(தினக்குரல் 2014.08.13 & 14, யாழ் தினக்குரல் 2014.08.16 & 18 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்டது)
தொகுப்பு: கலாநிதி த.கிருஷ்ணமோகன்,முதுநிலைவிரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம்
வன்னி பெருநிலப்பரப்பின் சமூக வரலாற்று ஆவண நூலாக கருதப்படும் வன்னி வரலாறும் பண்பாடும் எனும் நூலினை வவுனிக்குளத்தினை பிறப்பிடமாகவும், நோர்வே நாட்டினை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் முதலீடு செய்து பதிப்பித்துள்ளார். இந்நூல் 675 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளதுடன் குமரன் வெளியீட்டகம், மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, சென்னை இந்நூலிற்கான விநியோகப் பொறுப்பினை ஏற்றுள்ளது.
இந்நூல் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொல்லியலும் வரலாறும் என்ற பகுதியில் பதினான்கு கட்டுரைகளும், சமூகமும் வாழ்வியலும் என்ற பகுதியில் பதினெட்டு கட்டுரைகளும், சமயநெறிகளும் பண்பாடும் என்ற பகுதியில் பன்னிரெண்டு கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரைகள் யாவும் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்கள், பேராசிரியர்கள்,முதுநிலை விரிவுரையாளர்கள் உட்பட முதிர்ந்த அறிவியல் சிந்தனையாளர்கள், கல்விமான்களால் எழுதப்பட்டுள்ளன.
தொல்லியல் எழுத்துக்கள், வவுனிக்குளம் அதிலிருந்து வீறு கொண்டு பாயும் பாலி ஆறு ஆகிய மூன்றையும் பின்னணியாகக் கொண்டு இரண்டை கொம்புகளையுடைய யானை ஒன்று திருநீறும், திலகமும் இட்டு கம்பீரமாக நடந்நு வரும் வகையில் இந்நூலின் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானைகள் பண்டைய வன்னியர்களின் சொத்து. ஒல்லாந்தர்கள் வன்னியர்களோடு காலத்திற்கு காலம் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளனர். இதன்படி ஆறு வகை வன்னிகளும் வௌ;வேறு எண்ணிக்கையில் யானைகளை திறையாக செலுத்தியுள்ளனர். இதனைக் குறியீடாகக் கொண்டு அட்டைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நூலின் பின் அட்டையில் பதிப்பாசிரியர் எழுதியுள்ள நூல் பற்றிய குறிப்பும், நோர்வேயில் வசிக்கும் மூத்த பேராசிரியர் என். சண்முகரட்ணம் இந்நூல் தொடர்பாக பதிவு செய்த கருத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளன.
வன்னி வரலாறும் – பண்பாடும் நூல்வெளியீட்டு விழாவில் கேட்டவை
வன்னி வரலாறும் – பண்பாடும் என்ற நூல் வெளியீட்டு விழா 28.07.2014 திங்கட்கிழமை நுணுக்காய் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் திரு.சி. குணபாலன் தலைமையில் நடைபெற்றது. திரு. க. குணசிங்கம், சமூக சேவைகள் உத்தியோகத்தர், துணுக்காய் பிரதேச செயலகம், அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரதேச செயலாளர் திரு. சி. குணபாலன் தனது தலைமையுரையில் வன்னிப்பெரு நிலப்பரப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. ஆரம்பத்தில் கிளிநொச்சிப் பிரதேசம் வன்னியின் ஒரு பகுதியாக சொல்லப்பட்ட வரலாறு இருந்தது. வன்னிப் பிரதேசத்தின் செழிப்பையும், வரலாறுகளையும் கூறுகின்ற இலக்கியங்களின் உருவாக்கம் என்பது மிக சொற்பமாக அல்லது அரிதாகவே இருக்கின்றன. வன்னிப் பிரதேசத்தினுடைய எழுத்தாளர்கள் என்ற வகையிலே நாங்கள் மறந்து விட முடியாத ஒரு சிலருடைய ஆக்கங்கள் என்றும் நிலைத்திருக்கின்றன. இவ்வகையில் வெளியீட்டிற்காக காத்திருக்கின்ற வன்னி வரலாறும் பண்பாடும் என்னும் நூலின் பதிப்பாசிரியர் திரு.க. சுந்தரலிங்கம் தனது நீண்ட கால கனவாக இந்நூலினை வெளியிடவுள்ளார். இவ்வகையில் இவ்வாறானதொரு நூலினை எமது பிரதேச சபை சார்பில் வெளியீடு செய்வதில் நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் எனத் தெரிவித்தார்.
நூல் வெளியீட்டுரையினை தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன், வேந்தர், யாழ் பல்கலைக்கழகம் நடாத்தியிருந்தார். அவர் தனது உரையில் வன்னியின் வரலாறு பண்பாடு பற்றி பலர் எழுதியுள்ளனர். எழுதியவர்கள் எங்களுடைய தாயகத்தவர்கள். முல்லைமணி, பண்பாடு, இலக்கியம், நாடகம் பற்றி பல முக்கியமான பிரயோசனமான பணிகளை ஆற்றியுள்ளார். அiனைத் தொடர்ந்து நண்பன் அருணா செல்லத்துரை வன்னியினுடைய வரலாறு பற்றி எழுதியுள்ளார்.இன்று வெளியிடப்படுகின்ற நூல் இவற்றிலிருந்து பெருமளவிற்கு வேறுபட்டதொன்றாகும். நண்பர் சுந்தரலிங்கம் கணிசமானளவிற்கு வெளிநாட்டில் தனது காலத்தினைக் கழித்த போதிலும் தனது நாட்டினை, தான் பிறந்த தேசத்தைää தன்னைப் படைத்த சமூகத்தை அவர் மறந்து விடவில்லை. தனது தேசத்திற்கு, தன்னை உருவாக்கிய சுற்றத்தவர்களுக்கு, வளர்த்தெடுத்த பெற்றோர்கள், முன்னோர்களுக்கு ஒரு காணிக்கையாக இந்த நூலைப் படைக்கின்றார். அதையிட்டு நாம் பெரிதும் பெருமைப்பட வேண்டும். அதுமட்டுமன்றி இந்த நூலைத் தயாரிக்கின்ற போது அவர் பட்ட சிரமங்கள், உங்கள் பலருக்குத் தெரியாது. தூர தேசம் ஒன்றிலிருந்து, வட துருவத்திலிருக்கின்ற நாடு ஒன்றிலிருந்து அறிஞர்கள், நண்பர்கள், அன்பர்களைத் தொடர்பு கொண்டு இந்த முயற்சியிலே இணையச் செய்தமை அளப் பெரிய சாதனை மட்டுமன்றி, இந்நூலானது அவருடைய பொறுப்பிலே வெளியிடப்படுகின்றமை உங்கள் அனைவரதும் மனங்கொள்ளத் தக்கதொன்றாகும். இப்படியான ஒருவரை எங்கள் சமுதாயம் கொண்டிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்தார்.
சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், தலைவர் வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம், தனது உரையில் இன்றைய நாள் நண்பன் சுந்தரலிங்கம் அவர்களின் பொன்னான நாள். வன்னி மண்ணோடு ஒட்டிப் பிறந்தவர்களுக்கு பெருமை தருகின்ற நாள். பொதுவாக இந்த நாட்டிலே வாழ்கின்ற மக்கள் தங்களுடைய வேர்களைக் கண்டறிவதிலும், பாதுகாப்பதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற இந்த நேரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எமது அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மிகத் தீவிரமாக உருவாகி வருகின்றதை நான் பார்க்கின்றேன். இவர்கள் பிரதேசத்தினுடைய குறிப்பாக வன்னி பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்துவதில் கடுமையாக உழைத்தாலும், உழைத்துக் கொண்டிருந்தாலும் இந்த உழைப்பின் உச்சக் கட்டம் நண்பன் சுந்தரலிங்கம் ஊடாக வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியவிடயம். இந்நூலின் பதிப்பாசிரியராக சுந்தரலிங்கம் இருந்தாலும், இந்நூலிலுள்ள நாற்பது கட்டுரைகளும் நாற்பது கோணங்களிலே பார்க்கப்பட்டதொன்று. இவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் மையப்படுத்திய பெருமை சுந்தரலிங்கத்திற்குரியது. சாதாரண நிலையிலன்றி மிக உயர்ந்த நிலையில் நின்று கொண்டு சுந்தரலிங்கம் சிந்தித்திருக்கின்றார். மிகச் சிறந்த அறிஞர்களின் ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பது இது சர்வதேசளவிலே அங்கீகாரம் பெறுவதற்கான ஒரு தளத்தை சுந்தரலிங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் வன்னியைத் தொட்டு செல்கின்றவர் திரு. சுந்தரலிங்கத்தை தொட்டுப்பார்க்காது ஒரு நூலை ஆக்கமுடியாது என்ற நிலையினை சுந்தரலிங்கம் உருவாக்கியுள்ளார்.இந்த நூலை தமிழிலே வெளியிட்டது போல் அவர் ஆங்கிலத்திலே வெளியீடு செய்வாராக இருந்தால் அது வன்னிக்கோர் சிறந்த ஆவணமாக இருக்கும்.இந்த நூல் சிங்கள மொழியிலும் வெளிவர வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழர்களுடைய வரலாற்றினை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் வரலாற்றுப் பெருமையை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
சிறப்புரை நிகழ்த்திய திரு.க.சண்முகலிங்கம்ääமுன்னாள் மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டம்,தனது உரையில் வன்னியின் வரலாறும் பண்பாடும் என்ற நூலை பதிப்பித்துத் தந்த திரு. சுந்தரலிங்கம் பாராட்டுக்குரியவர். வன்னியினுடைய வரலாறு பண்பாடு பற்றிய விழிப்புணர்ச்சி ஆய்வாளர்கள் மட்டத்தில் இருக்கின்ற விடயமல்ல. அது மக்களிடம் போய் சேர வேண்டும். அப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கியமான சம்பவம் இன்று நடைபெறுகின்றது. லூயினுடைய நூலை தமிழிலே மொழி பெயர்த்து வற்றாப்பளை அம்மன் கோயில் தர்மகர்த்தா சபை தனது வெளியீடாக வெளியிட்டது. இது முக்கியமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய நூல். லூயிஸ் என்பவர் சுந்தரலிங்கம் செய்த வேலையை செய்திருக்கின்றார். இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் வன்னி பற்றிய விழிப்புணர்வு 1969,1970 களிலே ஏற்பட்டது. அப்போது அதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருந்தது என்று நான் சொல்லுவேன். இருந்தாலும் பண்டாரவன்னியன் போன்ற நாடகத்தை மேடையேற்றியதும் அது சம்பந்தமான விழாக்களை கற்சிலை மடுவில் நடாத்தியதும் மூலமாக இதைப் பற்றிய அக்கறை இப்பிரதேசத்தில் ஏற்பட்டது. அதில் அக்கறை கொண்டவர்களாக இத்துறையிலே ஈடுபட்டவர்களாக முல்லைமணி, அருணா செல்லத்துரை போன்றவர்கள் இருக்கின்றார்கள். இது போல அடுத்து ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்று இன்று நடைபெறுகின்றது. ஆகையால் அது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதி அழகான நூலை கொண்டு வந்த பெருமை சுந்தரலிங்கம் அவர்களுக்கு இருக்கின்றது. இதனை இவரைப் போன்ற ஒருவரால் தான் கொண்டு வந்திருக்க முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
திருமதி மாலினி வெனிற்றன், வலயக்கல்விப் பணிப்பாளர், நுனுக்காய், தனது சிறப்புரையில் வன்னி வரலாறும் பண்பாடும் என்ற நூலை எனது கையில் தந்த போது மிகவும் மகிழ்வுற்றேன். இலங்கை தமிழர்களுடைய வரலாறுகளைப் படிக்க வேண்டும் என்று நாங்கள் தேடி அலைகின்ற போது கிடைக்கின்ற நூல்கள் மிக அரிதாகவே இருக்கின்றது. பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டது போல் இலங்கைத் தமிழர் வரலாறு வஞ்சிக்கப்பட்ட வரலாறாகும். நாங்கள் தேடியலைகின்ற எங்கள் வரலாறு எப்போது கிடைக்கும் என்ற தாகத்துடன் அலைகின்ற ஒரு சமூகத்திற்கு கிடைத்த நீர் போல இந்த வரலாறு எங்கள் கைகளில் இருக்கின்றது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் என்ற நூல் கூட இந்தளவு தூரம் இவ்வளவு பக்கங்கள் கொண்ட நூலாக இல்லை. வரலாற்றில் சில பக்கங்களை நாங்கள் தட்டிப் பார்த்த போது பேராசிரியர் பத்மநாதனுடைய ஆழ்ந்த ஆய்வுகளிலிருந்து வெளி வந்த கருத்துக்கள் எங்கள் சமூகத்திற்கும், அடுத்த சந்ததிக்கும் நாங்கள் எந்தளவு தொன்மை வாய்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைகின்றது. சுந்தரலிங்கம் அவர்கள் பெரு முயற்சி செய்து இந்த நூலை வெளியிட்டிருக்கின்றார்கள். மிகவும் சிறந்த பேராசிரியர்கள், கல்விமான்களிடமிருந்து பெற்று சிறந்த முறையில் தொகுத்து சிறப்பாக இதனை வடிவமைத்து இந்த நூலை அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பதென்பது அவர் இந்த பிரதேசத்திற்கு வன்னிப் பிரதேசத்திற்கு செய்த சேவை என்றே கருதுகின்றோம். ஆகவே கல்விச் சமூகம் சிரம் தாழ்த்தி பாராட்டுதலையும் நன்றியையும் செய்வதில் பெருமையடைகின்றது. எங்களுடைய மண்ணும்ää மொழியும், பண்பாடும் தனித்துவமானது. அவற்றை வெளிக்கொணர்வதற்கு இருக்கின்ற வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன எனத் தெரிவித்தார்.
வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ், மனநல வைத்தியர் தமது சிறப்புரையில் வன்னி வரலாறும் – பண்பாடும் என்ற இந்த நூல் மற்றவர்களைப் போல் எல்லாவற்றையும் தந்துவிட்டது என்று சொல்லமாட்டன். இன்னும் வன்னியைப் பற்றி எழுதலாம். வன்னி மிகப் பெரிய கடல், அந்த கடலில் சிலவற்றை இந்நூல் தந்துள்ளது. வன்னியை பிறிதொரு கோணத்தில் நீங்கள் வடிவாகப் பார்த்தீர்கள் என்றால் மிகப் பெரிய கொரில்லா யுத்தத்தின் தொடக்கத்திலிருந்து பெரிய கொரில்லா இயக்கத்தை அழித்தது வரை வன்னியில் தான் நடந்தது. அதையும் எழுதினால் தான் அது வன்னியின் வரலாறு. வன்னி மக்கள் பதைபதைத்து போயிருக்கின்ற காலமிது. அதாவது வன்னி அழிந்து விடுமோ என்ற பயம். திரும்பத் திருப்பு வன்னியைப் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிடுகின்றோம் என்றால் அது அழியப் போகின்றது என்ற பயம் இருக்குது. வன்னி என்ற அடையாளம் இழக்கப்பட்டு விடுமோ என்ற பயம் வரும் போது கூட எழுதத்தான் பார்ப்போம். ஏன் இந்தப் பயம் வருகிறது என்பதுதான் மிக முக்கியமானது. வன்னி அழிவிலிருந்து ஓரளவு மீண்டு வருகிறது என்று இந்த நூல் மூலம் ஒத்தடம் கொடுத்துள்ளது. இந்த நூல் ஒத்தடம் தந்திருக்குது. இல்லை இல்லை வன்னி அழியாத ஒன்று. தாக்குப் பிடிக்கக் கூடியது. இதன் வரலாறு தொன்மையானது, இதன் பாரம்பரியம் முக்கியமானது என்று இந்நூல் சொல்லுகின்றது. இதனால் எங்களுடைய மனக் காயத்தில கொஞ்சம் ஆறுகின்றது. அப்படித்தான் நான் இந்த நூலைப் பார்க்கின்றேன். காயப்பட்டிருந்த வன்னி மக்களுக்கு சிறிய ஆறுதலை இந்நூல் தந்திருக்கின்றது. இதற்காக இந்நூல் பதிப்பாசிரியருக்கு நன்றி கூறுகின்றேன் எனத் தெரிவித்தார்.
திரு.கு.சிதம்பரநாதன், பீடாதிபதி, தேசிய கல்வியற் கல்லூரி, வவுனியா தனது சிறப்புரையில் வன்னியின் சிறப்பை எனக்கு முன் பேசியவர்கள் கூறினார்கள். 1960களுக்கு முன்னர் இருந்த வன்னி வேறு, 2009ம் ஆண்டிற்குப் பின்னர் உள்ள வன்னி வேறு என நான் பார்க்கின்றேன். இந்த நூலில் பண்பாட்டை வேரோடு பிடுங்குதல் என ஒரு பேராசிரியர் எழுதியிருக்கிறார். அது 2009ல் நடந்தது. நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்த ஒரு காலம். 2009ஆம் ஆண்டு எங்களுடைய பண்பாடு வேரோடு பிடுங்கப்பட்டுவிட்டது. 1965களில் வவனிக்குளம் குடியேற்றத்திட்டம் வந்த போது அந்த நேரத்திலும் மாற்றங்கள். ஏனென்றால் திடீரென மக்கள் தொகை கூடுகின்றது. வன்னியின் பண்பாட்டில் சின்ன சின்ன மாற்றங்கள் வந்தது. மற்றவர்களுக்கு கொடுத்தது தான் வன்னியின் ஆத்மா. நஸ்டப்பட்டு போனோம் என்ற மனப்பான்மை இங்கு இருக்கவில்லை. கொடுத்து கொடுத்து வளர்ந்தது வன்னியின் பண்பாடு. இன்று வன்னியின் பண்பாடு, கல்வி நிலை படுமோசமாகி விட்டது. இந்த நிலையிலிருந்து நாங்கள் மீளவில்லை. உனக்கு படிப்பு வராது என்று கூறும் நிலை இன்றும் உள்ளது. நாங்கள் என்ன செய்வது? எவ்வாறு இப்பிள்ளைகள் முன்னேற்றுவது? இலங்கையில் மற்ற மாவட்டங்கள், நகரங்களிலுள்ள பாடசாலைகள் எவ்வளவு நிலைமைகளில் இருக்கின்றதோ அந்தளவு வளர்ச்சி வன்னிக்கு வேண்டும். இறுதியாக கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்திற்கு வாழ்த்து சொல்ல வேண்டும். நல்ல காரியத்தை செய்வதற்கு உங்களுக்கு இறைவன் ஆசி தந்துள்ளார். இது உங்களுக்கு ஒரு கொடை. இதனை சரியாக நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். இந்நூல் எங்களுக்கு ஒரு ஆவணம் எனக் கூறினார்.
கலாநிதி த. கிருஷ்ணமோகன், முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம் தனது சிறப்புரையில் வன்னி வரலாறும் பண்பாடும் தொடர்பாக எழுதிய கட்டுரைகளை தொகுத்து தந்த வரலாற்றுப்பணி திரு க.சுந்தரலிங்கம் அவர்களுக்குரியதாகும். இதற்குப் பங்காற்றியவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளார்கள். இலங்கையின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் வாழும் சமூகங்கள் பற்றிய வரலாறு எழுதப்படவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. அதிலும் எங்களுடைய சமூகம் பற்றிய ஒரு வரலாற்று ஆவணம் தொகுக்கப்படுதல் என்பது அதுவும் நூல் வடிவில் வருவது என்பது, அதுவும் யுத்தத்திற்குப் பின்னர் இங்கு வருவதென்பதும் முக்கியமானதாகும். வன்னியின் பெருமையினை எல்லோரும் இங்கு பேசினார்கள். வன்னி பெரு நிலப் பிரதேசத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் இப்பிரதேசம் ஈடு கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தினை இழந்து விட்டு வடமாகாண தமிழ் மக்களின் வரலாறு பற்றி பேச முடியாது. இது தான் எங்களுடைய காவலரண். எனக்கு இருக்கின்ற கேள்வி எங்களுடைய வரலாறு, கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசப்படுகின்ற போது நாங்கள் இதுவரை இப்பாதுகாப்பை பெறுவதில் ஏன் வெற்றிடையவில்லை என்பதேயாகும். வட மாகாணத்திற்கான நிர்வாகப் பிரதேசம் மாங்குளத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற பொதுவான நியாயம் முன்வைக்கப்பட்டது. இப்பொதுவான நியாயம் வரவேற்கத்தக்கது. ஆனால் யார்? எதற்காக? எவ்வாறு? மாங்குளத்தில் உருவாக்கப்பட வேண்டிய நிர்வாகப் பிரதேசத்தை கைதடிக்கு நகர்த்தினார் என்பது பெரிய கேள்விகளாக உள்ளன. வடமாகாணத்தின் நிர்வாகப் பிரதேசத்தினை எப்போது வன்னி பிரதேசத்திற்குள் கொண்டு வருகின்றோமோ அன்றைக்குத்தான் இந்த ஆராய்ச்சி நூல்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள், இந்த மேடையில் பேசப்பட்ட கருத்துக்கள் யாவும் செயல்வடிவம் பெறும். அதுவரையில் இவைகள் யாவும் கனவுகளே. இதற்காக நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. வடமாகாண நிர்வாகத்தினை வன்னிக்கு கொண்டு வர வேண்டும். எங்களை நிர்வகிக்க கூடிய நிர்வாக அலகு ஐந்து மாவட்டங்களுக்கும் பொதுவானதொரு இடத்தில் இருந்தால்தான் எங்களுடைய வரலாறு, தொன்மை, பூர்வீகம் இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எல்லாவற்றையும் பாதுகாக்கலாம். எங்களிடம் அதிகாரம் இல்லாமல் போனதால்;தான் எல்லவற்றையும் நாங்கள் இழந்தோம். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மார்க்கங்கள் பலவற்றை தேடினோம். பல விடயங்களில் தோற்றுவிட்டோம். ஆனால் எங்களிடம் மாகாணசபை என்ற பொறிமுறை உள்ளது. அந்தப் பொறிமுறையினை வன்னிக்கு வெளியே வைத்து விட்டு பெரு நிலப் பிரதேசத்தையும், பிரதேசத்தினுடைய வளங்களையும் மக்களையும் பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்தார்.
ஜோசேப் பாலா, உளசீராளன் தனது உரையில் வரலாற்றினை எழுதுவது, தொகுப்பது அதனைக் கொடுப்பது சாதாரண விடயமல்ல. ஒரு பல்கலைக்கழகத்திற்கு அப்பாலே நின்று சுந்தரலிங்கம் எங்களுக்கு இப்பணியை செய்து தந்துள்ளார். இந்த வரலாற்று காவிய நாயகனை, காவலனை ஒரு கணம் எண்ணிப்பார்க்கலாம். வன்னி மண்ணின் இவ்வளவு விடயங்களையும் ஒழுங்கமைப்பதென்பது சுந்தரலிங்கத்திற்குத் தான் முடியும். வன்னி வரலாறும் பண்பாடும் என்ற இந்த நூல் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றது. இந்நூலில் எழுதப்பட்டுள்ள விடயங்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பேராசான்கள் கூறிய கருத்துக்களும் அடுத்த பரம்பரைக்கு எடுத்துச் செல்வதற்கு தயாரகவுள்ளது. இந்நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல். உண்மையில் இந்த வரலாற்று நூலை தொகுத்து பதிப்பித்துத் தந்த சுந்தரலிங்கம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எனத் தெரிவித்தார்.
திரு அருந்தாகரன், முதுநிலை விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், தனது மதிப்பீட்டுரையில் எனது இந்த உரைக்கு நான் வைத்த பெயர் வன்னி வரலாறும் பண்பாடும் வந்தவையும் வரவேண்டியவையும். உண்மையில் வந்தவை பற்றிய எல்லா விபரணங்களும் பேசியாயிற்று. ஆனால் வரவேண்டியவை பற்றி நிறைய பேச வேண்டியுள்ளது. வன்னியின் ஆதிக்குடிகள் பற்றிய பிரச்சினையுள்ளது. அவ் ஆதிக்குடிகளின் வரலாறு நுண்ணியநிலையில் எழுதப்பட வேண்டும். கருத்து நிலையிலிருந்து விடுபட்டு பிரதேச ரீதியான, அரசியல், வரலாறு, பண்பாடு மற்றும் சமூகக்குழுக்கள், இனக்குழுக்கள் என்பவற்றை ஒருங்கிணைத்து நாங்கள் வரலாற்றினை ஆக்குதல் வேண்டும். அப்போதுதான் அது பன்மைத் தன்மையினை கட்டமைக்கின்றதொன்றாக மாறும். அந்த வகையில் இந்தப் பிரதி ஒற்றைப்படையான வரலாற்று பண்பாட்டு புரிதலிலிருந்து விலகி சமூகத்தின் வெவ் வேறு குடிக்களையும் ஒன்றிணைத்து பார்ப்பதற்கான வெளியை அது திறக்கின்றது என்ற வகையில் இந்நூல் முக்கியத்துவமுடையதாகும். உண்மையில் இந்த நூலில் வந்தவை என்பதை விட வரவேண்டியவை மிக முக்கியமான விடயம். உண்மையில் நாம் எம்மை மீள் கண்டுபிடிப்பு செய்ய வேணடும். இந்த வெற்றிக்கான வழியை எங்களுடைய துறை சார்ந்த அறிவுகள் தர வேண்டும். அவ்வாறாயின் அந்த துறை சார்ந்த அறிவுகள் எவ்வாறு மாற வேண்டும் என்பது முக்கியமானது. காலனித்துவ காலத்தில் காலனித்தவ எழுத்தாளர்களால் ஏழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அவை மீள் வாசிப்பு செய்யப்பட வேண்டும். அது எவ்வளவிற்கு எங்களுடைய சமூக வரலாற்று இயக்கத்துடன் ஒத்திசைந்து போகின்றது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதேநேரம் எங்களுடைய வரலாற்றினை நாங்களே எழுத வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கான முறையியலை தானே கண்டுபிடிக்க வேண்டும். எங்களுடைய வரலாற்று கல்விமான்களால் எழுதப்பட வேண்டும். அதேநேரம் உள்ளுர் நிலையில் எங்களுடைய வரலாறு எழுதப்பட வேண்டும். வாய்மொழி மூலமான வரலாறு ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். உண்மையில் வன்னி போன்ற பாரம்பரியமான பிரதேசத்தின் வரலாற்றை பதிவு செய்வது, தொகுப்பது, என்பதற்கு வாய்மொழி வரலாறு முக்கியமானதாகும். இப்படியான ஆவணம் மீண்டும் தொகுக்கப்பட வேண்டுமாயின் சமயம், அரசியல், பிரதேச, மொழி பண்பாடு ரீதியாக தொகுக்கப்பட வேண்டும். இந்த நூல் வன்னிப் பிரதேசம் பற்றிய வரலாறு மற்றும் சமூகப்பண்பாடு, சமயம் பற்றிய துறைசார்ந்த ஆவணமாகும். மற்றது இந்த தறை சார்ந்த அறிஞர்களை ஒன்றிணைக்கின்ற வெளியாக இது இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தேசிய வரலாறு எழுதுதல் என்ற முறையில் பிரதேச ரீதியான வரலாற்று ஆவணம் எவ்வாறு பங்களிக்கமுடியும் என்கின்ற பகுதியையும் இது எங்களுக்கு நிறைவு செய்கின்றது. இதைவிட சமூகத்தின் புதிய அறிவையும் சிந்திப்புத் தளத்தையும் இந்நூல் உருவாக்கியுள்ளது. இவ்வகையில் இது எங்களுடைய காலத்திற்கு மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது. கூட்டு முயற்சியாக செய்ய வேண்டியதை சுந்தரலிங்கம் அவர்கள் தனி முயற்சியாக மேற்கொண்டுள்ளார். இவ்வகையில் இவரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும் எனத் தெரிவித்தார்.
பதிப்பாசிரியரான கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் தனது ஏற்புரையில் நான் இப்பிரதேசத்தில் ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்கள் வாழவில்லை. அப்படியிருந்தும் நான் வாழ்ந்தது போன்று இன்று எனக்கு அனுபவம் கிடைத்திருக்கின்றது. பதிப்பாசிரியருக்கு இருக்க வேண்டிய கடமைகளையும் பொறுப்புககளையும் இயன்றவரை சரியாகச் செய்திருக்கின்றேன். பேராசிரியர் பத்மநாதன், கலாநிதி சரவணபவான், ஆகியவர்கள் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பை வாழ்நாளில் மறக்கமுடியாது. இந்நூலுக்கு கட்டுரை எழுதிய ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் எண்ணிக் கொள்கின்றேன். இந்நூலினை எனது ஊரான வவுனிக்குளத்தில் வெளியிடமுடியவில்லை. இதற்கு அரசியல் காரணமல்ல. எங்களுடைய மக்களின் வக்கிரமான மனநிலை தான் காரணம். எங்களுடைய சிந்தனைகள் தான் செயல்களாக மாறுகின்றன. செயல்கள் தான் பழக்கங்களாக மாறுகின்றன. பழக்கங்கள் கலாசாரமாக மாறுகின்றன. கலாசாரத்தின் மூலமே அடுத்த சந்ததியை உருவாக்குகின்றோம். அதை நாங்கள் உணர்வதில்லை. இந்த நூலை வெளியிடுவதற்கு திரு குணபாலனுக்கு இருந்த துணிவு இன்னொருவருக்கு இருக்கவில்லை. இது என்னுடைய முதலாவது புத்தகம் அல்ல. நான் 2005ஆம் ஆண்டு மூன்று புத்தகங்களை நோர்வேயில் வெளியிட்டேன். கட்டுரை ஆசிரியர்களே கட்டுரைகளுக்குப் பொறுப்பு. அவர்களே கட்டுரைகளின் விமர்சனத்திற்குரியவர்கள். எனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.