பொது நிர்வாகக் கற்கை நெறியின் தோற்றம்

ஹமுராலி (Hamurali) தனது சட்டத் தொகுப்பினை எழுதுவதற்கு முன்னரே பொது நிர்வாகம் நடைமுறையிலிருந்துள்ளது. மாக்கியவல்லி எழுதிய இளவரசன் என்ற நூலிலும், கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்த்திரம் என்ற நூலிலும் நிர்வாகவியலுக்கான அடிப்படைச் சிந்தனைகள் காணப்படுகின்றன. ஆனால் கோட்பாடுகள், ஆட்சிமுறைமை, பொருளாதாரம் ஆகியவற்றிலிருந்து பொதுநிர்வாகவியலைப் பிரித்தறிய முடியாதளவிற்கு இத் தத்துவஞானிகளின் சிந்தனைகள் காணப்படுகின்றன.

1. கல்வித்துறை வளர்ச்சி

நவீனகாலத்தில் பொது நிர்வாகவியல் என்ற பதம் பதினெட்டாம்; நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் முதன்மைப்படுத்தப்பட்டது. ஆயினும், பன்னிரெண்டாம்; நூற்றாண்டில் ஹமில்ரன் (Hamilton) எழுதிய Federalist-No.72 என்ற கட்டுரை முதல் தடவையாகப் பொது நிர்வாகவியலுக்கான வரையறையினைச் செய்திருந்தது. இதன் பின்னர் 1812 ஆம் ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த எழுத்தாளர் சாள்ஸ் ஜீன் பௌன்னின் (Charles Jean Bounin) பிரான்சில் காணப்பட்ட பொது நிர்வாக முறைமையினை வரையறை செய்தார். 1887 ஆம் ஆண்டு வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) “Political Science Quarterly of America in 1887” என்னும்; சஞ்சிகையில் “The Study of Administration” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இவரை விட பிராங்குட்நோ (Frank Goodnow) என்பவர் 1883 ஆம் ஆண்டு ‘ஒப்பீட்டு நிர்வாகச் சட்டம்’ என்ற நூலை எழுதியிருந்தார். இந்நூல்தான் பொதுநிர்வாகவியல் தொடர்பாக எழுந்த முதல் நூலாகும். 1926 ஆம் ஆண்டு பொதுநிர்வாகவியல் தனியான கல்வித் துறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு கலாநிதி வைற் (Dr. White) எழுதிய“Introduction to the study of Administration” என்ற நூல் உதவியிருந்தது. இவரின் பின்னர் பேராசிரியர் வில்லோபி (Willoughby) “Principles of Public Administration” என்ற நூலை வெளியிட்டிருந்தார். 1930 களில் மூனி Mooney) “Principles of Organization” என்ற நூலை வெளியிட்டிருந்தார். இவர்களைத் தொடர்ந்து அலன் றீலி (Allen Reeley) லூதர் குல்லிக்(Luther Gullick) உர்விக் (Urwick) போன்றோர் பொதுநிர்வாகவியல் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டனர். இவர்கள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முகாமைத்துவ நுட்பங்களாகிய செயற்பாட்டு நிபுணத்துவம், கட்டுப்பாட்டு இணைப்பு, ஒற்றுமைக் கட்டுப்பாடு போன்றவற்றை பொதுநிர்வாகவியலுக்குள் புகுத்தியிருந்தார்கள்.

இக்கால கட்டத்தில், பொதுநிர்வாகவியல் கற்கைநெறி பல்கலைக்கழகக் கல்விக்கான முதிர்ச்சியைப் பெற்றுக் கொண்டது. ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் சட்டம் அல்லது அரசறிவியல் அல்லது பொருளியல் துறைகளின் ஒரு பகுதியாகவே இக்கல்விக்கான விரிவுரைகள் நடாத்தப்பட்டது. வில்சன் (Wilson) பேட் (Beard) போன்ற ஆரம்ப கால அரசறிவியலாளர்கள் அரசறிவியலிலிருந்து பொது நிர்வாகவியல் பிரிக்கப்படுமாயின், அதனைத் தனியான துறையாக முதன்மைப்படுத்த வேண்டி வரும் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

விஞ்ஞான முகாமைத்துவ முறைக்கேற்ப பொதுநிர்வாகக் கல்வி முறைமை மாற்றப்பட்டது. இது பொதுநிர்வாகவியல் கோட்பாடுகளைக் கண்டுபிடிக்க உதவியது. வில்லோபி (Willoughby) Principles of Public Administration றிச்சேர்ட் வார்ணர் (Richard Warner) Principles of Public Administration, மூனி (Mooney) Principles of Organization போன்ற நூல்கள் மூலம் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளை உருவாக்கினார்கள். பொதுநிர்வாகவியல் கோட்பாடுகள் ஆரம்பகாலத்தில் இயந்திரவியல் அணுகுமுறையினை பயன்படுத்தியிருந்தன. ஆயினும், 1940களில் இயந்திரவியல் அணுமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தோற்றம் பெறத்தொடங்கின.

ஆய்வுத்துறையில் உளவியல் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியதன் விளைவாக நடத்தைவாத அணுகுமுறை அறிமுகம் செய்யப்பட்டது. மேரி பார்க்கர் பொலட் (Marry Parker Follet) ஹர்பேட் சைமன் (Herbert Simon)ஆகியோர் பொதுநிர்வாகவியலில் நடத்தைவாத அணுகுமுறையினைப் பயன்படுத்தினர். இவர்கள் ‘நிர்வாகம் என்பது இயந்திரவியல் போன்றதல்ல, அது மனித உறவுப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, பொதுநிர்வாகவியல் கல்வியில் மனித நடத்தையினைக் கற்க வேண்டும்’ எனக் கூறுகின்றனர். சைமன் (Simon) Administrative Behavior, Public Administration ஆகிய இரண்டு நூல்களில் ஏனைய இரு உளவியலாளர்களுடன் இணைந்து நடத்தைவாத அணுகுமுறை தொடர்பாக எழுதியுள்ளனர்.

சமகாலத்தில் பொதுநிர்வாகவியல் பொதுக் கொள்கைப் பகுப்பாய்வினை முதன்மைப்படுத்துகின்றது. சைமன் நிர்வாகப் பகுப்பாய்வு முறைமையில் பொதுக் கொள்கை தொடர்பாகக் கூறியுள்ளார். தற்கால அரசாங்கங்கள் நலன்புரித் திட்டங்களை உருவாக்கி அமுலாக்கி வருகின்றன. இதனால், ஒவ்வொரு அரசாங்கங்களும் நலன்புரி திட்டங்களுக்கான பொதுக் கொள்கையினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன.

2. வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த காரணிகள்:-

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொது நிர்வாகம் யதார்த்தக் கல்வியாக வளர்ச்சியடைந்தது. இக்காலத்தில் பொதுநிர்வாகவியல் கல்வியின் வளர்ச்சிக்குப் பல காரணிகள் பங்களிப்புச் செய்திருந்தன.

1 விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி:-

நவீன விஞ்ஞானங்களின் அபிவிருத்தியும், தொழில் நுட்பமும் மக்கள் வாழ்க்கையிலும், அரசாங்கச் செயற்பாடுகளிலும் பல விடயங்களில் பிரச்;சினைகளை உருவாக்கியிருந்தன. விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள் மனிதனின் கரங்களால் உருவாக்கப்பட்டாலும், இக் கண்டுபிடிப்புக்களே மனிதனின் விதியினை நிர்ணயிப்பவனவாக மாறியிருந்தன. இதனால் புத்திஜீவிகள் சமூக ஒழுங்கமைப்பிலும், முகாமையிலும் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தித் தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கினார்கள்.

2 விஞ்ஞான முகாமைத்துவம்:-

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் விஞ்ஞான முகாமைத்துவ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இயக்கத்தின் தந்தையாக பிரட்றிக் டபில்யு ரெயிலர் (Frederick W. Taylor) கருதப்பட்டார். இவரது முகாமைத்துவம் பற்றிய சிந்தனை பொதுநிர்வாகவியலில் பாரிய செல்வாக்குச் செலுத்தியது. அரசாங்கத் திணைக்களங்களை ஒழுங்கமைக்கவும், ஒழுங்கமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இவரது கோட்பாடு பயன்பட்டது.

3 நலன்புரி அரசுகள்:-

ஆரம்ப காலங்களில் அரசுகள் மக்களிடமிருந்து வரிகளை அறவிடும் நிறுவனங்களாகவே இருந்தன. இன்று இந்நிலை மாற்றமடைந்து அரசுகள் மக்களுக்குச் சேவை செய்யும் நலன்புரி நிறுவனமாக வளர்ந்துள்ளன.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,291 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>