அதிகாரப்பகிர்வை விதந்துரைத்துள்ள எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.22, 2014.03.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

இலங்கை ஜனாதிபதி , 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற இனமோதலுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்வதற்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு (Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation – LLRC) என்ற பெயரில் ஆணைக்குழு ஒன்றினை நிறுவி இலங்கையில் நல்லிணக்கத்தினையும், தேசக்கட்டுமானத்தினையும் உருவாக்க இலங்கை மக்களிடம் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்கும் படி பணித்திருந்தார். தடுத்துவைத்தல், சட்ட மற்றும் ஒழுங்கு, காணிநிர்வாகம் மற்றும் மொழி போன்ற வரையறைக்குட்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய இடைக்கால பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையினை 2010ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. 2011 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16 ஆம் திகதி இவ் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நாட்டுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அதிகாரத்தைப் பகிர்தல்

முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலையான சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொருத்தமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய முயற்சியில் சிறுபான்மை மக்கள் உட்பட எல்லா சமூகத்தினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இப் பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதற்காக இனப்பிரச்சினை, ஜனநாயக நிறுவனங்களை அச்சுறுத்தும் ஏனைய கடுமையான பிரச்சினைககள் என்பவற்றை அதிகாரப் பகிர்வுத் தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு மூலம் அடைதல் வேண்டும்.

இதற்கு அரசியலமைப்பினைப் பொறிமுறையாகக் கொள்ளுதல் வேண்டும். இப் பொறிமுறையில் மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சட்டசபையொன்றை உருவாக்குவதற்கான சாத்தியம் குறித்து கருத்தில் கொள்ள முடியும். அரசியல் தலைவர்கள் மற்றும் மாகாணமக்கள் தங்கள் மாகாணங்களுடன் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை ஆராய்வதற்கும், தமக்குள்ள தத்துவங்களை அனுபவிப்பதற்கும், சட்ட ரீதியான தீர்மானமெடுத்தல் பொறிமுறையில் தாம் முக்கிய பங்காற்றுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வை உருவாக்குவதற்கும் இப்பொறிமுறை உதவியாக இருக்கும்.

குறிப்பாக கிராமிய மட்ட நிலையில் (Grass-Root Level) பிரதேசங்களுக்கு ஆகக் கூடியளவு அதிகாரப்பகிர்வு வழங்குவது தொடர்பான பொதுவான சம்மதம் உருவாக்கப்பட்டு நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப வேண்டும். இது நல்லிணக்கச் செயற்பாட்டை வலுவாக்குவதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்குமான அரசியல் கருத்து ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கு உதவும்.

அடிப்படையில் அதிகாரப்பகிர்வு மக்களிடையில் அதிக நல்லுறவு மற்றும் ஐக்கியத்தை மேம்படுத்துவதாகவும், ஒற்றுமையின்மை அல்லது வேற்றுமைகளை களைவதாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் எல்லா அதிகார மட்டத்திலும் எல்லா சமூக மக்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும்;.

எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பாரபட்சமாக நடத்தப்படவோ அல்லது பாரபட்சமாக இருப்பதாக உணரவோ கூடாது.மனித உரிமைகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றின் பரந்தளவிலான கட்டமைப்புக்குள் மக்களின் ஜனநாயக அதிகார வலுவூட்டல் நடைபெற வேண்டும்.

அதிகாரப்பகிர்வு பொறிமுறையில் இரண்டு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

  1. கிராமியமக்களின் அதிகபங்குபற்றலை உறுதி செய்வதற்கு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
  2. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருத்தமான அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கும்போது மாகாண சபைகள் முறையின் தொழிற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

அதிகாரத்தை பகிர்தலும் அரசாங்கத்தில் பங்குபற்றுதலும்

மக்களுக்கு அதிகாரமளிப்பது ,அரசியல் தலைவர்களை மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றுவது ஆகிய இரண்டு விடயங்களையும் எல்லா அரசியல் கட்சிகளும் அங்கீகரிக்க வேண்டும். இது சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய சமூக மக்களின் தேவைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இலங்கைக்குப் பொருத்தமானதாகும். எல்லா கட்சிகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்நாட்டிலேயே அரசியல் தீர்வூகளை கண்டுகொள்ள தங்களை அர்ப்பணித்தல் வேண்டும்.

அதிகாரப்பகிர்வு அல்லது அதிகாரப் பகிர்வு பொறிமுறை என்பது நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் ,பல்லின சமூகம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையில் அதற்கான உள்ளார்ந்த பொறிமுறைகளைக் கண்டறிந்து பரந்த கட்டமைப்பிற்குள் அடையப்பட வேண்டும்.

பிரதேசங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியமாகவிருக்கும் அதேவேளை சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க முடியாத அதிகாரங்களாக மையஅரசின் பொறுப்புக்களில் விடப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் இவ் அதிகாரங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

நீடித்த மற்றும் நிலையான நல்லிணக்கத்திற்கு பொருத்தமான எந்தவொரு செயல்முறையின் வெற்றியையும் உறுதி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வில் காணக்கூடிய முன்னேற்றத்தினை ஆணைக்குழு வலியூறுத்தியுள்ளது. எனவே, கிராமப் பிரதேசங்களுக்கு ஆகக் கூடியளவூ அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதுடன், மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்தல் தொடர்பாக ஒரு பொதுவான சம்மதத்தை உருவாக்க வேண்டும். இச்சம்மதம் தற்போதுள்ள மாகாணசபைகளுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் தொடக்கமாக பயன்பட வேண்டும்.

மக்களைப் பாதிக்கும் ஆளுகை தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மக்களின் பங்களிப்பை வலுவடையச் செய்ய வேண்டும். திறமையான, செலவு குறைந்த மற்றும் வெளிப்படையானதாக இந்தப் பொதுவான சம்மதம் அமைய வேண்டும்.அதேநேரம் ஆளுகைக்கு தடை ஏற்படுத்தும் செலவுமிக்க மற்றும் தேவையில்லாத அரசியல்அதிகாரத்துவ மற்றும் ஏனைய நிறுவன அமைப்புக்களின் இரட்டிப்புத்தன்மைகள் தவிர்க்கப்பட வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு வடிவம் மற்றும் உள்ளடக்கம் என்பவற்றுடன், அரசாங்கத்தின் சிந்தனையை உள்ளடக்கிய திட்டத்தின் அடிப்படையில் தீவிரமானதும், கட்டமைப்புடன் கூடியதுமான பேச்சுவார்த்தை ஒன்றினை எல்லா அரசியல் கட்சிகளுடனும், குறிப்பாக சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் நடாத்த அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தை போதுமான தொழில்நுட்ப பிற்புல உதவியூடன் உயர்ந்த அரசியல் மட்டமொன்றில் நடைபெற வேண்டும்.

மும்மொழிக் கொள்கை அமுலாக்கம்

சிங்களமொழி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழி என்ற சட்டம் 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக்க பயன்படுத்தப்படும் என 1958ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு தேசிய மொழிகளும் உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்பட்டன. ஆயினும் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இம் மொழிக் கொள்கையினைச் செயற்படுத்துவதில் கடந்தகால அரசாங்கங்கள் காட்டிய அசமந்தம் தமிழ் மக்களை மேலும் தனிமைப்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வு மேலும் வலுவாகியூள்ளதுடன், தாய் நாட்டிலேயே தாங்கள் இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டுள்ளோம் என்று தற்போது தமிழ் மக்களிடமுள்ள கருத்தை இது மேலும் வலுவாக்கியுள்ளது.

இன்றும் சிறுபான்மை இனமக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தங்கள் அலுவல்களை நடத்த முடியாத நிலையிலுள்ளனர். ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் கூறியது போன்று தமிழ் மொழி பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை புதிதாக நியமித்தல் தொடர்பாக மீண்டும் சிபார்சு செய்துள்ளது.

மொழிக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் மற்றும் அதன் செயற்திறனை கண்காணிப்பதற்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் மற்றும் தமிழ் மொழி பேசும் பிரதேசங்களின் பிரதிநிதிகளை போதியளவு உள்ளடக்கியிருக்கும் உத்தியோகபூர்வ அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். பரஸ்பர தொடர்பாடல் தடைகளால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் தெற்கிலுள்ள மக்களிலிருந்து பிரிந்து வாழ்கிறார்கள். ஒரு நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதில் மொழி பிரதானமானதாகும். எனவே, மொழி தொடர்பான கொள்கைகள் உருவாக்கப்படுவது அத்தியாவசியமானதாகும். புரிந்துணர்வு, பன்முகப்படுத்தல் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக உத்தியோகபூர்வ மொழிகள் கொள்கை பயனுள்ள விதத்தில் அமுல்படுத்தப்படுவது அசியமாகும்.

இரு இனமக்களும் தமது மொழிகளைப் பரஸ்பரம் கற்பது பாடசாலைப் பாடவிதானத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனை சிங்கள,தமிழ் சமூகங்களின் மனப்பாங்கில் மாற்றங்களை உருவாக்கி அதனை உறுதிப்படுத்துவதற்கு முதன்மையானதொரு பொறிமுறையாக கொள்ளமுடியூம். சிங்களப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், தமிழ் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியையும் கற்பிப்பதன் மூலம் ஒருவர் மற்றவருடைய பண்பாட்டினையும், இருசமூகங்களுக்கிடையிலான பண்பாட்டு ஒற்றுமைகளையும் அறிந்து கொள்வதற்கு பெரும் பங்களிப்பினை வழங்க முடியும்.

மும்மொழிக் கொள்கையின் முறையான அமுலாக்கம் மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் மும்மொழி (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆற்றலை உறுதிப்படுத்துதல் என்பவற்றின் மூலம் எதிர்கால சந்ததியினர் சிறுவயதிலிருந்தே ஒருவரை ஒருவர்புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே 2020ஆம் ஆண்டளவில் “மும்மொழி நாடு ஒன்றினை கட்டமைத்தல்” என்ற தூர இலக்கிற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை ஆணைக்குழு வரவேற்றுள்ளதுடன், இதனை அடையும் வகையில் ஆசிரியர் பயிற்சி நெறி மற்றும் நியமனங்கள் என்பவற்றிற்குத் தேவையான நிதியை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மூலம் அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளது.

அரசியல்மயப்படாத சிவில் நிறுவனங்கள்

சிறுபான்மை இனங்களைக் கருத்தி கொள்ளாது எல்லா பொதுமக்களையும் ஒன்றாக நிர்வகிப்பதில் காணப்படும் குறைபாடுகள் சிறுபான்மையினருக்கு மனத்துயரங்களை கொடுத்துள்ளன. சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிவில் நிர்வாகமுறைமைகள் தொழிற்படுமாயின் அதனைத் தவிர்ப்பதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக ஜனநாயகத்தின் தொழிற்பாட்டிற்கான அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் பலவீனமடைந்து வந்துள்ளன. இதனால் மக்களின் இறைமையையும் படிப்படியாக நலிவடைந்து வந்துள்ளது. நாட்டின் அரசியல் கலாசாரம் பொதுமக்களை வலுவற்றவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் மாற்றியதுடன்,பொதுமக்கள் தங்களுக்கு உரித்தான பல பணிகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள அரசியல்வாதிகளில் தங்கியிருக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது.

சிறுபான்மை தமிழ்மக்கள் மீது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட அரசியல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் குறிப்பாக 1983 ஆம் ஆண்டு ஆடிமாதம் நிகழ்ந்த இனக்கலவரத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டிய அக்கறையின்மை பெரும் உளத் தாக்கத்தை தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தியது. தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களால் சிறுபான்மை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை அரசு அங்கீகாரிக்கிறதா? அல்லது அவர்களை மன்னித்து விடுதலை வழங்கி விடுகிறதா? என்ற தவிரிக்கமுடியாத உள்ளுணர்வு சிறுபான்மை தமிழ் மக்களிடம் மேலும் வளர்ந்துள்ளது.

எனவே அரசசேவையில் அரசியல் தலையீடு இல்லாதிருப்பது, அரசசேவை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள்; அரசியலமைப்பிலுள்ள சமத்துவ ஏற்பாடுகளுடன் இணங்கி நடைபெறுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீன அரசசேவை ஆணைக்குழு ஒன்று காலதாமதமின்றி உருவாக்கப்பட வேண்டுமென்று ஆணைக்குழு வலிமையாக விதந்துரைத்துள்ளது.

நல்லிணக்கம்

அரசியல்வாதிகள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் ஏனையவர்கள் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்காக அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றார்கள். பொதுமக்களின் உரிமைகளை இது அவமதிப்பதுடன், மிக உயர்ந்தளவில் ஊழல் நிகழ்வதற்கும் சந்தர்ப்பமாக அமைகிறது. சிறுபான்மையினரின் மனத்துயரங்கள் மீது இது இயல்பாகவே மேலும் தாக்கத்தை செலுத்தியதுடன், இறுதியில் நல்லிணக்கச் செயற்பாட்டிலும் இது தாக்கத்தைச் செலுத்தியது.

நல்லிணக்கத்திற்குப் பொருத்தமான சூழலினை ஏற்படுத்துவதற்கு இந்த வகையான மனக்குறைகள் கட்டுப்படுத்தப்படல் வேண்டும் என ஆணைக்குழு உறுதியாக எண்ணுகின்றது. ஆணைக்குழுவின் இடைக்கால விதந்துரைப்புக்களுக்கு முழுமையான செயலாக்கம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு பயனுள்ள பரிகார நடவடிக்கையை எடுக்காமல் காலதாமதம் செய்வது, சட்டம் மற்றும் ஒழுங்குகளில் சீர்குலைவையும் அதனைத் தொடர்ந்த சட்ட அழிவையும் நல்லிணக்க செயற்பாட்டில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் அழிவையும் கொண்டு வரும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,375 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>