அரசின் தோற்றம் பற்றிய விடயங்கள் புதிர் நிறைந்தனவாகும்.அரசு தோன்றிய காலம், தோன்றிய வழி என்பகைகள் தொடர்பான சரியான தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. அண்மைக்கால மானிடவியல்,மனிதஇனவியல், ஒப்பிட்டு கலை இலக்கியவியல் ஆய்வாளர்கள் அரசின் தோற்றம் தொடர்பாக சில விடயங்களைக் கூறுகின்றார்கள். ஆனால் அரசினுடைய தோற்றம் தொடர்பான உண்மைகளை விளங்கிக் கொள்வதற்கு இவர்களுடைய விளக்கங்கள் போதுமானவைகளல்ல.ஆகவே அரசின் தோற்றம் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு இருக்கக்கூடிய ஒரேவழி அரசின் தோற்றம் தொடர்பாகக் கூறும் கோட்பாடுகளை பரிசீலனை செய்வதேயாகும்.இக்கோட்பாடுகள் சமூக வளர்ச்சியைப் பொறுத்து காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்றவைகள் என்பதையும், சமூகச்சூழலின் தாக்கத்திற்குட்பட்டவைகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரசு பற்றிய கோட்பாடுகளுள் மிகவும் காலத்தால் முந்தியது தெய்வீக உரிமைக்கோட்பாடாகும். இக்கோட்பாடு அரசின் தோற்றம் பற்றிக் கூறுவதைவிட அரசியல் அதிகாரத்தின் இயல்பு பற்றிக் கூறுகின்றது என்பதே பொருத்தமானதாகும்.’அரசியல் அதிகாரத்தை இறைவன் வழங்குகின்றார்” என்பதே இக்கோட்பாட்டின் சாராம்சமாகும். அரசு என்பது இறைவனுடையது. அதனை ஆள்வதற்குரிய அரசியல் அதிகாரத்தினை இறைவன் தன்னால் உருவாக்கப்பட்ட சிறந்த மனிதனுக்கு வழங்குகின்றார். அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்ட இறைவனின் பிரதிநிதி தனது செயற்பாடுகள் யாவற்றிற்கும் இறைவனுக்கே பொறுப்புக்கூறவேண்டும். ஆட்சியாளன் இறைவனின் பிரதிநிதி என்ற வகையில் இறைவனுக்குக் கீழ்படிவது அவனது சமயக் கடமையாகும்.தெய்வத்தின் பிரதிநிதியாகிய ஆட்சியாளனின் அதிகாரத்தினை உலகில் யாரும் கட்டுப்படுத்த முடியாது. இவனுடைய வார்த்தைகள் யாவும் சட்டங்களாகும். இவனுடைய செயல்கள் யாவும் எப்போதும் நற்கருணையுள்ளவைகளாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாகும்.நீதியற்ற ஆட்சியாளனின் இயல்புகள், செயற்பாடுகளுக்கு இறைவனிடமிருந்தே தண்டனை கிடைக்கும் என்பதே இக்கோட்பாட்டின் விதியாகும்.
இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஏனைய சமய இலக்கியங்கள் அரசியல் அதிகாரத்தின் தோற்றம் பற்றி மிகவும் தெளிவாகக் கூறுகின்றன.அதாவது சமுதாயத்தில் காணப்பட்ட குழப்பமான நிலையிலிருந்தும்,அராஜக நிலையிலிருந்தும் தம்மைக் காப்பாற்றுவதற்கு ஒரு ஆட்சியாளனைத் தரும்படி இறைவனை அணுகி மக்கள் வேண்டிக்கொண்டார்கள்.உதாரணமாக ‘உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தன்னிகரற்ற தலைவனாகிய இறைவா எம்மை ஆட்சி செய்ய ஒரு தலைவனைத் தந்தருளும்.நாம் அவனை வணங்குவதுடன்,அவன் எம்மைப் பாதுகாக்கட்டும்” என மகாபாரத இலக்கியம் கூறுகின்றது. கிறிஸ்தவ சமயமும் இதே கருத்தினைக் கொண்டிருந்தது. பைபிளின் பழைய ஏற்பாடு தெய்வத்தின் சம்மதத்துடனே அரசியல் அதிகாரம் தீர்மானிக்கப்பட்டது. ஆட்சியாளனைத் தெரிவு செய்வது,நியமிப்பது, நீக்குவது ஆகிய அனைத்துச் செயற்பாடுகளையும் இறைவனே செய்கின்றார். ஆட்சியாளன் தனது செயற்பாடுகள் அனைத்திற்கும் இறைவனுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் எனக் கூறுகின்றது. புதிய ஏற்பாடு “அரசியல் அதிகாரம் இறைவனின் விருப்பமாகும். இறைவனால் யார் ஆட்சியாளனாக அமர்த்தப்பட்டானோ அவனுடைய அதிகாரத்திற்குப் பிரசைகள் கீழ்படிந்து நடக்கவேண்டும். ஆட்சியாளனின் நேரடியான, மதிப்புமிக்க அறிவுறுத்தல்களுக்கு மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்” எனக்கூறுகின்றது. “இறைவனிடமிருந்து வருகின்ற அதிகாரத்தினை பிரசைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மன்னனின் ஒழுக்கப்பண்பு எதுவாக இருப்பினும் அது இறைவனின் விருப்பமாக பிரசைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என உரோம சாம்ராச்சியத்தில் சென் போல் கூறியிருந்தார்.
ஐரோப்பாவின் மத்தியகாலப்பகுதியில் அரசுபற்றிய தெய்வீக உரிமை என்பது அரசனின் தெய்வீக உரிமையாக மாற்றமடைந்தது. ஆத்மீக வாழ்க்கைக்கான அரசனின் அதிகாரம் உலகியல் வாழ்க்கைக்கான அரசனின் அதிகாரமாக எழுச்சியடைந்தது.இதுவும் இறை அதிகாரத்தின் பிரதிநிதியாக மன்னனை உரிமைகோரியது. இன்றும்,பிரித்தானியாவின் இராணி “இறையருள்” (Grace of God) கொண்டவராகவே நோக்கப்படுகின்றார்.
இங்கிலாந்தின் ஸ்டுவட் மன்னர்கள் தெய்வீக உரிமைக்கோட்பாடு மன்னர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற ஒன்று எனக் கருதினார்கள்.முதலாம் ஜேம்ஸ் இக் கோட்பாட்டினை முன்னிலைப்படுத்தி வந்தார். சேர் றோபர்ட் பில்மர் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை ஆர்வமுடன் ஆதரித்து வந்தார். ப்பூஸ்செற் (Bousset) பிரான்ஸ்சில் இக் கோட்பாட்டை முதன்மைப்படுத்தியதுடன், இக்கோட்பாட்டின் அடிப்படையில் பதின்னான்காம் லூயின் கோடுங்கோண்மை ஆட்சியை அதரித்து, நியாயப்படுத்தி வந்தார். ப்பூஸ்செற்றின் கருத்துப்படி ‘அரசன் தெய்வீக உரிமையின் படியே ஆட்சி செய்கின்றான். அவனுக்கு எதிராகச் செயற்படுவதற்கு எவ்வித விடயங்களும் சமுதாயத்தில் கிடையாது.அரசனுக்குக் கீழ்படியாமல் விடுவது இறைவனுக்குக் கீழ்படியாமல் இருப்பதற்குச் சமனானதாகும்”.
மன்னர்களை முதன்மையாகக் கொண்ட அரசு உலகைவிட மேலானதாகக் கருதப்பட்டது.அரசர்கள் இறைவனின் முதன்நிலை ஆளுனர்கள் மட்டுமன்றி இறைவனின் குரலுமாகும். மக்கள் இறைவனின் குழந்தைகளாக அழைக்கப்பட்டனர்.ஆகவே மக்கள் அரசனின் குழந்தைகள்.இவர்கள் அனைவரும் அரசனுக்கு தமது கீழ்படிதலையும்,விசுவாசத்தையும் செலுத்த வேண்டும்.அரசன் இல்லாமல் சிவில் சமுதாயம் இருக்கமுடியாது. மக்கள் சட்டங்களை இயற்றும் வல்லமையற்றவர்கள். முன்னறிவில்லாதவர்கள். ஆகவே எல்லாச் சட்டங்களும் அரசனிடமிருந்தே உருவாக வேண்டும்.அரசன் தெய்வீகத்தன்மை கொண்ட சட்டவல்லுனர்.இவரே தனது மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றக்கூடியவர். தெய்வீகத் தன்மை கொண்ட அரசனின் சர்வாதிகாரத்திற்கு அல்லது அதிகாரத்திற்குக் கீழ்படிதல்தான் மக்களுக்கு இருக்கக்கூடிய உயர்கடமையாகும். அரசன் தனது செயற்பாடுகளுக்காக மனிதநீதிக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. பதிலாக கடவுளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்.
அரசு தெய்வத்தினால் உருவாக்கப்பட்டது என்ற சிந்தனையினை தற்கால அரசியல் கோட்பாடுகள் எதிலும் காணமுடியாது. மேலும்,தெய்வீக உரிமைக்கோட்பாடு தற்காலத்திற்குப் பொருத்தமற்றதாகும். அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள் அதனைத் தொடர்ந்தும் தம்வசம் வைத்திருப்பதற்கும், இறுதியில் தம்மைத் தாமே இறைவனாக, மீட்பர்களாக பிரகடனப்படுத்துவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடலாம்.
ஆயினும், தெய்வீக உரிமைக்கோட்பாடு அரசியல் செயற்பாட்டிற்கான ஒழுக்கவிதிகளை எடுத்தக்கூறுகின்றது.அரசு இறைவனின் நிறுவனம் என்பதன் மூலம் பிரசைகளுக்கு உயர்ந்த ஒழுக்கம்,நீதி என்பவைகளை வழங்க முற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.தற்கால அரசு மனிதனுடன் மிகவும் நெருக்கமான,அவசியமான மனித நிறுவனமாகும். சட்டங்கள் மக்களால் இயற்றப்பட்டு, மக்களால் அமுல்படுத்தப்படுகின்ற ஜனநாயக நிறுவனமாக அரசு உள்ளது.
மத்திய காலப்குதியில் திருச்சபைகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினை இக் கோட்பாடு வலுவிழந்து போவதற்கு பிரதான காரணமாகியது. அரசுகள் சமயச் சார்பற்ற அரசுகளாக மாறிவிட்டன. அரசியலிலிருந்து சமயத்தினை பிரித்துப் பார்க்கும் அரசியல் கலாசாரம் வளர்ந்து விட்டது. சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் எழுச்சியானது தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை மேலும் பலமிழக்கச் செய்திருக்கின்றது. சமூக ஒப்பந்தக் கோட்பாடு மக்களுடைய சம்மதத்தின் அடிப்படையில் அரசாங்கம் உருவாக்கப்படுவதை ஆதரித்திருந்தது. ஜனநாயகம் பற்றிய எண்ணக் கருத்தின் வளர்ச்சியும், தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. விரைவாக வளர்ச்சியடைந்த ஜனநாயக சிந்தனை முழு நிறை அதிகாரத்தினை வீழ்ச்சியடையச் செய்தது. தெய்வீக உரிமைக் கோட்பாடு மன்னராட்சி வடிவிலான அரசாங்கத்தில் மாத்திரமே சாத்தியமானதாகும். ஜனநாயக அரசாங்கத்தில் இதற்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதில்லை.
இக்கோட்பாடு அரசனுக்கு முழுநிறை அதிகாரத்தினை வழங்கியிருந்தது. நல்லது அல்லது தீயது பற்றிய எவ்வித கவனமும் இன்றி அரசன் தான் விரும்புகின்ற அனைத்தையும் செய்ய முடிந்தது. இதனால் அதிகார துஸ்பிரயோகத்திற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே இருந்தது. அரசன் சர்வதிகாரியாக மாறுவதற்கு வாய்ப்பாகியது.
சாள்ஸ் டார்வின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்கின்றார். இவர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராகும். இவரின் கருத்துப்படி எதுவும் இறைவனால் உருவாக்கப்படுவதில்லை சமயம் அரசியலுக்கு எதனையும் செய்வதில்லை இதனை நம்புவோமானால், இறைவன் ஒவ்வொரு அரசனிற்குள்ளும் இருப்பவனாகின்றான். இரு அரசர்கள் ஒருவருடன் ஒருவர் போரிடுவார்களானால், ஒரு இறைவன் அடுத்த இறைவனுடன் போரிடுவதாகவே இது அமையும் இது முற்றிலும் யதார்த்தமற்ற கூற்றாகும்.
மக்களிடையே ஐக்கியம் சிதைவடைகின்ற போது அரசு பற்றிய தெய்வீக உரிமைக் கோட்பாடு மக்களை ஒன்றுபடுத்தி பொது இலட்சினையின் கீழ் அணி திரட்டுவதற்கு உதவுகின்றது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் கீழ் அரசன் சர்வாதிகாரியாக மாறிவிடுவான் எனக் கூறமுடியாது அரசர்கள் இறைவனுக்குப் பயந்து சிறந்த சமூக நலன் கொண்டவர்களாக ஆட்சி செய்வதற்கும் சந்தர்ப்பம் உண்டு.
மக்கள் ஒழுக்கத்தினையும் கீழ்ப்படிவினையும் அரசனுக்கு வழங்க மறுக்கின்ற போது, தெய்வீக உரிமைக் கோட்பாடு மக்களுக்கு ஒழுக்கம், நீதி என்பவைகளை எடுத்துக் கூறி ஒழுங்குபடுத்த உதவுகின்றது. மேலும் இக்கோட்பாடு மக்களுக்கு நெறிமுறை, நன்னெறிகளை போதிப்பதன் மூலம் மக்களை சிறந்த பிரசைகளாக உருவாக்குவதற்கு உதவியிருந்தது.