இலங்கையின் நிர்வாக அமைப்பு பிரித்தானியக் காலனித்துவம் தந்துவிட்டுச்சென்ற பாரம்பரியங்களில் ஒன்றாகும் எனலாம். பிரித்தானிய காலனித்துவத்தின் நிர்வாகக் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது.வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு பொது நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஓன்று நிர்வாக சேவைத் திணைக்களங்கள் மற்றயது மாகாண பொது நிர்வாகக்கட்டமைப்பு என்பனவாகும்.
1798ஆம் ஆண்டின் பின்னர் பல்வேறு நிர்வாக சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம், நில அளவையாளர் திணைக்களம், மருத்துவத் திணைக்களம், காணிப்பதிவுத் திணைக்களம் போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம். சேர் தோமஸ் மெயிற்லாண்ட் (Sir Thomas Maitland) ஆளுநராக இருந்த 1805ஆம் ஆண்டிற்கும் 1811ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்வாக சேவைத் திணைக்களங்கள் மீள் ஒழுங்கமைக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக சேவைத் திணைக்களங்கள் சில உருவாக்கப்பட்டன. காணிப்பதிவுத் திணைக்களம் செயலிழந்தது. அதேநேரம், சுங்கத் திணைக்களம், உப்புத் திணைக்களம் என்பன புதிதாக உருவாக்கப்பட்டன. இக்காலத்தில் தொழில் செய்து கொண்டிருந்த நிர்வாக சேவையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.1815 ஆம் ஆண்டு களுத்துறை,காலி, வன்னி,மன்னார் போன்ற பிரதேசங்களுக்கு தனியான வரி சேகரிப்போர் நியமிக்கப்பட்டனர்.
நிர்வாக சேவையாளர்கள் ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்தே இலங்கைக்குக் அழைத்துவரப்பட்டார்கள். உதாரணமாக 1798ஆம் ஆண்டு எட்டு உயர் அதிகாரிகளும்,1801 ஆம் ஆண்டில் இருபத்தினான்கிற்கு மேற்பட்டவர்களும் பிரித்தானியாவிலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். இதுவே பின்னர் இலங்கைப் பொதுச்சேவை என விரிவாக்கம் பெற்றிருந்தது.1963 ஆம் ஆண்டில் இது இலங்கை நிர்வாக சேவை எனப் பெயர்மாற்றம் பெற்றுக் கொண்டது.கனிஷ்ட நிலை பொதுச் சேவையாளர்கள் நியமனம் பெற்று இலங்கைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னர் ஹெய்லிபூரி (Haileybury) கல்லூரி நுழைவுப்பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.இக்கல்லூரி இந்திய நிர்வாக சேவைக்கான பரீட்சார்த்திகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக இருந்தது.இந்நிறுவனத்தின் பரீட்சையானது,தெரிவுசெய்யப்படும் பரீட்சார்த்தி பாடசாலைக்கல்வியுடன் கிரேக்க மொழி, இலத்தீன்மொழி, கணிதம், ஆங்கிலம், வரலாறு,புவியியல் ஆகிய பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதை உறுதிப்படுத்தியது. இவர்களின் வயது 17 க்கும் 21க்கும் இடைப்பட்டதாக இருந்தது.இவர்கள் இலங்கை வந்ததும் தமக்கு மிகவும் பரீட்சையமான வேலைக்காக அரசாங்க அலவலகமொன்றில் பணிக்கமர்த்தப்பட்டனர். இவர்கள் தமது கடமைக்காலத்தில் இலங்கையின் சுதேசிய மொழிகளாகிய சிங்களம் அல்லது தமிழ் மொழி ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
1856ஆம் ஆண்டில் காலனித்துவ நிர்வாக சேவை அமைப்பு மீள் ஒழுங்கமைக்கப்பட்டது. இலண்டன் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு முறைமை, போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் பட்டதாரிகளை நிர்வாக சேவைக்கான ஆட்சேர்ப்பில் சேர்த்துக்கொள்வதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது.இப்போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிரித்தானிய நிர்வாகசேவை வகுப்பு 1, இந்திய நிர்வாகசேவை, மற்றும் மலாயா,கொங்கொங்,இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளுக்கான நிர்வாக சேவையாளர்களாக நியமிக்கப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டனில் மட்டும் போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு வந்ததால் நிர்வாகசேவையில் நுழைபவர்கள் ஜரோப்பியர்களாகவே இருந்தனர்.1875 ஆம் ஆண்டு பொன்னம்பலம் இராமநாதன் நிர்வாக சேவையில் முதல் இலங்கையராக இணைந்துகொண்டார். இவர் ஆங்கிலப் பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்ததுடன், இலண்டனில் நடாத்தப்பட்ட நிர்வாகசேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியுமடைந்திருந்தார். இவரைத்தொடர்ந்து ஒரு சில இலங்கையர்கள் நிர்வாகசேவையில் நுழைந்திருந்தாலும்,1930 களிலேயே அரசாங்க அதிபராக இலங்கையர் ஒருவர் நியமனம் பெற்றிருந்தார்.
1870ஆம் ஆண்டு நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான பரீட்சை கொழும்பில் நடாத்தப்பட்டது. பிரித்தானிய பல்கலைக்கழகக் கல்வியை எண்ணிக்கையில் குறைந்தளவில் பெற்றுக்கொண்ட இலங்கையர்களால் நிர்வாக சேவையில் குறைந்தளவிலேயே இணையக்கூடியதாக இருந்தது. ஆகவே, கொழும்பில் நிர்வாக ஆட்சேர்ப்பிற்கான பரீட்சை நடாத்தப்பட்டாலும், இலங்கையின் நிர்வாக சேவையானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதொன்றாக இருந்தது. இதனால், பிரித்தானிய அரசாங்கம் 1880ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் பரீட்சையை நடாத்துவது எனத் தீர்மானித்ததினால், இலங்கையர்கள் நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையினை மீண்டும் இங்கிலாந்து சென்று எழுத வேண்டியேற்பட்டது.இந்நிலையில், இலங்கையர்கள் நிர்வாக சேவையில் நுழைவதற்குத் தமக்குள்ள உரிமைகளைக் கோரிக்கைகளாக முன்வைக்கத் தொடங்கினர். இக்கோரிக்கைகளால் 1891ஆம் ஆண்டு நிர்வாக நிர்வாக சேவையில் உள்ளுர்ப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இது நிர்வாக சேவையின் கீழ்மட்ட அலகாகச் செயற்பட்டது. இவர்களுக்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும் ஐரோப்பிய நிர்வாக சேவை மேலதிகாரிகளால் வழங்கப்பட்டன.1921 ஆம் ஆண்டு இலங்கையில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, அதனூடாக இலண்டன் பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு வெளிவாரியாக மாணவர்கள் பயிற்றிவிக்கப்பட்டமையினால், இலங்கையில் பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. விளைவாக, 1924ஆம் ஆண்டு இலண்டனிலும் இலங்கையிலும் சமகாலத்தில் பொதுச்சேவைப் பரிட்சை நடாத்தப்பட்டது.1903 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாக ஆட்சேர்ப்புப் பரீட்சையில் ஐம்பத்தி ஐந்து இலங்கையர்கள் தோற்றியிருந்தார்கள்.
மாகாணபொது நிர்வாகக் கட்டமைப்பு
மறுபக்கத்தில், இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பின் முதுகெலும்பாக மாகாணநிர்வாகமே காணப்பட்டது. அதிகார மையப்படுத்தப்பட்ட அரசாங்கமுறைமை நாடு முழுவதும் செயற்படத்தக்க வகையில் படிநிலை அமைப்பு ஊடான மாகாண நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டது. மாகாண நிர்வாக முறைமைக்கான சிந்தனை 1796 ஆம் ஆண்டிற்கும்-1798ஆம் ஆண்டிற்குமிடையில் ஆரம்பமாகியிருந்தது. இக்காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் முதற்தடவையாக மூன்று பொது நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதிய மூன்று மாகாணங்களாக உருவாக்கப்பட்டன. அவையாவன: யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரையிலான கரையோரப் பிரதேசம்,கொழும்பு தொடக்கம் காலி வரையிலான கரையோரப் பிரதேசம்,திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான கரையோரப் பிரதேசம் என்பனவாகும். பிரித்தானியரால் தொடக்கிவைக்கப்பட்ட மாகாண நிர்வாகமுறைமை இன்றுவரை தொடருவதை அவதானிக்க முடியும். இம் மூன்று மாகாணங்களையும் நிர்வகிப்பதற்கு வதிவிட இறைவரி அத்தியட்சகர் (Resident and Superintendent of Revenue) ஒருவர் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் மூன்று மாகணங்களுக்கும்; தனித்தனியான வரி சேகரிப்பாளர்;கள் நியமிக்கப்பட்டார்கள். 1815ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கண்டி இராச்சியம், 1833ஆம் ஆண்டு வரை தனி பொது நிர்வாக மாகாணமாக நிர்வகிக்கப்பட்டதுடன் நான்காவது நிர்வாக மாகாணமாக உருவாக்கப்பட்டது. இதுவே பிரித்தானியர் அறிமுகப்படுத்திய மாகாண பொது நிர்வாக முறைமையாகும்.
கோல்புறூக் சீர்திருத்தம் ஏற்படுத்திய மாற்றம்
கோல்புறூக் சீர்திருத்தம் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. கோல்புறூக் சீர்திருத்தம் இலங்கை முழுவதையும் முடிக்குரிய நாடாக மாற்றியதுடன், பிரித்தானிய ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்தது. நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்டதுடன், அரசாங்க அதிகாரத்தின் மையமாகக் கொழும்பு நகரம் உருவாக்கப்பட்டது.
கோல்புறூக் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பின் உச்சியில் காலனித்துவச் செயலாளர் பதவியிலமர்த்தப்பட்டார். இவர் இலங்கையின் நிர்வாக விடயங்கள் தொடர்பாக ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். இதனால் நிர்வாகமானது காலனித்துவச் செயலாளரால்அடக்கியாளப்படுவதாக இருந்தது. எல்லா நிர்வாகச் செயற்பாடுகளும் காலனித்துவ செயலாளரினாலேயே நெறிப்படுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையின் நிர்வாக சேவையின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் அனைவரும் இவருக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட்டனர். காலனித்துவச் செயலாளர் நிர்வாகத்தின் மையமாகச் செயற்பட்டார்.
கோல்புறூக் சீர்திருத்தம் ஏற்கனவேயிருந்த மாகாணநிர்வாக முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தாது அதன் எண்ணிக்கையினை ஐந்தாக உயர்த்தியிருந்தது. அவையாவன: வடமாகாணம், கிழக்கு மாகாணம்,மேற்கு மாகாணம்,தெற்கு மாகாணம்,மத்திய மாகாணம் என்பவைகளாகும். ஒவ்வொரு மாகாண நிர்வாகமும் ஒவ்வொரு அரசாங்க அதிபரின் கீழ் (Government Agent – G.A) ஒப்படைக்கப்பட்டதுடன், மாகாண நிர்வாகத்தின் செயற்பாட்டிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் கச்சேரி உருவாக்கப்பட்டது. இக் கச்சேரிகளில் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத் திணைக்களங்களும், முகவரகங்களும் உருவாக்கப்பட்டு, அரசாங்க அதிபரால் இவைகள் இணைக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டன. ஐந்து மாகாணக் கச்சேரிகளினதும் நிர்வாகங்களை காலனித்துவச் செயலாளர் கொழும்பிலிருந்து இணைத்துக் கட்டுப்படுத்தியிருந்தார். அடுத்தநிலையில் ஒவ்வொரு நிர்வாக மாகாணங்களும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் நிர்வாக மாவட்டங்கள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபரின் கீழ் செயற்பட்டது. ஆயினும், அரசாங்க அதிபரே மாவட்ட நிர்வாகத்திற்கும், முழுமையாக மாகாண பொது நிர்வாகத்திற்கும் பொறுப்பானவராவார். முகாமைத்துவ நுட்ப ரீதியாக அரசாங்க அதிபர் இறைவரி அறவிடும் அலுவலர் ஆவார். இதனடிப்படையில் இவர் ஆரம்பத்தில் இறைவரித் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரிக்க, அரசாங்க அதிபர்கள் அரசாங்க முகவர்களாக மாற்றம் அடைந்தனர்.
அதிகார ஒழுங்கைப் பார்க்கின்றபோது மையத்திலிருக்கும் காலனித்துவச் செயலாளரிடமிருந்து அதிகாரம் கீழ் நோக்கிச் செல்கின்றது. மாகாணமட்டத்தில் அரசாங்க அதிபர் காணப்படுகின்றார். கீழ்மட்டத்தில் சுதேசிய மட்ட உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். இது கிராமிய மட்டம் வரை தொடர்கின்றது. போர்த்துக்கேயர், டச்சுக்காரர் போன்று பிரித்தானியர்களும் சுதேசிய நிர்வாகிகளாகிய முதலியார்கள், விதான ஆராய்ச்சி (Vidane- Arachchis) உடையார் போன்ற கிராமியத் தலைவர்களை நிர்வாக சேவையாளர்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.1928ஆம் ஆண்டில் மாகாண நிர்வாகமானது மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டதுடன் மாகாணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாகாணங்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை பத்தொன்பதாகவும் அதிகரித்தது. இதனை விட நூற்றுப் பத்து முதன்மைத் தலைமையாளர்கள் (Chief Head Men’s) பிரிவுகளும் அறுநூற்றுப் பதின்மூன்று சிறந்த தலைமையாளர்கள் (Superior Head Men’s) பிரிவுகளும் நான்காயிரம் கிராமியத் தலைமையாளர்கள் (Village Head Men’s) பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. அரசாங்க அதிபர் தொடர்ந்தும் வரி சேகரிப்பவராக இருந்தாலும், அவருடைய பணிகள் பல நிலைகளிலும் விரிவடைந்து சென்றிருந்தன. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபரிடம் விடப்பட்டிருந்தது. சட்ட, நிர்வாக, நீதித்துறை சார்ந்த கடமைகளைப் படிப்படியாக மாகாணமட்டத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன்,பொதுவான நிர்வாகப் பொறுப்புக்களையும் இவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.