புவிசார் தந்திரோபாயமிக்க பிரதேசத்தில் இரண்டு நாடுகளின் நலன்சார்ந்த உறவு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.12, 2014.07.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image0021952ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் “இறப்பர்-அரிசி” ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே இருநாடுகளுக்குமிடையிலான சர்வதேச உறவு இராஜதந்திர மட்டத்தில் ஆரம்பமாகியது. 1971ஆம் ஆண்டு பதவியிலிருந்த அரசாங்கம் பின்பற்றிய சோசலிசக் கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருந்ததுடன் அதனைத் துரிதப்படுத்தியும் இருந்தது. 1971 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனாவின் வெளிவிவகார அமைச்சர் “இலங்கையினை நாங்கள் நேசிக்கின்றோம்”எனத் தெரிவித்திருந்தார். அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷாவுடன் சீன உப பிரதமமந்திரி வங் யங் (Wang Yang) சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருநாடுகளும் கைச்சாத்திடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.சீனா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே ஈடுபட்டிருந்தாலும், 2005ஆம் ஆண்டு வரை சீனா இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளியாக இருந்ததில்லை. 2005ஆம் ஆண்டின் பின்னரேயே இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான பொருளாதார உறவு பாரியளவில் விரிவடைந்தது. இந்நிலையில் வர்த்தகம், நேரடிமுதலீடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தந்திரோபாய முக்கியத்துவம் ஆகிய மூன்று விடயங்களே இலங்கை, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவினைத் தீர்மானிக்கும் காரணிகள் எனக் கூறலாம்.

நேரடி முதலீடு

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சீனாவின் பொருளாதாரம் கட்டற்ற வகையில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்கூடாக தனது தேசியநலனை இலக்காகக் கொண்டு கடல் கடந்து பொருளாதார முதலீடுகளை சீனா உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தந்திரோபாயத்தில் “நிதி” தொடர்பான கொள்கை முதன்மையானதாகும். சீனா தனது நிதி தொடர்பான கொள்கைகளை இரண்டு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வகுத்துள்ளதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

  • வெளிநாட்டு நாணயங்களை சீனாவில் குவித்து வைப்பது.
  • சேகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை வெளிநாட்டு நேரடிமுதலீடு (Foreign Direct Investment) என்ற வடிவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குள் திரும்ப அனுப்புவது. ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரப் பொருளாதார ஆலோசகர் கென் மில்லர் (Ken Miller) உதவி, கடன், மானியம் என்ற வடிவில் வெளிநாட்டு நாணயங்கள் அனுப்பப்படுகின்றன என கூறுகின்றார்.

இரண்டாவது தந்திரோபாயத்தினை பிரயோகித்துப் பார்ப்பதற்கான மாதிரி நாடாக (Model Country ) இலங்கையினை சீனா தெரிவுசெய்துள்ளது. இதனால் கடன், உதவி, மானியம் என்ற வகையில் சீனாவின் முதலீடு தொடர்ந்து தடையின்றி இலங்கையில் அதிகரித்து வருகின்றது.

இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை மேற்கொள்ளும் நாடுகளில் இன்று பிரதான நாடாக சீனா மாறியுள்ளது. பெருமளவிற்கு இலங்கையின் அபிவிருத்திக்கான நிதியினை சீனா கடனாக வழங்கிவருகின்றது. கொழும்புத் துறைமுக புதிய இறங்குதுறை, அம்பாந்தோட்டை துறைமுகம், அதிவேக நெடுஞ்சாலை (Expressway) புதிய கலையரங்கம் (தாமரைத்தடாகம்) போன்ற பல திட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்துள்ளது. இதற்காக ஏறக்குறைய 500 மில்லியன் அமெரிக்க டொலரினை சீனா செலவு செய்துள்ளது. இருநாடுகளுக்குமிடையில் நிலவும் உறவின் உச்சத்தினை இவைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைக்கு சீனா வழங்கிவரும் பொருளாதார உதவியானது இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கி வந்த யப்பான், இந்தியா ஆகிய நாடுகளை இரண்டாம், மூன்றாம் நிலைக்குத் தள்ளியுள்ளது.

மையப்புள்ளி

2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து தனது பூகோள அதிகாரத்தினை சீனா விரிவாக்கத் தொடங்கியதுடன், ஆசியா மற்றும் ஏனைய கண்டங்களிலுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அபிவிருத்திக்கான கடன்களையும் வழங்கத் தொடங்கியது.

இக்காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இலகு தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை வழங்கக் கூடிய நாடுகள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருந்தது.

சீனாவின் பூகோள அதிகார அபிலாசையுடன் இணைந்திருந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நிதியுதவி என்னும் கொள்கையும், உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கும், அதன் பின்னரான அபிவிருத்திக்குத் தேவையான நிதியினை வழங்கக் கூடிய நாடுகளைத் தேடிக் கொண்டிருந்த இலங்கையும் 2000ஆம் ஆண்டின் பின்னர் ஒரே மையப் புள்ளியில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன.

இக்கடன்களைப் பயன்படுத்தி முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திகளையும், உட்கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நம்பியது.

இலங்கை தனது உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து ஆயுத மற்றும் தளபாட உதவிகளை சீனா தடையின்றி வழங்கியது. உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை வெற்றியடைந்த பின்னர் உட்கட்டுமான மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்கான நிதி உதவிகளை தடையின்றி வழங்கத் தொடங்கியது.

சீனா வழங்கி வரும் அதிகளவிலான பொருளாதார உதவியின் பிறிதொரு வடிவமாக 50,000 குடியிருப்புக்களை ( வீடுகள்) உள்நாட்டு யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட மாகாண மக்களுக்கு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் சீனா முழுமையாக ஈடுபட்டு வருகின்றது.2010ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு பாரிய வெளிநாட்டு நிதி வழங்கும் பங்காளி நாடாக சீனா மாறியதுடன், இலங்கையில் பாரிய பொருளாதார அபிவிருத்திப் பணிகளை சீனா செயற்படுத்தத் தொடங்கியது.

பரஸ்பர வர்த்தகம்

2012 ஆம் ஆண்டில் இலங்கையின் மூன்றாவது வர்த்தகப் பங்காளராக சீனா மாறியது. இவ் ஆண்டில் 17.1 சதவீதமான பொருட்களை இலங்கை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ததுடன்,இலங்கை இறக்குமதி செய்த பொருட்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரையும் தாண்டியிருந்தது. பெருமளவிற்கு இயந்திரங்கள், துணிகள், ஆடைகள், உதிரிப்பாகங்கள், பருத்தி, உரம் போன்றவற்றை இலங்கை இறக்குமதி செய்திருந்தது. இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 19 சதவீதமான பொருட்களை இலங்கை இறக்குமதி செய்திருந்தது.

இலங்கையிலிருந்து 2.3 சதவீதமான பொருட்களை சீனா ஏற்றுமதி செய்திருந்தது. இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் தர வரிசையில் ஐந்தாவது நாடாக சீனாவினை இது பதிவு செய்தது. முதல் நான்கு இடங்களையும் முறையே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஸ்யா ஆகிய நாடுகள் பெற்றிருந்தன. இலங்கை சீனாவிற்கு ஏற்றுமதி செய்த மொத்தப் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. பெருமளவிற்கு தும்பு, இறப்பர், தேயிலை, ஆடைகள், இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள் போன்றவைகளே சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

2013ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இலங்கை தனது பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்திலுள்ளது.

கடந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற வர்த்தக பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிக்குள் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை இருநாடுகளுக்குமிடையிலுள்ள இறுக்கமான பிணைப்பின் அடையாளமாக கருதமுடியும். ஆயினும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சீனா அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2012ஆம் ஆண்டில் சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன்தொகை ஏறக்குறைய 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையின் ஏற்றுமதியில் சீனா 2 சதவீதமான பொருட்களையே கொள்வனவு செய்கின்றது. இந்நிலையில் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மறுசீரமைப்பு குழுவின் தென்கிழக்காசிய நாடுகளின் விசேட பிரதிநிதியாக பணியாற்றிய பேராசிரியர் எஸ். டி.முனி (S.D.Muni) “ இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளுக்கு இருக்கும் வர்த்தக படுகடன் இந்நாடுகள் மூலம் கடன் வழங்கும் நாடுகளுக்கு கிடைக்கும் பொருளாதார நன்மை மற்றும் அரசியல் ஆதரவு என்பவைகளை விட மிகவும் குறைவானதேயாகும்” எனக் கூறுகின்றமை கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

கரையோர பட்டு வீதி

சீனாவின் கரையோர பட்டு வீதி (Maritime Silk Road -MSR) திட்டத்துடன் இலங்கையும் அண்மைக்காலத்தில் இணைந்துள்ளது. இது இருநாடுகளுக்குமிடையிலான தந்திரோபாய அபிலாசைகள் மற்றும் தேசியநலன் தொடர்பில் இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றுதல் என்பவற்றின் மீதான அர்ப்பணிப்பினைக் காட்டுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் க்வாடர் (Gwadar) இலங்கையின் அம்பாந்தோட்டை, வங்களாதேசத்தின் சிற்றாகொங் போன்ற நகரங்களில் சீனா துறைமுகங்களை அமைப்பதற்கு முதலீடு செய்துள்ளதுடன், இத் துறைமுகங்க@டாக நடைபெறும் வர்த்தகத்திற்கான 30 சதவீத முதலீடாகவும் இதனைக் கருதுகின்றது.

கரையோர பட்டு வீதி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா உருவாக்கியுள்ள தந்திரோபாய திட்டமாகும். இதன்மூலம் தெற்காசியாவில் கப்பல் போக்குவரத்தினை சீனா அதிகரித்துள்ளது. இந்தியாவின் தென்பகுதிக்கான பிரதான நுழைவாயிலில் இலங்கையும், இந்தியாவின் மேற்குப் பகுதிக்கான பிரதான நுழைவாயிலில் ஈரானும் அமைந்துள்ளது. ஈரான் சீனாவிற்கு அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும்.

சீனா புதிதாக கட்டமைத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் 85 சதவீதம் சீனாவின் கடனுதவியால் உருவாக்கப்பட்டதாகும். இத்துறைமுகம் அமைந்துள்ள அமைவிடம் வரலாற்று ரீதியில் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படாத பகுதியாக இருந்தாலும், சீனாவின் கரையோரப் பட்டு வீதி திட்டத்திற்கு மிகவும் பொருத்தமான தந்திரோபாயமிக்க இடமாகக் கருதப்படுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்திய வர்த்தக துறைமுகங்களின் அபிவிருத்தியில் கரையோர பட்டு வீதி திட்டம் இலங்கையினை முதன்மையான வகிபங்காளராக மாற்றியுள்ளது. இதற்கு ஏற்றவகையில் இலங்கை தெற்காசியாவின் வல்லரசாகிய இந்தியாவுடனும், தென்கிழக்காசியாவின் வல்லரசாகிய சீனாவுடனும் சிநேக பூர்வ உறவினை வளர்க்க முயற்சிக்கின்றது. இதற்கு ஆதாரமாக இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் வளர்ந்து வரும் அரசியல் பொருளாதார விடயங்கள் சார்ந்த உறவுகளை கூறமுடியும். இது இன்னோர் வகையில் இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு எனவும் கூறமுடியும்.

இராஜதந்திர உறவு

இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட “2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் இலங்கை அரசாங்கத்தினாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படுதல் வேண்டும்” என்ற தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காவிட்டாலும் அதிலிருந்து விலகியிருந்தது.

ஆனால் சீனா இவ்விவகாரத்தில் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற கொள்கையினைப் பின்பற்றியது. “மனித உரிமை விவகாரங்கள் இறைமையுடைய இலங்கையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது. இவ்விவகாரத்தை இலங்கை உள்நாட்டு மட்டத்தில் தீர்ப்பதற்கு விட்டுவிட வேண்டும் என சீனா வாதிட்டிருந்ததுடன் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து இலங்கை தொடர்பாக சீனா கடைப்பிடித்து வரும் மென்மையான தந்திரோபாயக் கொள்கை தொடர்ந்தும் பலமடைந்து வருகின்றமைக்கு இது சிறந்த உதாரணமாகும்.

அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்ää சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் ஜி (Wang Yi) ஆகிய இருவரும் பீஜிங்கில் சந்தித்த போது “மனித உரிமை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் உள்விவகாரங்களில் சில சர்வதேச நாடுகள் தலையீடு செய்வதை சீனா எப்போதும் எதிர்க்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்து சில செய்திகளை பகிர்ந்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச விசாரணை இலங்கையினைப் பாதிக்குமாயின், அதனை தனது முழு வலுவினையும் பிரயோகித்து பாதுகாக்க சீனா முயற்சி செய்யும். இன்னோர்வகையில் கூறின்ää சுதந்திரமான சர்வதேச விசாரணை மூலம் பெறப் போகும் பாதகமான பலாபலன்களில் இருந்து இலங்கையினைப் பாதுகாக்க சீனா தயாராக இருக்கின்றது என்பதே இக் கருத்துப் பகிர்வாகும்.

இதற்கு வலுவூட்டும் வகையில் கடந்த முப்பது வருடங்களுக்குப் பின்னர் சீனாவின் ஜனாதிபதி எக்ஸ். ஐ. ஜின்பிங் (X.I. Jinping) இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள தனது அயல்நாடுகளுடன் பொருளாதார, தந்திரோபாய நலன்களை மீண்டும் ஆழமாக்கவும், புதுப்பிக்கவும் சீனா எடுக்கும் புதிய முயற்சியாகும். இறுதியாக 1986ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி இலங்கை வந்திருந்தார். அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சர்வதேசளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச விசாரணை என்ற இராஜதந்திர நெருக்கடியில் இணைத்து இலங்கையினை பாதுகாப்பாக மீட்பதற்கு மிகவும் நம்பிக்கையான நண்பனாக இருந்து பணியாற்றப் போவது சீனாவேயாகும். இந்நிலையில் சீனாவுடன் இலங்கை தனது உறவினை மேலும் வலுப்படுத்தி வருகின்றதுடன், “தந்திரோபாய கூட்டுப் பங்காளர்” என்ற சுலோகத்தினை இலங்கையும் சீனாவும் பயன்படுத்தி வருகின்றன. இச் சுலோகத்தின் மூலம் தெற்காசிய பிராந்திய அபிவிருத்தியில் முதன்மையானதொரு இடத்தை சீனா பெற்றுக் கொள்ள இலங்கையினைப் பயன்படுத்தி வருகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் புவிசார் முக்கியத்துவத்தினை இலங்கையின் வர்த்தக பொருளாதார நோக்கத்திற்காக பயன்படுத்துதல் என்பதே இலங்கையின் இலக்காக உள்ளது. இதற்காக சீனாவுடன் தொடர்புகளைப் பேணி தெற்காசியப் பிராந்தியத்தில் சீனா பெற்றுக் கொள்ளும் நன்மைகளில் இலங்கையும் தனக்குரிய பங்கினை பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் நன்மைகளைப் பெற்றுள்ளன. பூகோள கடற்படைத் தளமாக இலங்கையினை மாற்றுவது, விமானப் போக்குவரத்து, வர்த்தகம், சக்தி (வலு) மையம், அறிவுமையம் என்ற ஐந்து மையக் கொள்கையினை அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக இலங்கை நடைமுறைப்படுத்துகின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,803 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>