தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை விட பலவந்தக் கோட்பாடு உயர்வாகக் கருதப்படுகின்றது. உடல் வலிமையினை அடிப்படையாகக் கொண்டு அரசு தோற்றம் பெற்றது என பலக் கோட்பாடு கூறுகி;ன்றது. வரலாற்று ரீதியாக இக் கோட்பாட்டின் தோற்றம் ஆக்கிரமிப்பிலிருந்து ஆரம்பமாகியது. பலவீனமான அரசன் பலமான அரசனால் வெற்றி கொள்ளப்பட்டான். இராச்சியங்களும்ää சாம்ராச்சியங்களும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் வெற்றி கொண்டதன் மூலமே உருவாக்கப்பட்டிருந்தன.
பலக் கோட்பாட்டின் அடிப்படை கருதுகோள் “யுத்தம் அரசனை ஈன்றெடுக்கின்றது” என்பதாகும். மனிதன் சமூக விலங்காக இருப்பினும், சக மனிதர்களுடன் சண்டையில் ஈடுபடும் மன உணர்வு கொண்டவனாகும் எனப் பலக் கோட்பாட்டாளர்கள் நம்புகின்றார்கள். மனிதன் எப்போதும் அதிகாரத்தில் வரம்பற்ற விருப்பம் கொண்டவனாகும். யுத்தத்தின் இயல்பும், அதிகாரம் மீதான கட்டுக்கடங்காத விருப்பமும் மனிதனை வீரமுள்ளவனாக உயர்த்திக் காட்டுகின்றது. இதுவே ஆரம்ப கால மனித அபிவிருத்திக்குக் காரணமாகியது. ஒரு மனிதன் ஏனையவர்களை விட உடல் வலிமை கொண்டவனாகின்ற போது, அவர்களை வெற்றி கொண்டு அடிமைகளாக்குகின்றான். இவன் தன்னை பின்பற்றுபவர்களை ஒன்றுபடுத்தி, ஏனையவர்களுடன் போராடி, பலவீனமானவர்களை வெற்றி கொள்கின்றான். இப்போது அவன் தான் சார்ந்த குலக்குழுவின் தலைவனாகி விடுகின்றான். ஒரு குலக்குழு ஏனைய குலக்குழுக்களுடன், யுத்தத்திலீடுபட்டு, பலமான குலக்குழு பலவீனமான குலக்குழுவினை வெற்றி கொள்கின்றது. இவ் யுத்த நடைமுறையும், வெற்றி கொள்ளலும் தொடர்ந்து நடைபெற்று, வரையறுக்கப்பட்ட நிலப்பிரதேசம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. குல மரபுக் குழுத்தலைவர் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டபின்னர், ஏனைய குலமரபுக் குழுக்கள் மீது தனது அதிகாரத்தினை விஸ்தரிக்கத் தொடங்கினர். இது ஒன்பதாம் நூற்றாண்டில் பெரிய நிலப் பிரதேசங்களைக் கைப்பற்றும் வரை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இது குலமரபுக்குழு அரசாங்கம் என அழைக்கப்பட்டது. இதே நிகழ்வு ஸ்கண்டினேவிய நாடுகளிலும் நடைபெற்றிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் எண்ணற்ற குலமரபுக்குழுக்கள் படிப்படியாக ஒன்று சேர்ந்து பலமடைந்தன. இதன் விளைவாக நோர்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய மூன்று இராட்சியங்களுக்கிடையில் கடுமையான யுத்தம் நிகழ்ந்ததுடன், வெற்றி கொண்டவர்களால் இவ் இராச்சியங்கள் ஆட்சி செய்யப்பட்டன.
லீக்கொக் இது தொடர்பாக கூறும் போது “மனித ஆக்கிரமிப்பிலிருந்து வந்ததே அரசாங்கமாகும். அரசின் தோற்றத்தின் ஆரம்பத்தில் நலிவடைந்த குலமரபுக்குழுக்களை பலமான குலமரபுக்குழுக்கள் வெற்றி கொண்டு, மனிதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பொதுவாகக் கூறின் உடல் வலிமை அதிகமாக இருப்பவனால் ஆதிக்கம் சுயமாகத் தேடிப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வே குலமரபுக்களிலிருந்து இராச்சியங்களுக்கும், இராச்சியத்திலிருந்து சாம்ராச்சியத்திற்குமாகத் தொடர்ந்தது” எனக் கூறுகின்றார். பலக் கோட்பாடு யுத்தத்தில் அடையும் வெற்றி மூலமே அரசு அபிவிருத்தியடைகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. “பலமே சரியானது” என்பதே இக் கோட்பாட்டின் கருப் பொருளாகும். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தத்துவஞானி கியூம் (Hume) என்பவர் “குலமரபுக் குழுத் தலைவன் தொடர்ச்சியான யுத்தத்தின் மூலம் தனது செல்வாக்கினைத் தேடிப் பெற்று ஆளுபவனாக வேடமிட்டான்” எனக் கூறுகின்றார். தற்காலத்தில் தனிநபர்கள் தமது சொந்த வாழ்க்கை அல்லது இருப்பிற்காக சமூகத்திலுள்ள வலிமையற்றவர்களை அடக்குமுறை செயற்பாடுகளால் அடக்கி ஒடுக்கி வாழ்வதை அவதானிக்க முடிகின்றது. இவர்களைப் பொறுத்தவரை “பலமே சரியானது” என்பதே சமூக வாழ்க்கைக்கு பொருத்தமானது எனக் கருதுகின்றார்கள்.
பலக் கோட்பாட்டினை கால்மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றவர்களும் ஆதரித்திருந்தனர். ஆயினும், இவர்கள் பலத்திற்கு கொடுக்கும் விளக்கம் வித்தியாசமானதாகும். மாக்ஸின் கருத்தில் “அரசு என்பது சுரண்டுபவர்களின் நிர்வாகக் குழுவாகும்” ஏங்கல்ஸ் “பலமும், இரக்கமின்மையும் இல்லாமல் வரலாறு இல்லை” எனக் கூறுகின்றார். லெனின் “சமுதாயத்திலுள்ள வேறுபட்ட வர்க்கங்களுக்கிடையிலான வெறுப்பினால் தோற்றம் பெற்றதே அரசு. இது முதலாளித்துவ சுரண்டலாளர்களின் கருவியாகும். இவர்களே பெரும்பான்மை மக்களை ஆட்சி செய்கின்றார்கள்” எனக் கூறுகின்றார்.
ஜேர்மனிய அரசியல் சிந்தனையாளர்களாலும் பலக் கோட்பாடு பரந்தளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இவர்களைப் பொறுத்த வரை “பலத்தினைப் பிரயோகிப்பதன் மூலமே தேசம் ஒன்றின் ஐக்கியம் பெற்றுக் கொள்ளப்படும்” றைஸ்க் (Treitschke) என்பவர் “அரசு தனது பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு என்பவற்றிற்கான பொது அதிகாரத்தினையுடையது. இதன் முதல் இலக்கு யுத்தத்தினை உருவாக்குவதும், நீதியை நிர்வகிப்பதுமாகும். மனித வரலாறு முடியும் வரை ஆயுதங்கள் பெறமதியானவைகளாகவே இருக்கும்”. எனக் கூறுகின்றார். நவீன சிந்தனையாளர்களில் வொன் பெர்பார்டி (Von Berphardi) என்பவர் “பலம் மிகவும் சரியானதாகும். எது சரியானது என்பதனை அடக்குமுறை யுத்தமே தீர்மானிக்கும்” எனக் கூறுகின்றார். நீட்சே (Neitzhe) என்பவர் “உயர் மனிதனும் அதிகார விருப்பமும்” என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றார். ஜேர்மனியிலும், இத்தாலியிலும் பலக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிட்லரும், முசோலினியும் எழுச்சியடைந்தனர்.
ஜெங்ஸ் (Jenks) அரசியல் வரலாறு என்னும் நூலில் “பலம்” பற்றிய கருத்துக்களை முன்வைக்கின்றார். இவர் “எல்லா அரசியல் சமுதாயங்களும் வெற்றிகரமான யுத்தங்களின் மூலமே தமது இருப்பினைத் தக்கவைத்துள்ளன.” எனக் கூறுகின்றார். பொலிபியஸ் என்பவர் “அரசு வன்முறையாகவே தொழிற்படுகின்றது. அரசின் அடித்தளம் பலமேயாகும். ஆரம்ப காலத்தில் பலத்தினை அடிப்படையாகக் கொண்டு மன்னர்கள் அதிகாரத்தினை நிறுவிக் கொண்டார்கள். அதிகாரமானது மக்கள் குழுக்களை ஒன்றாகக் கட்டுப்படுத்தியது” எனக் கூறுகின்றார்.
பலக் கோட்பாடு பல உண்மைகளை எடுத்துக் கூறுவதனை மறுப்பதற்கில்லை. இவ்வகையில் அரசுகளின் எழுச்சிக்கு யுத்தங்களும், ஆக்கிரமிப்புக்களும் முக்கிய வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. குலம், குடிகள், அரசுகள் என்பவற்றின் விஸ்தரிப்பிற்காக இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசுகள் உருவாக்கப்பட்டு அவைகள் தமது எல்லைகளை விஸ்தரித்துச் சென்றமைக்கு “பலம்” பயன்படுத்தப்படவில்லை என்பதை நிராகரித்துவிட முடியாது. அரசு ஒன்றின் இயல்பு, தன்மைகளை, வன்முறைகளும், புரட்சிகளும் தனித்து அல்லது ஒன்றிணைந்து மாற்றியமைத்துள்ளன என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அரசிற்கு பலம் மிகவும் அவசியமான மூலக்கூறாகும். உள்நாட்டில் சமாதானம், ஒழுங்கினைப் பேணுவதற்கு “பலம்” அவசியமானதாகும். புறச்சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் “பலம்” அவசியமானதாகும் அரசுகளின் இருப்பிற்கு “பலம்” தவிர்க்க முடியாத ஒன்றாகும்.