மோதல் தீர்வு என்பது அதன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தில் ‘மோதலிற்கு இட்டுச் செல்லும் காரணிகளின் குறைப்பு’ என்பதனைக் குறிக்கின்றது. மோதல்கள் ஆழமாக வேரூன்றிய விடயங்களால் காரணப்படுத்தப்படுகின்றன. இவ்வம்சங்கள் உடனடியாகப் புலப்படுவதில்லை. மோதலானது மனித சமூகங்களின் போட்டி மிக்க இலக்குகள் ஒத்துவராதவையாகும் போது கிளர்ந்தெழுகின்றது. வொலன்ஸ்ரீன் (Wallensteen) என்பவர் மோதல் தீர்வு எனும் எண்ணக்கருவானது “மோதலில் ஈடுபடும் கட்சிகளின் வெளிப்படையான விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் நோக்கமுள்ள தேடலுடன் இணைக்கப்பட்டுள்ளது” எனக் கூறுகின்றார்.
மோதல் தீர்வு மோதலுக்கான காரணங்களை எடுத்துக் கூறுகின்றது. அத்துடன் அது பகைமைக் குழுக்களுக்கிடையே புதியதும்,முடிவுறாததுமான உறவுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் மோதல்கள் மீளத் தோற்றம் பெறுவதற்கேதுவான காரணிகள் முற்றாக அழிக்கப்படுகின்றன. இது வன்முறையை முடிவுறுத்தும் ஒரு ஒப்பந்தத்தினைக் காப்பதற்காக மட்டுமன்றி ஒவ்வாத இலக்குகள்,நோக்கங்கள் என்பவற்றை தோற்கடிப்பதற்காகவும், விட்டுக் கொடுப்புக்களைத் தடுக்கும் விடயங்களை நிராகரிக்கவுமான வகையில் மோதல் தீர்வு நுட்பங்களை எடுத்துரைக்கின்றது. இதன் படி மோதல் தீர்வானது,மோதலிற்கான காரணங்களை வெற்றி கொள்வதனூடாகவோ அல்லது தோற்கடிப்பதனூடாகவோ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது என்னும் கருத்துக் கொண்டதல்ல. ஒரு தரப்பை வெற்றி கொள்வதனூடாக மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதென்பதும், வெற்றிகொண்ட தரப்பு தோற்கடிக்கப்பட்ட தரப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அவர்களது விருப்பங்களைப் பரஸ்பரம் திணிக்க முற்படுவதாகவே அர்த்தப்படும். இத்தகையதொரு நிலையானது மோதலினை முடிவுறாததொன்றாகவோ அல்லது நிச்சயமற்றதொன்றாகவோ மாற்றும்;.
மோதல் தீர்வு என்பது தரப்புக்களிற்கிடையில் வன்முறைகளை குறைப்பதற்கான உடன்பாடு அல்லது உடன்பாடுகளின் அமுலாக்கங்கள் அல்லது பகை உணர்வுகளின் நிறுத்தம் எனக்கூறலாம். அஷர் (Azar) மற்றும் பேர்ரன் (Burton) ஆகியோரின் கலந்துரையாடலைப் பயன்படுத்தி ல்லா (Laue) என்பவர் மோதல் தீர்வு என்பது எதை உள்ளடக்குகின்றது என்பதற்குச் சிறந்த விளக்கத்தைத் தருகின்றார். ல்லா கூறுவது போல, ஒரு மோதலானது எல்லாத் தரப்பும் ஒரு தீர்வை சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளும் போதுதான் தீர்க்கப்பட முடியும். அவை பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
-
ஒரு கூட்டு ஒப்பந்தப்படி, தீர்வானது மோதலினுள் இருக்கும் விருப்பங்கள், தேவைகளைத் திருப்தி செய்கிறது.
-
தீர்வானது எந்தவொரு தரப்பினதும் முக்கிய விழுமியங்களை பலியிடுவதாக இருக்காது.
-
காலம் தாழ்த்திச் செய்யப்படுகின்றதொரு நிலைமையில் கூட, மோதல்தரப்புக்கள் தீர்வினை நிராகிப்பதற்கு விரும்பாது.
-
தீர்வானது நீதி, நியாயமான தராதரங்களைக் கொண்டிருக்கின்றது.
-
தீர்வானது எல்லாத் தரப்பினருக்கும் போதுமான நன்மை பயப்பதாக இருக்கின்றது. ஆகவே சுய ஆதரவுடையதாகவும், சுய அமுலாக்கமுடையதாகவும் தீர்வானது மாற வேண்டும்.
பாரியளவில் பல்லினக் கலப்புடைய சனத்தொகை கொண்ட நாடுகள் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை எதிர் கொள்கின்றன. எவ்வாறாயினும் பல்லினக் கலப்பு மிக்க சனத்தொகை கொண்ட நாடுகளிலுள்ள பிரிவினைவாதிகளின் கோரிக்கைகள் விருத்தி செய்ப்பட்டால், இனக்குழுக்கள் தாம் பூர்வீகமாக வாழும் நிலப்பரப்பின் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதற்கு முற்படும். இது மக்கள் மீதான நேரடித் தாக்குதல்களுக்கும் தீவிர கொரில்லா யுத்தத்திற்கும், இன அழிப்பிற்கும், மனிதப் படுகொலைக்கும், காரணமாகின்றன.