மோதல் முகாமைத்துவம் (Conflict Management) மோதலினைத் தீர்த்து வைத்தல் (Conflict Resolution) மோதல் தகராற்று முகாமைத்துவம் (Conflict Crisis Management) போன்ற பதங்கள் சமகால உலகில் ஆழமாகக் கருத்திலெடுக்கப்படுகின்றன. 1960களிலிருந்து மேற்குத் தேச, அமெரிக்க கல்வியியலாளர்களும்,கொள்கை வகுப்பாளர்களும் இப்பதங்கள் கீயுபா ஏவுகணைத் தகராறு, பேர்லின் மோதல் ஆகியவற்றிலிருந்து அபிவிருத்தியடைந்து வருகின்றன. 1962ஆம் ஆண்டு கிய10பா ஏவுகணைத் தகராற்றின் பின்னர் மக்னமாறா (Macnamara) வெளியிட்ட அறிக்கையில் “தந்திரோபாயம் என்பது நீண்டகாலத்திற்கு இருக்கமாட்டாது, பதிலாக மோதல் முகாமைத்துவம் என்பதே இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
வல்லரசுகளுக்கிடையிலான தந்திரோபாய யுத்தம் அணு ஆயுதத்தினால் இல்லாதொழிக்கப்பட்டு, மக்கள் அழிவதற்கான சாத்தியக் கூறுகளே காணப்படுகினறன. எனவே, தந்திரோபாயம் என்பதற்குப் பதிலாக “மோதல் முகாமைத்துவத் தந்திரோபாயங்களைப் பிரதியீடு செய்ய வேண்டும்”. இதனால் புலமைசார் நோக்கில் அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக மோதல், மோதல் முகாமைத்துவம், மோதலினைத் தீர்த்து வைத்தல், மோதல் தகராற்று முகாமைத்துவம் போன்ற எண்ணக்கருக்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றன.
மோதல்களை முற்றாக நீக்குதல் என்பது கடினமானதொன்றாகும். எனினும் மோதல்களின் விளைவுகள் தீவிரமடையாதிருக்க உத்திகளும், உபாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ‘மோதலைத் தடுத்தல்’ என்பதை கல்வியியலாளர்கள் தீயணைப்புச் செயன்முறையுடன் ஒப்பிடுகின்றனர். அதாவது தீப்பிடித்தலைத் தடுக்க நீர்த்தெறிப்புமுறை, தீ அபாய எச்சரிக்கை முறைமை, தீயணைக்கும் பொறிமுறை, தீயணைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றுடன், பொதுமக்களும் தீயணைக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றனர். எனவே தீப்பிடித்தலை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்று மோதல்களை ஏற்படுத்தும் காரணிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது. மோதல்களைத் தவிர்ப்பதற்கான செயலூக்கம் மிக்க இரு செயற்பாடுகளை மையோல் (Miall) என்பவர் கூறுகின்றார். ஒன்று சாதாரண தடுப்பு முறை மற்றையது, ஆழமான தடுப்பு முறையாகும்.
சாதாரண தடுப்பு முறை என்பது ஆயுத மோதல்களாக மாறுகின்ற வன்முறைகளை தெளிவானதொரு ஆற்றலுடன் தடுத்தலை நோக்கமாகக் கொண்டது. இத்தடுப்பு முறையானது,மோதலிற்கான அடிப்படைக் காரணங்களை அல்லது மோதலிற்கான பரிகாரத்தினைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இவர்களது குறிக்கோள், மோதல்கள் ஆயுத மோதல்களாக மாறுவதை ஆரம்பத்திலேயே தடை செய்வதாகும். சாதாரண தடுப்பு முறைகளுக்கு உதாரணமாக இராஜதந்திர தலையீடுகள், தனியான மத்தியஸ்தம், மற்றும் நீண்டகால இலக்கு ஆகியவற்றைக் கூறிக் கொள்ளலாம். உத்தியோகபூர்வமான தந்திரோபாயங்களாக மத்தியஸ்தம், சமாதானப்படுத்துதல், உண்மைநிலையறிதல்,சமாதான மகாநாடு, தூதுக்குழுக்கள், தகவல்களைப் பெறும் விஷேட தொலைபேசி இணைப்பு ஆகியவற்றைக் கூறிக் கொள்ளலாம். உத்தியோகப்பற்றற்ற செயற்பாடுகளாகத் தனியாள் மத்தியஸ்தம். சமாதானக்குழு, பிரச்சினைகளைத் தீர்க்கின்ற பாசறைகள், மோதல்த் தீர்விற்கான பயிற்சி, வட்டமேசைக் கலந்துரையாடல்கள் போன்றவற்றைக் கூறிக் கொள்ளலாம். இவற்றை விட உள்நாட்டிலுள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், சமயக்குழுக்கள், அரசியல் கட்சிகளுக்கிடையிலான மகாநாடுகள் போன்றன எடுக்கும் முயற்சிகளும் இதற்குள் உள்ளடக்கப்படுகின்றன. மோதல்கள் வன்முறைகளாக மாறுவதற்கு முன்னர் சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் தலையீடுகளும் சாதாரண தடுப்புமுறைகளேயாகும்.
ஆழமான தடுப்புமுறையானது மோதலினுடைய ஆழமான அடிப்படைக் காரணிகளை எடுத்துரைப்பதாகும். இது மோதலின் உறவு, மோதலின் நலன் ஆகிய இரண்டையும் கோடிட்டுக் காட்டுகின்றது. உள்நாட்டு மோதல்கள், அபிவிருத்தியின் விளைவுகள், அரசியல் ஒழுங்கிலுள்ள பிரச்சினைகள், சமூகங்களின் அடிப்படைத் தேவைகள் போன்றன ஆழமான தடுப்பு முறைகள் மூலம் அளவீடு செய்யப்படுகின்றன.
சாதாரண தடுப்பு முறைகள் மோதலினுடைய உடனடிக் காரணங்களிலும், விடயங்களிலும் கவனம் செலுத்துகின்ற போது, ஆழமான தடுப்பு முறை மோதலின் ஆழமான ஆரம்பக் காரணங்களையும், கட்டமைப்புக் காரணங்களையும் கவனத்தில் எடுக்கின்றது. ஆழமான தடுப்பு முறை “நிலையான சமாதானம், பாதுகாப்பிற்கான கட்டிடக்கல்” எனக் கூறப்படுகின்றது. உள்ளுர்,பிராந்திய, அரச, சர்வதேச முறைமையின் சிறப்பான செயற்பாடுகள் மனிதனுடைய தேவைகளுக்குப் பொறுப்பானவைகளாகும். ஆழமான மோதல்த் தடுப்பு முறை ஜனநாயகத்தினை மீள ஒழுங்கமைப்பது அல்லது பலப்படுத்துவது ஆகும். மேலும் தேர்தல் மேற்பார்வைக்கு அனுமதித்தல், சுதந்திர ஊடகங்களைப் பலப்படுத்துதல், அரசியல் முறைமையின் வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு உதாரணமாக மனித உரிமைகளை மேற்பார்வையிடுவது, சட்ட, நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடுகள் என்பவற்றின் உதவியுடன் சட்ட ஆட்சியை ஏற்படுத்துவதுமாகும்.
மோதலைத் தடுக்கும் தந்திரோபாயமானது, மோதல், அதற்கான காரணங்கள், அதன் நிகழ்வுகள், அதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த பரந்த ஆய்வினை நடாத்துகின்றது. யுத்தம், மோதலினைத் தடுத்தல் பற்றிய ஆய்வினுள் இயல்பாகவுள்ள சிக்கல்களை பகுத்தறிந்து கொள்வதில் சுகனமி (Suganami) என்பவருடைய ஆராட்சி பயனுடையதொன்றாகும். அவர் தனது ஆய்வில் யுத்தத்திற்கான காரணங்களை மூன்று கட்டங்களாக விளக்குகின்றார்.
முதலாவது கட்டத்தில் யுத்தம் நிகழ்வதற்கான நிபந்தனைகள் எவை? என்பதை ஆராய்கின்றது. இரண்டாவது கட்டம், யுத்தம் நிகழ்வதற்கான சூழ்நிலைகள் எவை? என்பதை ஆராய்கின்றது. மூன்றாவது கட்டம், அடிக்கடி எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன? என்பதை ஆராய்கின்றது.
அவ்வாறாயின் மோதலிற்கான அத்தியாவசியத்தைக் குறைப்பதன் மூலம் அதனைத் தவிர்க்க முடியுமா? மோதல் சம்பவித்தால் அவை எச்சந்தர்ப்பத்தில் சம்பவிக்கின்றது என்பதை கண்டறிந்து அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் குறைக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட மோதல் வன்முறையாக மாறுவதிலிருந்து எவ்வாறு தடுக்க முடியும்? போன்ற கேள்விகள் மீள எழுகின்றன. ஆனால் இவ்வினாக்களுக்கான முடிந்த முடிவுகள் எதுவும் இல்லை. ஏனெனில் யுத்தங்கள், மோதல்கள் சிக்கலான சூழ்நிலைகளின் தோற்றத்தால் நிகழ்ந்து மீண்டும், மீண்டும் உருவெடுக்கின்றன. மோதலினைத் தடுத்தல் பற்றிய விடயங்களைத் தர்க்கரீதியாக விளங்கிக் கொள்வதற்கு யுத்தம், மோதல்கள் அவசியமானதாகும். இவ்வகையில் யுத்தம், மோதல் என்பன பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
1. ஒரே இனத்தின் அங்கத்தவர்களைக் கொல்வதற்கான மனிதனுடைய திறன்.
2. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது கட்டாயம் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் சமூக அங்கத்தவர்களிடையே ஒத்துழைப்பைக் கோர முடியும் என்று சமூகங்கள், அரசுகள் மத்தியில் நிலவும் நம்பிக்கை.
3. சர்வதேச மட்டத்தில் யுத்தத்திற்கு எதிரான வழிவகைகள் அல்லது தடுக்கும் பொறிமுறை இல்லாதிருத்தல்.
போருக்கான ஏதேனுமொரு அத்தியவசியமான நிலையினை அகற்றுவதன் மூலம், ஒருங்கிணைக்கப்பட்ட மனித செயற்பாடாக போர் எழுச்சியடைவதைத் தடுக்க முடியும். மனித இயல்புகளை மாற்றுவதன் மூலம், ஆயுதக் கலாசாரத்தினை நம்புகின்ற பழக்கத்தினை இல்லாதொழிப்பதன் மூலமும் போர், வன்முறை மோதல்களைத் தவிர்க்க முடியும். குறிப்பட்ட மோதலினுடைய காரணியினை அறிய முடியுமாக இருந்தால்,அப்போது அதனை நிச்சயம் தடுக்கக் கூடிய நிலையினை ஏற்படுத்த வேண்டும் அல்லது மோதல் வன்முறையாக மாறுவதிலிருந்து தடுக்கப்படவேண்டும்.