(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.06, 2012.10.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
நிலைத்திருக்கக்கூடியதும், உடனடியாகப் பெற்றக்கொள்ளக் கூடியதுமான சக்திவளத்தினை ஒருநாடு எந்தளவிற்குப் பெற்றுக்கொள்கின்றதோ அதனைப் பொறுத்தே ஒருநாட்டினுடைய பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும் தங்கியுள்ளது. உலக சக்திவளத் தேவை 2006ஆம் ஆண்டிற்கும் 2030ஆம் ஆண்டிற்கும் இடையில் 45% த்தினால் அதிகரிக்கும் எனவும், இதில் அரைப்பங்கிற்கான கேள்வி சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தே ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகரித்துச் செல்லும் எண்ணெய்க்கான தேவையினைப் பூர்த்திசெய்ய மத்தியகிழக்கு நாடுகளில் சீனா தங்கியிருக்க வேண்டியுள்ளது. 1995ஆம் ஆண்டிற்கும் 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் சீனா தனது மசகு எண்ணெய்க்கான கேள்வியை இரண்டுமடங்காக அதிகரித்தது. 2020ஆம் ஆண்டளவில் இது மேலும் இருமடங்காக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா தனது கைத்தொழில் முயற்சிக்காக நாள் ஒன்றிற்கு 7.3 மில்லியன் பரல் எண்ணெய்யினை இறக்குமதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றது. மேலும் 2015ஆம் ஆண்டில் சீனா தனது மொத்த எண்ணெய்த் தேவையில் 70% மானவற்றை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்களிலிருந்து கடல்வழிப் போக்குவரத்து மூலமே இறக்குமதி செய்ய வேண்டி வரும் எனவும் எதிர்பார்க்கின்றது. இதனால் கடல்வழிப் போக்குவரத்தினைச் தனது கட்டுப்பாடில் வைத்திருக்க வேண்டும் என சீனா எதிர்பார்க்கின்றது. இவ் எதிர்பார்க்கையே முத்துமாலைத் தொடரத் தந்திரோபாயத்தின் உருவாக்கத்திற்கு காரணமாகியது.
முத்துமாலைத்தொடர்
முத்துக்களை நூலில் கோர்த்து மாலையாக்குவது போன்று ஒருநாட்டின் துறைமுகத்தைப் பெற்று அல்லது புதிய துறைமுகம் ஒன்றை அல்லது விமான நிலையங்களை உருவாக்கிச் சீனா கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை உருவாக்குகின்றது. இங்கு ஒவ்வொரு துறைமுகமும் அல்லது விமான நிலையமும் முத்துமாலைத் தொடரிலுள்ள ஒவ்வொரு முத்தாகக் கருதப்படுகிறது. பாரசீகக் குடாவிலிருந்து சீனா வரையிலான கடல்வழித் தொடர்பாடலுக்குச் சமாந்திரமாக சீனா தனது இராணுவத்தளங்களை உருவாக்குவதற்கு முத்துமாலைத்தொடர் உதவமுடியும். ஓவ்வொரு துறைமுகமும் விமானத்திட்டு (Airstrip) மற்றும் இராணுவத்தள வசதிகளையும் கொண்டுள்ளது. எனவே சீனா உருவாக்கியுள்ள முத்துமாலைத் தொடரின் முத்துமாலையிலுள்ள ஒவ்வொரு துறைமுகமும் பூகோள அரசியலில் சீனா எதிர்காலத்தில் அடையப்போகும் புவிசார் அரசியல் செல்வாக்கு அல்லது இராணுவ முதன்மை நிலையினை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
தென்சீனக் கடலிலுள்ள ஹெய்னன் (Hainan) தீவில் முத்துமாலைத்தொடரின் முதல் துறைமுகம் உருவாக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் சீனா ஏற்கனவே தனது கடல் படைத் தளத்தின் தரத்தினை உயர்த்தியிருந்தது. அத்துடன் சீனாவின் இராணுவத்திற்குரிய வசதிகள் தரமுயர்த்தப்பட்டது. தென்சீனக் கடலின் தந்திரோபாய முக்கியத்துவம் கருதி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் யுத்தக்கப்பல்களுக்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலைத்தேச உளவு செய்மதிகளினால் கண்டுபிடிக்க முடியாதவகையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சாதாரண கப்பல்கள் உள்நுழைந்து வெளியேறக்கூடியவகையில் அதன் நுழைவாயில் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வியட்னாமிலிருந்து 300 கடல் மைல் தொலைவிலுள்ள வூடி (Woody) தீவில் 8000 அடி நீளமான விமான ஓடுபாதை (Airstrip), செயற்கையாக மூடக்கூடிய துறைமுகம், யுத்தக்கருவிகளைப் பாதுகாப்பாக வைக்கக் கூடிய கட்டிடங்கள், இலத்திரனியல் கண்காணிப்பு நிலையம் உட்படபல வசதிகள் கொண்ட இராணுவ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முத்துமாலைத் தொடரிலுள்ள பிறிதொரு முத்தாகும்.
வங்காளதேசத்தில் கப்பல்களிலிருந்து கொள்கலன்களை ஏற்றியிறக்கக்கூடிய ஆழ்கடல் துறைமுகமாக சிற்றக்கொங் துறைமுகம் தரமுயர்த்தப்பட்டது. இது முத்துமாலைத் தொடரின் அடுத்த முத்தாகும். இதேபோன்று மியன்மாரில் சிற்வி (Sittwe) ஆழ்கடல் துறைமுகம் கட்டமைக்கப்பட்டது. இது முத்துமாலைத் தொடரின் பிறிதொரு முத்தாகும்.
பாகிஸ்தானின் தென் மேற்கு கரையோரத்திலுள்ள க்வாடரில் (Gwadar) கடற்படைத் தளம் ஒன்றினை சீனா கட்டமைத்துள்ளது. இது ஹேமர்ஸ் நீரிணைக்கு வெளியிலுள்ள தந்திரோபாயமிக்க இடமாகும். இது மிகவும் ஆழ்கடல் துறைமுகமாகும். மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் சக்திவள நலன்களைப் பாதுகாப்பதற்கு இத்துறைமுகம் அவசியமானதாகும். இவ்வகையில் இத்துறைமுகமும் இங்குள்ள கடற்படைத்தளமும் சீனாவின் முத்துமாலைத் தொடரின் இன்னொரு முத்தாக மாறியுள்ளது.
இலங்கை 2000ஆம் ஆண்டு சீனாவின் ஹான்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முத்துராஜவலை, கொலன்னாவை போன்ற இடங்களில் எண்ணெய் குதங்களை அமைத்து சீனா பராமரித்து வருகின்றதுடன், சந்திரிக்கா பண்டாராநாயக்கா குமாரணதுங்க ஐனாதிபதியாக இருந்த காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடப்பட்டு, ஐனாதிபதி மஹிந்த இராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இப்பணி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் மலாக்கா நீரிணை, சுயெஸ் கால்வாய் மற்றும் ஆசியா, ஐரோப்பியக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ளது. இதற்கு றுகுணு மகம்புற சர்வதேசத் துறைமுகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. (Ruhunu Magampura International Port) இது முத்துமாலைத் தொடரின் இன்னொரு முத்தாகும்.
ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர் செலவில் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்படும் புதிய துறைமுகத்திற்கான செலவில் 85% மானவற்றை சீனா வழங்குகின்றது. இத்திட்டம் நான்கு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்படுகின்றதுடன், முதற்கட்டப்பணி பூர்த்தி செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் பதினைந்து வருட காலத்திற்குள் பூரணமாக பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் வேலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணி 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. இத்துறைமுகத் திட்டத்திற்குள் கைத்தொழில் பொருட்களை ஏற்றி இறக்கக்கூடிய 1000 மீற்றர் நீளமுடைய இறங்குதுறை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளக்கப்பட்டிருக்கும். மேலும் எரிவாயுவினால் இயங்கக் கூடிய மின்னிலையம், கப்பல் தரிக்குமிடம், கப்பல் எரிபொருள் நிரப்பு நிலையம், விமானங்களுக்குத் தேவையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், சேமிப்புநிலையம், பெற்றோலிய வாயுவினைத் திரவமாக்கும் நிலையம் என இவை விரிவாக்கமடைந்துள்ளது.
இத் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2014ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு 810 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்படவுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழுவின் தலைவர் வூ பங்குவோவிற்கும் இலங்கை ஜனதிபதிக்கும் இடையில் 17.09.2012 இல் கைசாத்திடப்பட்ட பதினாறு ஒப்பந்தங்களில் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவிக்கான ஓப்பந்தமும் அடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இத் துறைமுகத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் 2023ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் அம்பாந்தோட்டையில் உருவாகும் துறைமுகம் முழுமையான வர்த்தகநோக்கிலானது என சீனா வலியுறுத்தி வந்தாலும், அனேக இந்திய, ஐக்கிய அமெரிக்க இராணுவத் திட்மிடலாளர்களைப் பொறுத்தவரை சீனாவின் முத்துமாலைத் தொடரின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்றது. ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி டிபன்கர் பெனெர்ஜி (Dipankar Banerjee) இது தொடர்பாகப் பின்வருமாறு கூறியிருந்தார். “அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் வர்த்தகத்திற்கான துணிகரச்செயலாகும். ஆனால் எதிர்காலத்தில் சீனா தந்திரோபாய நிலைப்பாட்டினை எடுப்பதற்கு இது மிகவும் பயனுள்ள இடமாகும்”. எனவே அம்பாந்தோட்டையில் உருவாக்கப்படும் இம்முத்தானது எதிர்காலத்தில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா நடாத்தப்போகும் பாரிய அரசியல், இராணுவ விளையாட்டுக்களுக்கான விசைத்திறனை வழங்கப்போதுமானது எனக் கூறப்படுகின்றது.
சீனாவின் முத்துமாலைத்தொடர் பாரசீகக்குடா வரையில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீனாவின் முத்துமாலைத் தொடரில் துறைமுகங்கள், விமானப் படைத்தளங்கள், தந்திரோபாய கட்டமைப்புக்களும் உள்ளடக்கப்பட்டு வேகமாக நவீனமயப்படுத்தப்பட்டன. சீனாவின் பிரதான தரைப்பகுதியிலுள்ள கடற் பிரதேசத்திலிருந்து தென் சீனக் கடலிலுள்ள கடலோரப்பகுதி, மலாக்கா நீரிணை , இந்து சமுத்திரப் பிராந்தியம், அராபியக் கடலிலுள்ள கடலோரப் பகுதி, பாரசீகக் குடா ஊடாக முத்துமாலைத் தொடர் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வரையில் கடல்வழித் தொடர்புகளை உருவாக்கும் திறனை விருத்தி செய்து சீனா தந்திரோபாய உறவுகளை கட்டமைத்து வருகின்றது.
இலங்கையில் சீனாவின் அக்கறை
இந்துசமுத்திரப்பிராந்தியத்தல் மலாக்கா நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் இலங்கை சீனாவின் கடல்வழிப் போக்குவரத்தினைப் பாதுகாக்கக்கூடிய தந்திரோபாய மையத்தில்அமைந்துள்ளது. இதனால் சீனா இலங்கையில் அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வகையில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட “நகர் உறவு நட்புறவினை ஸ்தாபித்தல்” (Establishment of Friendship City Relationship) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான உட்கட்டுமான வசதிகளைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இவ் அபிவிருத்தி வலயத் திட்டத்தின் கீழ் துறைமுக வசதிகளைக் கட்டுதல், குதப்பண்ணை, (Tank Farm) நிலக்கீழ் சேமிப்பறை (Banker) வசதிகளை ஏற்படுத்துதல் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.
அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக வேறு பல உட்கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்ட வருகின்றது. இவ்வகையில் அம்பாந்தோட்டையிலிருந்து வடக்குத் திசையில் 15 கிலோமீற்றர் தூரத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை சீனா கட்டிவருகின்றது. இதற்கான முதல் கட்டப் பணிகள் 2009ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பமாகி, 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக சீன அரசாங்கம் 209 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்கின்றது. மேலும் 248 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தினையும் கொழும்பினையும் இணைக்கும் அதிவேக நெடும்சாலையினை சீனா கட்டமைத்து வருகின்றது. இதனைவிட 855 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நுரைச்சோலையில் நிலக்கரியில் இயங்கம் மின்நிலையத்தினை உருவாக்கியுள்ளது. மீரிகமவில் சீன முதலீட்டாளர்களுக்காக விசேட பொருளாதார வலயத்தினை நிர்வகிக்கின்றது.
தந்திரோபாய நோக்கங்கள்
இலங்கையில் உருவாக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட்ட எல்லா அபிவிருத்தி திட்டங்களும் சீனாவினைப் பொறுத்த வரையில் பல்வேறு தந்திரோபாய நோக்கங்களைக் கொண்டதாகும். இங்கு உருவாக்கப்படும் ஆழ்கடல் துறைமுகமானது சீனாவின் வர்த்தக் கப்பல்கள், கொள்கலன் கப்பல்கள், எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் செயற்படும் அணு சக்தியிலான நீர் மூழ்கிக் கப்பல்கள் உட்பட்ட எல்லா இராணுவ கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
அம்பாந்தோட்டை அபிவிருத்திவலயம் சீனாவிற்கு விண்வெளியினை மேற்பார்வையிடுவதற்கான தந்திரோபாய மையமாகவும் செயற்பட முடியும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் யுத்த விமானங்கள், ஏவுகணைகள் என்பவற்றிலிருந்து கப்பல்களைப் பாதுகாப்பதற்கான மையமாகவும் செயற்பட முடியும். சீனாவின் மீன்பிடிக் கப்பல்களை பாதுகாத்தல், புலனாய்வு கடமைகளைச் செய்தல் போன்றவற்றிற்கான தயார் நிலையினை அம்பாந்தோட்டையிலிருந்து மேற்கொள்ள முடியும்.
இலத்திரனியல் முறைமையை சீனாவினால் உருவாக்க முடியும். இவ் இலத்திரனியல் வலைப்பின்னல் முறைமையினூடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ, சிவில் போக்குவரத்தினை மேற்பார்வையிட முடியும். மேலும் டிக்கோகாசியாவினுள் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத் தளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் செய்திப் பரிமாற்றங்களையும், இந்தியாவின் அணுசக்தி வல்லமையினையும் மேற்பார்வை செய்ய முடியும்.
இதனையிட்டு இந்தியா மிகவும் கவலை கொள்வதாக அடிக்கடி அறிவித்து வருகின்றதாயினும் இதிலிருந்து மீள்வதற்கு இயலாதநிலையிலேயே உள்ளது. சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக் கொள்கை வகுப்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டே வந்துள்ளார்கள் என்ற உண்மையினை மறுக்க முடியாது.