப்படுகின்றது. ஒரு புதிய சமூகச் சமநிலை நிர்ணயிக்கப்படுகின்றதுடன், இப் புதிய சமனிலையூடாகப் புதிய உறவு முறையை முன்னெடுத்துச் செல்ல முடியும். டூச் (Deutsch) மோதலின் செயற்பாடு இரு வகையான பண்புகளைக் கொண்டது எனக் குறிப்பிடுகின்றார்.
1. அழிக்கும் தன்மை கொண்டது
மோதலில் பங்கெடுப்பவர்கள், அதன் விளைவுகளுடன் திருப்தியுறாதிருந்தால்,அல்லது மோதலின் விளைவாக தாங்கள் இழந்து விட்டதாக உணர்ந்திருந்தால் அது அழிவு ரீதியான நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் எனக் கூறலாம்.
2. நிர்மாணிக்கும் தன்மை கொண்டது.
மோதலில் பங்கெடுப்பவர்கள் அதன் விளைவுகளால் திருப்தியுற்றால் அல்லது தாங்கள் நன்மைகளைப் பெற்றுக் கொண்டதாக உணர்ந்தால் ஒரு முதன்மையான, உற்பத்தி ரீதியான விளைவுகளை மோதல் தந்திருக்கின்றது எனக் கூறலாம்.
எனவே சமூகத்தில் சாதகமான அல்லது பாதகமான விளைவுகளை மோதல்கள் ஏற்படுத்துவது என்பது மோதலாளர்களின் மனநிலையிலேயே தங்கியுள்ளது. மாக்சிசக் கொள்கையின்படி மோதல்கள் சமூக அபிவிருத்திக்குக் காரணமாக இருந்த போதும், தற்கால சமூகங்களில் மோதல்கள் சமூக அபிவிருத்திக்குத் தடையாகவேயுள்ளது எனக் கூறப்படுகின்றது.