(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.19, 2014.07.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
புதிய கரையோர பட்டுவீதி (Silk Road) சீனாவின் வர்த்தக தேவைக்காக உருவாக்கப்படவுள்ள போக்குவரத்து வலைப்பின்னலாகும். சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள ஹன் டைனாஸ்ரி (Han Dynasty) பிரதேசத்தில் ஆரம்பித்து ஷின்ஷியாங் (Xinxiang),மத்திய ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படவுள்ளது. வரலாற்றில் பட்டு வீதி என்பது கிழக்கு, மேற்கு நாடுகளுக்கு இடையில் வர்த்தக, பொருளாதார, கலாசார பரிமாற்றங்களை விஸ்தரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த போக்குவரத்துப் பாதையாகும். இப்பாதை சீனாவின் பூகோள வர்த்தக மரபுரிமையினை முதன்மைப்படுத்தியதுடன், உலகின் ஏனைய நாடுகளுடன் சீனாவிற்கு இருந்த வர்த்தகத் தொடர்பினையும் முதன்மைப்படுத்தியிருந்தது.
புதிய பட்டு வீதி திட்டம்
2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சீனாவின் ஜனாதிபதி எக்ஸ். ஐ. ஜின்பிங் (X.I. Jingping) தென் கிழக்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒருபகுதியாக இந்தோனேசியாவிற்கு வருகை தந்து, இந்தோனேசியப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் “இருபத்தியோராம் நூற்றாண்டின் பட்டு வீதி திட்டம்” என்ற பிரேரணையினை முன்மொழிந்ததுடன், சீனாவிற்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலும் கரையோர கூட்டுறவினை வளர்ப்பதற்கு இத்திட்டம் உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். எனவே சீனாவின் மரபுரீதியான கரையோரப் பட்டு வீதி என்ற சிந்தனை சீன ஜனாதிபதி அறிமுகப்படுத்திய “புதிய பட்டு வீதி பொருளாதார வலயம்” என்ற ஐந்து ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில்; மீள்வருகைக்குள்ளாகியுள்ளது.
இதன்பின்னர் சீனாவின் பிரதமந்திரி லி கிகுஆங் (Li Keqiang ) புருனே நாட்டில் நடைபெற்ற 16வது ஆசியான் – சீனா உச்சிமகாநாட்டில் புதிய கரையோர பட்டு வீதித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். அத்துடன் கரையோர பட்டு வீதித் திட்டத்தின் முதற்கட்டப் பணிக்காக மூன்று பில்லியன் யூவான் (Yuvan) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதன்பின்னர் ஜின்பிங் அரசாங்கத்தின் பிரதான இராஜதந்திரிகள் உத்தியோக பூர்வமாக இத்திட்டத்திற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். புதிய கரையோர பட்டு வீதியூடாக இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் சீனா தனது கரையோர வர்த்தக, பொருளாதார தொடர்பினை ஏற்படுத்துவதற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஒதிக்கியுள்ளது.
சீனாவின் புதிய கரையோர பட்டு வீதி பொருளாதார வலயம் மத்திய ஆசியாவுடன் உறுதியான பொருளாதாரப் பிiனைப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம், தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவுடனான உறவு மேலும் வலிமையாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தசாப்தங்களாக சீனா அடைந்த பொருளாதார அபிவிருத்திகளின் அடித்தளமாக கரையோர பட்டு வீதி திட்டம் அமைந்துள்ளது.
கரையோரப் பட்டு வீதித் திட்டம் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களைக் கொண்டதாகும். புதிய கரையோர பட்டு வீதி அயல்நாடுகளுக்கு வெளிப்படையான நன்மைகளை வழங்குவதுடன் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கு புதிய உந்து விசையையும் செல்வச் செழிப்பினையும் வழங்கப் போகின்றது என யங் பொயுன் (Yang Baoyun) போன்ற சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்குவது பட்டு வீதித் திட்டத்தின் பிரதான இலக்காகும். இதன்மூலம் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் பொருளாதார செயற்பாடுகளுடன் மிகவும் ஆழமான தொடர்பினை ஏற்படுத்துவது இதன் பிறிதொரு இலக்காகும்.வளர்ச்சியடைந்து வரும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ பலம் உலகளாவிய ரீதியில் கவன ஈர்ப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் சீனா முன்மொழிந்துள்ள கரையோர பட்டு வீதித் திட்டம் கரையோர ஆதிக்கம், அதிகாரம் என்பவற்றை மேலும் வலுவாக்குவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.
கரையோரப் பட்டு வீதித் திட்டத்தின் கீழ் கரையோர நாடுகளின் உட்கட்டுமான வசதிகளை குறிப்பாக துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் இலங்கை, வங்களாதேசம் போன்ற கரையோர நாடுகளின் உட்கட்டுமான வசதிகள், மற்றும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வங்களாதேசம், சீனா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளுடன் யுனான் (லுரnயெn) தென் சீன மாகாணத்தை மையமாகக் கொண்ட பொருளாதார உறவினை கட்டியெழுப்பும் திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.சுங்கம், உயர்தர மேற்பார்வைää இலத்திரனியல் வர்த்தகம் போன்றவற்றில் கூட்டாக பணியாற்றும் திட்டத்தினையும் சீனா இணைத்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இலங்கை உட்பட இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள குடா நாடுகள் அனைத்திற்கும் இத்திட்டம் தொடர்பாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை மலேசிய துறைமுக கட்டுமானப் பணிகளுக்காக சீனா செலவு செய்துள்ளது. மேலும் க்வாடோர்ää அம்பாந்தோட்டை, சிற்றாகொங் ஆகிய மூன்று நாடுகளின் துறைமுக அபிவிருத்தியில் சீனா முதலீடு செய்துள்ளது.
இந்நிலையிலும் கரையோரப் பட்டு வீதித் திட்டம் எதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தொடர்ந்தும் தெளிவின்மையும், விவாதமும் சர்வதேசளவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சீனாவின் பாதுகாப்பு தொடர்பான சஞ்சிகை (China Securities Journal) இத்திட்டம் தொடர்பாக விபரிக்கும் போது துறைமுக கட்டமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகிய இரண்டிற்கும் ஆரம்பத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் வங்களாதேசம்,இலங்கை, பாகிஸ்தான், ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் உள்ளடங்கலாக இந்நாடுகளின் உட்கட்டுமானத் திட்டங்களை இது உள்ளடக்கியுள்ளது என கூறியுள்ளது.
ஆயினும் சில ஆய்வாளர்கள் சீனாவின் பிராந்திய வல்லாதிக்க கனவிற்காக அதிகரித்து வரும் இராணுவ, கடற்படையின் நிலை கொள்ளலுக்குமான பிறிதொரு திட்டம் என விமர்சனம் செய்கின்றார்கள். மேலும் வங்களாதேசம், பாக்கிஸ்தான், இலங்கை போன்ற கரையோர நாடுகளில் இராணுவத் தளங்களை உருவாக்குவதற்கான முனைப்புடன் சீனா இதனை மேற்கொள்கின்றது எனவும் கூறுகின்றார்கள்.
முத்துமாலையும் பட்டு வீதியும்
முத்துமாலைத் தொடர் என்ற பதத்தினை 2005 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா முதலில் பயன்படுத்தியது. அன்றிலிருந்து இப்பதம் இராணுவ முனைப்புடனேயே நோக்கப்படுகிறது. தென்சீனக் கடற்பரப்பிரப்பிலிருந்து அராபியக் கடற்பரப்பு வரை உருவாக்கப்பட்ட துறைமுகங்களில் சீனாவின் கடற்படையினை நிறுவுவதற்கான முன்னேற்பாடாகவே ஐக்கிய அமெரிக்காவினால் நோக்கப்பட்டது. இது உடனடியான ஆபத்தினை இந்தியாவிற்கு ஏற்படுத்தும் என்றும் சீனாவின் கடற்படையினால் இந்தியா சுற்றிவளைக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனால் முத்துமாலை என்ற பெயரை உத்தியோகபூர்வமாக சீனா எப்போதும் பயன்படுத்தியதில்லை என்றதொரு உண்மையினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது புதிய கரையோரப் பட்டு வீதியும் சீனாவினால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள முத்துமாலைத் தொடரும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானதாகும் என்றதொரு கருத்தும் உருவாகி வருகின்றது. இதனால் முத்து மாலைத் தொடரின் மேலதிக விரிவாக்கமாக இப்போது புதிய கரையோர பட்டு வீதி திட்டம் அவதானிக்கப்படுகின்றது. சீனா கரையோர பட்டு வீதி திட்டத்தின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து மேற்கு நாடுகள் வரை தனது வலைப்பின்னலை விஸ்தரிக்கவுள்ளது.
அதேநேரம் முத்து மாலைத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், வங்களாதேசம் உட்பட பலநாடுகளின் துறைமுக அபிவிருத்திக்காக சீனா முதலீடு செய்துள்ளதுடன், பசுபிக், இந்து சமுத்திரப் பிராந்தியங்களில் கரையோர போக்குவரத்து வசதிகளை சீனா ஏற்கனவே உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் முத்துமாலைத் தொடர் மூலம் கடற்படையினை விஸ்தரித்து பிராந்திய வல்லரசு என்ற அந்தஸ்த்து நிலையினையடைவது என்ற தந்திரோபாயத்துடன் சீனா செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்கான சீனாவினால் வகுக்கப்பட்ட புதிய திட்டமே கரையோர பட்டு வீதித்திட்டமாகும் என சில அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.
பட்டுவீதித் திட்டத்தில் இலங்கை
2000 வருடங்களுக்கு முன்னர் புராதன சீன வியாபாரிகள் மற்றும் மாலுமிகள் சீனாவின் கிழக்கு கரையோரத்திலிருந்து தென்கிழக்காசியா, தெற்காசியா, கிழக்கு ஆபிரிக்கா, பாரசீகக்குடா, செங்கடல் ஊடாக தமது பொருளாதாரம், மற்றும் வர்த்தகத் தொடர்பாடல் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கிப் பலப்படுத்தியிருந்தனர். இக்காலத்தில் (புராதன பட்டு வீதிக்காலம்) இலங்கையுடனும், சீன வியாபாரிகள் வர்த்தகத் தொடர்பினை உருவாக்கியிருந்தார்கள்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்பு வலுவடைந்து வந்துள்ளது. இன்று சீனா பிரதான நிதி வழங்குனர், தொழில்நுட்ப உதவி வழங்குனர், உட்கட்டுமான வசதிகளை வழங்குபவர், வர்த்தகம் செய்பவர் எனப் பலவகிபாகங்களை இலங்கையில் வகிக்கின்றது. இதனால் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் நம்பிக்கையுள்ள நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவிசார் முக்கியம் கருதிய இலங்கையின் அமைவிடத்துடன் தொடர்புள்ள வகையில் கரையோர பட்டு வீதி திட்டத்தில் இலங்கையின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. துறைமுக அபிவிருத்தி, போக்குவரத்து, வர்த்தகம், தொலைத்தொடர்பாடல், போன்றவற்றை தரமுயர்த்துவதற்காக இலங்கை சீனாவிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று வருகின்றது.
சீனாவின் பட்டு வீதி திட்டத்துடன் இலங்கை பலவகைகளில் தொடர்புபட்டுள்ளது. தெற்காசியாவின் கேந்திர மையமாக இலங்கை மாற்றமடைவதற்கு இத்திட்டம் உதவும் என இலங்கை நம்புகின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டின் சமுத்திரம் இந்து சமுத்திரமேயாகும். இச்சமுத்திரமே அமெரிக்காவின் எதிர்கால அதிகாரத்தினைத் தீர்மானிக்கப் போகின்றது என றொபர்ட் கப்லன் (Robert Kaplan) கூறுகின்றார். எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப இலங்கையின் முக்கியத்துவமும் அதிகரித்துச் செல்லும்.
இவ்வகையில், பலதரப்பு கலந்துரையாடல் ஒன்றிற்கான அடித்தளத்தினை காலி கலந்துரையாடல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கூட்டு கரையோரப் பயிற்சி, கரையோர உடற்பயிற்சி போன்றன நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கும், உறுதியினைக் கட்டியெழுப்புவதற்கும் பயன்படுத்தக் கூடிய பிறிதொரு கருவியாகும். கடற்படை பரிமாற்றத்திட்டம், இராணுவப் பல்கலைக்கழகம், கல்லூரிகள் என்பனவும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளிடையே நம்பிக்கையினையும், உறுதியினையும் ஏற்படுத்த உதவலாம். இதன்மூலம் தெற்காசியாவின் பொருளாதார மையமாக இலங்கையினை மாற்றவும் கூடும்.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் உட்கட்டுமான வசதிகள், துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றவற்றை சீனாவின் உதவியுடன் இலங்கை அபிவிருத்தி செய்து வருகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தியும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பினை கொண்டதாகும். பொருளாதார வளம், உணவுவளம், கரையோரப் பாதுகாப்பு, போக்குவரத்து என இலங்கையின் தேசிய அபிவிருத்தியுடன் இது நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. இலங்கையின் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தியில் கரையோர சுற்றாடல் பாதுகாப்பு பிரதான வகிபாகத்தினை கொண்டுள்ளது.
இந்து சமுத்திர கரையோர விவகாரக் கூட்டுறவு (IOMAC) என்பது கரையோரப் பாதுகாப்பிற்காக தமது வேறுபாடுகளை மறந்து பிராந்திய நாடுகளை கூட்டாக செயற்பட வைத்துள்ளது. எல்லாவற்றையும் விட உலகிலுள்ள துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் இலங்கையில் அமைந்துள்ளதுடன் கரையோர விஞ்ஞானத்தின் வள மையமாக இத்துறைமுகம் வளர்ச்சியடைந்துள்ளது அண்மைக்காலத்தில் சீனாவின் கவனம் இத்துறைமுகம் மீது ஏற்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மாசிமாதம் சீனாவிற்கு விஜயம் செய்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சீனாவின் “ கரையோர பட்டு வீதித் திட்டத்திற்கு” இலங்கையின் ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார். சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர் குவா சுன்ஜி (Hua Chunyi)கரையோர ஆராய்ச்சியும், பாதுகாப்பும் அனர்த்தத்தினைத் தடுத்தலும், குறைத்தலும், கடல் சுற்றாடல் பாதுகாப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி, மீன்பிடி, கரையோரப் பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்களுடன் தொடர்புபடும் வகையில் கரையோர பட்டு வீதி திட்டத்துடன் இலங்கையும், சீனாவும் கூட்டாக செயற்படும் என தெரிவித்துள்ளார்.
இக்கருத்துக்கள் வலுவடைவதற்கு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் கூட்டுறவில் காணப்படும் குறைபாடே காரணமாகும். சீனா தொடர்பாக அயல்நாடுகளிடம் காணப்படும் நம்பிக்கையின்மை, உறுதியின்மை என்பவற்றின் அடிப்படையில் இவ்விமர்சனம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். ஆயினும் இருபத்தியோராம் நூற்றாண்டில் கரையோர பட்டு வீதி என்ற கனவின் யதார்த்தத்தை சீனா அனுபவிக்க விரும்பினால் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் அதிக நட்புறவினை விருத்தி செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் சீனாவின் கரையோர பட்டு வீதி திட்டத்தின் தந்திரோபாய பங்காளராக வரலாற்றுக்காலம் தொடக்கம் இணைத்து வைத்துள்ளது. இதனால் தெற்காசியாவிலுள்ள நாடுகள் மத்தியில் சீனா நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முக்கியமான வகிபாகத்தினை வகிக்க முடியும்.
இலங்கை வரலாற்றுக் காலம் தொடக்கம் தெற்காசிய நாடுகளுடன் நட்பினை வளர்த்து வந்துள்ளது. தெற்காசிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு தரைத் தொடர்பு வழித் தொடர்பாக அன்றி கடல்வழித் தொடர்பாகவே உள்ளது. சீனா தெற்காசிய நாடுகளுடன் மிகவும் ஆழமான நட்புறவினைப் பேண வேண்டுமாயின் இலங்கையே அதற்குரிய அடித்தளத்தினை வழங்குவதற்கு பொருத்தமான நாடாகும். ஆயினும், தெற்காசிய நாடுகளிடையே நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கும், கூட்டுறவினைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் சீனா நடத்த வேண்டும்.