(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.23, 2014.08.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை பூச்சிய மக்கள் இழப்புக்களுடன் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதற்கு முரண்பட்டதாக இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம்,சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகிய இரண்டிற்கும் எதிராகப் பரந்தளவிலான, பாரதூரமான குற்றங்களைப் புரிந்ததாகக் கூறும் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழு இனம் கண்டுள்ளது. இவற்றில் சில யுத்தக் குற்றங்களாகவும், மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றங்களாகவும் அமையலாம் என குழு தெரிவித்துள்ளது. உண்மையில் யுத்தம் நடைபெற்றமுறைமையானது, யுத்தத்தின் போதும், சமாதானத்தின் போதும் தனிநபர்களின் மதிப்பைப் பாதுகாப்பதற்கு என உருவாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்தின் மீது பாரதூரமான பாதிப்பினைச் செய்துள்ளது. ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகிய இரண்டையும் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது இருதரப்பும் யுத்தக் குற்றம் புரிந்துள்ளதாகவும், மனிதாபிமானத்திற்கு எதிராகக் குற்றம் இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திரமான சர்வதேச விசாரணை
இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதி நாட்களில் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் படுகொலைகள், பலாத்காரப்படுத்துதல், காணாமல் போதல், உட்பட பல யுத்தக்குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை யுத்த முனையில் கேடயமாக பயன்படுத்தியதாகவும், சிறுவர்களை தமது படையணியில் சேர்த்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் குவிந்து இருக்கும் இடங்களை நோக்கி ஷெல்கள் மூலம் தாக்குதல் நடாத்தி படுகொலை செய்ததாகவும், யுத்தப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை வழங்காமல் அவர்களை கொடுமைப்படுத்தியதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றன குற்றம் சாட்டியுள்ளன.
ஆயுத மோதல் முடிவடைந்த பின்னர் இலட்சக் கணக்கான பொதுமக்கள் இராணுவப் பாதுகாப்பின் கீழ் முடிய முகாம்களுக்குள் நீண்ட காலம் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தமது உறவுகளை மீண்டும் தம்மிடம் திரும்பத் தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு கோருபவர்களும் பல சந்தர்ப்பங்களில் சித்திரவதை, அச்சுறுத்தல், கைது செய்யப்படுதல் போன்றவற்றிற்குள்ளாகி வருகின்றனர். இப்பின்னணியிலேயே அண்மையில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தினை அவதானிக்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெற்ற ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் இருபத்தைந்தாவது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். இவ்விசாரணைக்குழு இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினராலும் மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக விசாரணை செய்வதுடன், இதற்கான பொறுப்பினை தொடர்புடையவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவநீதம்பிள்ளை நியமனம் செய்த சர்வதேச விசாரணைக்குழுவில் மனித உரிமைகள் விவகாரத்தில் நீண்டகால அனுபவமுள்ள திரு.மார்ரி அத்ரிசாறி (Martti Ahtisaari )> செல்வி சில்வியா கார்ட்ரைட் (Silvia Cartwright) செல்வி அஸ்ம யாகாங்கிர் (Asma Jahangir) ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின்போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு உதவி செய்து வருகின்றனர்.
இலங்கையின் முப்பது வருட கால ஆயுத மோதலின் இறுதியில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும், உண்மையினையும், குணப்படுத்தலையும் வழங்க சுதந்திரமான சர்வதேச விசாரணை உதவும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. மேலும் குற்றங்கள் செய்தவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியல் கலாசாரத்தினை இலங்கையிலிருந்து அகற்றுவதற்கு இவ்வாறான சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் உதவ முடியும் எனவும் நம்பப்படுகிறது.
குற்றம் செய்பவர்கள் பாதுகாக்கப்படுகின்ற அரசியல் கலாசார பொறிமுறை தொடர்ந்து இருப்பதால், தனிநபர்கள் கடத்தப்படுதல், தாக்கப்படுதல், பேச்சு, எழுத்து, கருத்து, சுதந்திர சீரழிவுகள், குற்றங்களுக்கு பொறுப்புக் கூறாமல் தவிர்த்தல் போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடைபெறுகின்றன.இலங்கையின் எல்லா நிறுவனங்களிலும் இவ்வாறான கலாசாரம்; பரவிவிடக் கூடிய அபாயத்தினை இதன் வளர்ச்சி தோற்;றிவித்துள்ளது.
இந்தியாவின் பொறுப்பு
இலங்கையின் அரசியலில் இந்தியா வரலாற்றுக் காலம் தொடக்கம் தலையீடு செய்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த முப்பது வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் உறுதியானதும், சர்;ச்சைக்குரியதுமான வகிபங்கினை இந்தியா வகித்து வந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதி காலங்களில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் மீறப்பட்டமை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் சர்வதேச விசாரணைகளுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிற்கு உள்ளும் வெளியிலும், பலமடைந்து வருகின்றது. அத்துடன் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு இந்தியா சர்வதேச நாடுகளுடன் இணைந்து உழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றது.
ஆயினும் உள்நாட்டு ஆயுத மோதல்களின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டத் தொடங்கியதை உணர்ந்து கொண்ட இந்தியா, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது அதில் கலந்து கொள்ளாது இந்தியா வெளியேறியிருந்தது. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக தான் வகிக்க வேண்டிய வகிபாகத்திலிருந்து முழுமையாக இந்தியா விலகிக் கொண்டது.
ஆயினும் இவ்விசாரணைக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலங்களில் வலுவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை தனது நம்பகத்தன்மையினை தொடர்ந்து இழந்து வருவதாகவும், சர்வதேச நாடுகளை இலங்கை தவறாக வழிநடாத்துவதாகவும் இந்தியாவில் பரப்புரைகள் நிகழ்ந்து வருகின்றன.
உண்மையில் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும். நம்பகத்தன்மையான சர்வதேச விசாரணை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தேவையான உதவிகளையும், வகிபாகத்தினையும் இந்தியா வழங்க வேண்டும். இதன் மூலம் ஜனநாயகம்ää நல்லாட்சி, மதிப்பு என்பவைகளை பூகோள ரீதியில் இந்தியா உயர்த்த முடியும்.
இந்தியாவின் ஆட்சியதிகாரத்தினைப் புதிதாகப் பொறுப்பெடுத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்திற்கு இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக் காலத்தில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பான உண்மைகளை அங்கீகரிக்க வேண்டிய இராஜதந்திரத் தேவை உருவாகி வருகின்றது. உண்மைகளை அங்கீகரிக்காத வரையில் இலங்கையில் நீதியை உறுதிப்படுத்தவது இந்தியாவிற்கு கடினமான செயல்முறையாகவே இருக்கும்.
பூகோள அதிகாரப் போராட்டத்தில் தெற்காசிய பிராந்திய வல்லரசாகிய இந்தியா தன்னை ஈடுபடுவத்திக் கொள்வதற்கு இலங்கையில் சமாதானம் நிலைநிறுத்தப்படுதல் வேண்டும். இதற்கு யுத்தக் குற்றங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு இலங்கை அரசாங்கம் அவைகளுக்குப் பொறுப்புக் கூறுதல் வேண்டும். எனவே யுத்தக்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச விசாரணைகளுக்குத் தேவையான வசதிகளை அல்லது உதவிகளை வழங்க வேண்டிய தந்திரோபாயப் பொறுப்பு இந்தியாவிற்குள்ளது.
ஆணையாளரின் அறிக்கை
2014 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் “ இலங்கையில் நல்லிணக்கத்தினையும், பொறுப்புக் கூறுதலையும் தரமுயர்த்துதல்” என்னும் தலைப்பில் சமர்ப்பித்த பதினெட்டுப் பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இலங்கையில் சமகாலத்தில் நிலவும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக விபரித்திருந்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்த சிபார்சுகளில் சிலவற்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. ஆயினும் இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் உள்நாட்டு ஆயுத மோதலின் போது மீறப்பட்டமை தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுதந்திரமானதுமான விசாரணைகளை நடாத்துவதில் தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வறிக்கை சமய சிறுபான்மையினர் தாக்கப்படுதல், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுதல் தொடர்பாகவும் எடுத்துக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை யுத்தக் குற்ற விசாரணைகளுக்காக வழங்கத் தயாராக இருந்த தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசாங்கம் பொறுப்புடன் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அதேநேரம் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்பின்னணியிலேயே மனித உரிமைகள் பேரவையில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்குவதற்கான ஆலோசனையினை தான் முன்மொழிவதாக தெரிவித்திருந்தார். யுத்தக்குற்றங்களை உள்நாட்டில் விசாரணை செய்வதற்கான உண்மையான பொறிமுறை யினை உருவாக்குவதில் இலங்கை தோல்வியடைந்தமையினால் இந்நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட்டதன் பின்னர் இதில் சாட்சியமளிக்க பலர் முன்வந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை புதிய தகவல்களைப் பெற்று உண்மைகளைக் கண்டறிவதில் சாதகமான வகிபாகத்தினை வகிக்க முடியும்.
ஜனாதிபதியின் மறுப்பு
மனித உரிமைகள் பேரவை யுத்தக்குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என இரண்டு தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. ஆயினும் யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும் என்பதற்கு எதிராக இலங்கை பலமான பிரசாரத்தினை சர்வதேசளவில் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்குள் வருவதை அரசாங்கம் அனுமதிக்க மாட்டாது என இலங்கை ஜனாதிபதி முதல் தடவையாக 12.08.2014 அன்று அறிவித்துள்ளார். “ எங்கள் நாட்டிற்குள் அவர்கள் வருவதை அனுமதிக்க மாட்டோம். இவ்விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அதனை எதிர்க்கின்றோம்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஏனைய தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என ஆரம்பத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தமை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கை ஜனாதிபதி சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழுவின் வருகையினை நிராகரித்த பின்னர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை “ இலங்கைக்கு விஜயம் செய்யாமல் சர்வதேச விசாரணைக் குழுவினால் சிறப்பான விசாரணையினை மேற்கொள்ளமுடியும்” எனத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஏனைய நாடுகளுக்கு விசாரணைக்குழு அங்கத்தவர்கள் பிரயாணம் செய்து தேவையான தகவல்களை திரட்டிக் கொள்வார்கள். இவ்விசாரணைக்குழுவின் அறிக்கை 2015 ஆண்டு பங்குனி மாதம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளுக்கான பொறுப்பினை ஏற்க வைப்பதற்கு விசாரணை அவசியமானதாகும். அனைத்து இலங்கை மக்களின் நன்மைக்காகவே விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தினையும், சமாதானத்தினையும் பெற்றுக் கொள்வதற்கான பாதையினை இதன்மூலம் உருவாக்க முடியும். ஆயினும்ää இப்புதிய சுதந்திர சர்வதேச விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை மீது புதிய சர்வதேச அழுத்தத்தினை எதிர்காலத்தில் கொடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்பதை மறுக்கவும் முடியாது.
நம்பிக்கையின்மை
தவறுகளுக்கு மனம்வருந்துவதற்கும், அதற்கு பரிகாரம் செய்வது, நீதி, பொறுப்புக் கூறுதல், என்பவைகளுக்கு தேவையான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கும், இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதற்கும் சுதந்திரமான சர்வதேச விசாரணை உதவி செய்யமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆயினும், அண்மைக் காலங்களில் சிறுபான்மை சமயங்கள் தொடர்பாக காட்டப்பட்டு வரும் சகிக்க முடியாத உணர்வுகளின் அளவு அதிகரித்துள்ளது. மனித உரிமை போராட்டக்காரர்களையும், கருத்து வெளியிடும் சுதந்திரத்தினையும் கட்டுப்படுத்தப்படுகின்ற அளவு அதிகரித்ததுள்ளது. நல்லிணக்கம், சமூக நல்லுறவு, பொறுப்புக் கூறுதல் போன்றவற்றில் அக்கறை கொள்ளாத நிலை அதிகரித்துள்ளமையினை இவ் அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருந்தன.
இராணுவ நீதி மன்றத்தினை பயன்படுத்தி யுத்தக்குற்றங்கள் நிகழ்ந்தமை தொடர்பாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் விசாரணை செய்தது. இதேபோன்று காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக விசாரணைக்குழுவினை நிறுவியுள்ளது. ஆனால் உள்நாட்டு ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பினையும், நஸ்ட ஈடுகளையும் இவைகள் இதுவரை வழங்கவில்லை.
இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் சுதந்திரமானதாக இருந்ததா? என்ற வினா பொதுவாக எழுந்ததுடன், வெளிப்படைத் தன்மை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகள் பூரணமாக்கப்படவில்லை என்பதுடன்ää இவ் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படாததுடன், அவைகளின் சிபார்சுகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு பொதுமக்களிடம் காணப்படுவதை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்களின் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
எனவே உள்நாட்டு ஆயுத மோதலின் போது நிகழ்ந்த உண்மையினை கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட தேசியமட்ட விசாரணை பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன எனக் கூறமுடியும். இத்தோல்விக்கு தொழில்நுட்ப ரீதியான வசதியின்மை அல்லது உதவியின்மை என்பதை காரணமாகக் கொள்ளமுடியாது. பதிலாக அரசியல் விருப்பமின்மை என்பது தான் அடிப்படைக் காரணமாகும். தேசியளவில் நம்பகத்தன்மையான விசாரணைகளை நடாத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதில் இலங்கை தோல்வியடைந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்திற்கு யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான மாற்று வழியாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதைத் தவிர வேறு வழிவகைகள் இல்லை என்பதே சமகால அரசியல் காட்சிநிலையாகும்.