மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவும், நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்பிரயோகமாகவும் “மோதல்” என்ற பதம் உள்ளது. சமுதாயத்தில் ஒற்றுமை, உடன்பாடு, ஐக்கியம் என்பவைகளுக்கு மேலாக சண்டை, தகராறு, உடன்பாடின்மை போன்ற விடயங்களையே நாம் அதிகமாகக் காண்கின்றோம். எதிர்வினைத் தொடர்புகள் அல்லது சந்தோசமற்ற தொடர்புகள் மோதல்களைத் தோற்றுவிக்கலாம். தனிநபர்கள், குழுக்கள், அரசுகளுக்கிடையில் நிகழுகின்ற தகராறுகளும், மோதல்களும் அழிவுகளையே ஏற்படுத்துகின்றன. வேறுபாடுகள், உடன்பாடின்மைகளால் வன்முறை ஏற்படுகின்றது. சண்டை, கலவரம், புரட்சி, படையெடுப்புக்கள், யுத்தம் போன்றன பாரியளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. இதனால், காயப்படுதல், மரணம், சொத்துக்கள் அழிதல் போன்றன விளைவுகளாகின்றன. இவ்வகையில் வேறுபாடுகள், தகராறுகள் சமூகத்தில் பாதகமான செயல்கள் நிகழ்வதற்கு காரணமாகின்றன.
மோதலானது சாதாரணமாக நாம் விளங்கிக் கொள்வதைப் போல, மனித வாழ்வில் தவிர்க்க முடியாததோர் அம்சமாகும். சக மனிதர்களுடனான வாழ்க்கையில் நாம் ஒற்றுமை, உடன்பாடு, ஒருமைப்பாடு என்பவற்றைக் காண்பது போன்று உடன்பாடற்ற வாதங்கள், சச்சரவுகள் என்பவற்றையும் காண்கின்றோம். இத்தகைய மகிழ்ச்சியற்ற, எதிர்நிலையான உறவுகளை மோதலாக நாம் விளங்கிக் கொள்கின்றோம். மோதல் தூண்டல்கள், விவாதங்கள் அச்சுறுத்தல்கள், தவிர்ப்புக்கள் ஆகிய நிலைமைகளுடன் தொடர்புபட்டவைகளில் சில நிச்சயமான திறமைகளை நாம் கொண்டுள்ளோம். வேறுபாடுகளும் அவ்வேறுபாடுகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றலும் சமூக வாழ்வினை அச்சப்படுத்துகின்ற பரிமாணங்களாகும்.
“பிரச்சினைகளும், மோதல்களும் மனித இனத்தின் சமூக வாழ்வில் இயற்கையானவை” இது முடிவுறுவதில்லை. தனிநபர்கள், குழுக்கள், அரசுகள் என்பவைகளுக்கிடையிலான பிரச்சினைகளும், மோதல்களும் அழிவுசார் நிலைமைகளையே உருவாக்க எத்தனிக்கின்றன. வன்முறைகள், உடன்பாடற்ற தன்மைகளோடும், வேறுபாடுகளுடனும் தொடர்பு கொள்வதற்கான தளத்தை உருவாக்குகின்றன. சண்டைகள், கலகங்கள், புரட்சிகள், படையெடுப்புக்கள், யுத்தங்கள் என்பன வேறுபாடுகளுடனும், பிரச்சினைகளுடனும் மனிதன் தொடர்பு கொள்ளும் பிரதான வன்முறை வழிகளில் சிலவாகும். காயம், சொத்தழிவு, சக மனித இறப்பு என்பன மனித நடத்தையின், செயற்பாடுகளின் வன்முறை வடிவங்களாகும். இக் கருத்தின்படி வேறுபாடுகளும், பிரச்சினைகளும் வேறு சில விடயங்களுக்கும் இட்டுச் செல்கின்றன. மோதலானது வேறுபாடுகளை பிரச்சினைகளாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றை வன்முறைகளால் வெளிப்படுத்தி நடைமுறைக்கு இட்டுச் செல்வதுமான எண்ணக்கருவாகும். இந்நிலையில் மோதல் பற்றி சில கேள்விகள் எழுகின்றன.
-
வேறுபாடுகளும், பிரச்சினைகளும் மோதலுக்கு இட்டுச் செல்லுமா?
-
அழிவு ரீதியான நிகழ்வுக்கு இட்டுச் செல்லாத வகையில் வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் சமாளிப்பதற்கான வழிகள் உள்ளனவா?
-
மோதல்கள் இருந்தாலும் அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அல்லது குறைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?
மோதல் என்பது இரண்டு அல்லது பல மனிதர்கள், குழுக்கள் அல்லது அரசுகள் என்பவற்றிற்கிடையிலான ஒரு விசேட உறவாகும். கிறிஸ்தோபர் மிச்சேல் (Christopher Mitchell) இன் கருத்தின்படி “ஒத்துவராத இலக்குகளைக் கொண்டிருக்கின்ற அல்லது கொண்டிருப்பதாக நினைக்கின்ற இரண்டு அல்லது பல தரப்புகளிடையே காணப்படும் உறவே மோதலாகும்” இக்கருத்தின்படி மோதல் என்பது வேறுபாட்டிலிருந்து பிரிக்கப்படுகிறது. இது போட்டி அல்லது பிரச்சினையுடன் தொடர்புடையதாக உள்ளது. குயின்சி ரைட் (Quincy Wright) என்பவரது கருத்தின்படி “மோதல் என்பது ஒன்றுக் கொன்று எதிராக வழிநடத்தப்படுகின்ற சமூக உள்ளடக்கங்களின் எதிர்ப்புத் தன்மையாகும்;”
கோட்பாட்டாளர்கள் புரட்சி, போட்டி, மோதல் என்பவற்றை வேறுபடுத்தியுள்ளனர். புரட்சி என்பது “சமவளத்தை பங்கிடுவதில் போட்டியாளர்களாகத் தங்களை அங்கீகரிக்கின்ற சமூக உள்ளடக்கங்களுக்கிடையிலான எதிர்ப்புத் தன்மையாகும்.” புரட்சி எனும் சொல் Rivui எனும் இலத்தீன் சொல்லின் உருவாக்கமாகும். இது ஆறு அல்லது ஓடை என பொருள்படும். இதன்படி புரட்சியாளர்கள் பொதுவாக ஒரு ஆற்றைப் பயன்படுத்துகின்றவர்கள் எனக் கூறப்படுகின்றது. போட்டியாளர்கள் “உணவு, நீர், நிலம் போன்ற அருமையான விநியோகத்திலுள்ள விடயங்களைப் பெறுவதற்காக முயற்சிக்கின்றார்கள். மோதலென்பது Confligere எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். அதன் அர்த்தம் “ஒன்றாகப் போராடு” என்பதாகும். மோதலானது ‘சமூக உள்ளடக்கங்கள் புரட்சியாகும் போது அல்லது போட்டியாகும் போது நிகழுகின்றது.’
கிறிஸ்தோபர் மிட்சல் (Christopher Mitchell) என்பவர் மோதல் என்பது “இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களுக்கிடையிலான உறவாகும். இவர்கள் மோதலான இலக்குகளைக் கொண்டிருப்பார்கள் அல்லது சிந்திப்பார்கள்” எனக்கூறுகின்றார். இவரின் கருத்து மோதல் என்பது தகராறு அல்லது போட்டி, வேறுபாடு என்பன போன்ற கருத்திலிருந்து வித்தியாசப்படுவதை அவதானிக்கலாம். குயின்சி ரைட் “மோதல் என்பதை போட்டி என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றார். போட்டியானது சமூகங்களுக்கிடையிலான அதாவது ஒன்றிற்கொன்று சுதந்திரமாக வாழவிளைகின்ற சமூகங்களுக்கிடையிலான போட்டியினைக் குறிக்கின்றது. மோதலானது சமூகங்களுக்கிடையில் எதிர்ப்புணர்வுகளை உருவாக்குகின்றது” எனக் கூறுகின்றார்.
கோட்பாட்டாளர்கள் போட்டியிடுதல், எதிர்த்தல், மோதல் போன்ற பதங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றனர். ஒரே வளங்களை பகிர்ந்து கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூகக் கூறுகளுக்கிடையில் நிகழும் எதிர்ப்புக்களே போட்டி நிலையாகும். சமகாலத்தில் குறைவான விநியோகத்திலுள்ள உணவு, நீர், நிலம், பதவி போன்றவற்றை அடையக் கடுமையாகப் போட்டியிடுகின்றவர்களே இங்கு எதிரிகளாகக் கருதப்படுகின்றனர்.
மோதல் இரு கட்சிகளுக்கிடையிலான உடன்பாடின்மையினை வெளிப்படுத்துகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக ஒரு கட்சியின் நிலைப்பாட்டை மறுகட்சி அல்லது அணி மோதலாக நோக்குகின்றது. இன்னோர்வகையில் கூறின், அருமையாகக் கிடைக்கும் ஒரே வளங்களைப் பெறுவதற்கு ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகள் அல்லது இரண்டு அணிகள் முயற்சிக்கும் ஒரு சமூகச் சூழ்நிலையாகும். இங்கு மோதல் என்பது ஒரு சமூகக் காட்சி என்ற கருத்தும், இல்லாமை அல்லது தாராளமாகக் கிடைக்காமை போன்ற முன்நிபந்தனையையும் உட்பொருளாகக் கொண்டுள்ளது.
பொதுவாகக் கூறின், மோதல் என்பது ஒத்தியங்காத் தன்மையினால் ஏற்படுவதாகும். மோதல் தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, சர்வதேசம் எனப் பரிணாமமடைந்து செல்வதை அவதானிக்கலாம். எந்த மட்டத்தில் மோதல் ஏற்பட்டாலும் அவை அருமையாகக் கிடைக்கும் வளங்களை அடிப்படையாக் கொண்டே ஏற்படுகின்றன. எனவே ஒருவரோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களுக்கிடையிலோ ஏற்படும் ஒத்தியங்காத் தன்மையே மோதல் எனலாம்.
சமூக இயக்கத்தின் மையமாக மோதலேயுள்ளது என்பது ஆழமான புலமை மரபுவழி வந்த கல்வியியலாளர்களின் வியாக்கியானமாகும். ஒவ்வொரு சமூகமும் தனக்கேயுரித்தான அகப், புற மோதல்களைக் கொண்டிருக்கின்றன. சமுதாயத்திலிருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும் மோதலினைச் சந்திக்கின்றான். புராதன கிரேக்க சிந்தனையாளராகிய ஹெரெக்லைற்ரஸ் (Heraclitus) தொடக்கம் சொபிஸ்டுகள் (Sophists) வரை தொடர்ந்து செல்லும் சிந்தனையாளர்கள் மோதலினை முதன்மையான சமூக விடயமாகக் கருதினர். பொலிபியஸ் (Polybius) முதல்தர மோதல்க் கோட்பாட்டினை உருவாக்கியிருந்தார். இக்கோட்பாடு அரசியல் நிறுவனங்களின் பரிணாமத்திற்கான அடிப்படை விடயங்களை கொடுத்திருந்தது. பொலிபியஸ்சின் பார்வையில் “அரசு என்பது அதிகாரம் நிலைப்படுத்தப்பட்ட ஒரு வகை முறையாகும்”. மத்திய கால அரேபியாவில் அய்ன் ஹொல்டன் (Ibn Khaldun) என்பவர் நோமட் (Nomad) மற்றும் ரில்லர் (Tiller) ஆகிய மக்களுக்கிடையிலான போராட்டம் ‘நாகரீக வளர்ச்சிக்கான அடிப்படையாக இருந்தது’ என்ற ஊகத்தினடிப்படையில் மோதல்க் கோட்பாட்டை உருவாக்கினார். அய்ன் ஹொல்டனின் மோதல்க் கோட்பாடு மேற்குத் தேச மோதல்க் கோட்பாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. ஆனால் பொலிபியஸ்சின் கருத்து நிக்காலோ மாக்கியவல்லியினால் Niccolo Machiavelli நேரடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மாக்கியவல்லியும், பொலிபியஸ் போன்றே அரசின் தோற்றம், அரசின் முதன்நிலை நிறுவனங்களை எடுத்துக் கூறுகின்றார். இக்கருத்துக்கள் பின்னர் ஜீன் போடினால் (Jean Bodin) விரிவாக்கப்பட்டன. இவர், பின்னர் நவீன இறைமைக் கோட்பாட்டின் முன்னோடியாக வர்ணிக்கப்பட்டிருந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பின்னர் தோமஸ் ஹொப்சினால் (Thomas Hobbes); பயன்படுத்தப்பட்டதுடன், இவர் பொருள்மயப்பகுத்தறிவு வாதத்தினை (Materialistic Rationalism) உருவாக்கினார். நவீன மோதல்க் கோட்பாடு பகுத்தறிவுச் சிந்தனையுடனும், அனுபவ புலன்விசாரணைகளுடனும் டேவிட் ஹியும் (David Hume) அடம் ப்பேகுசன் (Adam Ferguson) போன்ற சிந்தனையாளர்களால் வலிந்து முன்இழுத்துச் செல்லப்பட்டது. இவர்கள் அனுபவ விடயங்களைப் பயன்படுத்தி மோதலகளை ஆய்வு செய்திருந்தனர். முதல்தர மோதல் கோட்பாட்டினை எளிதாக புரிந்து கொள்ள இரண்டு முன்னோடி மரபுகள் உள்ளன.
1. அரசியல் தத்துவத்திலுள்ள அதிகார உறவுப் பாரம்பரியம்:-
மாக்கியவல்லி, போடின், கொப்ஸ், மொஸ்கா ஆகியோர் மோதலினை அரசியலிலுள்ள அதிகார உறவுடன் தொடர்புபடுத்திப் பகுப்பாய்வு செய்திருந்தனர். அத்துடன் தமது பகுப்பாய்வின் மையப் பொருளாக ‘அரசு’ என்பதையே எடுத்துக் கொண்டிருந்தனர்.
2. முதல்தர பொருளாதாரத்திலுள்ள போட்டிக்குரிய போராட்டப் பாரம்பரியம்:-
அடம்ஸ்மித், மோல்தஸ் (Malthus) மற்றும் அவர்களைப் பின்பற்றி வந்த பொருளியலாளர்கள் தமது ஆய்வின் மையப் பொருளாக “பொருளாதாரப் போட்டி” என்பதைத் தெரிவுசெய்திருந்தனர்.
சமுதாயத்தில் நிலவும் சமமற்ற விநியோகத்தினை முதனிலை மையப் பொருளாகக் கொண்டு, மேற்குறிப்பிட்ட இரண்டு பாரம்பரியங்களிலுள்ள கருதுகோள்களை சமூகவியல் கோட்பாட்டாளர்கள் ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். இதன் முதனிலைச் சிற்பி கால்மாக்ஸ் அகும். இவரை விட ரைட்மில்ஸ் (Wright Mills) றாவ் டரன்டொர்வ் (Ralf Dahredorf) எர்விங் லுஇஸ் ஹொரவிற்ஸ் (Irving Louis Horowitz) லுயிஸ் க்கோசர் (Lewis Coser) ஹெபேர்ட் மெர்கியூஸ் (Herbert Murcuse) றன்டால் க்கொலின்ஸ் (Randall Collins) அன்றி குன்டர் ப்பிராங் (Andre Gunder Frnnk) போன்றோர் சமகால மோதல்க் கோட்பாட்டாளர்களில் பெயர் பெற்றவர்களாகும். பொதுவாக, மோதல்க் கோட்பாடுகள் சமுதாயத்தின் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அலகுகளுக்கிடையிலான உறவினைக் கட்டுப்படுத்துகின்றன. இனப்பதட்டம், வர்க்கப்போர், சமய மோதல், வேலை நிறுத்தங்கள், மாணவர் இயக்கங்கள், புரட்சிகள், விவசாயிகள் எழுச்சி போன்றன தொடர்பான பகுப்பாய்விற்குப் மோதல்க் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.