(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.26, 2013.10.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் தமக்கு இருக்கக் கூடிய அதிகூடிய நலன்களை பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவும் , சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன. சீனா நீண்ட காலமாகப் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பராக் ஒபாமா (Barack Obama) சீனாவுடன் நட்புறவினைப் பேணுவதற்குத் தேவையான சமிக்சைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று சீனாவும் ஐக்கிய அமெரிக்காவுடன் நட்புறவினைப் பேணுவதற்குத் தேவையான சமிக்சைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. எனவே சமகால உலகில் காணப்படும் மிகவும் பலமான இருநாடுகளும் மாறிவரும் அரசியல் காட்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு தமது கொள்கைகளை வகுத்து வருகின்றன எனக் கூறலாம். இந்நிலையில் எதிர்காலத்தில் சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் உருவாகக் கூடிய உறவு எத்தகையது? ஆழமான கூட்டுறவு, சமாதானம், உறுதிநிலை என்பவற்றை இரு நாடுகளினாலும் ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்க முடியுமா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை தேடுவது பொருத்தமானதாகும்.
சீனாவின் எரிபொருள் தேவை
உலகில் அதிகூடிய சனத்தொகையினைக் கொண்ட நாடு சீனாவாகும். 2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 1.3 பில்லியன் மக்கள் சீனாவில் வாழ்கின்றார்கள். சீனா அண்மைக் காலமாக கைத்தொழில் துறையில்; அதிக ஆர்வம் காட்டிவருவதுடன், உலகப் பொருளாதாரத்தில் முதல் நிலையினை அடையக் கூடிய வகையில் மிக வேகமாக வளர்ந்தும் வருகின்றது. இதனால் உலகில் ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிகளவான எரிபொருட்களை நுகரும் நாடாக சீனா மாறியுள்ளது.
சீனாவின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் சராசரியாக 8 % த்திற்கும் 10 % த்திற்கும் இடையிலுள்ளது. இதனால் சீனாவின் சக்திவளத் தேவையானது வருடாந்தம் அதிகரித்து வருகின்றது. அதாவது சீனாவின் எண்ணெய் நுகர்வு அதிகரிப்பு வீதம் வருடாந்தம் 7.5% த்தினால் அதிகரித்து வருகின்றது. இது ஐக்கிய அமெரிக்காவின் எண்ணெய் நுகர்வு வீதத்தினைவிட ஏழு மடங்கு அதிகமானதாகும். 2020 ஆம் ஆண்டில் சீனாவின் எரிபொருள் நுகர்வு வீதம் 150 % த்தினால் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கைத்தொழில் துறைக்குத் தேவைப்படும் எரிபொருட்களுக்கான கேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உள்ளுர் எரிபொருள் வளத்தினையே சீனா கொண்டுள்ளது. 1970 களிலும் 1980 களிலும் சர்வதேச சந்தையில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருந்த சீனா 1993 ஆம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக மாறியதுடன், படிப்படியாக எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் நாடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
சீனாவில் அதிகரித்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சியினால், 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் அதன் எண்ணெய் இறக்குமதி ஐக்கிய அமெரிக்காவின் எண்ணெய் இறக்குமதியை விட அதிகரித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க சக்திவள தகவல் முகவரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்;துள்ளது. சீனா புரட்டாதி மாதம் 6.3 மில்லியன் பரலுக்கும் அதிகமான மசகு எண்ணெய்யினை இறக்குமதி செய்துள்ளது. இதே காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா 6.1 மில்லியன் பரல் மசகு எண்ணெய்யினை இறக்குமதி செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சீனாவின் மசகு எண்ணெய் இறக்குமதி 9.2 மில்லியன் பரல்களாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சீனா அதிகரித்து வரும் தனது எண்ணெய் தேவையினைப் பூர்த்தி செய்ய கனடா, சவுதிஅரேபியா,ஈரான்,மேற்கு ஆபிரிக்கா,சூடான், வெனின்சுலா, ரஸ்சியா, கசகிஸ்தான் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியில் தங்கியுள்ளது. ஆயினும் 58 % மான மசகு எண்ணெய்யினை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இருந்தே சீனா இறக்குமதி செய்கின்றது. இது 2015 ஆம் ஆணடில் 70 % மாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம்
ஐக்கிய அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எதிர்கால உறவினை மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் வளமே தீர்மானிக்கவுள்ளது. எனவே இதற்கேற்ற வகையில் தந்திரோபாயத்தினை வகுத்துள்ள சீனாää குறுங்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன் போட்டியிடுவதைத் தவிர்த்து ஐக்கிய அமெரிக்காவுடன் நட்புறவினைப் பேணி ஒத்துழைப்பதனூடாக எதிர்காலத்தில் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து தனக்குக் கிடைக்கக் கூடிய எண்ணெய் வளத்தினைப் பாதுகாக்க விரும்புகின்றது. எனவே ஐக்கிய அமெரிக்காவுடன் நட்புறவினைப் பேணுவதனூடாக எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ள சீனா விரும்புகின்றது எனக் கூறமுடியும்.
இவ்வகையில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷாங் வான்குவான் (Chang Wanquan) ஐக்கிய அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் ஷக் ஹெகலைச் (Chuck Hagel) சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
இச் சந்திப்பின் போது “பூகோள ,பிராந்திய பிரச்சினைகளை சீனா வெற்றிகரமாகவும்,பொறுப்புடனும் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவினை ஐக்கிய அமெரிக்கா வழங்கும்” என ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் சீனப் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் இராணுவ கூட்டுறவினை பலப்படுத்துவது ஷாங் வான்குவானின் நோக்கமாகும். இதற்காகப் பல கூட்டு இராணுவ ஒத்திகையினை நடாத்துவதற்கு இரு நாடுகளும் திட்டமிட்டன. பெருமளவிற்கு ஆசிய-பசுபிக் கடற் பிராந்தியத்தில் நடைபெறும் கடற்கொள்ளையினை முறியடிப்பதில் இவ் இருநாடுகளும் கவனம் செலுத்தத் தீர்மானித்தன.
சிறப்பான கூட்டுறவினை பேணுதல், தவறான கணிப்பீடுகளை குறைத்தல்,ஏனைய இராணுவ செயற்பாடுகளை முன்னறிவிப்பு செய்வதற்கான பொறிமுறையினை உருவாக்குதல் போன்ற விடயங்களுக்கான ஒப்பந்தத்திலும், இருநாடுகளும் கைச்சாத்திட்டுக் கொண்டன.மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகவும் பாரிய சர்வதேச கடற்படை ஒத்திகையாகக் கருதப்படும் பசுபிக் சமுத்திர கரையோர நாடுகளின் கடற்படை யுத்தப் பயிற்சி ஒத்திகையில் முதல் தடவையாக சீனா பங்குபற்ற இணக்கமும் காணப்பட்டது.
இதற்கிணங்க சோமாலியாவிற்கு அண்மையிலுள்ள அடன் குடாவில் (Gulf of Aden) கடற்கொள்ளை முறியடிப்பு ஒத்திகை ஒன்றில் இருநாடுகளும் ஈடுபட்டன. மேலும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையும் ,ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையும்; இணைந்து ஹவாய் (Hawaii) கடற்கரையில் மனிதாபிமான பாதுகாப்பு கூட்டு செயற்பாட்டு ஒத்திகையில் ஈடுபட்டன.
சீனப்; பாதுகாப்பு அமைச்சரின் ஐக்கிய அமெரிக்க விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பாரிய அடிப்படை மாற்றம் எதனையும் ஏற்படுத்தாத போதும், பசுபிக் பிராந்தியத்தில் இருதரப்பிற்குமுள்ள நலனை சமாதானமாகவும் ,கூட்டுறவுடனும் பேணுவதற்கு உதவக் கூடும் என இராஜதந்திரிகள் எதிர்பார்க்கின்றனர். இதன்மூலம் ஆசியாவின் அதிகார மையமாக ஐக்கிய அமெரிக்கா விரைந்து மாறுவதை சீனா சிறிது காலத்திற்குப் பின்தள்ளியுள்ளது எனவும் இவர்கள் கூறுகின்றார்கள்.
சீன ஜனாதிபதியின் விஜயம்
சீன ஜனாதிபதி எக்ஸ் ஐ ஜின்பிங் (Xi Jinping) ஐக்கிய அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்; பின்னர், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் மீள்சமநிலைக்கான தந்திரோபாயம் ஆரம்பமாகியது. சீனாவின் உப ஜனாதிபதி இதன் போது வெளியிட்ட அறிக்கை இதனை நிரூபித்துள்ளது. இவ் அறிக்கையில் ”ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின்; நற்பெயர் , பலம், சமாதானம் என்பவற்றைப் பேணுவதற்கு ஐக்கிய அமெரிக்கா வகிக்கும் ஆக்கபூர்வமான வகிபாகத்தினை சீனா வரவேற்கின்றது. அதேநேரம் இப்பிராந்தியத்திலுள்ள சீனா மற்றும் ஏனைய நாடுகளின் நலன்களை ஐக்கிய அமெரிக்கா மதித்துச் செயற்படும் என நாங்கள் நம்புகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிய- பசுபிக் பிராந்தியத்தின் நற்பெயர், பலம், சமாதானம் என்பவற்றினை சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றதுடன், இப்பிராந்தியத்தில் மீள்சமநிலையினை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தினையும் எதிர்பார்க்கின்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மீள்சமநிலையினை உருவாக்குவதற்கான உண்மையான உந்துவிசையானது, ஐக்கிய அமெரிக்கா இதற்காக எதிர்காலத்தில் வழங்கப் போகும் உத்தரவாதத்திலேயே தங்கியுள்ளது. இவ் உத்தரவாதத்தினை இப்பிராந்தியத்திலுள்ள சீனாவிற்கும், ஏனைய நாடுகளுக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் ஐக்கிய அமெரிக்கா வழங்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு ஆனிமாதம் கலிபோர்னியாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் , சீன ஜனாதிபதி எக்ஸ் ஐ ஜின்பிங் ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெற்ற உச்சி மகாநாடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை மாற்றியமைக்கத் தவறிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான உறவு அல்லது ஆசிய-பசுபிக் நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு என்பதை விட, சீனாவுடன் ஐக்கிய அமெரிக்கா பேணக்கூடிய நட்புறவு ஆசியப்பிராந்தியத்தின் நற்பெயர், பிராந்தியத்தின் உறுதி என்பவற்றிற்கு மிகவும் அவசிமானதாகும் என்பது இராஜதந்திரிகளின் கணிப்பீடாகும்.
சரிவடைந்து செல்லும் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவினை மேலும் வீழ்ச்சியடைய வைக்கும். எனவே ஐக்கிய அமெரிக்காவினை இவ் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக இருநாடுகளுக்கும் இடையில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சமநிலை உறவினை உருவாக்க ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் முயற்சிப்பதாகப் பல விமர்சனங்கள் உள்ளன. உண்மையில், ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டினைத் தமது உறவிற்காகத் தெரிவு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்தே இச் சமநிலை உறவு ஆரம்பமாகின்றது எனக் கூறலாம்.
சமநிலை உறவு
நாணயத்திற்குள்ள இருபக்கங்களைப் போன்று ஒருபக்கத்தில் ஆசிய- பசுபிக் பிராந்தியத்திலுள்ள சிறிய நாடுகள் மிகவும் பலவீனமான பேரம் பேசும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. மறுபக்கத்தில் ஐக்கிய அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இருநாடுகளில் ஏதாவது ஒரு நாட்டினை தமது கூட்டுறவிற்காகத் தெரிவு செய்யும் திறனுடைய நாடுகளாகவும் உள்ளன.
இப்பிராந்தியத்திலுள்ள அநேக நாடுகள் வியந்து பாராட்டும் வகையில் இருநாடுகளுடனும் உறவினைப் பேணுவதற்காக முயற்சி செய்கின்றன. ஆசியாவின் அதிகார மையாமாகும் ஐக்கிய அமெரிக்காவின் சிந்தனைக்கு இது சாதனமானதாகும் என இராஜதந்திரிகள் வாதிடுகின்றனர். ஆனால் ஆசிய- பசுபிக் பிராந்தியத்தின் அதிகாரமையமாக யார் மாறினாலும் இப்பிராந்திய நாடுகளுக்கிடையில் நிலவும் நல்லுறவினை இது எதிர்காலத்தில் சீர் குலைக்கப் போகின்றது என்பதே உண்மையாகும்.
சமகால அரசியல் காட்சிநிலையில் சமநிலை உறவு ஐக்கிய அமெரிக்காவிற்குச் சாதகமானதாகவுள்ளது. இந்நிலையில், ஆசிய- பசுபிக் பிராந்தியத்தின் உறுதிநிலை , நற்பெயர் என்பவற்றைப் பாதுகாப்பதே இப்பிராந்தியத்தில் சீனாவிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள வகிபாகமாக இருக்க முடியும். ஐக்கிய அமெரிக்காவும், சீனாவும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளை தம்மில் ஒருவரை தெரிவுசெய்யும்படி நிர்பந்திக்குமாயின், அல்லது ஐக்கிய அமெரிக்காவும் , சீனாவும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பார்களாயின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள சமநிலை உறவு குழப்பமடைந்துவிடக் கூடும். ஆனால் இரண்டு நாடுகளும் இவற்றினைக் கருத்தில் கொள்ளாது இப்பிராந்தியத்தில் தமக்கு இருக்கக் கூடிய நலன்கள்,முக்கியத்துவம் கருதி இப்பிராந்தியத்தினைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என்பதே சமகால அரசியல் காட்சி நிலையாகும்.