அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு சமூகவியல் நோக்கில் அரசியல் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. மக்களின் சமூக நம்பிக்கைகள், விழுமியங்கள் , மனப்பாங்கு என்பவற்றினால் தொகுக்கப்பட்டதே அரசியல் கலாசாரமாகும். அரசியல் முறைமையில் அங்கம் பெறும் ‘தனி மனிதர்களுடைய மனப்பாங்குகள் அரசியலாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.எனவே மக்களின் மனப்பாங்கு எதுவோ அதுவே அரசியல் கலாசாரம் ஆகின்றது எனக் கூறலாம்.
மனிதனின் பொதுவான இயல்புகளான விழுமியங்கள் மீதான நம்பிக்கைகள், உணர்ச்சி வசப்படும் மனப்பாங்குகள் ஒரு சந்ததியிலிருந்து இன்னோர் சந்ததிக்குப் மாற்றப்படுகின்றன. அதேநேரம் இயங்கியல் விதியின்படி சமூகத்தின் பொதுவான கலாசார அம்சங்கள் படிப்படியாக மாற்றங்களுக்குள்ளாகின்றன. எனவே சமூக கலாசாரத்துடன் தொடர்புடைய காட்சிகள் எவ்வாறு தோற்றம் பெற்றன இது அரசாங்கத்துடன் எவ்வாறு தொடர்பாக்கப்பட்டது என்பன கருத்தில் எடுக்கப்படுகின்ற போது இதற்கூடாக அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்று விடுகின்றது.
எனவே அரசியல் கலாசாரம் அரசியல் இலக்கினை மையமாகக் கொண்ட முழுமையான அரசியல் பங்கீடு என கூறலாம். ரொபர்ட் ஏ. டால் என்பவர் ‘அரசியல் கலாசாரத்தினை சில மூலக் கூறுகளின் ஊடாக தெளிவுபடுத்துகின்றார். அரசியல் கலாசாரம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் தொடர்புடையது, கூட்டுச் செயற்பாட்டுடன் தொடர்புடையது ,அரசியல் முறைமையுடன் தொடர்புடையது, ஏனைய மக்களுடன் தொடர்புடையது என்பதே இவரின் கருத்தாகும்.
ஆயினும் லூசியன் டபிள்யூ பை என்பவர் அரசியல் கலாசாரம் என்பதனை அரசியல் அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடனும், மூன்றாம் மண்டல நாடுகளுடனும் தொடர்புபடுத்தி ஆய்வு செய்கின்றார். இவர் அரசியல் கலாசாரம் தொடர்பான ஆய்விற்காக மூன்று விடயங்களை முன்வைக்கின்றார்.
-
அரசியல் வியாபகம் அதாவது அரசியல் இலக்கும், கருத்தும் எவ்வாறு தொடர்புபடுகின்றன.
-
அரசியல் செயற்பாட்டின் தரமான மதிப்பீடு
-
அரசியல் செயற்பாட்டுப் பெறுமானம்.
அலமன்ட், பவல் ஆகியோர்கள் அரசியல் கலாசாரம் தொடர்பாக மூன்று வகையான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதாவது அரசியல் கலாசாரமானது
-
அறியும் ஆற்றலுடன் தொடர்புடையது
-
உணர்வுடன் தொடர்புடையது
-
மதிப்பீட்டுடன் தொடர்புடையது எனக் கூறுகின்றார்கள்
எனவே அரசியல் கலாசாரம் அரசியல் முறைமையில் மக்களுடைய மனப்பாங்கு, நம்பிக்கைகளை முன்னேடுத்துச் செல்கின்றது.
1. அரசியல் கலாசாரத்திற்கு ஏனைய பாடங்களுடனுள்ள தொடர்பு
அரசியல் கலாசாரம் வரலாறு, புவியியல் மற்றும் சமூகப் பொருளாதார பாடங்களுடன் தொடர்புடையதாகும்
வரலாறு
ஒரு நாட்டின் மரபுகள் அந்நாட்டின் அரசியல் கலாசாரத்தைத் தீர்மானிக்கின்றன. இதனை அறிவதற்கு வரலாற்றினூடாக நாம் செல்ல வேண்டும். உதாரணமாக பிரித்தானிய மக்களின் பழமை பேணுகின்ற தன்மையினையும், பிரான்சிய மக்களின் தீவிர மாற்றங்களை விரும்பும் மனப்பாங்கினையும் குறிப்பிடலாம். இந்திய மக்கள் பிரித்தானியாவிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையினை கற்றுக் கொண்டார்கள். அல்ஜீரியா, வியட்நாம் மக்கள் பிரான்சிலிருந்து வன்முறை, புரட்சி வழிமுறைகளைக் கற்றுக் கொண்டார்கள்.
புவியியல்
புவியியல் பண்பு ஒரு நாட்டு மக்களுடைய அரசியல் கலாசாரத்தினை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பிரித்தானியா ஏனையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு ஏற்ற புவியியல் தன்மைகளைக் கொண்டிருந்தது. தனித் தனி அடையாளங்களைக் கொண்ட தேசியங்கள் தமது தனித்துவமான தேசியத்திற்கான போராட்டங்களூடாக இறைமையுடைய தனியரசுகளை நிறுவ முற்படுகின்றன. உதாரணமாக கென்ய அரசாங்கம் அங்கு வாழும் சோமாலிய பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வந்தது. சோமாலியப் பழங்குடியினர் கென்யாவிலுள்ள யூனியனை சோமாலியாவுடன் இணைக்க வேண்டுமெனக் கோரி கென்யாவுடன் யுத்தம் புரிந்தனர்.
சமூகப் பொருளாதார அபிவிருத்தி
நகர மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியினால் மிகவும் சிக்கலான சமூக அமைப்பு தோற்றுகின்றது. இங்கு கல்வித்தரம் மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுவதுடன் தொடர்பாடலும் அதற்கான வசதிகளும் உயர்ந்தளவில் பயன்படுத்தப்படும். . ஆனால், கிராமிய சமுதாயமொன்றில் இவ்வாறான வளர்ச்சியினையும், இதனால் ஏற்படக் கூடிய அபிவிருத்திகளையும் அவதானிக்க முடியாது. ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார, தொழிநுட்ப அபிவிருத்தியானது அந்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தினை குட்டி பூஸ்வாக்களாக வளர்ச்சியடைய வைத்தது. கார்ல்மாக்ஸ் கூறும் கைத்தொழில் வளர்ச்சியடைய தொழிலாளர் வர்க்கம் சுரண்டலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும் என்ற கருத்து இங்கு முரண்பாட்டு நிற்பதை அவதானிக்கலாம்.
சமயச் சார்பற்ற பண்பும் அரசியல் கலாசாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. சமயச் சார்பற்ற பண்பு வளர்ச்சியடைய மக்களுடைய அரசியல் விழிப்புணர்ச்சியும் வளர்ச்சியடைகின்றது. மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வளர்ச்சியடைய சுயமாக தமது நாட்டின் அரசியல் முறைமை எவ்வாறானது? அரசியல் செயற்பாட்டில் தங்களுடைய பங்கு என்ன? என்பன போன்ற விடயங்களில் சுய அறிவினைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
2. அரசியல் உறுதிப்பாடு மற்றும் மாற்றம்
உலகில் வெவ்வேறு வகையான அரசியல் முறைமைகள் காணப்படுகின்றன. அவைகளை அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எனப் பொதுவாக அழைக்கலாம். அரசியல் முறைமைக்கு ஏற்ப அரசியல் உறுதிப்பாடு மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் கலாசாரத்தின் வகிபங்கு முக்கியமானதாகும்.
அரசியல் கலாசாரத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. அதிகாரம் என்பது ஜனநாயக அரசியல் முறைமையில் அரசியல் உறுதிப்பாட்டினையும், திறனையும் தீர்மானிக்கின்ற பிரதான மாறியாக, தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது எனலாம். அரசை உருவாக்கியவர்கள் தமது அரசியல் கலாசாரத்துடன் அரசியல் முறைமை இணங்கிச் செல்லுதல் வேண்டுமென எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப அதிகாரம் வெளிப்படும் எனவும் எதிர்பார்த்தார்கள். இல்லையேல் அரசியல் கலாசாரம் என்பது தொழிற்பட முடியாத ஓர் நிலை ஏற்படும் எனவும் எதிர்பார்த்தார்கள்.
மேலும் மரபு மற்றும் நவீனத்துவம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது என்ற கருத்து தவிர்க்கப்படல் வேண்டும். பொதுவாக மக்கள் மரபு வாதிகளாகக் காணப்படுகின்ற அதே நேரத்தில் மாற்றத்தில் விருப்பம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இங்கு புரட்சி மூலமான மாற்றம் என்பதைக் கருத்தில் எடுக்க முடியாது. புரட்சி என்பது புற நடையான ஒரு அம்சமாகவே கருத்தில் எடுக்கப்படல் வேண்டும். ஏனெனில் புரட்சி வாதிகள் மக்களைப் பலாத்காரம், சர்வாதிகாரம் என்பவற்றின் மூலம் தமது இலக்கினை அடைவதற்காகப் பயன்படுத்துகிறார்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு பாசிசம், கம்யூனிசம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.
இவ்வகையில் அரசியல் கலாசாரம்
-
மாற்றங்களின் ஒழுங்கு முறையினால் தீர்மானிக்கப் படுகின்றது.
-
அரசியல் உணர்வினைப் பெற்றுக்கொள்வதில் தங்கியுள்ளது.
-
பழமைக்கும், புதுமைக்குமிடையில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதில் அரசியல்வாதிக்கு இருக்கும் திறமையில் தங்கியுள்ளது எனக் கூறலாம்.
3. அரசியல் முறைமை
நாடுகளின் அரசியல் கலாசாரத்துடன் அரசியல் முறைமைக்கு ஏற்படும் பொருத்தப்பாடானது வளர்ச்சியடைந்த மேற்குத்தேச ஜனநாயக நாடுகளின் தன்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. இதன் கருத்து இந்நாடுகள் எவ்வித பிரச்சினைகளுமின்றி தமது அரசியல் கலாசாரத்தினை பேணிக்கௌ;கின்றன என்பதல்ல. இந்நாடுகளும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. வளர்ச்சியடைந்து வருகின்ற குறைவிருத்தி நாடுகளாகிய மூன்றாம் மண்டல நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இவ்வாறான பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவிலேயே நிகழ்கின்றன.
முடிவாக அரசியல் கலாசாரம் என்பது உறுதியான நம்பிக்கைகள், உணர்வுகள், மனோபாவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். மக்கள் தமது அரசியல் பெறுமானங்களாகிய உரிமைகள், சுதந்திரம், தத்துவம், நீதி, சட்டமும் விதியும், பத்திரிகைச் சுதந்திரம், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவற்றை எவ்வாறு பொறுப்புடன் மதிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து அரசியல் கலாசாரம் பெறப்படுகின்றது. பொதுவாக மக்கள் தமது உணர்வுகள், செயல்கள் மூலம் இதனை வெளிப்படுத்துவார்கள். அரசியல் முறைமை ஒன்றின் வெற்றி அல்லது தோல்வியினை தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் கூறலாம்.