அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா?

அரிஸ்ரோற்றல் காலத்திலிருந்து உலகளாவிய ரீதியில் அரசியலை விஞ்ஞானத்தின் எசமான் (Master) என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலொக் (Pollock) கொம்ட் (Compte) போர்ட் (Ford) போன்றோர் இவ்வாறு அழைக்கப்படுவதை மறுக்கிறார்கள். அரிஸ்ரோற்றல் இதனை அரசின் அல்லது அதிகாரத்தின் விஞ்ஞானமாக விளக்கமளித்தார். எனவே அரசறிவியல் விஞ்ஞானம் ஒரு கலையா? அல்லது விஞ்ஞானமா? என்ற விவாதம் காலங்காலமாக நிகழ்த்தப்படுகின்றது. அரசியல் விஞ்ஞானம் ஒரு கலை என்றும், விஞ்ஞானம் என்றும் இரு பக்க விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னோர் வகையில் கூறின் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்குப் பதிலாக “அரசியல் விஞ்ஞானம்” எனப் பெயரிடும் போது எதிர்வாதங்கள் ஏற்படுகின்றன. மேரி வொல்ஸ் ரோன்கிராப்ற், வில்லியம் க்கோட்வின், விக்கோ, ஹியும், பொலொக், சீலி போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிடுவதையே பெரிதும் விரும்பியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டிலேயே “அரசியல் விஞ்ஞானம்” என்ற புதிய பெயர் பிரபல்யமடைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையிலான ஆய்வாளர்கள் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்கு பதிலாக அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிட்டு அழைப்பதையே விரும்பினர். இவ்வாறு அழைப்பது ஏற்புடையதாக இருப்பினும், இக்கற்கை நெறியினை சில ஆய்வாளர்கள் “அரசியல்”, “அரசியல் விஞ்ஞானம்” ஆகிய இரண்டு பெயர்களையும் முற்றிலும் ஒரே கருத்தில் பயன்படுத்தியுள்ளனர். நடத்தைவாதிகள் இக்கற்கை நெறியை மீண்டும் பழைய பெயராகிய “அரசியல்” என்ற பதத்தினால் அழைக்க விரும்பினர். ஆயினும், சில ஐக்கிய அமெரிக்க எழுத்தாளர்கள் அரசு, அரசாங்கம் என்பதற்குப் பதிலாக அரசியல் முறைமை (Political System) என்ற புதிய பெயரால் அழைக்க விரும்பினர்.

அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அல்லது இல்லையா என்பது தொடர்பாக எம்மிடம் எதிர்மாறான கருத்துக்கள் உள்ளன. எனவே நியாயமான முடிவு ஒன்றிற்கு நாம் வர வேண்டும். சமகாலம் தொழில்நுட்பவியல் காலமாகும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும் விஞ்;ஞான அறிவு உதவுகின்றது. அது மனிதனை மதிப்போடும், பகுத்தறிவோடும் ஒழுக்கமாக வாழ்வதற்கும் உதவியுள்ளது. விஞ்ஞான வழிமுறை என்பது நவீனகாலப்பகுதியின் ஒரு கண்டு பிடிப்பாகும். பக்கச்சார்பற்ற, நன்றாக நிலை நிறுத்தப்பட்ட, முறைப்படியமைந்த அறிவைப் பெறுவதை விஞ்ஞானங்கள் குறிக்கோளாகக் கொள்ளு¬கின்றன. இவற்றினை அடைவதற்குச் சில விசாரணை முறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவையே விஞ்ஞான வழிமுறைகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது விஞ்ஞானங்களால் கட்டியெழுப்-பப்பட்ட மாதிரியான விசாரணை விஞ்ஞானவழி முறை என அழைக்கப்படுவதற்கு உரித்துடையதாகியது. இவ்வழிமுறை இரண்டு தெளிவான பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  1. தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பவியல் வழிமுறையூடாக ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் விசாரணை செய்வதும், அளவிடுவதுமே விஞ்ஞான வழிமுறை என அழைக்கப்படுகின்றது. இத்தொழில்நுட்ப வழிமுறைகள் வேறுபடும் போது விஞ்ஞானங்களும் வேறுபடுகின்றது.
  2. பெற்றுக் கொண்ட தரவுகளின் இயல்புகளுக்கு ஏற்ப அளவையியல் முறைமைகளின்படி காரண காரியங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த அளவையியல் வழிமுறைகள் தொழில்நுட்பவியல் வழிமுறைகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகும்.

எனவே நாம் முதலில் விஞ்ஞானம் என்ற சொல்லிற்குரிய அர்த்தத்தினைச் சரியாக விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். விஞ்ஞானம் என்பது “பொதுவான விதிக@டான செயற்பாட்டினைக் காட்சிப்படுத்துகின்றதும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டதுமான உண்மைகளுடன் தொடர்புடைய கல்வி அல்லது அறிவின் ஒரு கிளை” என அமெரிக்க அகராதி கூறுகின்றது. இவ்வகையில் விஞ்ஞானத்தின் பிரதான இயல்புகளாக பின்வருவனவற்றைக் கூறிக் கொள்ளலாம்.

  1. நிகழ்வதற்குரிய சாத்தியக் கூறினை கருத்துடன் சுருக்கமாக, உறுதியாக ஒருங்கிணைத்து முறைப்படுத்தல்.
  2. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும், எதிர்வு கூறும் திறன்.
  3. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும் தரவுகளை ஒப்பாய்வு செய்யக்கூடிய நிலை.
  4. முறை அல்லது முறைமையியலின் உடன்பாடு.
  5. விஞ்ஞான ரீதியாக வேலையுடன் ஈடுபாடு காட்டக்கூடிய போதிய பயிற்சி என்பவைகளாகும்.

இலகுவாக கூறின் “விஞ்ஞானம் அறிவின் ஒரு கிளை” இது உள் நோக்கங்கள் எதுவுமில்லாத முறைப்படுத்தப்பட்ட அல்லது அறிவுகளுக்காகத் தேடிப்பெற்ற அறிவு எனக்கூறலாம். நுணுக்கமான விபரங்கள் எவ்வித பாரபட்சமுமின்றியும், தப்பெண்ணங்களின்றியும் சேகரிக்கப்படல், தப்பெண்ணங்கள் எதுவுமின்றி இவைகள் அதன் இயல்புகள் அல்லது ஒத்த தன்மைகள், வேறுபாடுகளுக்கேற்ப வகைப்படுத்தப்படல், தகவல்களின் நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு பொதுக் கருத்தினை உருவாக்குதல் இறுதியாக இவைகள் தொடர்பான விதிகள் உருவாக்கப்படல் என்பவைகளைக் கொண்டதே விஞ்ஞானமாகும். ஜி.என்.சிங் (G.N.Sing) என்பவர் விஞ்ஞானத்தினை நான்காக வகைப்படுத்தலாம் எனக்கூறுகின்றார்.

  1. கருத்தியலான அல்லது மனத்தால் இயக்கப் பெறுகின்ற விஞ்ஞானம், கணிதவியல், அளவையியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ளலாம். இவைகள் மனதிற்கு கருத்து படிவங்களைத் தருபவைகளாகும்.
  2. பௌதீக விஞ்ஞானம்;;; பௌதீகவியல், இரசாயனவியல், நிலஅமைப்பியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புபட்டதுடன் விதிவிலக்கற்ற நிபந்தனைக்குட்பட்ட பரிசோதனை முறைமைகளைக் கொண்டவைகளுமாகும்.
  3. உயிரியல் விஞ்ஞானம்; தாவரவியல், விலங்கியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் தாவரங்கள், விலங்குகளின் வாழ்க்கை என்பவற்றுடன் தொடர்புடைய பரிசோதனை முறையாகும்.
  4. சமூக விஞ்ஞானங்கள்; சமூகவியல், பொருளியல், அரசியல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் சமூக இயல்புள்ள மனிதனுடன் தொடர்புடையதாகும்.
  5. இவ்வாறாயின், அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானமாக விபரிக்க அல்லது மதிப்பளிக்க முடியுமா? என்ற வினா பின்வரும் காரணங்களினால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

விஞ்ஞானம் தனக்குரிய கலைச் சொற்களையும், துல்லியமான வரைவிலக்கணங்களையும் கொண்டுள்ளது. அரசியல் விஞ்ஞானமும் தனக்குரிய கலைச் சொற்களாகிய சுதந்திரம், சமத்துவம், உரிமைகள், நீதி, ஜனநாயகம், சட்டஆட்சி, சோசலிசம் போன்றவற்றினைக் கொண்டிருப்பினும், துல்லியமான சொற்களையும் வரைவிலக்கணங்களையும் கொண்டிருக்கவில்லை. இச்சொற்களுக்கு வௌவேறு எழுத்தாளர்கள் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இது ஏராளமான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இடத்தில் வாழும் மக்களுக்கும், பிறிதொரு இடத்தில் வாழும் மக்களுக்குமிடையில் காணப்படும் பழக்கவழக்கங்கள், மனஉணர்ச்சி, மனநிலை, சுபாவம் போன்றவற்றின் விளைவால் சிக்கலான அரசியல் நிகழ்ச்சிகள் உருவாகின்றன. இதனால் மக்களுடைய நடத்தைகளுக்கு நிலையான விதிகளை உருவாக்க முடியாது. உதாரணமாக வாக்காளர்களின் வாக்களிப்பு நடத்தை, சமயம், சாதி, சமுதாயம், சமூகப் பொருளாதாரநிலை, வர்க்கம் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக முறைக்கும், பிரித்தானிய ஜனநாயக முறைக்கும் இடையில் வேறுபாடுள்ளதை அவதானிக்கலாம்.

அரசியல் விஞ்ஞானிகளின் பெரும்பாலான வாசகங்கள் பொதுக்கருத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கின்றன. உதாரணமாக “அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு ஜனநாயகம் மிகச் சிறந்ததாகும்” என்பது பொதுக்கருத்திலான வாசகமாகும். எவ்வாறாயினும், பொதுவான கருத்தினைப் பலப்படுத்துவதற்கு ஒப்பீட்டு ஆய்வினை நாம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் ஜனநாயகம் பற்றி எம்மனதில் ஏற்பட்ட எண்ணத்தினைப் பலப்படுத்த அல்லது நிரூபிக்க முடியும். உண்மை யாதனில் எமது வாசகங்களில் விஞ்ஞான விசாரணைக்குத் தேவையான நிபந்தனையாகிய புலன்களால் அறியக் கூடிய தன்மை இல்லாமல் உள்ளது. எனவே ஒப்பீடு என்பதும் சரி நுட்பமான ஒழுங்;குமுறைக்குட்படாததாகலாம்.

அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய கல்வி குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். மாபெரும் சிந்தனையாளர்களும், கோட்பாட்டாளர்களும் சில அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தமது மனக்கருத்துக்களை ஆதரித்து அல்லது எதிர்த்து கூறுகின்றார்கள். உதாரணமாக “புரட்சிகள்” மாபெரும் நிகழ்வு எனச் சிலர் கூறுகின்ற போது சிலர் அவற்றை “எதிர்புரட்சி” எனச் சிறப்பு பெயரிடுகின்றனர்.

மேற்கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பரசோதனைக்குட்படுத்துவது சிரமமானதாகும். அரசியல் விஞ்ஞானிகளின் முடிவுகளைப் பரிசோதனைக்குட்படுத்த முடியாது. பரிசோதனை செய்வதற்கு கருவிகள், இயந்திரங்கள், ஆய்வு கூடங்கள் எதுவும் இருப்பதில்லை. இதேபோல் அரசியல் கோட்பாடுகள் கூறும் முடிவுகளும், எதிர்வு கூறுதல்களும் இவைகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து எழுதப்பட்;டவைகளல்ல. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெருமளவிலான எழுத்தாளர்கள் இக்கற்கை நெறியை விஞ்ஞானக் கற்கைநெறி என அழைப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஜே.எஸ்.மில் இக்கற்கை நெறியிலுள்ள விஞ்ஞானப் பண்புகள் தொடர்பாகச் சந்தேகம் வெளியிட்டிருந்தார். பக்கிள் (Buckle) “தற்கால அரசு பற்றிய அறிவு, அரசியல் என்பன விஞ்ஞானத்திலிருந்து வெகு தூரத்திலுள்ளதுடன், எல்லாக் கலைகளுக்கும் பி;ன் நோக்கியதாகவும் இருக்கின்றது” எனக் கூறுகின்றார். முறைகளையும், முறைமையில்களையும் பயன்படுத்துதல் தொடர்பாக எழுத்தாளர்களிடமுள்ள உடன்பாடின்மை, இக்கற்கை நெறி தொடர்பான முடிவுகள், கொள்கைகள் தொடர்பாக பொதுவான உடன்பாடுகள் குறைவாக இருத்தல், இக்கற்கையின் அபிவிருத்தியில் தேவைப்படும் தொடர்ச்சி, சரிநுட்பமான எதிர்வு கூறல்களை உருவாக்குவதற்கு தகவல்களை வழங்குவதிலுள்ள தோல்வி போன்றவற்றின் அடிப்படையில் பிரான்சிய அறிஞர் அகஸ்ட் கொம்ட் அரசியலை விஞ்ஞானம் என அழைப்பதை நிராகரித்தார். 1920ஆம் ஆண்டு பிரைஸ் (Bryce) பிரபு “ஆழமாகவும் கவனமாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பினும் விஞ்ஞானப் பாடநெறிகளாகிய தாவரவியல் அல்லது இரசாயனவியல் அல்லது இயந்திரவியல் போன்று அரசியல் ஒரு விஞ்ஞானமாக வருவது சாத்தியமற்றது” எனக்கூறுகின்றார்.

இவ்வகையில் அரசியல் விஞ்ஞானத்தினை விஞ்ஞானக் கல்விக்குரிய பாடங்களுடன் வகைப்படுத்துவது முடியாததாகும். ஆனால், சமூக விஞ்ஞானங்கள் என்ற வடிவத்துக்குள் இதனை உள்வாங்குவதற்கு ஆழமான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள் இருபதாம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பெருமளவிற்கு மாறியுள்ளது. இதனைப் பின்வரும் வகையில் தொடர்புபடுத்திக்காட்ட முடியும்.

உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுகள் ஆழமான அனுபவ அரசியல் கோட்பாடுகள் எழுச்சியடைவதற்கு முன்னின்றன. பொதுக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு “ஜனநாயகம், அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு சிறந்ததொரு முறை”, “மக்களினுடைய சுதந்திரத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வலுவேறாக்கம் அவசியமாகின்றது”. “நியமன அங்கத்தவர்களை விட தேர்தல் மூலம் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுதல் சிறப்பானது”, “சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் கடமையாற்றுவதற்கு நீதிபதிகள் நிரந்தர சேவைக்காலத்தினைக் கொண்டிருக்க வேண்டும்”, “ஜனநாயக முறைமைக்கான சிறந்த கல்வி தேர்தலாகும்” போன்ற மறுக்க முடியாத பல உண்மைகளை முடிவுகளாக எடுக்க முடிகின்றது.

பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், போன்ற தெளிவான பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்கள் உள்ளன. அதேநேரம் வானிலை ஆய்வு போன்ற தெளிவில்லாத பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்களும் உள்ளன. அவ்வாறாயின் அரசியல் விஞ்ஞானத்தினை பௌதீக, உயிரியல் விஞ்ஞானங்களுடன் ஒப்பிட முடியாது. அதேநேரம் வானிலை ஆய்வுடன் ஒத்த தன்மைகள் சில இருக்க முடியும். மேலும், இக்கற்கை நெறியிலுள்ள சில விதிகள் அனுபவ விசாரணைக்குட்பட்டவைகளாக இல்லாதிருக்கலாம். சில விதிகள் பரிசோதனைக்குட்பட்டவைகளாக இருக்கலாம். அரசின் இலக்கு “அதன் மக்களுக்கு நல்ல வாழ்க்கையினை உத்தரவாதப்படுத்துவதாகும்” என்ற அரிஸ்டோட்டிலின் விதியினை அனுபவபூர்வமாக பரிசோதிக்க முடியாமலிருக்கலாம். ஆனால், “சமத்துவமின்மை புரட்சிகளுக்கு காரணமாகின்றது” என்ற இவருடைய விதியை சிலவேளை பரிசோதிக்கலாம்.

விஞ்ஞானம் சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைக்கின்றது. அரசியல் விஞ்ஞானம் இவ்வாறான சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைப்பதில்லை. எனவே இதனை விஞ்ஞானக் கற்கை எனப்பட்டியல்படுத்த முடியாது. ஆனால் வேறுபட்ட பல்வேறு வழிகளில் அரசியல் விஞ்ஞானம் கற்கப்பட்டது. இயற்கை விஞ்ஞானத்தின் சிறப்பு சமூக விஞ்ஞானத்திலும் இருக்கவில்லை. ஏனெனில் சமூக விஞ்ஞானம் மாறுகின்ற மனித நடத்தைகளுடன் தொடர்புபட்டதாகும். மனித மனம் அடிக்கடி மாறுகின்ற இயல்புடையதாகியதால், மனித நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வு கூறல்களைக் கூறமுடியாது. இயற்கை விஞ்ஞானம் வெப்பம், ஒலி போன்ற இயற்கையான விடயங்களுடன் தொடர்புபட்டதால் எதிர்வு கூறல்களை இதனால் செய்ய முடியும். ஆனால் சமூக விஞ்ஞானத்தினால் எதிர்வு கூறல்களுக்கான அடிப்படை கூறுகளை உருவாக்க முடியும் என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. சமூக அபிவிருத்தியின் சில அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு கால்மாக்ஸ், பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர்களால் முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து சோசலிசம் எழுச்சியடையும் என எதிர்வு கூற முடிந்தது. ஆகவே மாக்சிசவாதிகள் தமது எதிர்வுகூறல்களை விஞ்ஞானப10ர்வமானவை எனக்கூறினர். லாஸ்வெல், டால் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள் இவ்வழியில் தமது சிந்தனைகளையும் உரிமை கொண்டாடுகின்றனர். “அரசியல் விஞ்ஞானத்தில் புள்ளிவிபரவியல் பகுப்பாய்விலான எதிர்வுகூறல் சாத்தியமானது” என வில்ஸன் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

இவ் எல்லாக் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு சில எழுத்தாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானக் கற்கையாக விபரி;ப்பதையே விரும்புகின்றனர். “ஹொல்ஷென்ட்ஒப்” (Holtzendoref) “அறிவின் மிகப்பெரிய வளர்ச்சியுடனான மொத்தமான எல்லா அனுபவங்கள், நிகழ்ச்சிகள். அரசு பற்றிய அறிவு போன்ற அனைத்தும் அரசியல் விஞ்ஞானம் என்ற பொதுவான தலைப்பின் கீழ் கொண்டுவரப்படுமானால் அதனை நிராகரிப்பது சாத்தியமானதல்ல” எனக் கூறுகின்றனர். அரசியல் விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞானமல்ல ஆனால் சமூக விஞ்ஞானமாகும். அரசியல் விஞ்ஞானம் விஞ்ஞானப10ர்வமானதாக இருக்க வேண்டுமாக இருந்தால் நுணுக்கமாக வரையறுக்கப்பட்ட கண்டிப்பான சொற்களால் இது உச்சரிக்கப்படல் வேண்டும். அதேநேரம், வொன்மோல், பிளன்சிலி ஜெலினிக், றசன்கொபர், லூயிஸ், சிட்;விக், லிபர், பொலொக், வ10சி, பேகஸ் விலோபி, மைக்கல்ஸ், வெபர், மரியம், ஈஸ்ரன், லஸ்வெல், போன்ற பெரும் கோட்பாட்டாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானப் பாடநெறியாக அழைப்பதே சரியானது என வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும், சமூக விஞ்ஞானம் ஒவ்வொன்றும் விதிமுறைப்படியான பண்புக் கூறுகளுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவைகளைத் தூய விஞ்ஞானம் மற்றும் துல்லியமான விஞ்ஞானம் என மாற்றமுடியாது. இது அரசியல் விஞ்ஞானத்திற்கும் பொருந்தும். மனித வாழ்க்கைக்கான விதிமுறைகள், இலக்குகள், விழுமியங்கள் தொடர்பான பண்புகள் அரசியல் கற்கையிலும் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில் பார்க்கின்றபோது அரசியல் விஞ்ஞானத்தினைத் தூய விஞ்ஞானமாகவன்றி சமூக விஞ்ஞானமாகவே கருதமுடியும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,294 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>