1960 களின் பிற்பகுதியில் ஜோகான் கல்டூன் (Galtung) மோதலினை விளங்கிக் கொள்வதற்காக மோதல் முக்கோணியினை அறிமுகப்படுத்தினார். இவர் மோதலானது ஒத்திசைவு (Symmetric) ஒத்திசைவின்மை (Asymmetric) ஆகியவற்றினால் ஏற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.
A. உளப்பாங்கு:-
உளப்பாங்கு என்பது உணர்ச்சிகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் என்பவற்றால் ஏற்படுவதாகும். மேலும் கட்சிகளுக்கிடையில் ஏற்படக்கூடிய புலணுணர்வும், புலணுணர்வற்றதுமான விடயங்களையும் உளப்பாங்கு உள்ளடக்கியுள்ளது. உளப்பாங்கானது பயம், கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளினால் செல்வாக்குக்குட்படுவதுமாகும். இவைகள் நேர்நிலையானதாக அல்லது எதிர் நிலையானதாக இருக்கலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடும் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறாவுருநிலைப்படிவுகளை (Stereotypes) விருத்தி செய்கின்றனர். மோதலில் ஈடுபடும் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்நிலை மாறாவுருநிலைப்படிவுகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் இரு கட்சிகளும் ஒருவர் மீது மற்றொருவர் அச்சம், சந்தேகம், நம்பிக்கையின்மை, வெறுப்பு போன்ற மோதல் உளப்பாங்குகளைப் பெற்று விடுகின்றார்கள். மறு பக்கத்தில் மோதலில்ஈடுபடும் கட்சிகள் தமது கட்சியைப் பாதிக்கப்பட்டோர் கட்சியாகக் கருதுவதுண்டு. இப்பாதிக்கப்பட்டோர் என்ற உளப்பாங்கு வரலாற்று நிகழ்வுக@டாக ஏற்பட்டு மோதலினை உருவாக்கி விடுகின்றது.
B. நடத்தை:-
மோதல் நடத்தையானது பயமுறுத்தல்கள், அழிவினைத் தரும் தாக்குதல்கள் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. அமைப்பு ரீதியான உறவுகள், பொருளாதார நலன்களுக்கான போட்டிகள் அல்லது நடத்தைகள் என்பனவும் மோதலிற்குக் காரணமாக அமைகின்றன. மோதல் நடத்தையானது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வன்முறை நடத்தையாக மாற்றமடையமாட்டாது. ஒத்திசைவின்மை நிகழ்கின்ற போது தமது இலக்குகளை அடைந்து கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவும் மோதல் நடத்தைகளேயாகும்.
இவ் இரண்டு விடயங்களும் ஒன்றாக இணைந்தே ஒத்திசைவின்மையினை ஏற்படுத்தி மோதலினைத் தோற்றுவிக்கின்றன. கல்டூன்னின் நோக்கில் “மோதல் இயங்கியல் பண்பு கொண்டதாகும்” உளப்பாங்கும், நடத்தையும் தொடர்ந்தேச்சியாக மாற்றமடைந்து ஒன்றின் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றது. கட்சிகளின் நலன்கள் மோதல்களைத் தோற்றுவித்து எதிர்ப்பு நிலையினைத் தோற்றுவிக்கின்றது. முரண்பட்ட கட்சிகள் பின்னர், தம்மை ஒழுங்கமைத்து தமது நலன்களை முதன்மைப்டுத்துகின்றன. இவர்களிடம் மோதல் உளப்பாங்கும், நடத்தையும் விருத்தியடைகின்றன. இதன் மூலம் மோதலிற்கான கட்டமைப்பு ஆரம்பமாகி வளர்ச்சியடைகின்றன.
C ஒத்திசைவின்மை :-
ஒத்திசைவின்மை என்பது மோதல் சூழ்நிலையினைக் குறித்து நிற்கின்றது. ஒத்திசைவின்மையானது இரண்டு கட்சிகளுக்கிடையில் ஏற்படும் ஒவ்வாத இலக்குகளைக் குறித்து நிற்கின்றது. இதனை மிற்செல் (Mitchell) “சமூக கட்டமைப்பு, சமூக விழுமியங்கள் ஆகிய இரண்டிற்குமிடையில் ஏற்படும் பொருத்தமற்ற தன்மைகள்” எனக் கூறுகின்றார். ஒத்திசைவு (Symmetric) மோதல் என்பது “கட்சிகளுக்குள் தமது நலன் சார்ந்து ஏற்படுவதாகும். ஒத்திசைவின்மை மோதல் (Asymmetric) என்பது கட்சிகளின் உறவுகளுக்குள் இருக்கக்கூடிய உள்ளார்த்தமான நலன் சார்ந்த மோதலும், அவர்களின் உறவுகளுமாகும்.
இக்கருத்துக்கலிளிருந்து மோதலிற்கான பிரதான மூன்று விடயங்களை இனம் காண முடிகின்றது.
1. வளங்கள்
பொதுவாக வளங்கள் அருமையானவைகளாகும். ஆனால் மனிதத் தேவைகள் அளவற்றனவாகும். அருமைத்தன்மையான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரே நேரத்தில் பலர் முயற்சி செய்கின்ற போது போட்டி ஏற்படுகின்றது. போட்டியானது மோதலிற்கான அடிப்படையினை ஏற்படுத்துகின்றது. பற்றாக் குறையான வளங்களைப் பெற்று மக்களுக்கு வழங்குவதற்கு சர்வதேச அளவில் அரசுகளும் போட்டியிட்டு மோதலில் ஈடுபடுகின்றன.
2. விழுமியங்கள்
விழுமியங்கள் காலம் காலமாக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதும், பின்பற்றப்படுகின்றதுமான சமூக நம்பிக்கைகளாகும். சிந்தனை, கொள்கை கோட்பாடு, சமயம், கலாசாரம் என்பவற்றினால் ஏற்படும் நம்பிக்கைகளாலும் விழுமியங்கள் உருவாக்கப்படுகின்றன. விழுமியங்கள் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படும். ஒரு சமூகம் நம்பும் விழுமியங்களுக்கு ஏனையவர்கள் மதிப்பளிக்காத போது, அல்லது ஒரு சாரார் தாம் நம்பும் விழுமியங்களை மறு சாரார் மீது திணிப்பதற்கு முயற்சிக்கும் போது மோதலகள் ஏற்படுகின்றன.
3. உறவுகள்
உறவுகள் என்பது தந்தை, தாய், சகோதரர்கள், கணவன், மனைவி, நண்பர்கள் போன்ற சமூக உறவுகளைக் குறித்து நிற்கின்றது. இங்கு “அன்பு” என்ற அக உணர்வு மனிதர்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றது. இச் சமூக உறவில் ஒத்திசைவின்மை அல்லது நம்பிக்கையின்மை ஏற்படும் போது மோதல்கள் ஏற்படுகின்றன.