(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.10, 2013.08.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )
பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளைச் சர்வதேச மனிதாபிமானச்சட்டம், மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திப் பொறுப்புடன் பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தகராற்று முகாமைத்துவக் கட்டமைப்பில் காணப்படும் ஒத்திசைவற்ற செயற்பாட்டால் தோல்வியடைந்து வருகின்றது. ஆயுத மோதல்கள் நிகழும் இடங்களிற்கு அரசியல் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பான அறிவுள்ள உத்தியோகத்தர்கள் தேவையானளவிற்கு அனுப்பப்படுவதில்லை எனப் பொதுவாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டிற்கு அங்கத்துவ நாடுகளிடமிருந்து போதியளவு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அதனை உருவாக்குவதற்கு பொதுச்செயலாளர் அலுவலகம் எடுக்கும் முயற்சியும் திருப்பியானதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.சர்வதேச மனிதாபிமானச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு அங்கத்துவ நாடுகள் காட்டும் அக்கறை குறைவடைந்து விட்டதனால் இவைகள் பயனற்றவைகளாக மாறிவிட்டன. ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலகத்திற்கும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கும் இடையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றை கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாகப் பொருத்தமான இணைப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பினை பொறுப்பெடுக்க வேண்டும் என்ற அறிவுப் பற்றாக்குறை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஏற்பட்டுள்ளதா?என்ற சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.
பனிப்போருக்கு பிந்திய சூழல்
1990 ஆம் ஆண்டு பனிப்போர் முடிவிற்கு வந்து உலகம் யுத்த சூழலிருந்து விடுபட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்குள் புதிய நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக “சமாதானத்தையடைதல், சமாதானத்தை உருவாக்குதல் மற்றும் சமாதான பாதுகாப்பு தந்திரோபாயத்திற்கான நிகழ்ச்சி ” (An Agenda for Peace Preventive diplomacy, peacemaking and peace-keeping) என்னும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ் அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பூட்ரஸ்-பூட்ரஸ்-காலி (Boutros Boutros-Ghali) “கடந்த பல வருடங்களாக பாரிய சிந்தாந்த வேறுபாடுகளால் உருவாகிய இணைபிரியாத பாரிய அழிவிற்கான விரோதம்,நம்பிக்கையீனம் என்பவற்றால் வழிநடாத்தப்பட்ட நிலை இப்போது தகர்ந்துள்ளது” எனக் கூறியிருந்தார்.
ஆனால் பனிப் போரின் பின்னர், பூட்ரஸ்-பூட்ரஸ்-காலியின் தலைமைத்துவ காலத்தில் நிகழ்ந்த யூகோஸ்லேவேக்கியா மோதலினை ஐக்கிய நாடுகள் சபையினால் தடுக்கவோ, சரியான முறையில் முகாமை செய்யவோ முடியவில்லை. பொஸ்னியாவிலுள்ள சேர்பியர்களின் நிலைகள் மீது நேட்டோ படைகள் குண்டு வீசுவதை தடுத்தமை பூட்ரஸ்-பூட்ரஸ்-காலி செய்த பாரிய குற்றம் என வெளிப்படையாகக் கூறப்பட்டது.யூகோஸ்லேவேக்கியா மோதலில் பூட்ரஸ்-பூட்ரஸ்-காலியின் சுதந்திரமான அணுகுமுறைகள் ஐக்கிய அமெரிக்காவினை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. இதன்விளைவாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இரண்டாவது தடவையும் தெரிவு செய்யப்படத் தகுதியில்லாதவராக்கப்பட்டார்.
பாதுகாப்பிற்குப் பொறுப்பு
1990 கள் வரை உலக சமாதானத்தினை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை அடைந்த தோல்விக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கொபி அனான் பதவியேற்றார்.ஐக்கிய அமெரிக்காவின் பூகோள மோதல்களில் தலையீடு செய்யும் அணுகுமுறையுடன் (interventionist approach to global conflicts) மிகவும் நெருக்கமாக இருந்து கொபி அனான் பணியாற்றினார். கோபி அனான் ஐக்கிய நாடுகள் சபையில் “பாதுகாப்பிற்குப் பொறுப்பு” (Responsibility to Protect) என்னும் கோட்பாட்டினை உருவாக்கினார். ஆனால் இக் கோட்பாட்டின் தீவிரத் தன்மை 2005 ஆம் ஆண்டு குறைவடைந்தது. இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமகாநாட்டில் இது ஓர் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் முதலாவது இனப்படுகொலை சூடான் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள டர்பார் (Darfur) பிரதேசத்தில் 2003 ஆண்டு ஆரம்பமாகி இன்றுவரை நடைபெற்று வருகின்றது. கொபி அனான் காலத்தில் டர்பார் மோதல் உட்பட ஆபிரிக்காவில் நடைபெற்ற பல மோதல்கள்,ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு, கொசோவோ மோதல், 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் மீது அல் கொய் தா இயக்கம் நடாத்திய தாக்குதல் போன்ற நிகழ்வுகளால் சர்வதேச சமாதானத்தையும், பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை பல சவால்களை எதிர்கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் கோபி அனான் எழுதிய “தலையீடு: யுத்தம் மற்றும் சமாதானத்தில் ஒரு வாழ்க்கை” (Interventions: a Life in War and Peace) என்னும் சுயசரிதையில் “பனிப்போரின் பின்னர் உலக சமாதானத்தினை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு இருந்த பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கும் சில விடைகளை கூறலாம்”எனக் கூறுகின்றார். ஜோனாதன் பவல் (Jonathan Powell) “கொபி அனானின் சுயசரிதை தேவையற்ற சுயநியாயத்தை தருகிறது. மோதலைத் தவிர்ப்பதற்காக பிற நாடுகளில் தலையிடுவதில் மட்டும் சார்ந்திருக்க முடியாது என்ற யதார்த்தத்தை கொபி அனான் மிகவும் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டிருக்கக் கூடும்” எனக் கேலிசெய்கின்றார்.
குறைந்த வாக்குறுதி கூடிய சேவை
“குறைந்த வாக்குறுதி கூடிய சேவை” என்ற சுலோகத்தினை முன்நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான்-கீ-மூன் கடமையாற்றத் தொடங்கினார். ஆனால் பாதுகாப்பிற்கான பொறுப்பினை பொதுச்செயலாளராக இல்லாமல் சாதாரண தொழிலதிபர் போன்று மேற்கொள்ளத் தொடங்கினார். அதேநேரம் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு, கீழ்படிந்து செயற்படுவதற்காக “ஆரவாரம் எதுவுமில்லாது செயற்படுதல்” என்ற தந்திரோபாயத்தை கையாளுகின்றார் எனவும் விமர்சிக்கப்பட்டார்.
ஆயினும், இவ் விமர்சனங்களை பொறுப்பெடுத்துக் கொண்டு யுத்தங்களின் போது பொதுமக்கள் படுகொலை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்குள் நிறுவன ரீதியான மாற்றங்களை செய்து பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்ற விசேட ஆலோசகர் ஒருரை நியமித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு இவர் கையளித்த அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற தத்துவத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உறுதியான கருத்துருவாக்கத் தெளிவினை உருவாக்க பான்-கீ-மூன் தவறிவிட்டார்.
இலங்கையில் பாதுகாப்பிற்குப் பொறுப்பு
வன்னியில் நிகழ்ந்த யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழிப்பதற்குப் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் சம்மதத்துடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இறுதிவரைக்குமான யுத்தமாகும்.
நோர்வேயின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் அரசியல் பலத்தினை அழித்து விட வேண்டும் என்ற முடிவினை பல வாதப் பிரதி வாதத்திற்கும் மத்தியில் ஏகோபித்த முடிவாக மேற்கு தேசநாடுகள் எடுத்திருந்தன. இலங்கை இராணுவம் தேவையானளவு விகிதாசாரத்திலேயே தனது படைகளை வன்னி யுத்தமுனையில் நிறுத்தி வைக்கும் என்றும், இதனால் சகித்துக் கொள்ளக் கூடியளவிற்கே பொதுமக்கள் இழப்பு ஏற்படும் எனறும் சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்தது.
இலங்கையின் இனமோதல் இலங்கைக்கேயுரிய தனித்துவத்தினைக் கொண்டதாகும். யுத்தம் நிகழும் போது சில எண்ணிக்கையிலான பொது மக்கள் மரணிப்பது தவிர்க்க முடியாது. எனவே ஏனைய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையீடு செய்வது அவசியமற்றது என மேற்குத் தேச வல்லரசுகள் கருதியிருந்தன. மறுபக்கத்தில் இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பொது மக்கள் பாதுகாப்பு, சமாதானம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புறக்கணிக்க முடியாத எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.பதிலாக பாதுகாப்புச் சபையிலுள்ள ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டது.
ஆயினும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை தொடர்பாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட இரகசியங்களில் சில ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர்களும், பொதுச்செயலாளரும் உறுதியான சில செயற்பாடுகளைச் செய்திருந்ததாக கூறியுள்ளது. இதனடிப்படையில் பார்க்கின்ற போது பான்- கீ- மூனின் தலைமைத்துவம் வன்னியில் நடந்த மனிதாபிமான தகராறுகளை எதிர்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
ஆயினும் யுத்தக் குற்றம்,மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை தடுக்காமல் விட்டதன் மூலம் இலங்கையில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை விலகிவிட்டது. சர்வதேசளவில் பொது மக்கள் பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படுதல் வேண்டும்.இதற்குப் பொருத்தமான வகையில் சர்வதேச சமூகம் தனது அரசியல் அபிலாசைகளை உருவாக்கிப் பலப்படுத்த வேண்டும். அப்போது தான் உலக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.
பாதுகாப்புச் சபையின் அதிகாரம்
உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைவதற்கு மனித வளப் பற்றாக்குறையும், நீண்டகாலமாக நீடித்து வரும் நிதிப்பற்றாக்குறையுமே காரணம் எனக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. பதிலாக குறிப்பிட்ட மோதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வகிக்க வேண்டிய வகிபாகம் தொடர்பாக தீர்மானிக்கும் உண்மையான அதிகார மையம் பாதுகாப்புச் சபையிலும் அதில் அங்கத்துவம் வகிக்கும் நிரந்தர ஐந்து நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரத்து அதிகாரத்திலும் (Veto Power) தான் நிலை கொண்டுள்ளது.
பாதுகாப்புச் சபைக்கு குறிப்பிட்ட மோதல் தொடர்பாக இருக்கும் அரசியல் நலனே குறிப்பிட்ட மோதலைத் தொடர விடுவதா அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா என்பதைத் தீர்மானிக்கின்றது. பாதுகாப்புச் சபையினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட எல்லைக்குள் இருந்து கொண்டே பொதுச் செயலாளரும் அவருடன் இருக்கும் உத்தியோகத்தர்களும் பணியாற்றுகின்றார்கள்.
ஒத்திசைவில்லாததும், தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பாதையூடாக பூகோள மோதல்களை ஐக்கிய நாடுகள் சபை முகாமை செய்வதற்கு பாதுகாப்புச் சபையும் அதற்கு இருக்கும் தீர்மானிக்கும் அதிகாரமும் தூண்டுகின்றது. இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்,உலக சமாதானம் என்ற இலக்கு நோக்கி ஐக்கிய நாடுகள் சபையும்.ஏனைய சர்வதேச நிறுவனங்களும் முன்நோக்கி நகர வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையும், பாதுகாப்புச் சபையும் மறுசீரமைக்கப்படாத வரையில் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளினது நலன்கள் மற்றும் சர்வதேச அரசியல் யதார்த்தம் என்ற வட்டத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி தொடர்ந்து நீடித்தே செல்லும்.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அல்லது டர்பார் போன்ற மனதாபிமான தகராறுகளைச் சரியாகக் கையாளும் என எதிர்பார்க்க முடியாது.
“பாதுகாப்பிற்கு பொறுப்பு” என்ற எண்ணக்கரு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் சம்பிரதாயத்திற்கு அவ்வப்போது கூறப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற எண்ணக்கரு தொடர்பாக அங்கத்துவ நாடுகளிடமும், பொதுச் செயலாளரிடமும் வேறுபட்ட கருத்தும்,அறிமே இருந்துள்ளது. இதனால் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்பதன் பெறுமதியினை உணர்ந்து அதனை வலியுறுத்திக் கூறுகின்ற ஆற்றல் இவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. எனவே பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற எண்ணக்கரு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.