ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும்; முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு கொண்டு அரசாங்கம் சேவை செய்வதற்கு நேர்மையும் சக்தியும் வாய்ந்த அரசாங்க பணியமர்த்தல் அல்லது ஆட்சேர்ப்பு இன்றியமையாததாகும். இப்பணியமர்த்தல் என்பதனை தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்குக் கொடுக்கின்ற அரசியல் பங்களிப்பின் உயர் மட்ட செயற்பாடு எனக் கூறிக் கொள்ளலாம். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் அரசியல் நிர்வாகிகளுக்கான ஆட்சேர்ப்பிலும், நிரந்தர நிர்வாகிகளுக்கான ஆட்சேர்ப்பிலும், பரீட்சையும், அரசியல் அதிகாரம் வகிக்கும் பங்கினையும் கணக்கிடுவதன் மூலம் அரசியல் சமுகத்தினுடைய பாரிய அக்கறை வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் எந்த ஒரு நாட்டின் நிர்வாகவியலிலும் அரசியல் ஆட்சேர்ப்பு, நிர்வாக ஆட்சேர்ப்பு ஆகிய இரண்டு விடயங்களும் முதன்மை பெறுகின்றன.
1. அரசியல் ஆட்சேர்ப்பு
ஜனநாயக ஆட்சியில் ஆட்சேர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். வரலாற்றின் ஆரம்ப காலத்தின் முடியாட்சியில் ஆட்சேர்ப்பு அதிகாரம் மன்னனிடம் இருந்திருந்தது. பின்னர் கிரேக்க, உரோம காலத்தில் ஆட்சேர்ப்பிற்கு திருவுளச் சீட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. புராதன கிரேக்க, உரோம் நிர்வாகத்தில் காணப்பட்ட இம்முறை குறிப்பிட்ட நிர்வாகத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவின் ஆதிக்கத்தினை விபரிப்பதாகவே இருந்தது. நவீன கால அரசியல் ஆட்சேர்ப்பில்
-
சுழற்சி முறை
-
பலாத்காரத்தின் மூலம் அச்சுறுத்தல்
-
ஆதரவு முறை
-
தேர்தல் முறை
போன்றவைகள் முதன்மையான பெற்ற ஆட்சேர்ப்பு முறைகளாகக் காணப்படுகின்றன.
சுழற்சி முறை
ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்ற ஆட்சேர்ப்பு முறைமை சுழற்சி முறையிலானதாகும். அனேக நாடுகள் இந்த முறைமையினைத் தமது அரசியலமைப்பினூடாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் இது நிர்வாக ஆளணிக்கான சுழற்சியின் தரத்;தினைக் காப்பாற்றத் திட்டமிடப்பட்ட ஒரு செய்முறையாகும். சுவிற்சர்லாந்தின் தேசிய அசம்பிளியின் தலைவரும், உப தலைவரும்சுழற்சி முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பதவி மாறுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் ஒருவர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
பலாத்கார முறை
பலாத்கார முறையிலான ஆட்சேர்ப்பானது அனேக அரசியல் முறையில் பொதுவானதாகவும், ஒரு நீண்ட கால ஆட்சேர்ப்பு முறையாகவும் காணப்படுகின்றது. உயர் மட்டத்திலான அரசியல் பங்களிப்பிற்கான ஆளணி அரசியல் ஆட்சியினை பலவந்தமான முறையில் வெற்றி கொள்வது, புரட்சிகள் மூலம் வெற்றி கொள்வது, வெளியிலிருந்து இராணுவத் தலையீட்டினை மேற்கொள்வது, அரசியல் சதி, அல்லது கலகக்காரர்களின் வன்செயல்கள் மூலம் அடிக்கடி மாற்றத்திற்குள்ளாவதை குறித்து நிற்கின்றது.
ஆதரவு முறை
ஆதரவு முறையிலான ஆட்சேர்ப்பு முறைமை அனேக வளர்ச்சியடைந்த நாடுகளில் குறிப்பாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்ப காலங்களில் மிகவும் பொதுவான ஒரு முறையாக காணப்பட்டது. ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் தமது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தமக்கு ஆதரவளிக்கக்கூடிய பணியாளர்களை உயர்பதவிகளில் நியமனம் செய்யும் மரபினைப் பின்பற்றி வந்தது. தற்போது இம்முறை இநநாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை.
தேர்தல்
சட்ட, நிர்வாக, நீதித்துறையின் அங்கத்தவர்களின் தெரிவிற்குத் தேர்தல்கள் உபயோகிக்கப்படுகின்றன. இத் தேர்தல்கள் நேரடியானவைகளாகவும், மறைமுகமானவைகளாகவும் நடாத்தப்படுகின்றன. மறைமுகத் தேர்தல்கள் கல்லூரிகள் மூலமாகவும், நேரடியாகத் தேர்தல் தொகுதிகள் மூலமாகவும் நடைபெறுகின்றன. வாக்காளர்களுடைய தெரிவுகள் சட்டத்தகுதியினால் விரும்பப்படுகின்றனவாகவும், அரசியல் கட்சிகள் தங்களுடைய போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் முறைமையினாலும் அரசியல் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றன.
தற்போது பல நாடுகளில் எளிய பெரும்பான்மை முறையினையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினையும் இனம்காணக்கூடியதாவுள்ளது. தேர்தல் முறைகள் கட்சி முறைகளுக்கேற்ப முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வகையில் பல கட்சி முறை நிலவும் நாடுகளுக்கான அரசியல் ஆட்சேர்ப்பிற்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், இரு கட்சி முறைமை நிலவும் நாடுகளிற்கு எளிய பெரும்பான்மை முறையும் சிறப்பானது எனக் கூறப்படுகின்றது.
2. நிர்வாக அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு
அரசாங்கத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட பணியாட்கள், அதிகாரிகள் அனைவரும் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகுந்த கல்வியும், பயிற்சியும் வழங்;கப்பட வேண்டும். ஆட்சேர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த அனேக நாடுகள் தங்கள் அரசியல் யாப்புக்களில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதோடு ஆட்களைச் சேர்ப்பதற்குத் தமக்கு விரும்பிய கொள்கைகளைப் பின்பற்றுகின்றன.
புராதன சீனா, இரஸ்சியா, போன்ற நாடுகளில் திறமை அடிப்படையிலேயே அரசாங்க சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றிருந்தது. அதேபோல பிரித்தானியருடைய ஆட்சியின் கீழிருந்த காலனித்துவ நாடுளிலும் இதே போன்று திறமையடிப்படையிலேயே ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் கட்சி மாற்றமடைந்து செல்வதற்கேற்ப ஆட்சேர்ப்பும் மாற்றமடைந்து செல்லும் பண்பு காணப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமக்கு வேண்டிய ஆட்களைப் பதவியில் அமர்த்துவதன் மூலம் தமது செல்வாக்கினை வளர்த்துக் கொண்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏறக்குறைய 95 சத வீதமான நிர்வாக ஆட்சேர்ப்பு திறமை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேநேரத்தில் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பரீட்சை மூலமாகத் திறமையினை இனம் கண்டு பயிற்சியளிக்கப்பட்டே நிர்வாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வகையில் நிர்வாக ஆட்சேர்ப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், தன்மைகளையும் கருத்தில் எடுத்து சில பொதுவான விடயங்கள்; நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன.
தெரிவு செய்யும் அமைப்பு அல்லது அதிகாரம்:-
ஜனநாயக நாடுகளில் சட்டரீதியாக ஏற்படுத்தப்பட்ட சில அதிகாரசபைகளே அரசாங்க வேலைக்குப் பணியாட்களைத் தெரிவு செய்கின்றன. இவைகள் சுயமாக இயங்கும் சபைகளாகும். உதாரணமாக பிரித்தானியாவில் பத்தொன்பதாம்; நூற்றாண்டில்Northcote Trevelyan Report தொடர்ந்து Civil Service Commision ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பிரித்தானியாவின் எல்லா நிர்வாக உத்தியோகத்தர்களுக்குமான ஆட்சேர்ப்பிற்கும் பொறுப்பானதாகும். அத்துடன் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்க Centre for Administrative Studies என்ற நிறுவனமும் மேலதிக பயிற்சியளிக்க Civil Servies College உம் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் பணிக்குழு அதன் கடமைகளுக்கு ஏற்ப வகுப்புக்களாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றது. “Ecole National Administration மற்றும் Ecole Poly Technique என்பன இப்பயிற்சியை வழங்குகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முறையே Public Service Commission, Central Public Service Commission என்ற அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு நிர்வாகிகள் அதற்கூடாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் வௌ;வேறு காரணங்களுக்காக தெரிவுகள் அரசியல் பற்றுடன் ஜனநாயகத்திற்கு புறம்பாக நடைபெறுவதினால் பணிக்குழுவினுடைய உன்னதமான சிறப்பினை அது சீரழித்து விடுகின்றது. இனக்குழுக்கள், சமூக அந்தஸ்த்து, பொருளாதார-குடும்ப உறவுப் பின்னணிகள் வர்க்க முறைமைகள், பாடசாலைத் தொடர்பு, தேச பக்தி அல்லது கீழ்ப்படிவு, அரசியல் கட்சிகள், அமுக்கக் குழுக்கள் போன்றவை ஆட்சேர்ப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக சமூகப்-பொருளாதார பின்னணி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆட்சேர்ப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
பணியாட்களும், நிர்வாகிகளும் தெரிவு செய்யப்படும் வழிமுறைகள்
இத்தெரிவு முறை இரண்டு வழிகளில் இடம்பெறுகின்றன.
அனுபவத்தின் மூலமான பதவி உயர்வு:-
ஏற்கனவே சேவையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றது. அதாவது உயர் அதிகாரிகளின் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்படும் போது கீழ் நிலையிலுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதன் மூலம் குறிப்பிட்ட வெற்றிடம் நிரப்பப்படுகின்றது. இவ்வாறான பதவி உயர்வு முறை பல நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. பதவி உயர்வு முறையிலான ஆட்சேர்ப்பினைச் செய்கின்ற போது ஜனநாயகப் பண்பு கெடாமலும், அரசாங்க சேவையில் தகுதி வாய்ந்த அறிஞர்களின் எண்ணிக்கை குறையாமலும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும். புதியவர்கள் மத்தியில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் ஏற்கனவே பணியாற்றி வரும் பணியாளர்களிடையே திறமையானவர்களைத் தெரிவு செய்வது இலகுவானதாகும்.
நேரடியாகப் பரீட்சை மூலம் வேவ் வேறு பதவிகளுக்கு ஆட்களைத் தெரிவுசெய்தல்:-
பரீட்சை மூலம் ஆட்களைத் தெரிவு செய்யும் இந்த பரவலாக எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது. இவ்வகையில் பரீட்சைகளை நான்கு வகையாக வகைப்படுத்தலாம்.
-
எழுத்து மூலப் பரீட்சை
-
வாய்மொழிப் பரீட்சை
-
செயல் நிறைவேற்றுப் பரீட்சை
-
கல்வி மற்றும் அனுபவ மதிப்பீடு
எழுத்து மூலப் பரீட்சையில் பொதுவாக பரீட்சார்த்திகளின் பொது அறிவு, கிரகிக்கும் ஆற்றல், உளச் சார்பு போன்றன மதிப்பிடப்படுகின்றன. வாய்மொழிப் பரீட்சையில் பரீட்சார்த்திகளின் அனுபவம், அறிவு, ஆர்வம், மதிநுட்பம், தோற்றம் போன்றன மதிப்பிடப்படுகின்றன. செயல் நிறைவேற்றுப் பரீட்சையானது ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் ஒரு குறிப்பிட்ட வேலையைக் கொடுத்து அதில் அவர்களது செயற்பாட்டுத் திறனை மதிப்பிடுவதாகும். பொதுவாக இச் செயற்பாடு எல்லா ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன.
3. தகுதி :-
அரசாங்க சேவையில் பணியாட்கள் பொதுவானதகுதிகளினடிப்படையிலும், சிறப்புத் தகுதிகளினடிப்படையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். இத்தகுதிகள் பொதுவான தகுதிகளாகவும், சிறப்புத் தகுதிகளாகவும் கருத்திலெடுக்கப்படுகின்றன. பொதுவான தகுதிகளாக பிராஐhவுரிமை, ஆளுமை, பால், வயது, அடிப்படைக் கல்வி போன்றன கருத்தில் கொள்ளப்படுகின்றன. இது ஒவ்வொரு பதவியையும் பொறுத்து வேறுபட்டிருக்கும். இதனைவிட சிறப்புத் தகுதிகளாக அனுபவம், தனித்திறமைகள், தொழில்நுட்ப அறிவு, மேலதிகக் கல்வித் தகைமை என்பன முதன்மை பெறுகின்றன.