(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.29, 2012.12.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் நேரடி, மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டியது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டமை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தியது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் செயல்படுவதற்கான தடையினை இந்திய அரசாங்கம் விதித்துக் கொண்டதுடன், நீடித்துச் சென்ற இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குத் தலைமை தாங்கியவர்களின் மூலவேர்களை இறுதி யுத்தத்தின் மூலம் பிடிங்குவதற்கு இந்தியா உதவியது. இந்தியா வழங்கிய தந்திரோபாய அரசியல் மற்றும் இராணுவ உதவியும்,ஆதரவும் எல்லோரையும் மிகவும் திகைப்படைய வைத்துள்ளது. இலங்கைக்குப் பாரியளவில் இந்தியா வழங்கிய, வழங்கப்போகின்ற அரசியல், இராணுவ உதவிகளில் சில இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது.
தந்திரோபாயம்
உள்நாட்டு யுத்தத்தில் இராணுவ, அரசியல் ரீதியில் உதவுவதன் மூலம் எதிர்காலத்தில் தரம்மிக்க பாதுகாப்புக் கூட்டுறவினை இலங்கையுடன் பேண ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இந்தியா விரும்பியது. இதனை இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக வெளியிட்ட கருத்து புலப்படுத்துகின்றது. “இலங்கையுடன் எமக்கு மிகவும் புரிந்து கொள்ளக்கூடிய விரிவான உறவு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையால் இலங்கையில் இந்தியாவிற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை நாம் மறந்து விடக்கூடாது. முக்கியமாக பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையில் தமது கேந்திர நலன்களுக்காகக் கால் பதிக்க முயற்சிக்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் கொழும்பிற்கு அவர்களின் பாதுகாப்பிற்கான நலன்களைக் கவனித்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால் கொழும்பு எம்மை விட்டுவிட்டு மற்றவர்களிடம் போகாது விட வேண்டும். இந்தியாவின் பின்புறத்தில் சர்வதேச நாடுகளுக்கு விளையாட்டு மைதானத்தை அமைக்க நாம் அனுமதிக்கக் கூடாது”. எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்திற்குட்பட்டது என்பதை நேரடியாகவே பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மேற்கொண்ட தாக்குதல்கள் அனைத்தையும் சட்டத்திற்கு முரணான தாக்குதல்களாகவே இந்தியா கருதியது. இதனை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28ஆம் திகதி வெளியிட்ட கருத்து மேலும் உறுதிப்படுத்தியது. “இலங்கையுடனும், வெளிநாடுகளுடனும் எமது குரல்கள் இணைகின்றன. வன்முறைகள் விரைவில் முடிவிற்கு வரும் என நாம் நம்புகின்றோம்”. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தம் தொடர்பாகச் இந்தியா எடுத்துக் கொண்ட இறுதி நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள சிவசங்கர் மேனனின் இக்கருத்துப் போதுமானதாகும். “நாங்கள் வன்முறையினை எதிர்க்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வித ஆதரவும் வழங்கக் கூடாது. பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் எல்லாவகை உதவிகளையும் நாங்கள் எதிர்க்கின்றோம்” என 2007ஆம் ஆண்டு ஆனி மாதம் 18ஆம் திகதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். எனவே ஏனைய நாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதையும் இந்தியா எதிர்த்ததுடன், இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தது எனலாம். எனவே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை இந்தியா தீர்மானித்து விட்டது எனக் கூறமுடியும்.இதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா இராணுவ ரீதியாகச் சிந்தித்துச் செயற்படத் தொடங்கியது.
பாதுகாப்பு உதவியும் ஆதரவும்
2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த பலாலி விமானப் படைத்தளத்தின் ஓடு பாதை பாரிய சேதத்துக்குள்ளாகியது. அப்போதிருந்த சூழலில் இலங்கையின் தென்பகுதிக்கும், வடபகுதிக்கும் இடையிலான தொடர்பிற்கு இருந்த ஒரே ஒரு தொடர்பு மார்க்கம் துண்டிக்கப்படுமாயின் அது திகிலான அல்லது பயங்கரமான ஒரு நிலையினை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும். இந்நிலையில் இலங்கையின் அவசர வேண்டுகோளுக்கு அமைய இந்தியாவினால் இவ்விமானநிலைய ஓடுபாதைகள் திருத்தியமைக்கப்பட்டன.
இந்தியாவின் இவ் உதவி தொடர்பாக 2005ஆம் ஆண்டு மார்கழி மாதம் வெகுஜனத்தொடர்பு சாதனங்களுக்கு விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேரா பின்வருமாறு விளக்கியிருந்தார். “இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் விமான நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது ஆறு தொடக்கம் எட்டு மாதங்களில் பூர்த்தியாக்கப்படத் திட்டமிடப்பட்டது. துரதிஸ்டவசமாக காலநிலைமாற்றம் இவ்வேலைகள் துரிதமாக்கப்படுவதில் சிறிய காலதாமதத்தினை ஏற்படுத்தி விட்டது ஆயினும் இவ்வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் எம்முடன் ஒன்றாக இருந்து விரைவாக இவ்வேலைகளை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது” எனக் கூறியிருந்தார். பலாலி விமானப் படைத்தளம் இந்தியாவின் தென்பகுதி விமானப்படைத்தளமாகிய தாம்பரத்திற்கு (இது சென்னையிலிருந்து ஏறக்குறைய 25 கி.மீ தூரத்திலுள்ளது) மிகவும் அண்மையில் (ஏறக்குறைய 329 கி.மீ) அமைந்துள்ளதால் இராணுவ தந்திரோபாய ரீதியில் இந்தியாவிற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக மாறியுள்ளது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையிலிருந்த காலத்தில் பலாலிக்கு மிகவும் அண்மையிலுள்ள இந்திய விமானப்படைத்தளமாகிய தாம்பரத்திலிருந்தே தனது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இதனைவிட தமிழீழ விடுதலைப் புலிகள் தாழ்வாகப் பறக்கும் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இலங்கையின் தென்பகுதியில் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்த தொடங்கினர். இவ்இலகுரக விமானங்களின் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, இலங்கையின் கோரிக்கைக்கிணங்க, இவ் இலகுரகவிமானங்களை அடையாளப்படுத்திக் காட்டக்கூடிய ராடர்களை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கியிருந்ததுடன், இதற்கான தொழிநுட்பவியலாளர்களையும் வழங்கியிருந்தது.
இலங்கையின் கடற்பரப்பில் நிகழும் சந்தேகத்திற்கிடமான செயல்களையும் கப்பல்களின் நடமாட்டத்தினையும் இலங்கைக்குத் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தினைத் தடைசெய்ய இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் 2006ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரையில் கடற்புலிகள் சர்வதேச கடற்பரப்பிற்குள் ஊடுருவிச் செயற்படுவதைத் தடுப்பதிலும் இந்தியக் கடற்படை முனைப்புடன் செயற்பட்டது.
மன்னார் குடாவிலும் பாக்கு நீரிணையிலும் இந்தியக் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள் அடிக்கடி மேற்கொண்டிருந்த ரோந்தின் மூலம் கடற்புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டது. இதேபோன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு ஆழ் கடற்பரப்பில் அடிக்கடி ரோந்தினை மேற்கொண்டு வந்ததுடன், இரண்டு நாடுகளினதும் கடற்படைகள் தமக்கிடையில் தகவல் பரிமாற்றங்களையும் மேற்கொண்ட வந்தன. இலங்கை கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) இந்தியாவின் இவ் வகிபாகம் தொடர்பாகப் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியிருந்தார். “இந்தியாவின் ஒத்துழைப்புடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடாத்த முடிந்தது. ஒவ்வொரு வருடமும் இந்திய கடற்படையும் குறிப்பாக கரையோரப்பாதுகாப்பு பிரிவும், இலங்கை கடற்படையும் நான்கு தடவைகள் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளை நடாத்தி வந்தன. 2008ஆம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியிலிருந்து இரு நாடுகளினதும் கடற்படை கடலில் கூட்டு ரோந்துகளை மேற்கொண்டு வந்தன. இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்துவதற்கு உதவிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனேகமாக அனைத்துக் கப்பல்களும் அழிக்கப்பட்டன. ஒருவருடத்திற்குள் நாங்கள் அவர்களின் எட்டுக்கப்பல்களை அழித்தோம். இவைகள் 10,000 தொன் எடையுள்ள இராணுவ உபகரணங்களை காவிவரக்கூடியவைகளாகும். இவைகள் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்”. எனக்கூறுகின்றார்.
இலங்கை கடற்படை கரையோரப் பாதுகாப்பிற்காக ஏவகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு யுத்தக் கப்பல்கள் உட்பட பல தீர்க்கமான உதவிகளை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிலிருந்து 120 கடல்மைல் தொலைவில் வைத்து 2006ஆம் ஆண்டு புரட்டாதி மாதமும், மேலும் மூன்று கப்பல்கள் 2007ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இலங்கையிலிருந்து தென்கிழக்காக 1,600 கடல்மைல் தொலைவில் அவுஸ்ரேலியா மற்றும் இந்தோனேசியா கடற்பரப்பிற்கு அண்மையில் வைத்து இலங்கை கடற்படையினால் அழித்தொழிப்பதற்கு ராடர் பொருத்தப்பட்ட இந்தியாவின் உளவுக்கப்பல்கள் உதவியுள்ளன.
அண்மையில் கொழும்பிலுள்ள பிரபல கல்லூரிகளில் ஒன்றாகிய ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் பாதுகாப்புச் செயலாளர் நிகழ்த்திய உரை இவைகளை நிதர்சனமாக்கியுள்ளது. இவ்வுரையில் இவர் “எமக்கு மிகவும் அண்மையில் இருக்கும் நாடுகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக நட்புறவுகளை விருத்தி செய்து வருகின்றோம். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியா எமக்கு உதவி செய்துள்ளது. யுத்தத்தின் போது ஏனைய நாடுகளினால் எமக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி கொள்ள முடிந்ததுடன் மனிதாபிமான செயற்பாடுகளையும் எம்மால் முன்னெடுக்க முடிந்தது. இவ் நட்புறவினை மேலும் நாம் பலப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். மேலும் சர்வதேசமட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் இந்தியாவுடன் எமக்கு இருந்த நட்புறவு உதவியுள்ளது”. எனத் தொடர்ந்து கூறிச் செல்கின்றார்.
இதேபோன்று முன்னைநாள் இராணுவத் தளபதி யுத்தம் முடிவடைந்த பின்னர் வழங்கிய செவ்வியொன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் இந்தியா தீர்க்கமான வகிபாகத்தினைக் கொண்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார். இவர் பின்னர் அரசியல்வாதியாகிய போது தொடர்பு சாதனங்களுக்கு வழங்கிய பேட்டியில் “யுத்தத்திற்கான இராணுவத் தளபாடங்களைப் பெறுவதற்கு சீனா அல்லது பாக்கிஸ்தானுடன் நாம் இணைந்து பணியாற்றியதாகவும், இதனால் இந்நாடுகள் எமக்கு இராணுவத் தளபாடங்களை வழங்கியதாகவும் சிலர் கூறலாம். ஆனால் யுத்தத்தில் இலங்கை இராணுவம் தோல்வியடையாமல் இருப்பதற்குத் தேவையான நம்பிக்கையினையும், மனவுறுதியையும், அரசியல் உதவியையும் இந்திய அரசாங்கம் வழங்கி யுத்தத்தில் நாம் வெற்றியடைய எமக்கு உதவியுள்ளது”. எனத் தெரிவிக்கின்றார்.
மீளுருவாக்கம்
2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கையின் பாகாப்பு கட்டமைப்பிற்குள் தன்னையும் பங்குதாரராக இணைக்கின்ற முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவப் புலனாய்வு பாடசாலையினை கண்டியில் இந்தியா ஆரம்பித்தது. இதற்காக பத்து அங்கத்தவர்களைக் கொண்ட இந்திய அணி நிலை கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றது. இப் பயிற்சி 2013ஆம் ஆண்டு வரை நடைபெறும். தற்போது இந்தியாவின் இமாலயப் பிரதேசத்தில் நஹான் என்னுமிடத்திலுள்ள சிறப்புப் படை முகாமில் இரு நாட்டு இராணுவமும் நடாத்தும் இராணுவ பயிற்சி இரு நாடுகளுக்குமிடையிலான உணர்ச்சிபூர்வமான விடயமாக நோக்கப்படுகின்றது. இதனால் இவ்விடயத்தனை மிகவும் இரகசியமாகப் பேணுவது என இருநாடுகளும் தீர்மானித்திருந்தன.இப்பயிற்சி இவ்வருடம் மார்கழி மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகி 24ஆம் திகதி முடிவடைந்தது. முப்பது வருடகால உள்நாட்டு யுத்த அனுபவங்களையும், கிளர்ச்சிகளை முறியடிப்பது தொடர்பான அனுபவங்களையும் இருநாடுகளும் தமக்கிடையில் பகிர்ந்து கொள்வர் என இது தொடர்பாகக் கூறப்படுகின்றது.
2003ஆம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கை கைச்சாத்திடுவது பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இதுவரை பூர்த்தியாகாமலுள்ளது. தற்போது இதில் பெருமளவிலான விடயங்கள் உடன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் இரு தரப்பிலும் உள்நாட்டு மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய சில உணர்ச்சி பூர்வமான விடயங்கள் உடன்படிக்கை இறுதிவடிவமடைந்து கையொப்பமிடுவதற்குத் தடையாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே இதற்குத் தடையாகவுள்ள விடயங்களை இனம்கண்டு தீர்வுகாண்பதும், அடுத்த ஆண்டு இரு நாடுகளும் இணைந்து நடாத்த விரும்பும் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுமாகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய இராணுவத் தளபதி பிக்ரம்சிங் (Bikram Singh) நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ஆம் திகதி இலங்கை வந்திருந்தார். இந்திய இராணுவத் தளபதி பிக்ரம்சிங் இரு நாடுகளுக்கம் இடையிலான எதிர்காலப் பாதுகாப்பு உறவு தொடர்பாக விபரிக்கும் போது “இலங்கை இராணுவத்துடன் இணைந்து பரந்தளவிலான வியூகம் ஒன்றை இந்தியா வகுத்துள்ளது. இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை, மரியாதை என்பவைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இருநாட்டு இராணுவங்களும் ஒருவரின் அனுபவத்திலிருந்து மற்றவர் விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இராணுவ நோக்கில் எமக்கிடையிலான ஒத்துழைப்பு முன்னோக்கிச் செல்வதையே நாம் எதிர்பார்க்கின்றோம். பாதுகாப்புத் தொடர்பான சவால்களை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிவரும். இராணுவத் தலைவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்”. எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய, சர்வதேசப் பாதுகாப்பிற்கான பொறுப்பினை இந்தியா ஏற்றக்கொள்ளப் போகுகின்றது. மறுபக்கமாக கூறின் இந்தியாவின் பாதுகாப்பிற்கான பங்காளியாக இலங்கையினை மாற்ற இந்தியா திட்டமிடுகின்றது. இதன்மூலம் உள்ளிருந்தும்,வெளியிலிருந்தும் தனக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கவும், தடுக்கவும் இந்தியா வியூகம் வகுக்கின்றது.