(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.24, 2013.08.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
பனிப்போரின் பின்னர் சர்வதேசநாடுகள் எதிர்கொண்ட மோதல்களைத் தீர்ப்பதில் ஐக்கியநாடுகள் சபை வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பனிப்போரின் பின்னர் சமாதானத்தினை உருவாக்குவதற்குப் பதிலாக பல்வேறுபட்ட சவால்களை சந்திக்கத் தொடங்கியது.ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை மோதல்களில் தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்;திருந்தாலும் அதனை எவ்வாறு செய்வது என்பதற்குரிய தெளிவான பொறிமுறைகள், பொருத்தமான வழிமுறைகள் அதனிடம் இருக்கவில்லை. சுயபாதுகாப்புத் தேவை தவிர்ந்த நிலையில்; படைபலத்தை உபயோகிக்காமை,பாரபட்சமின்மை,சம்மதம் பெறுதல் போன்ற மரபுரீதியான அமைதிகாக்கும் முறைமைகள் தற்காலத்திற்குப் பொருத்தமற்றதாகும். ஏனெனில் உள்நாட்டு யுத்தங்களின் போது அமைதி காக்கும் சமகால நடைமுறைகள் மிகவும் சிக்கலானவைகளாக உள்ளன.
யூகோஸ்லேவேக்கியா
பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க யூகோஸ்லேவேக்கியா மோதலில் ஐக்கியநாடுகள் சபை தலையிட்டது. யூகோஸ்லேவேக்கியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் விநியோகம் செய்யப்படுவதை பாதுகாப்புச்சபை முழுமையாகத் தடைசெய்தது. பனிப் போரின் பின்னரான சகாப்தத்தில் சுயநிர்ணயஉரிமை, தனிப்பட்ட மற்றும் குழு உரிமைகள்,இறைமையினை செயற்படுத்துதல் போன்றவற்றை யூகோஸ்லேவேக்கியா மோதல் கேள்விக்குள்ளாக்கியது. அதேநேரம் சர்வதேசச்சட்டம், சர்வதேச ஒழுங்கின் இயல்பு போன்றவை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை யூகோஸ்லேவேக்கியாவில் செயலாற்ற வேண்டிய தேவையுமிருந்தது.
ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் சபை யூகோஸ்லேவேக்கியா மோதலில் தலையிடுவதா? அல்லது காத்திருப்பதா? எனத் தயங்கியிருந்தது.அமைதி பணியினை மேற்கொள்வது என்ற பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு யூகோஸ்லேவேக்கியா விவகாரத்தில் தலையிடுவது என ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு தீர்மானித்தது.பாதுகாப்பு சபைக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் மோதலைத் தீர்ப்பதில் பாதுகாப்புச் சபை ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்கமாட்டாது என்ற அவநம்பிக்கை தோற்றம் பெற்றது. யூகோஸ்லேவேக்கியா அரசாங்கத்தின் விருப்பமற்ற செயற்பாடுகள்,இராணுவத்தின் படைப்பலப் பிரயோகம் என்பன ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கினை கட்டுப்படுத்தியது.
சோமாலியா
1991 ஆம் மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் மரபுக்குழுக்கள் நாட்டின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் சோமாலியாவில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குலைந்தது. மரணங்கள், உணவுப் பஞ்சம் என்பன ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன. இதற்காக அவசர மனிதாபிமானப் பணிகள்- I ஆரம்பமாகியது. இதற்காக பாக்கிஸ்தான் படைகள் சோமாலியாவிற்கு அனுப்பப்பட்டன. பின்னர், பாதுகாப்புச்சபையின் தீர்மானத்திற்கு இணங்க ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவம் மனிதாபிமானப் பணிகளுக்காக சோமாலியாவில் தலையீடு செய்தது. இவ் இராணுவம் சோமாலியாவின் துறைமுகங்கள்,விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதைகள் என்பவற்றைப் பாதுகாத்து மனிதாபிமானப்பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு உதவி செய்தது. ஆயினும் சோமாலியாவில் ஐக்கியநாடுகள் சபையின் பணிகள் இருமனப் போக்கு கொண்டதாகவே இருந்தது. ஐக்கிய அமெரிக்கா மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதுடன் தனது பணிகளை நிறுத்த விரும்பியதால் தனது படைகளை சோமாலியாவில் இருந்து விலக்கிக் கொண்டது. இதனால் அவசர மனிதாபிமானப் பணிகள் – I தோல்வியில் முடிவடைந்தது.
1993 ஆம் ஆண்டு அவசர மனிதாபிமானப் பணிகள்- II இனை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்தது. அதேநேரம் ஐடிட் (Aidid) ஆட்சியை இல்லாதொழிப்பதில் தனது நடுநிலைமைத் தன்மையினை இழந்திருந்தது. இது ஐக்கியநாடுகள் சபை தொடர்பான எதிர்மறையானதொரு கருத்தினை சர்வதேசளவில் உருவாக்கியதுடன் மோதல் மேலும் வளர்வதற்கான தூண்டுதலையும் வழங்கியது.இதனால் நிலைமை மேலும் மோசமானதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் தாக்குதல்களுக்கு இலக்காகின. 1995 ஆம் ஆண்டு தை மாதம் ஐக்கிய நாடுகளின் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதுடன் சோமாலிய சமாதானத்திற்கான தனது சந்தர்ப்பத்தையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐடிட் படுகொலை செய்யப்பட்டார்.
புருண்டி-ருவன்டா மோதல்
1990 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ருவன்டாவின் எல்லைப் பிரதேசங்களில் உள்நாட்டு மோதல் ஆரம்பமாகியது. ஹயுரு (Hutu) தலைமையிலான ருவன்டா அரசாங்கப் படைகளுக்கும்,உகண்டாவிலிருந்து செயற்பட்ட ரூசி (Tutsi) தலைமையிலான ருவன்டா தேசப்பற்று முன்னணிக்கும் (Rwandan Patriotic Front) இடையில் அவ்வப்போது நடைபெறத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டு ருவன்டா அரசாங்கத்திற்கும் ருவன்டா தேசப்பற்று முன்னணிக்கும் இடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.எல்லைப் பிரதேசங்களில் இராணுவ தளபாடங்கள் எடுத்துச் செல்லப்படுதல், இராணுவத் தாக்குதல்ளைத் தடுத்தல் என்பவற்றினை அவதானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ அவதானிப்பாளர்களை இரு தரப்பும் கோரியது.
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அவதானிப்பாளர்களை பாதுகாப்புச் சபை நிறுவியது. பின்னர் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் ருவன்டாவில் யுத்த நிறுத்தத்திற்கும், புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதற்குமான பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்கு முயற்சித்தனர்.ஆயினும் மனிதப்படுகொலைகள் முடிவிற்கு வரவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல இலட்சம் ருவன்டா மக்கள் அயல்நாடுகளுக்கு அகதிகளாக தப்பியோடிய நிலையில் பாதுகாப்புச் சபை சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ருவன்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சபை உதவிக் குழு (UN Assistance Mission for Rwanda-UNAMIR) என்ற பெயரில் புதியதொரு சர்வதேசப் படையினை உருவாக்கத் தீர்மானித்தது. இக்குழு யுத்தநிறுத்த ஏற்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தியதாயினும், தொடர்ந்து நிகழ்ந்த படுகொலைகளை இதனால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் ருவன்டாவில்; நிலவும் சூழ்நிலை சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனப் பாதுகாப்புச்சபை கருதியதுடன், ருவன்டாவிற்கு எதிராக ஆயுதத் தடைகளையும் விதித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை சாசனம் அத்தியாயம் ஏழுற்கு அமைய தற்காலிக பல்தேசிய மனிதாபிமான செயற்பாடுகளையும் ஆரம்பித்தது. ருவன்டா தேசப்பற்று முன்னணி ருவன்டாவினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது. ருவன்டா தேசப்பற்று முன்னணி யுத்தநிறுத்தத்தினை பிரகடனப்படுத்தியதுடன்,ஐந்து வருடங்களுக்கான நாடுகடந்த அரசாங்கமும் உருவாக்கப்பட்டது.
கெயிட்டி
1990 களுக்கு முன்னரான கெயிட்டியின் வரலாறு இராணுவ சர்வாதிகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தது.1990களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அரிஸ்ரயிட் (Aristide) தலைமையில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 1990 களின் இறுதிக்காலப்பகுதியில் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், அரிஸ்ரயிட் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் நாட்டைவிட்டு துரத்தப்பட்டார்கள். பாதுகாப்புச்சபை இதனை கண்டனம் செய்ததுடன், அவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு தடைவிதித்தது.நாட்டினுடைய சூழ்நிலை மிகவும் மோசமானதுடன்,அனேக மக்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.அதேநேரம் பாதுகாப்புச் சபை கெயிட்டியில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கண்டனம் செய்தது.பாதுகாப்புச் சபை ஐக்கியநாடுகள் சபையின் பல்தேசியப் படைகளை உருவாக்கி இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கியது.
உள்நாட்டு அரசியல் குற்றங்களினால் சர்வதேச அமைதி,பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு கெயிட்டி விவகாரத்தினை பாதுகாப்புச் சபை புதிய கோணத்தில் அணுகியது. கெயிட்டி அகதிகள் உள்வருவதை தவிர்ப்பதற்காக ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் உதவியை ஐக்கிய அமெரிக்கா பயன்படுத்தியது. அதேநேரம் பல்தேசியப் படைகளை உருவாக்கி தாக்குதல் அச்சுறுத்தலை விடுத்தது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை அதிகமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் படைகள் கெயிட்டியை கைப்பற்றிக் கொண்டது. இதன் பின்னர் நாடு திரும்பிய அரிஸ்ரயிட் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.தேர்தல் ஜனநாயகமாக நடைபெற ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்தது.இது ஐக்கியநாடுகள் சபை தொடர்பாக நல்ல கருத்துக்கள் உருவாக சந்தர்ப்பமாக அமைந்தது.
கம்போடியா
வியட்நாம் யுத்தத்தின் பின்னர் கம்போடியாவில் இராணுவ அரசாங்க ஆட்சி நீக்கப்பட்டு அடக்குமுறை அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. புதிய அரசாங்கம் வியட்நாமிற்கு சாவால் விடும் வகையில் எல்லை தகராறுகளை உருவாக்கியது. இதனால் அதிர்சியடைந்த வியட்நாமிய அரசாங்கம் கம்போடியாவினைக் கைப்பற்றி அங்கு பொம்மை அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது. பொம்மை அரசாங்கத்தினை சீன ஆதரவுடனான அமைப்பு எதிர்க்கத் தொடங்கியது. இதனால் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. 1991 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் “கம்போடியா அரசியல் தீர்விற்கான ஒப்பந்தம்” கைச்சாத்திடப்பட்டது.
இதன்பின்னர் இவ் ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு கம்போடியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை அனுப்பப்பட்டதுடன், பொதுத் தோர்தலுக்கு முன்னர் நடுநிலையான அரசியல் சூழல் உருவாகுவதை இது உத்தரவாதப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.1993 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கம்போடியாவில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு புதிய அரசாங்கம் பதியேற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.
சர்வதேசத்தின் தோல்வி
யூகோஸ்லேவேக்கியாவில் நடைபெற்ற துன்பங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோதல்கள் பூகோள உறுதிநிலைக்கு அச்சுறுத்தலாக மாறாதவரையில் சர்வதேச சமூகம் மோதல்களுக்குள் தலையீடு செய்வதில் விருப்பமற்றிருந்தன.அனேக மக்கள் இனத்துவக் காரணங்களுக்காக படுகொலை செய்ப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அமைதியை உருவாக்குபவர்கள் தாக்கப்பட்டார்கள். ஐக்கிய அமெரிக்காவினாலும், ஏனைய அதன் நட்பு நாடுகளினாலும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளுக்கான ஆதரவு பொதுவாகக் குறைவடையலாயிற்று. மறுபக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை அமைதியை உருவாக்குபவர்களுக்கு வழங்கிய பொருளாதார உதவி குறைந்தபட்சம் அயல்நாடுகளுக்கு மோதல் பரவாமல் தடுப்பதற்கு உதவியது. ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய மனிதாபிமான உதவிகள் இறுதி சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கும்,ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் பயனுடையதாக இருந்தது.
சோமாலிய சமாதான நடவடிக்கையின் போது ஒரு அரசிற்குள் மோதல் நிகழும் போது அரசின் வேண்டுதலின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்தல் வேண்டும் என்ற வழிகாட்டும் தத்துவத்தினை ஐக்கிய நாடுகள் சபை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது நிறுவனத்திற்குள் காணப்படும் பலவீனம் என்பதுடன் சிக்கலான தருணங்களில் ஐக்கியநாடுகள் சபை தனது நடுநிலைமையினை பேணத் தவறி விடுகின்றது என்பதையும் எடுத்துக்காட்டியது.
ருவன்டாவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு மட்டும் ஏற்பட்ட தோல்வியல்ல பதிலாக சர்வதேச சமுதாயத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகும்.ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய தொடக்கம் தேவை என்பது மிகவும் தெளிவாகியுள்ளது.இனப் படுகொலைக் குற்றங்களைப் புரிபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படக் கூடியவகையில் புதிய மாற்றங்களை ஐக்கிய நாடுகள் சபைக்குள் கொண்ட வரவேண்டும். ஏனெனில் வல்லரசுகளின் வேறுபாடுகாட்டும் செயற்பாடுகள்,தகுதியின்மை, வளப்பற்றாக்குறை போன்ற குறைபாடுகளால் இவ்வாறான தண்டனைகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியைச் சந்தித்துள்ளது. வெளியே தெரியாத வல்லரசுகளின் தந்திரோபாய நலன்களுக்காக மனித அவலங்கள் நிகழும் போது ஐக்கிய நாடுகள் சபை அதனைத் தடுக்க முடியாது திணறுகின்றது.
எனவே பனிப்போருக்குப் பின்னர் புதிய பல சவால்களை ஐக்கிய நாடுகள் சபை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது எனலாம். தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் மாத்திரம் ஐக்கிய நாடுகள் சபை அவசர மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்கின்றது.ஆனால் மோதல்களுக்கு சமாதனத்தினை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையினால் முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சாசனம் கூறும் இறைமை,உள்நாட்டு விடங்களுக்குள் தலையீடு செய்யாமை,படைபலத்தை பயன்படுத்தாமை போன்றன புதிய சூழலில் பொருத்தமற்றிருந்தன. சோமாலியாவில் சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படவில்லை.இறைமை என்ற எண்ணக்கரு அர்த்மற்றதாகி விட்டது. பொஸ்னியாவில் நிகழ்ந்த மோசமான மனிதாபிமான சூழல் தவிர்க்க முடியாத மனிதாபிமானத் தலையீட்டினை ஏற்படுத்தியிருந்தது. எனவே பனிப்போரின் பின்னரான புதிய உலக சூழலில் மரபுரீதியான வழிமுறைகளுடாக உலக சமாதானத்தினை உருவாக்குவது மீள் வரைபுக்குள்ளாக்கப்படுதல் வேண்டும்.