பாசிசம் என்ற சொல் பஸ்சியோ (Fascio) அல்லது பஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய பஸ்சியோ என்பதற்கான பொருள் இறுக்கமாக பிணைக்கப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of rods) என்பதாகும். இக்கோட்பாடு இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் சின்னம் (Axe) பாசிச இராணுவத்தின்; சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.
முதலாம் உலகப் போரின் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியடைந்த ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே வேர்சையில் உடன்படிக்ககை கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்படிக்கை வெற்றி பெற்ற நாடுகளுக்கு சாதகமாகவும் தோல்வியடைந்த நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இவ் உடன்படிக்கை இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தேசிய நலன், தேசிய கௌரவம் போன்றவற்றிற்கு பெரும் சவாலாக மாறியது. வேல்சையில் உடன்படிக்கையினைப் பயன்படுத்தி நேசநாடுகள் இத்தாலியையும்,ஜேர்மனியையும் பல கூறுகளாகப் பிரித்ததுடன் பல பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டன. இதனால்,இத்தாலியினதும், ஜேர்மனியினதும் குடியேற்றங்கள் பாதிக்கப்பட்டன.
அத்துடன் பெருந்தொகைப் பணத்தினை நஸ்ட ஈடாக நேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. யுத்தத்தின் தோல்வியினால் அவமானமும், தோல்வியும் அடைந்திருந்த இவ் இருநாடுகளுக்கும் வேல்சையில் உடன்படிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. யுத்தத்தின் பின்னரான இத்தாலியின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டிருந்தது. மீளமுடியாத பணவீக்கம், பற்றாக்குறை வரவுசெலவுத்திட்டம், உயர் வேதனங்கள் கோரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள்,யுத்தத்திலிருந்து மீண்ட இராணுவ வீரர்களின் வேலையில்லாப் பிரச்சினை, போன்ற பெரும் பொருளாதார பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நிலையில் இந்நாடுகளின் அரசாங்கங்கள் காணப்படவில்லை. ஆட்சியாளர்கள் நேச நாடுகளின் கைப்பொம்மைகளாகவே காணப்பட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள், படை வீரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டது. இக்காலத்தில் இவ் இரு நாடுகளிலும் சோசலிசவாதிகள்; பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இச் சூழ்நிலையினை முசோலினியும், கிட்லரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களாலும், சோசலிசவாதிகளாலும் முடியாது என இவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். முசோலினியின் பிரச்சாரம் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு முசோலினி மீது நம்பிக்கையினை ஏற்படுத்தத் தொடங்கியது.அத்துடன்,முசோலினிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் எழுச்சியை முறியடிக்க முடியும் என மக்கள் நம்பினர்.
சகல பிரிவினரதும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட முசோலினி இத்தாலியின் பண்டைய பெருமைகளையும், வரலாறுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். கலாசார மேன்மைகளுக்கு புத்துயிரளிக்கப் போவதாக உறுதியளித்தார். தமது முன்னோர்களின் வீரதீர செயல்களை விளக்கி, தேசிய உணர்வுகளை மக்களுக்கு ஊட்டினார். ஒருதலைப்பட்சமான வேல்சையில்ஸ் உடன்படிக்கை கிழித்தெறியப்படல் வேண்டும். நேச நாடுகள் வஞ்சம் தீர்க்கப்படல் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார். தாம் அனுபவித்து வந்த பல்வேறு விதமான பிரச்சினைகள், மன உழைச்சல்களிலிருந்து விடுபட விரும்பிய மக்கள் முசோலினியை தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் மக்கள் அபிப்பிராயங்களையோ, சர்வதேச நியதிகளையோ மதிக்காத சர்வாதிகாரியாக இவர் மாறினார்.
பாராளுமன்ற செயற்பாடுகளைக் கவனத்தில் எடுக்காத முசோலினி, அரசியல் யாப்பு முறையினை இல்லாதொழித்தார்.பாசிசக்கொள்கைக்கு சட்ட அந்தஸ்த்து வழங்கி,அரசியல் மையவாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார்.எல்லா அரசியல் கட்சிகளும் கலைக்கப்பட்டன.தேசிய பாசிசக் கட்சி என்ற ஒரு கட்சியைத் தவிர வேறு எந்தக்கட்சியும் இயங்கமுடியாததாகியது.அமைச்சர்கள் எல்லோரும் தனிப்படவும்,கூட்டாகவும் தனக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என முசோலினி கூறினார்.அமைச்சர்கள் அவரின் சகாக்களாக இல்லாமல் கீழ்நிலை உத்தியோகத்தர்களாக்கப்பட்டனர்.
பாசிசத்தின் இயல்புகள்
பாசிசம் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும், அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகும். இது அகிம்சை, சமாதானம், சோசலிசம், ஜனநாயகம், தனிமனிதவாதம் என்பவற்றை நிராகரிக்கின்றது. பொய், பகட்டு, அடக்குமுறை, சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, போர் வெறி போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட ஒன்றாகும்.
பாசிசவாதிகள் தங்கள் கோட்பாடுகளுக்கு தெளிவான விளக்கங்களை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டிலேயே நம்பிக்கை கொண்ட இவர்கள், செயற்பாட்டினை நியாயப்படுத்த கோட்பாட்டை உருவாக்குபவர்களாகும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கோட்பாட்டையும், செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொள்பவர்களாகும். நம்பு, கீழ்படி,போர்புரி என்பதே இவர்களின் உபதேசமாகும்.
மிகவும் உறுதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம், எதிர்க் கட்சியில்லாமை, விமர்சனம் இல்லாமை, தேசத்தின் எல்லா விடயங்கள் மீதான கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புத் தேசியவாத உணர்வு, கம்யூனிச எதிர்ப்பு போன்ற பண்புகள் இவர்களிடம் காணப்படுகிறது.
பாசிசம் அரசை மேன்மைப்படுத்தும் தத்துவமாகும். அரசுக்காக மக்களேயன்றி மக்களுக்காக அரசு இல்லை என இவர்கள் கூறுகின்றார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. பாசிசம் தனியொரு கட்சியைக் கொண்ட ஒரு ஆட்சி முறையாகும். பாசிசக் கட்சி அங்கத்தவர்கள் இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாசிசத்தில் அரசுமட்டுமே சர்வ அதிகாரங்களும், சர்வ வல்லமையும் கொண்ட தனியொரு நிறுவனமாகும். முசோலினி தனது அரசின் கோட்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். ‘எல்லாம் அரசிற்குள்ளேயே இருக்கிறது. அரசிற்கு எதிராகவும் அரசிற்கு வெளியேயும் எதுவும் இல்லை”.பாசிச அரசில் வெகுஜன தொடர்பு சாதனங்கள், கல்வி முறைமைகள் அரசின் பூரண கட்டுப்பாட்டிலிருக்கும். இவற்றினூடாகப் பாசிசம் தனது பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொள்கிறது. பாசிசத்தில் பலாத்காரம் என்பது நிரந்தரமானதாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகளை ஒழிப்பதற்கும் பலாத்காரத்தையே நம்பியுள்ளார்கள். இரகசிய பொலிஸ் பிரிவின் மூலம் எதிரிகளை இனம் கண்டு இராணுவ நீதிமன்றங்களுடாகக் கடுமையான தண்டனை வழங்கி பலாத்கார ஆட்சி நடாத்துபவர்களாகும்..
பாசிசம் தனிமனிதனையோ சமூகங்களையோ மதிப்பதில்லை. தனிமனிதன் அரசிற்கு அடிபணிய வேண்டும். தனிமனிதன் தனது உரிமைகளை வலியுறுத்தாமல் சமூகக் கடமைகளில் அக்கறை காட்ட வேண்டும். தனிமனிதனை அறிவாளியாகவோ, ஆற்றல் மிக்கவனாகவோ, ஆளத்தகுதியானவனாகவோ பாசிசம் கருதுவதில்லை. இதன் மூலம் பாசிசம் உயர் குழாம் ஆட்சியை வலியுறுத்துகிறது.
மாக்சிசம் கூறும் இருவர்க்கக் கோட்பாட்டிற்கு மாறாக பலவர்க்கக் கோட்பாட்டினை முன்வைத்து சமுதாயத்தில் பல வர்க்கங்கள் உள்ளன என கூறுகிறது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவுகள் தவிர்க்க முடியாது நிலை பெற்றுள்ளன எனப் பாசிசம் கூறுகிறது.
இன மேலாதிக்க ஐதீகத்தினை ஏற்றுக் கொண்டு ஏனைய இனங்களையும், தேசியங்களையும் இழிவுபடுத்தி அழிக்க முற்படுகிறது.நோர்ட்டிக் (Nordic) எனப்படும் கலப்பற்ற தூய ஆரிய இனத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆரிய இனத்தின் தனித்துவமும், கலாசார மேன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவனை மதிப்பீடு செய்வதற்கு அவன் பிரதிநிதித்துவம் செய்யும் இனமே தகுந்த அளவுகோலாகும். ஆரிய இனமே உலகில் தலை சிறந்த இனம். அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். ஏனைய இனங்கள் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். யூத இனத்தை கலப்பு இரத்தத்தில் உருவாகியவர்கள் என பாசிசவாதிகள் இழிவுபடுத்துகிறார்கள். ஆரிய இனத்தின் தூய்மையினையும், மகிமையினையும் பேணும் நோக்கில் யூதர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
தாராண்மைவாத தத்துவம், ஜனநாயகம், தனிமனிதவாதம் என்பவற்றை பாதுகாக்கின்றது. ஆனால், பாசிசம் எதேச்சாதிகாரம், வரம்பற்ற ஆட்சி என்பவற்றை பாதுகாக்கிறது. பாசிசம் சோசலிசத்திற்கும் எதிரானதாகும். தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை ஒடுக்கும் அதே நேரம் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்க முற்படுகின்றது.
சர்வதேசியத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. அதே நேரம் ஆக்கிரமிப்பு தேசிய வாதத்தினை முழுமையாக அங்கீகரிக்கின்றது. ஏகாதிபத்தியம் மாற்றமுடியாத, எல்லையற்ற வாழ்க்கைவிதியாகும். இத்தாலியின் விஸ்தரிப்பு, மக்களின் வாழ்க்கை, மரணம் ஆகிய இரண்டிலும் கலந்துள்ளது.இதற்காக யுத்தத்தினையும், பலாத்காரத்தினையும் பாசிஸ்டுக்கள் நம்பினார்கள். போர் பிரியர்களாகிய இவர்கள் வரலாற்றில் எதுவுமே ‘இரத்தம் சிந்தாமல் வெல்லப்படவில்லை” என்ற கருத்தில் நம்பிக்கை கொண்;டவர்களாகும். முசோலினி இது தொடர்பாக கூறும் போது ‘சமாதானமாக வாழ்நாள் முழுவதும் வாழ்வதை விட போர்க்களத்தில் செலவிடும் ஒரு நிமிடம் மேலானது”. சமாதானத்தினை நிராகரிக்கின்ற இவர்கள் சமாதானம் என்பது நிலையானதோ, நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்கிறார்கள். ‘உலக சமாதானம் ஒரு கோழையின் கனவு” எனக் கூறும் இவர்கள் பிறநாடுகளை படைபலத்தால் கைப்பற்றி ஏகாதிபத்தியக் கொள்கையினை நிலைநாட்டுவதிலேயே தமது தனித்துவம் தங்கியிருக்கிறது என்கிறார்கள்.
அதிகார வெறிபிடித்த தலைமைத்துவம் தனது அமைப்பின் நலனை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது. இதன் மூலம் ஜனநாயகத் தத்துவம் செயலிழக்கச் செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம், எதிர்க்கருத்துக்கள், சுதந்திரமான நீதித்துறைச் செயற்பாடுகள் போன்றன தடை செய்யப்பட்டன. தேர்தல்கள் என்பதற்கோ மக்கள் அபிப்பிராயத்திற்கோ இங்கு இடமளிக்கப்படவில்லை.
பாசிசத்தினை ஒரு தத்துவமாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. ஒரு தத்துவம் எனக் கூறுவதை விட அரசியல் சந்தர்ப்பவாதம் எனக்கூறுவதே பொருத்தமானதாகும். ஆயினும், குறிப்பிட்ட காலம் பாசிசம் ஒரு தத்துவமாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் வரலாற்றுப் போக்கினையும்,ஒழுங்கையும் தீர்;மானித்ததில் குறிப்பிடக் கூடிய காலம் பங்காற்றியுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் பாசிசம் தனக்கென ஓரிடத்தை ஒதுக்கி வைத்துள்ளது எனலாம்.