(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.17, 2013.08.18ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )
பனிப் போர் காலத்தில் சான் பிரான்ஸ்சிஸ் முறைமை அல்லது மைய – விளிம்பு (hub-and-spokes) பாதுகாப்பு முறைமை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியிருந்தது. இம் முறைமையில் ஐக்கிய அமெரிக்கா மையத்திலும் அதனுடன் பாதுகாப்பு உறவினை பரஸ்பரம் பேணிய நாடுகள் விளிப்பிலும் இணைந்து பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கியிருந்தன. மைய – விளிம்பு பரஸ்பர பாதுகாப்பு முறைமையில் ஒவ்வொரு அரசினதும் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாகும். பனிப்போர் முடிவடைந்த பின்னர் இம்முறைமை வலுவிழந்;தது. ஆயினும் இருபத்தியோராம் நூற்றாண்டில் மைய – விளிம்பு பரஸ்பர பாதுகாப்பு முறைமை மீண்டும் கிழக்கு ஆசியாவிற்குள் உருவாகத்தொடங்கியுள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாக மாறுவதற்கான உந்துவிசை புவிசார் அரசியலில் காணப்படும் போட்டி, மோதல், பிரிவினை போன்றவற்றை எதிர்த்து உருவாகும் கூட்டுறவு அல்லது கூட்டு அதிகாரம் என்பதே தீர்மானிக்கும். இதுவே பொதுவான விதிமுறையாகும்.
இந்திய-பசுபிக்
பிராந்திய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆசிய -பசுபிக் என்ற பதத்திற்கு பதிலாக இந்திய- பசுபிக் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிபுணர்கள்,வெளிவிவகார பகுப்பாய்வாளர்கள் ஆகியோர்கள் இந்திய-பசுபிக் என்ற இப்பதத்தை இன்று மிகவும் முதன்மைப்படுத்துகின்றார்கள். காலனித்துவ காலத்தில் ஆசியப் பிராந்தியம் தென்கிழக்காசியா, கிழக்காசியா,தெற்காசியா என பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் ஆசியப் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
1970 களில் யப்பான், அவுஸ்ரேலியா ஆகிய இருநாடுகளும் ஆசிய-பசுபிக் என்ற பதத்தினை முதன்மைப்படுத்தின. 1980 களில் ஐக்கிய அமெரிக்காவுடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் வலுவாக வளர்வதற்கு உதவியது. புவியியல் ரீதியில் கிழக்காசியப் பிராந்தியத்திற்கு வெகு தொலைவில் இந்தியா அமைந்துள்ளதால் கிழக்காசியப் பிராந்தியத்தின் அரசியல், பொருளாதார மற்றும் தந்திரோபாய விடயங்களில் இந்தியா தொடர்பற்று இருந்தது.
இந்திய -பசுபிக் என்ற பதம் 1970 களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளர் கில்லாறி கிளிங்டன் இந்திய-பசுபிக் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக 2010 ஆம் ஆண்டு பயன்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து யப்பான் இப்பதத்தினை பயன்படுத்தத் தொடங்கியது. புவிசார் அரசியல் விசைப்பண்பின் மூலம் உருவாகிய இவ் மீள் எண்ணக்கருவுருவாக்கம் தென்சீனக் கடல் பிராந்தியம் நோக்கிய அவுஸ்ரேலியா மற்றும் இந்தியாவிற்குள்ள பாதுகாப்பு மையத்தினை ஐக்கிய அமெரிக்காவுடன் “பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளுதல்” என்னும் தந்திரோபாயத்தின் ஒருபகுதியாக மாற்றிக் கொண்டது.
இந்தியாவின் கூட்டுறவு
சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கையாகிய இராணுவ பிரயோகமின்றி பிராந்தியத்தின் நலன்களைப் பாதுகாத்தல் என்ற இலக்கில் பாரிய மாற்றங்கள் எதனையும் இந்தியா செய்யவில்லை.ஆயினும் ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு குறிப்பாக வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார , இராணுவ பலமும் அதன் தன்னம்பிக்கை மிக்க செயற்பாடுகளும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் சவாலானது என்ற வகையில் இந்தியா கிழக்காசியப் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
பனிப்போரின் பின்னர் குறிப்பாக 1991 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்ட பூகோள தாராளமயவாக்கத்தின் பின்னர் ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளுடன் பாதுகாப்பு, பொருளாதார, அரசியல் தொடர்புகளை அதிகரிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டது.இதற்கு ஏற்ற வகையில் பயன்மிக்க பொருளாதார, தந்திரோபாய பங்காளர்களை கிழக்காசியாவில் இந்தியா உருவாக்கி வருகின்றது.
யப்பானுடன் ஏற்கனவே தந்திரோபாயப் பங்காளர் உறவினை இந்தியா உருவாக்கியுள்ளது. இதேபோன்று அவுஸ்ரேலியாவுடன் தனக்கு சாதகமான பொருளாதார, பாதுகாப்பு உடன்படிக்கைகளை இந்தியா செய்துள்ளது. ஆயினும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனக்குள்ள நலன்களிலும், பல்கிப் பெருகி வரும் சவால்களிலும்,இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.இதற்கு தேவையான வகையில் கிழக்காசியப் பிராந்திய நாடுகளுடன் கூட்டுறவினை வலுப்படுத்தி வருகின்றது.
கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள அவுஸ்ரேலியா, யப்பான், மலேசியா போன்ற நாடுகளுடன் இந்தியா பேணிவரும் கூட்டுறவு தனது கடல்வழித் தொடர்பாடலை பாதுகாப்பதற்கும், பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்கும் போதுமானதாகும் என் இந்தியா நம்புகின்றது.
மேலும் ஆசிய-பசுபிக் பொருளாதார கூட்டுறவு மற்றும் பசுபிக் தீவுகள் அமைப்பு போன்ற பிராந்திய சங்கங்களில் இந்தியா பங்குபற்றவதன் மூலம் தனக்கான மூலவளங்களையும், சந்தைகளையும் பெற்றுள்ளது. இதனைவிட ஆசியான், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மகாநாடு, கிழக்காசிய உச்சி மகாநாடு போன்ற பல்வேறுபட்ட அரசியல், பொருளாதார, பாதுகாப்பு அமைப்புக்களுடன் இந்தியா தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.இதன் மூலம் எதிர்பாராத பகைமை உருவாகுவதைத் தடுப்பதன் மூலம் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இந்தியா நம்புகின்றது.
ஆயினும் கிழக்காசியப் பிராந்தியத்தின் பிரதான நாடு சீனாதான் என்பதை இந்தியாவினால் நிராகரிக்க முடியாவிட்டாலும், கிழக்காசியப் பிராந்தியத்தினை யார் தமக்காக பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே இப்பிராந்தியத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கப் போகின்றது.
அதிகாரச்சமனிலை மாற்றம்
நீண்ட காலத்தில் ஆசியாவில் மாத்திரமன்றி பூகோள ரீதியிலும் சீனா அதிகாரச்சமனிலையில் முதன்மை பெற்று வளரும் என்பது இந்தியாவிற்கு மாத்திரமன்றி ஐக்கிய அமெரிக்காவிற்கும் நன்கு தெரியும். இதற்கு ஏற்ற வகையில் இந்திய- ஐக்கிய அமெரிக்க தந்திரோபாய பங்காளர் உறவு உருவாக்கப்பட்டுள்ளது. அணுசக்தி உதவி, தந்திரோபாய இராணுவ உதவி போன்றவற்றை வழங்கி இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆசிய வல்லரசாக இந்தியாவினை உருவாக்க ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுகின்றது.இது ஒருவகையில் சீனாவிற்கு எதிரான அதிகாரச்சமனிலையினை இந்தியாவிற்கு ஊடாக பெற்றுக் கொள்ள ஐக்கிய அமெரிக்கா எடுக்கும் முயற்சி என்று கூறலாம்
சீனா அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் உலக அதிகாரத்தைப் படிப்படியாக கைப்பற்றி வருகின்றது. சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பலவீனமான நாடாகும். வருடாந்தம் இந்தியா குறைநிலை வரவு செலவுத்திட்டத்தினையே சமர்பித்து வருகின்றது.இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினால் செல்வாக்கிற்குட்பட வேண்டிய தெற்காசிய நாடுகள் அனைத்திலும் இன்று சீனாவின் பொருளாதார, இராணுவ ஆதிக்கம் வலுவடைந்து வருகின்றது. இன்னோர் வகையில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவினை ஓரம்கட்டிவிட்டு சீனா முன்னோக்கி வளர்ந்து விட்டது எனக் கூறலாம்.
இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியில் உறுதியானதொரு நிலையினை இந்தியா அடையும் வரையில் சீனாவுடன் ஐக்கிய அமெரிக்காவும், இந்தியாவும் தந்திரோபாய முத்தரப்பு உறவினைப் பேணிக் கொள்ள விரும்புகின்றன. அதேநேரம் ஆசியாவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதற்கு இந்தியாவும்,ஐக்கிய அமெரிக்காவும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பயன்படுத்தியும் வருகின்றார்கள்.
மறுபக்கத்தில் இந்திய எல்லைப் பிரதேசங்களில் சீனா அத்துமீறல்களை மேற்கொண்டு வருகின்றது.இந்தியாவினைச் சுற்றியுள்ள தெற்காசிய நாடுகளில் சீனா செல்வாக்கினை அதிகரித்து தனது கடல்வழித் தொடர்பாடலை பலப்படுத்தி வருகின்றது.இது நீண்ட காலத்தில் இப்பிராந்தியத்தில் பதட்டத்தினையும்,மோதலையும் உருவாக்கலாம். எனவே நீண்ட காலத்தில் தந்திரோபாய முத்தரப்பு உறவு என்பது வெறும் அடையாளமாகவே மாறப் போகின்றது.
இந்தியாவின் வகிபாகம்
ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் இருபத்தியோராம் நூற்றண்டில் ஐக்கிய அமெரிக்காவிடமிருக்கும் பூகோள அதிகாரம் சீனாவிடம் கைமாறிவிடும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக்கும் மத்தியில் மாறிவரும் வரும் இச் சூழலை இந்தியா எவ்வாறு தந்திரமாக கையாளப்போகின்றது என்ற பரபரப்பும் உலக மக்களிடம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் பங்குபற்றுதல் இல்லாமல் ஆசியாவின் நூற்றாண்டு விரைவாக வளரும் என எதிர்பார்க்க முடியாது.ஆசிய நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சியும், பங்குபற்றுதலும் அவசியானது என்பது மிகவும் தெளிவானதொரு விடயமாகும். இதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய நான்கு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஆசியாவின் புவிசார் அரசியலுக்கான தந்திரோபாய தலைமைத்துவத்தினை இந்தியா தந்திரோபாய ரீதியில் பெற்றுக் கொள்வதன் மூலம் அகன்ற தந்திரோபாய பங்காளர்களை உருவாக்க வேண்டும். இப்பங்காளர் உறவு குறிப்பிட்ட வல்லரசு அல்லது வல்லரசுகளை அல்லது அரசுகளை மையமாகக் கொண்டிருக்க கூடாது.
-
அண்மையில் தோன்றி கிழக்காசிய அதிகாரச் சமநிலைப் போட்டியில் இந்தியா வெளிநிலை சமநிலையாளராகவா? அல்லது உள்நிலை சமநிலையாளராகவா? பணியாற்றுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். அதிகாரச் சமனிலைக் கோட்பாட்டின் ஒரு பண்பாகிய எப்போதும் வெற்றி பெறும் பக்கததுடனேயே அணிசேருதல் வேண்டும்.அதற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்றவாறு தந்திரோபாயப் பங்காளர்களை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும்.
-
இந்திய-பசுபிக் கரையோர ஜனநாயக நாடுகளுடன் நடுநிலயான கூட்டுக்களை படிப்படியாக உருவாக்கி சீனாவிற்கும் அதனது பிராந்திய நலன்களுக்கும் இடையில் இறுக்குமான இடைவெளியினை உருவாக்குவதா? அல்லது ஆசியா மாதிரியிலான (pயn-யுளயைn) தெளிவான பிரதியீட்டு சர்வதேச முறைமையினை உருவாக்கி அதன் அதிகார மையத்தினை தனதாக்கிக் கொள்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
-
காலனித்துவ மரபின் மூலம் பெற்றுக் கொண்ட தந்திரோபாயத்தின் அடிப்படையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தாராண்மை மனவுணர்வுடன் இந்தியா செயற்படுவதா? அல்லது அவசியம் ஏற்படும் போது “தலையீடு செய்தல்” என்னும் நிர்பந்த தந்திரோபாயத்தினை பயன்படுத்துவதா? என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாம் இடத்தினை பிடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் இந்தியா மலாக்கா நீரிணைப் போக்குவரத்தில் முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.இதன்மூலம் கிழக்காசியாவினைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா பங்காற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக ஒழுங்கிற்குள் இந்தியாவின் வகிபாகம்ää தந்திரோபாயம் என்பன புதிய புதிராக மாறியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ முறைமையில் பங்கு வகிக்காத இந்தியா கிழக்காசிய சர்வதேச முறைமையினை சகித்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.