(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.21, 2014.06.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் தந்திரோபாய இலக்கினை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நடைபெறும் கடல்சார்ந்த போட்டியே தீர்மானிக்கவுள்ளது. உண்மையில் பலமடைந்துவரும் சீனாவின் கடற்படை வலுவானது இந்துசமுத்திரத்தில் இந்தியாவிற்குள்ள தந்திரோபாய சார்புநிலையினை பின்தள்ளியுள்ளது. இதற்கு பொறுப்புக் கூறும் வகையில் இந்தியா தனது கடல்வலிமையினை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்கா,யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டு நடவடிக்கைகளை இந்தியா அதிகரித்து வருகிறது. ஆயினும் இந்தியக் கடற்படையின் உடனடி இலக்கு பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதும், இந்தியாவின் விசேட பொருளாதார வலயத்தினை (Exclusive Economic Zones – EEZ) முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுமேயாகும். இந்நிலையில் இந்தியாவின் புதிய பிரதமமந்திரி நரேந்திரமோடி அண்மையில் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஜயங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பல அரசியல் காட்சிநிலைகளைத் தோற்றிவித்துள்ளது.
இரண்டு காட்சிகள்
இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திரமோடி புதுடில்லிக்கு வெளியிலான தனது முதல் உள்நாட்டு விஜயத்தினை அராபிய கடல் பிரதேசத்தில் கோவா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கடற்படைத்தளத்திற்கு அண்மையில் மேற்கொண்டு, புதிய விமானம் தாங்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் கையளித்துள்ளார். இது இந்திய அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புத் தந்திரோபாயத்தினை முதன்மைப்படுத்துவதாக இருந்தாலும், ஒருவகையில் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையின் தொடர்ச்சியாகவும், புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கமாகவும் இதனைக் கருதமுடியும்.
இரண்டாவதாக இந்தியாவுடன் மிக நெருங்கிய புவிசார் தொடர்புகளைக் கொண்ட அயல்நாடாகிய பூட்டானுக்கு தனது முதல் வெளிநாட்டு விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டிருந்தார். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று பாதுகாப்புத் தந்திரோபாய ரீதியில் மிகவும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாக அரசியல் காட்சிகளாகும்.
இவ்வகையில் இவ்விரண்டு காட்சிகளும் பின்வரும் மூன்று அடிப்படை தந்திரோபாய பாதுகாப்பு விடயங்களுடன் தொடர்புடையது எனக் கூறலாம்.
-
ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பொருளாதார வளர்ச்சியினை அடைந்து அதனூடாக சமாதானம், உறுதியான பாதுகாப்புநிலை என்பவற்றை பெற்றுக் கொள்ளுதல்.
-
பிராந்தியத்திற்கு வெளியில் இந்தியா தனது வலுவினை நிலைப்படுத்துவதற்கு முன்னர் தனது பிராந்திய அயல்நாடுகள் மத்தியில் முதன்மையான நிலையினை பெற்றுக் கொள்ளுதல்.
-
சமகால பூகோள அதிகார ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையிலான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்குதல்.
விக்கிரமாதித்தியா
தனது கரையோரக் கடற்படையை (Green Water to Blue Water) ஆழ்கடல் கடற்படையாகத் தரமுயர்த்தும் முயற்சியில் 1980 களிலிருந்து சீனா கவனம் செலுத்தி வருகின்றது. நீண்ட காலத்தில் சீனாவின் ஆழ்கடல் கடற்படையின் வளர்ச்சி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற அச்சம் இந்தியாவிற்கு ஏற்படத் தொடங்கியது. அதேநேரம் சீனக் கடற்படையின் தரம்,வலிமை என்பவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியக் கடற்படையின் தரம், வலிமை என்பன திருப்திகரமானதல்ல என்ற மனக்குறையும் இந்தியாவின் பாதுகாப்பு துறை நிபுணர்களிடம் நீண்டகாலமாக இருந்து வந்தது.
இந்தியா தனது பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து ஆழ்கடல் கடற்படை வலுவினைப் பலப்படுத்தத் தொடங்கியதுடன், ஆசியாவின் பலம்பொருந்திய கடற்படையினை உருவாக்க இந்தியா முயற்சி செய்தது. இதற்காக ரஸ்சியாவிலிருந்து இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை கொள்வனவு செய்து,அதனை புனரமைத்து விக்கிரமாதித்தியா (Vikramaditya) என்ற புதிய பெயரில் ஏற்கனவே திட்டமிட்டபடி 2014 ஆம் ஆண்டு தை மாதம் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
இதன் மூலம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்ட முதல்தர கடற்படை வலுவினையுடைய ஆசிய நாடாக இந்தியா தன்னை மாற்றியுள்ளது. 45,400 தொன் இடையுள்ள விக்கிரமாதித்தியா இந்தியாவிடமுள்ள அனைத்து கடற்படை கப்பல்களையும் விட மிகவும் பெரியதாகும். அத்துடன் முதன்மையான பல யுத்த திறன் வாய்ந்த கருவிகளையும், வசதிகளையும் இவ்விமானம் தாங்கிக் கப்பல் கொண்டுள்ளது.
கமுவ் 31 (Kamov-31) ரக உலங்கு வானூர்திகள் 10 மற்றும் மிக் 29 கே (29K) ரக யுத்த விமானங்கள்; 24 ஆகியவற்றை காவிச் செல்லக்கூடிய வசதிகள் உட்பட பல வசதிகளை இக்கப்பல் கொண்டுள்ளது. இக்கப்பலின் வருகையின் பின்னர் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களிலிருந்து சமகாலத்தில் உருவாகக்கூடிய ஆபத்துக்களை இந்தியாவின் கடற்படை சமகாலத்தில் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.
புதிய விமானம் தாங்கிக் கப்பல் இந்;தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டமையானது கடல்சார்ந்த பாதுகாப்புத் தந்திரோபாயத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இவ்வகையில் இக்கப்பலின் வருகையுடன் நான்கு விடயங்கள் தொடர்புபட்டுள்ளன.
-
இந்தியாவின் கடல் கட்டுப்பாடு வீச்சு அதிகரித்துள்ளது,
-
இந்தியா தனது கடல் அதிகாரத்தை கரையோரம் வரை விஸ்தரித்துள்ளது,
-
இந்தியாவின் பாதுகாப்பு பலமடைந்துள்ளது,
-
இந்தியா பாதுகாப்பு தந்திரோபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ஆயுத உற்பத்தி
இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திரமோடி “இந்தியா தனது பாதுகாப்பிற்கு மரபுவழி கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலில் மாத்திரம் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கக் கூடாது. பதிலாக யுத்தக் கருவிகளை உள்நாட்டில் தயாரிக்கின்ற தொழில்நுட்ப ஆற்றலினை இந்தியா உருவாக்கும் தன்னம்பிக்கையினை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத் மாநிலத்தின் பொருளாதார அபிவிருத்தியில் சுதேச பொருளாதார முயற்சிகளுக்கு நரேந்திரமோடி அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இதே அணுகுமுறையினை அடித்தளமாகக் கொண்டு பாதுகாப்புத் துறைக்கான தொழில்நுட்ப ஆற்றலில் இந்தியா தன்னிறைவினையடைய வேண்டும் என்பதே நரேந்திரமோடியின் எதிர்பார்ப்பாகும்.
அதேநேரம், இந்தியத் தயாரிப்பிலான யுத்த தளபாடங்கள் உலகிலுள்ள சிறிய நாடுகளின் பாதுகாப்பிற்காக விற்பனை செய்யப்படுகின்ற ஆயுத உற்பத்திப் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே மோடியின் தூரநோக்காகும். அதாவது தனது பிராந்தியத்திலுள்ள அயல் நாடுகளுக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யக் கூடிய உற்பத்திப் பொருளாதார வலைப்பின்னலின் மைய நாடாக இந்தியா மாற்றமடைய வேண்டும் என்பதே மோடியின் கனவாகும்.
எல்லைப் பாதுகாப்பு
இந்தியாவின் தந்திரோபாய பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கில் நரேந்திரமோடியின் பூட்டான் விஜயம் அமைந்திருந்தது. இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையிலான எல்லைத் தகராற்றில் பூட்டான் வகிக்கக் கூடிய வகிபாகத்தினை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்குள்ளது.
பூட்டானின் பாராளுமன்றத்தில் நரேந்திரமோடி ஆற்றிய உரையில் “எங்கள் இதயம் அயல்நாடுகளுடன் சிநேக பூர்வ உறவினை வளர்த்துக் கொள்வதற்காக திறந்தேயுள்ளது. ஆட்சி மாறலாம். ஆனால் இந்தியாவின் இக் கொள்கை மாறமாட்டாது. எங்களுடைய அயல்நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பலமானதும், உறுதியானதுமான இந்தியாவினை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
நரேந்திரமோடியின் பூட்டான் விஜயத்தின் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் “இரு நாடுகளுக்குமிடையிலான விசேட உறவினை மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக மீண்டும் உறுதி செய்து கொள்வதாகத் தெரிவித்திருந்தன. மேலும் “இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர பாதுகாப்பு, கூட்டுறவு தொடர்பான உறவிலுள்ள திருப்தியினையும் வெளிப்படுத்திக் கொண்டன. மேலும் தேசிய நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்புடனும், கூட்டுறவுடனும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இரண்டு நாடுகளும் உடன்பட்டுள்ளன. இருநாடுகளும் தமது பிரதேசங்களை எதிரி நாடுகள் தமது தேசியநலனுக்காக பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை” எனவும் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது. இது சீனாவினை இலக்காக கொண்டு எழுதப்பட்ட வாசகங்களாகவே கருதப்படுகின்றது.
பூட்டான் தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள இரண்டு பெரு வல்லரசுகளாகிய சீனாவிற்கும், இந்தியாவிற்குமிடையில் அமைந்துள்ள இறைமையுள்ள அரசாகும். பூட்டானின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் சீனா அமைந்துள்ளது. சீனாவிற்கும், பூட்டானுக்குமிடையிலான எல்லைப் பகுதி ஏறக்குறைய 470 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாகும்.
பூட்டானின் தெற்கு,தென்மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையிலான எல்லைப் பகுதி ஏறக்குறைய 605 கிலோமீற்றா தூரத்தைக் கொண்டதாகும். இவ் எல்லைப் பகுதியில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், சிக்கிம் (Sikkim) ஆகிய மாநில அரசுகள் அமைந்துள்ளன.
நீண்டகாலமாக இந்தியாவின் பாதுகாப்புடன் தொடா;புடைய பூட்டானின் கிழக்கு, மத்திய, மேற்கு பகுதிகளை சீனா உரிமை கோரி வருகின்றது. இப்பிரதேசங்கள் இந்தியாவின் எல்லைப் பிரதேச பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபட்ட பகுதிகளாகும். இது தொடர்பாக பூட்டானுக்கும், சீனாவிற்குமிடையில் இருபது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இதுவரை களையப்படவில்லை.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையிலான நீண்ட கால எல்லைத் தகராற்றில், இந்தியாவின் தந்திரோபாய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூட்டான் அமைந்துள்ளது. ஆயினும் சீனாவிற்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்பு தந்திரோபாய வலைப்பின்னலில் பூட்டானின் வகிபங்கு இந்தியா எதிர்பார்த்தது போன்று பலமானதாக அமையவில்லை என்ற ஏமாற்றம் நீண்டகாலமாக இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்துள்ளது.
பொதுவாக சீனா தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்தளவிற்கு தரமுயர்த்திக் கொள்கின்றதோ அந்தளவிற்கு இந்தியாவும் தனது பாதுகாப்பு முன்னேற்பாடுகளைத் தரமுயர்த்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. சீனா ஆழ்கடல் துறைமுகங்களை உருவாக்குவதுடன் சீனாவிலிருந்து பாரசீகக்குடா வரையிலான கடல்வழி தொடர்பாடல் வலைப்பின்னல்களையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் இதனை இந்தியாவினைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் தந்திரோபாய சுற்றி வளைப்பாகவே கருதுகின்றனர;.
எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனக்கு நேரடியான போட்டியாளராக சீனாவினையே எதிர் கொள்கின்றது. இதனால் வளர்ச்சியடையும் சீனாவின் பலத்தை தடுப்பதற்கான அனைத்து வழிவகைகள் தொடர்பாகவும் புதிய இந்திய அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனா எங்கெல்லாம் கால்பதிக்கின்றது என்பது தொடர்பாக இந்தியா விழிப்பாக இருப்பதுடன், தனது இராணுவ வலுவினை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.