சமஷ்டிவாதம்

அரசியல் முறைமையில் ‘சமஷ்டிவாதம்’ என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது. அதாவது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து சமஸ்டி வாதத்திற்கான விளக்கம் வழங்கப்படுகின்றன.

1. சமஸ்டிமுறைமையின் வளர்ச்சி

தற்கால அரசாங்க முறையானது சமஷ்டியாக அல்லது ஒற்றையாட்சியாக அல்லது இரண்டும் கலந்த ஒன்றாக காணப்படுகின்றது. உலகில் நடைமுறையிலுள்ள அரசாங்கங்களில் சமஷ்டி முறைக்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் கூறலாம். ஒற்றையாட்சி முறைமைக்கு உதாரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், இலங்கை, சீனா போன்ற நாடுகளைக் கூறலாம்.

இவ் இரண்டையும் விட சில நாடுகள் அதிகாரப் பிரிவினை தத்துவத்திற்கு இணங்க அரசாங்கத்தினை ஒழுங்கமைத்து மிக உயர்ந்த நிலையில் அதிகாரங்களை பங்கீடு செய்துள்ளன. இதனை இந்தியாவிலும் மறைந்த சோவித் ரஸ்சியாவிலும் காணமுடியும். இடைநிலைத் தன்னாட்சியுடைய அரசுகளாக அல்லது அரைகுறை சமஸ்டி அரசுகளாக இவைகள் அழைக்கப்படுகின்றன.

கிரேக்க நகர அரசுகளுடன் சமஸ்டி முறை மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது. பாதுகாப்பினை நோக்காகக் கொண்டு இணக்கம், கூட்டுறவு என்பவற்றின் அடிப்படையில் இம்முறைமை நடைமுறையில் இருந்;தது. ஆயினும் கிரேக்க அரசியல் சிந்தனையாளர்கள் சமஷ்டி வாதத்தினை ஓர் அரசியல் தத்துவமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

சுவிற்சர்லாந்திலுள்ள கன்ரன்கள் தங்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் 1291 ஆம் ஆண்டு கூட்டுச் சமஸ்டி என்ற பெயரில் சமஷ்டியை உருவாக்கியிருந்தன. ஸ்பானிஷ் குடாவிலுள்ள கிறிஸ்தவ அரசுகள் சமஷ்டி முறைமையினை ஒத்த அரசியல் முறைமையினை உருவாக்கியிருந்தன.

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் சமஷ்டி தத்துவத்திற்கு புதிய ஒழுங்கமைப்பினைக் கொடுத்திருந்தது. இதனால் ஸ்பானிஷ் புதிய சமஷ்டி தத்துவத்தினை பின்பற்றி நெதர்லாந்து ‘ஐக்கிய மாகாணங்களின் சம்மேளனம்’ என்ற பெயரில் சமஸ்டியை உருவாக்கிக் கொண்டது. சுதந்திரத்தின் பின்னர் இன்று பன்முகப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசாகவே இது காணப்படுகின்றது.

இதனை விட 17 ஆம் நூற்றாண்டில் டச்சு நாடுகளின் கூட்டம் சமஷ்டி அரசின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது. இந் நாடுகளின் கூட்டம் விருத்தி அடைந்தே சமஷ்டியாகியது. வரலாற்றில் இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

  • 1291 ஆம் ஆண்டு மூன்று கன்ரன்கள் இணைந்து உருவாக்கிய சுவிஸ் நாட்டுக் கூட்டம்,
  • ஐக்கிய அமெரிக்கா உருவாக்கிய பதின்மூன்று நாட்டுக் கூட்டம்,
  • 1815-1866 முப்பத்தி ஒன்பது ஜேர்மனிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய நாடுகளின் கூட்டம்

2. சமஸ்டிவாதத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்

சமஷ்டி ஆட்சி உருவாவதற்கு சில பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய பல அரசுகள் ஒன்றிணைய வேண்டும். ஆனாலும் ஒரு சமஷ்டி அரசு வெற்றிகரமானதாக இயங்க வேண்டுமாயின் சில முக்கிய நிபந்தனைகளை சமஸ்டியில் இணைய விரும்பும் அரசுகளிடம் இருக்க வேண்டும்.

புவியியல் தொடர்ச்சி

சமஷ்டி அரசு நிச்சயப்படுத்தப்பட்ட புவியியல் தொடர்ச்சியினை அல்லது நெருக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் சமஸ்டியில் இணைகின்ற அரசுகளை பெரிய மலைகள், சமுத்திரம், இறைமையுள்ள பிறிதொரு அரசு பிரிக்குமாயின் அங்கு புவியியல் தொடர்ச்சி இருப்பதாக கூறமுடியாது. எனவே சமஷ்டியில் இணையும் அரசுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாமல் இருக்குமானால் சமஷ்டி முறைமை வெற்றிகரமாக இயங்கமுடியாது.

சமுதாய ஆர்வம்

கலாசார, சமய , மொழி அடிப்படையிலான சமூக முறைமைகள் உள்ள ஓர் நாடு சமூக நலனுக்காக சமஷ்டி முறையினை தெரிவு செய்யலாம். இவ்வாறு உருவாகும் சமஷ்டியில் இணைகின்ற சமுதாயங்களினது பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சமஷ்டியில் இருக்கின்ற பலமான சமூகங்கள் பலவீனமான சமூகங்களின் நலன்களை உதாசீனம் செய்யக்கூடாது. டைசி இதனை ‘இதுவோர் இணைப்பேயன்றி சங்கமம் அல்ல’ எனக் கூறுகின்றார். ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, கனடா போன்ற நாடுகள் இன, சமய , கலாசார பண்பில் வேறுபட்ட சமூகங்களை கொண்டுள்ளன. ஆயினும் ஒவ்வோர் சமூகத்தினதும் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஐக்கியம், நாட்டுப்பற்று என்ற பொதுவான உணர்வின் அடிப்படையில் எல்லா மக்களும் ஒன்றுபட்டு தேசிய அரசை உருவாக்குகியுள்ளனர்.

ஒத்ததன்மையுள்ள சமூகஅரசியல் நிறுவனங்கள்

தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் அரசாங்க முறைமைகள் ஒத்த தன்மையினை கொண்டதாக இருக்கவேண்டும். அதாவது மத்திய – மாநில அரசுகளின் அரசாங்க அமைப்புக்கள் ஒத்த தன்மையினதாக இருக்க வேண்டும். கனடா, இந்தியா போன்ற நாடுகளில் மத்திய – மாநில அரசாங்கம் பாராளுமன்ற முறைமையினையும், சில நாடுகள் ஜனாதிபதி ஆட்சி முறையினை பின்பற்றுவதையும் காணலாம்.

 சமத்துவம் பேணப்படல்

சமஷ்டியில் இணைகின்ற அரசுகள் நடைமுறையில் சம அந்தஸ்த்தினை அனுபவிப்பவைகளாக இருக்க வேண்டும். இங்கு சம அந்தஸ்த்து என்பது அவற்றிற்கிடையிலான அதிகாரங்களை மையமாகக் கொண்டவைகளாகவே இருக்க வேண்டும். பதிலாக சனத்தொகை, பிரதேசம் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு சம அந்தஸ்த்து கருத்தில் கொள்ளப்படக் கூடாது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்க காங்கிரசின் மேல் சபையாகிய செனட் சபைக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தலா இரண்டு பிரதிநிதிகள் என்ற விகிதத்தில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்தியப் பாராளுமன்றத்தின் மேற்சபையாகிய ராஜ்ய சபைக்கு இவ்வாறு சமபிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.இதனால் மேற்சபையில் மாநிலங்களுக்கான சமத்துவம் பேணப்படுவதில்லை.சமத்துவமின்மையால் ஆரோக்கியமான அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றன.

 சமூகப் பொருளாதார அபிவிருத்தி

ஒரு நாட்டினுடைய சமூக, பொருளாதார, அபிவிருத்தி சிறப்பான சமஷ்டியின் தொழிற்பாட்டிற்கு அவசியமானதாகும். மேலும் பொருளாதார அபிவிருத்தி என்பதும் சமத்துவமாகப் பேணப்பட வேண்டும். சமஷ்டி வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால், முழு நாட்டினதும் பொருளாதார வளங்களை சமமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காணப்படுமாயின், வளம் பொருந்திய பிரதேசம் தன்னை யூனியனாக மாற்றி தனித்தியங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகலாம். இதனால் சமஷ்டி சிதைவடைந்துவிடக்கூடிய ஆபத்து ஏற்பட்டு விடலாம்.

அரசியல் செயற்றிறன்

மக்கள் தமக்கான வகிபாகத்தினை உணர்ந்து செயற்படக்கூடிய சாதுரியம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். இது அபிவிருத்தியடைந்ததோர் அரசியல் கலாசாரம் உள்ள சமுதாயத்திலேயே சாத்தியமானதாகும். அரசியல் முறைமை தொடர்பான தமது சிந்தனைகள், நம்பிக்கைகள்,பொறுப்பு என்பவற்றை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் அரசியல் முறைமை வெற்றிகரமாக இயங்கமுடியும்.

அரசியல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு

சமஷ்டி நாடொன்றில் வாழும் மக்கள் அரசியல் ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஒருமைப்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை பூர்த்தி செயக்கூடிய வகையில் நாட்டினுடைய தேசிய வரைபடமும், நிர்வாக அலகுகளும் வரையப்பட அல்லது மீள் வரையப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை சிதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளால் தனியரசை உருவாக்கும் அவாவும், அதற்கேற்ற உள்ளூர் மட்ட அழுத்தமும் ஏற்படும். தேசிய ஒருமைப்பாட்டினை விட தமக்கான தனி அரசினை உருவாக்குவதற்கான தேவைகளையும் அவாவினையும் உருவாக்கி சமஷ்டியை செயலிழக்க வைத்துவிடும்.

 மத்திய மாநில இணைப்பு

மத்திய அரசிற்கும், மாநில அரசிற்குமிடையில் சிறப்பான இணைப்பு காணப்பட வேண்டும். சமஷ்டிவாதம் என்பது கூட்டுறவின் வெற்றியாகக் கணிக்கப்பட வேண்டுமேயொழிய போட்டியான ஒன்றாக கணிக்கப்படக் கூடாது. கூட்டாட்சியில் இணைகின்ற அரசுகளின் பிரதேசங்களின் தனித்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையிலான உள் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமஷ்டியில் நெகிழ்ச்சித்தன்மையும், கவர்ச்சித் தன்மையும் பேணப்பட வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,284 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>