(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.09, 2014.08.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )
இலங்கையில் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து விட்டன. உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம், இன ஒத்திசைவு (Cohesion) சமாதான கட்டுமானம்,தேசக்கட்டுமானம் போன்றவற்றில் இலங்கை தொடர்ந்தும் தடுமாறி வருவதாக பலராலும் கருத்துக் கூறப்படுகின்றது. மேலும் நிலைத்திருக்கும் சமாதானத்தை உருவாக்கக் கூடிய ஜனநாயக பொறிமுறைகள், நீதி பரிபாலனம் போன்றவற்றை நிறுவுவதிலும் இலங்கை தோல்வியடைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது. உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்தாலும், இன – அரசியல் மோதல் முடிவுக்கு வரவில்லை. ஆயுதம் இல்லாத மோதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. எனவே உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னர் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் புதிய தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீண்ட கால இலக்குகளைக் கொண்ட சுலோகங்கள் உருவாக்கப்பட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு தெளிவான அரசியல் தூர நோக்கு உருவாக்கப்பட வேண்டும். உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னர் உருவாகியுள்ள சூழலைப் பயன்படுத்தி தொடரும் ஆயுதமற்ற இன – அரசியல் மோதல்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்களை உருவாக்க அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.
தெளிவான பாதை வேண்டும்
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வடக்கு, தெற்கு மக்களிற்கிடையிலான சமூகத் தொடர்பாடல் வலைப்பின்னல் சிதைவடைந்து வந்ததுடன், இருதரப்பும் பரஸ்பரம் சந்தேகமும், அச்சமும் கொண்டிருந்தன. உள்நாட்டு ஆயுத மோதல் நடைபெற்ற முப்பது வருட காலப் பகுதியில் இது மேலும் உச்ச நிலையினை அடைந்தது என்றே கூறலாம்.
உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலான பாதையினை உருவாக்குவதற்குத் தேவையானதும், தெளிவானதுமான கொள்கையும், உளக்காட்சியும் உருவாக்கப்படவில்லை. எனவே இலங்கையின் சமகால அரசியல் காட்சி நிலையில் இதற்கான வடிவம் கொடுக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் இலங்கையின் சமூக, அரசியல் யதார்த்தம் தொடர்பான காட்சிநிலையினைப் புரிந்து கொள்ளுதல்; வேண்டும். இவ்வகையில் இலங்கையின் சமூக அரசியல் காட்சிநிலையில் காணப்படும் விடயங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
-
இலங்கை பல்லின, கலாசார சமூகமாகும்.
-
இலங்கையின் பல்லின, கலாசார சமூகங்களிடையே சமத்துவம், சகோதரத்துவம்ää வரலாற்றுத் தொடர்பு, பங்காளர் உறவு என்பன உள்ளன.
-
சமூக ஒத்திசைவு, நல்லிணக்கம், அரசியல் உறுதித் தன்மை போன்றவற்றைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியே இலங்கையின் இனமோதலுக்கான காரணங்களாகும். உள்நாட்டு ஆயுத மோதலுக்கான காரணங்களிலிருந்து இவற்றினைப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமானதொன்றல்ல.
-
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றும் போது தான் நல்லிணக்கம், சமூக ஒத்திசைவு, சமூக அரசியல் உறுதித் தன்மை, தேசக்கட்டுமானம் என்பன ஏற்பட முடியும்.
இலங்கையர் என்ற தேசத்திற்குள் காணப்படும் கூட்டு அடையாளங்கள் அல்லது எல்லா தேசியங்களையும் ஏற்றுக் கொள்வதிலும், அரசு, தேசம் ஆகிய இரண்டிற்குமிடையிலான உறவினைத் தீர்மானிப்பதிலும் இலங்கை தோல்வியடைந்துள்ளது. உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்த பின்னரும் இலங்கையின் இன மோதலுக்கு நிரந்தர தீர்வினையடைய முடியாது இருப்பதற்கும், சர்வதேச தலையீடுகளுக்கும் இதுவே காரணமாகும்.
உள்நாட்டு ஆயுத மோதல் நடைபெற்ற காலத்தில் சிங்கள தமிழ் மக்களின் சிந்தனை, உணர்ச்சிகள், நடத்தைகள் என்பவற்றில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கின்ற பண்பே கலந்திருந்தது. இதனால் ஒரு சாராரின் செயற்பாடுகள் அனைத்தும் மறுதரப்பினரால் இதற்கூடாகவே பார்க்கப்பட்டது. மேலும் இவ்வாறு பார்ப்பதற்குப் பொருத்தமான நியாயங்களும் கூறப்பட்டன. இருசமூகத்தவர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்குவதும், அழிப்பதுமே தங்களுடைய பாதுகாப்பு என்ற காட்சிநிலை உருவாகியிருந்தது.
உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படுமளவிற்கு இன மோதலுக்கான மூலகாரணிகளுக்கான தீர்வினை உருவாக்குவது துரிதப்படுத்தப்படவில்லை. ஆயுத மோதலினால் ஏற்பட்ட தளிம்புகளையும், காயங்களையும் பரஸ்பரம் தொட்டுப் பார்க்கின்ற காட்சிநிலை ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக ஏற்பட்டது.
ஆனால் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்த பின்னர் தோன்றிய அரசியல் காட்சி நிலையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் பிரதான இடத்தினை பிடித்துக் கொண்டளவிற்கு பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுப் பார்ப்பது பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்ளவில்லை. இதன்மூலம் இலங்கை ஆட்சியாளர்களின் மனவெளிப்படுத்தல் காட்சிப்படுத்தப்பட்டது. இது மீண்டும் இனத்துவ அரசியல் நோக்கிய பாதையினை உருவாக்குவதாக அமைந்து விட்டதா? என்ற அச்சத்தினை உருவாக்கியுள்ளது.
இவ் அச்சத்தின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் எவ்வாறு இலங்கை அரசின் பங்காளர்கள் என்ற உணர்வினை பெற்றுக் கொள்வது என்ற வினாவிற்கு விடை தேட வேண்டும். உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரும் இந்த நிலை தொடருகின்ற போது, தமிழ் மக்கள் சாத்வீகப் போராட்டம் ஒன்றிற்குத் தம்மைத் தாமே ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சூழலே உருவாகும். இது எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நல்லிணக்கம், சமூக ஒத்திசைவு, சமாதன வாழ்க்கைக்கு நேர் எதிரான சூழலை தோற்றுவிக்கக் கூடும்.
சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்
உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் தமிழ் மக்களின் சமூக, அரசியல் வாழ்க்கையில் வன்முறை, சந்தேகம்,பாரபட்ச உணர்வுகள் என்பன தொடர்ந்து நிலை கொண்டவிட்டன. உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னர் சமாதானத்தை கட்டியெழுப்பக் கூடியதொரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் இந் நிலைமைக்கு பங்களிப்புச் செய்துள்ளது.
உள்நாட்டு ஆயுத மோதலிற்கான காரணங்களுக்கு பொருத்தமான நிரந்தர அரசியல் தீர்வு காண்பது கட்டாயமானதாகும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை இலங்கை மக்கள் அதில் வெற்றியடையவில்லை. ஆயினும், எல்லோரும் அரசியல் தீர்வினைப்பற்றி தொடர்ந்து பேசுகின்றார்கள். இதுவே தற்பொழுது இலங்கையில் காணப்படும் அரசியல் காட்சிநிலையாகும்.
இன மோதல் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பாக் தமிழ் சமூகத்தின் மனக்குறைகள் மிகவும் முனைப்பானவை. சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தின் அறிவியலாளர்கள் வேறுபட்ட நேரெதிர் கருத்துக்களை பல சந்தர்பங்களில் கூறிவருகின்றனர். தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கான முக்கிய காரணங்கள் எதுவுமில்லை எனக்கூறும் சிங்களக் குழுக்கள் சமூகத்தில் உள்ளன. பெரும்பான்மையின மக்களின் அதிகமான நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிகார வற்புறுத்தலாகவும், பாரபட்சப்படுத்தலாகவும் இருந்தன என்ற கருத்தை தமிழ் குழுக்கள் முன்வைக்கின்றன. உண்மையில் தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் நன்மையளித்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பல கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன என்ற மனக்கவலை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
சிங்கள தமிழ் மக்களுக்கிடையிலான உறவினைக் கட்டியெழுப்புவதில் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் மனக்குறைகள்,வலிகள் தொடர்ந்தும் பிரதான மையக்கருவாகவுள்ளன. ஆயுத மோதலுக்குப் பின்னரான நல்லிணக்கம், சகவாழ்வு செயன்முறையின் முதற்படியாக இம் மனக்குறைகள்,வலிகள் அங்கீகரிக்கப்பட்டு, நேரடியாகவும், நியாயமாகவும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். ஆயுத மோதல் அதிகரித்த பின்னர் மேலும் பல புதிய மனக்குறைகளும், வலிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களுக்கு மனக்குறைகள்,வலிகள்,வடுக்கள் உள்ளன என்பதை மறுப்பது அர்த்தமற்றதும், உண்மையற்றதுமாகும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல்
உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பல்பரிமாண பொறிமுறைகள் கையாளப்பட வேண்டும். பௌதீக உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மாத்திரம் உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான தேசக் கட்டுமான பொறிமுறையாக கொள்ளமுடியாது. உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான மீள்கட்டுமானம், புனர்வாழ்வு என்பவைகளை பெருந்தெருக்களை மீள்கட்டமைப்பது, அதிவேக நெடுஞ்சாலைகளை புதிதாக உருவாக்குவது பாலங்களைக் கட்டுவது, புகையிரத பாதைகளை மீள உருவாக்குவது போன்ற பணிகளுக்கூடாக அளவீடு செய்ய முடியாது. பதிலாக தேசக் கட்டுமானத்திற்கு அசியமான அம்சங்களையும் சமாந்தரமாக கருத்தில் கொள்ளுதல் வேண்டும். பொதுவாக அவைகளை பாதுகாப்பு, நீதி, நல்லிணக்கம், சமூக பொருளாதார மீளுருவாக்கம், நல்லாட்சி, பங்குபற்றுதல் என வகைப்படுத்தலாம்.
மீள்கட்டுமானத்தையும், புனர்வாழ்வினையும் தூரநோக்கிலான அரசியல் பொறிமுறைகளை உருவாக்குவதன் மூலமே உருவாக்க முடியும். உள்நாட்டு ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, புனரமைப்பு, திட்டங்களில் அப்பிரதேச மக்களின் விருப்பம், பங்களிப்பு என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட் வேண்டும். மையஅதிகார அபிவிருத்தி பொறிமுறைகளுக்கூடாக இவைகள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரங்களை உள்ளுர் மக்களுக்கு வழங்கி நல்லிணக்கத்திற்கான பாதையினை உருவாக்க வேண்டும். இதன்மூலமே உண்மையான நல்லிணக்கத்தினையும், தேசக்கட்டுமானத்தையும் உருவாக்க முடியும்.
தேசத்தைக் கட்டியெழுப்ப ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன மோதலுக்கான தீர்வு தொலைவிலுள்ளது என்ற தெளிவான உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திற்குள்ள பொறுப்புக்களை அது புறக்கணித்து வந்துள்ளது என்ற மனத்துயரம்,வலி தமிழ் மக்களிடம்; மாறாவுருநிலைப்படிமமாகி விட்டது. இது அரசியல் பிரச்சனை. ஆகவே இது அரசியல் ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும். மோதலிற்கான மூலகாரணங்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு வழங்குவது அவசியமாகும். இதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஒருநேர நிகழ்வாக அல்லாமல் தொடர் செயல்முறையாக இருப்பதனால், இந்நோக்கத்தை அடைவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாகவும், பரந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை இதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடானது ஆயுத மோதலினால் ஏற்பட்ட துன்பங்களை,வலிகளை முழுதாக ஏற்றுக்கொள்வதிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த இதற்காக மனம் வருந்த வேண்டும்.வன்னியில் நடந்து முடிந்த மனித அவல நிகழ்ச்சி குறித்து ஆட்சியாளர்கள் ஆழமான தார்மீக சுய மதிப்பீடு செய்தால் மட்டுமே மனம் வருந்தும் நிலை உருவாகமுடியும். அத்துடன் மன்னிப்பு, இரக்கம் என்பன இருந்தால் மட்டுமே நல்லிணக்க விதைகளை ஆழமாக சமூகத்தில் வேர் ஊன்ற வைத்து புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
குணமாக்குதல்
உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதிக்கான, அதிகாரப் பகிர்வுக்கான பொறிமுறைகள் எதுவும் பயனுள்ள வகையில் உருவாக்கப்படவில்லை. நீதிக்கான பொறிமுறையும், அதிகாரப்பகிர்வுக்கான பொறிமுறையும் சிறப்பாக செயற்படாத வரையில் இலங்கையில் நல்லிணக்கத்தினை உருவாக்க முடியாது. இலங்கை மக்கள் மனதில் சந்தேகம், வெறுப்பு, குரோதம், பயம் போன்ற மாறாவுருநிலைப்படிமம் தோன்றி வளர்ந்துள்ளது. இம் மாறாவுருநிலைப்படிமம் பரஸ்பர சகிப்புத் தன்மை, பொறுமை, புரிந்துணர்வு, அறிவு பூர்வமாக விடயங்களை அணுகுகின்ற ஆற்றல் போன்ற பண்புகளால் மீள் நிரப்பப்பட வேண்டும்.
நல்லிணக்கம் ஏற்படுவதற்கு சமூக உள குணமாக்குதல் நிகழ வேண்டும். குணப்படுத்துதல் பொறிமுறைக்கு உண்மையும், நீதியும் பிரதான வகிபாகத்தினை வகிக்க முடியும். எல்லை கடந்த நீதி நல்லிணக்கத்தினை உருவாக்குவதில் பிரதான மூலக்கூறாக பணியாற்றலாம். குணப்படுத்தல், உண்மை, நீதி, இரக்கம், சமாதானம் என்பன பரஸ்பரம் பகிரப்பட்டு குணப்படுத்தல் நிகழ வேண்டும். நீதித்துறை சுதந்திரம், பொது மன்னிப்பு, இரக்கம் என்பவற்றின் மூலம் பரஸ்பரம் ஏற்பட்டுள்ள மனத்துயரங்களை, வலிகளை இல்லாமல் செய்ய முடியும். மன்னித்தல், பரஸ்பரம் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பன உண்மையினைக் கண்டறிவதற்கு உதவி செய்யும்.
உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக் காலப்பகுதியில் இருதரப்பும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மனிதாபிமானச்சட்டம், ஆகியவற்றை மீறிவிட்டதாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டுவதுடன் இதற்கான பொறுப்பினை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக் காலப் பகுதியில் நிகழ்ந்த மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்களை இலங்கை அரசாங்கத்தினால் இலகுவில் இல்லாதொழித்து விட முடியாது. ஆனாலும் இதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கான பொறிமுறையினை உருவாக்க முடியும். உள்நாட்டு ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனத்துயரங்களை, வலிகளை குணமாக்குவதன் மூலம் நல்லிணக்கத்திற்கான முன்னோக்கிய பாதையினை உருவாக்க முடியும்.
நிறுவனரீதியான செயற்பாடுகள்
நிலைத்திருக்கக் கூடிய நல்லிணக்கத்தினைப் பேணுவதற்குப் பொருத்தமான அரசியல் அடித்தளம் உருவாக்கப்பட வேண்டும். இதற்குப் பொருத்தமான அரசியல் யாப்பு ரீதியானதும், நிறுவன ரீதியானதுமான ஏற்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும். அதிகாரப்பகிர்வு இனமோதலுக்கு அரசியல் தீர்வினை வழங்கக்கூடிய வகையில் வழங்கப்பட வேண்டும். வரலாற்றில் இதற்கான முயற்சிகள் பல எடுக்கப்பட்டாலும் அனைத்தும் இறுதியில் தோல்வியடைந்தன என்பதையும் மறந்துவிடமுடியாது.
ஆயினும், தற்போதைய அரசாங்கம் 2006ஆம் ஆண்டு அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினை உருவாக்கியது. இக்குழு 2009ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான தடவைகள் சந்தித்துக் கொண்டதுடன், தனது இறுதி அறிக்கையினை 2010ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜனாதிபதியிடம் கையளித்தது. அதன் பின்னர் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற பெயரில் புதியதொரு குழுவினை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இதன் செயற்பாடுகள் பல காரணங்களால் வலுவிழந்துவிட்டன அல்லது சிறப்பாக செயற்பட முடியாமல் பொறிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.
இதனுடன் தொடர்புபடும் வகையில் பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்த அமுலாக்கம் பற்றிய விவகாரம் உள்ளது. பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்தினை முழுமையாக அமுலாக்குவது தொடர்பாக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. ஆனால் இதற்கான முனைப்புள்ள நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை. நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பொருத்தமுடைய சூழலை முன்னோக்கித் தருவதற்கு பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தம் உதவும் என திரும்பத் திரும்ப அரசாங்கம் கூறி வந்தாலும் அதனைக்கூட நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
இன மோதலை ஆயுத பலத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதை தீவிரப்படுத்துவது என்று அரசாங்கம் எடுத்த முடிவினால், உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் காட்சியில் இராணுவத்தின் தலையீடு ஏற்படக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதா? என்ற அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு முதலில் தமிழ் மக்களின் மனத்துயரங்களையும், உள்நாட்டு ஆயுத மோதலினால் ஏற்பட்ட வடுக்கள், வலிகளை இல்லாமல் செய்வதற்குமான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் அதிகாரப்பகிர்விற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவைகளை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். நல்லாட்சி, சட்டவாட்சி, பொறுப்புக் கூறுதல், வெளிப்படைத் தன்மை, என்பவைகளை எதிர்பார்க்கப்படும் அரசியல்பகிர்வு இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் காணி, காவல்துறை, கல்வி, சமய பண்பாடு, மொழி, பொருளாதார போன்ற விடயங்களையும் அதிகாரப் பகிர்வு கொண்டிருக்க வேண்டும். இலங்கையின் நீண்டகால எதிர்பார்ப்பாகவுள்ள பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறைமையை பாதுகாத்தல் என்பதற்காக நல்லாட்சி, ஜனநாயகம், விட்டுக் கொடுத்தல் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்றவற்றை உருவாக்கும் பொறிமுறை தேவையாகவுள்ளது. இதன்மூலமே இலங்கை மக்கள் நிலைத்திருக்கக் கூடிய உண்மையான வெற்றியினை அடைய முடியும்.