சர்வதேசச் சங்கம் (League of Nations) ஐக்கிய நாடுகள் சபை (U.N.O) போன்ற நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகிக்கின்ற நிறுவனங்களாகக் காணப்பட்டாலும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றிய சிந்தனை மிகவும் பழமையானதாகும். பல வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை பரம்பல் மிகவும் குறைவானதாகக் காணப்பட்டது. வன்முறை, மோதல் என்பன பழங்குடியினர், கிராமிய சமூகத்தவர்கள் அல்லது நகர அரசுகளுக்கு இடையிலும், அவற்றின் சூழலிலுமே காணப்பட்டிருந்தன. மானிடவியல், வரலாற்று ஆதாரங்களின் படி புராதன அரசியல் முறையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது நடைமுறையில் இருந்திருந்தது. அதாவது மோதலினைத் தீர்ப்பதற்கு மேலதிக அணி ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது. புராதன சீனா, இந்தியா, கிரேக்கம் போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் யுத்தம் புரியும் சமுதாயங்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஆர்வம் கொண்டு மூன்றாம் தரப்பினை பொதுவாக அங்கீகரித்தன. சில சமூகங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடுநிலைமைச் சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தன. கிரேக்கத்தில் நியாயவிசாரணை, மத்தியஸ்தம் என்பன மோதலுடன் தொடர்புபடாத பிறிதொரு நகர அரசில் காணப்படும் நடுநிலையான பிரஜை மூலம் மேற்கொள்ளப்பட்டது. யுத்தத்தில் ஈடுபடும் சமூகத்தின் மோதல்கள் பேரம் பேசித் தீர்த்து வைக்கும் முறைமை நடைமுறையில் இருந்தது. திருச்சபைக் காலத்தில் மத்தியஸ்தம் என்பது போப்பாண்டவரினால் (Pope) மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய அரசுகளின் சர்வதேச ஒழுங்கு முறையானது சில சுதந்திரமான அளவீடுகளைப் பெற்றுக் கொண்டன. இறைமைத் தத்துவத்தின் சட்ட பூர்வப் பண்பு ஏற்றுக் கொள்ளப்பட்டமை மூலம் ஒரு அரசின் உள், வெளி விவகாரங்களில் பிறிதொரு அரசின் அல்லது உயர் அதிகார சக்தியின் தலையீடு நிராகரிக்கப்பட்டிருந்தது. சர்வதேசச் சட்டம் என்பது இக்கால கட்டத்தில் அரசுகள் தமது மோதல்களைத் தீர்ப்பதற்கான சட்டரீதியான கருவியாக பயன்படுத்தப்பட்டது. இறைமையானது மதிக்கப்படாவிட்டால், மூன்றாம் தரப்பின் மூலம் மோதல் அல்லது யுத்தம் தீர்க்கப்பட முயற்சிக்கப்படும் போது இராஜதந்திர ரீதியாக ஒரு அரசு பிறிதொரு அரசின் மீது தலையீடு செய்வது ஒரு அரசின் இறைமையினை மீறுவதாக அமைந்து விடும் என்ற கருத்துக் காணப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல அரசுகள் உடன்படிக்கைகளைத் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டன. இவைகள் மோதலினைத் தீர்ப்பதற்கான நியாய விதிகளாக அழைக்கப்பட்டன. ஏறக்குறைய 300 முக்கியமற்ற சர்வதேசத் தகராறுகள் நியாய விசாரணை விதிகள் ஊடாகத் தீர்த்து வைக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நியாய விசாரணை விதிகள் என்பது மோதல்களைத் தீர்த்து வைக்கப் பாரியளவில் உதவியது. 1871 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும்,பிரித்தானியாவும் அலபாமாவினை (Alambama) சுவீகரிக்கும் விடயத்தில் முரண்பட்டுக் கொண்ட போது நியாய விசாரணை விதிகள் பாரியளவில் பயன்படுத்தப்பட்டன. பல தனியான குழுக்கள், தகராறுகள், மோதல்கள் என்பவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நிரந்தரமான சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இவைகள் ஆயுதக் கட்டுப்பாட்டையும், புதிய சமாதான சகாப்தத்தை உருவாக்குவதற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்றும் வாதி;ட்டன. இவ்வுணர்வு பூர்வமான கோரிக்கைகளை சில அரசாங்கங்கள் ஆதரவாக நோக்கின. 1899 இலும், 1907 இலும் இது தொடர்பாகச் சர்வதேச மகாநாடுகளைக் கூட்டி இவ்வாறான நிறுவனங்களைத் தோற்றுவிப்பது தொடர்பாக ஆராய்ந்தனர். இதில் 50 அரசுகள் கலந்து கொண்டன. முதலாவது மகாநாடு சர்வதேசத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான பசுபிக் உடன்பாட்டு விதிகள் (General Act for the Pacific Settlement of International Disputes) தொடர்பாக ஆராயப்பட்டு, 1907 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட மகாநாட்டில் இதன் விதிகள் திருத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. அத்துடன் நிரந்தர நியாய விசாரணை மன்றினை நிறுவுவதற்காக நகல் அமைப்பும் தயாரிக்கப்பட்டது. இவ் நியாய சபை மன்று நிரந்தரமாக இருக்கலாம் அல்லது இருக்காமல் விடலாம். ஆனால் நியாயவாதிகளைக் குறிப்பிட்ட தகராற்றில் தொடர்புடைய அரசுகளே தெரிவு செய்ய அனுமதிக்கப்பட்டன. இன்று நியாய விசாரணைப் போக்கிலான விடயங்கள் தொண்டினடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. தகராறுகளின் அதிகரித்த வருகையினால். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்வதேச மோதல்களை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வதற்கான நிறுவனரீதியான போக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில் இது சர்வதேசச் சங்கம் (League of Nation) என்ற அமைப்பினைத் தோற்றுவித்தது.
சர்வதேசச் சங்கத்தின் கொள்கை, சர்வதேசச் சமூகங்களின் மோதல்களில் தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைப்பது அதன் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட எனக் கூறுகின்றது. சரத்து 10 தொடக்கம் 17 வரை சர்வதேசக் கூட்டுப்பாதூப்பு ஏற்பாடு தொடர்பாக கூறுகின்றதுடன், சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர் பிற அரசு ஒன்றினால் ஆக்கிரமிப்புக்குள்ளாகுகின்ற போது சங்கம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் எடுத்துக் கூறுகின்றது. எடுத்துக்காட்டாக, 13ஆம் சரத்து நீதிமன்ற அல்லது நியாய சபைகளுக்கு வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளை ஏற்றுக் கொள்வது அங்கத்துவ நாடுகளின் கடமையாகும் எனக் கூறுகின்றது. 16ஆம் சரத்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான இராஜதந்திர, பொருளாதார செயற்பாடு தொடர்பாகக் கூறுகின்றது. சர்வதேச நியாய சபையின் தீர்மானங்களை எதிர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான தீர்மானங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யாது இருப்பது சர்வதேசச் சங்கத்திற்கு உதவி புரிவதாக இருக்கும். நடைமுறையில் சர்வதேசச் சங்கம் சமாதானத்தினை அடைவதற்காக மத்தியஸ்தம்,விசாரணை ஆணைக்குழு போன்ற பல ஒழுங்கு முறைகளைப் பின்பற்றியது. ஆயினும் இறுதியில் சர்வதேசச் சங்கம் இவ்வாறான ஒழுங்குமுறைகளுக்கூடாகச் சமாதானத்தினை ஏற்படுத்துவதில் தோல்வியையே தழுவிக் கொண்டது.
ஐக்கிய நாடுகள் சாசனம் மோதல்கள், தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்குகள்,விதிகள் தொடர்பாக எடுத்துக் கூறுகின்றது. அத்தியாயம் VI இல், சரத்து 33 தொடக்கம் 38 வரை மோதல்களுக்குத் தீர்வுகாண்பதற்குப் பசுபிக் உடன்பாட்டினைப் பயன்படுத்துவது பற்றி கூறப்படுகின்றது. சரத்து 33 சர்வதேசச் சமாதானம், பாதுகாப்புப் போன்றவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மோதல்களைக் கட்டுப்படுத்தப் பசுபிக் உடன்பாடு தகுதியுடையது எனக் கூறுகின்றது. அத்துடன், பசுபிக் உடன்படிக்கைக்கான சில ஒழுங்கு முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மோதல்களைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை, விசாரணை, மத்தியஸ்த்தம், இணங்க வைத்தல், நியாய விசாரணை, நியாய உடன்பாடு என்பவற்றில் எவற்றையாவது அணிகள் உபாயமாகப் பயன்படுத்தலாம். அத்தியாயம் I சரத்து 2 இன் படி அங்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் படைபலத்தைப் பயன்பத்துவது தடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு அணி அல்லது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்தவர் ஏதாவது ஒரு பிரச்சினையைச் சமர்ப்பிக்கலாம். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அதனை ஆபத்தான சூழ்நிலை எனக் கருதும் பட்சத்தில் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கும். அத்தியாயம் VI சரத்து 34 ஆக்கிரமிப்புச் செயற்பாடு அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தினை பாதுகாப்புக் கவுன்சிலுக்கு வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தானாக முன்வந்து அல்லது மோதல் இருப்பதாகக் கருதி சமாதானத்தினை ஏற்படுத்த முற்படாது. மோதலுடன், தொடர்புடைய அரசின் விருப்பத்தின் பெயரிலேயே நேரடியாகத் தலையீடு செய்ய முடியும். ஐக்கிய நாடுகள் தாபன சாசனத்தி;ன் படி பொதுச் சபை சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதில் இரண்டாவது பங்கினையே வகிக்கின்றது. ஆயினும் பொதுச்சபை இவ்வாறான சூழ்நிலைகள் எழும்போது அதனை விவாதிக்க முடியும். பாதுகாப்புச் சபை இது விடயத்தில் ஆர்வம் இல்லாதிருந்தால் மட்டுமே பொதுச்சபை தனது ஆலோசனைகளை வழங்க முடியும.;
மத்தியஸ்த்தத்திற்கான வழிவகைகள்
தீர்மானம் அல்லது சமாதானத்திற்கு வருவதற்கு பொதுவாக மூன்று வழிகள் கூறப்படுகின்றன.
1. இருதரப்பு அல்லது பல தரப்பு பேச்சுவார்த்தைகள் :-
இருதரப்பு அல்லது பல தரப்பு பேச்சுவார்த்தைகளை மோதலுடன் தொடர்புடைய அணிகள் நேரடியாகவே மேற்கொள்வது.
2. மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் :-
பேரம் பேசும் நிகழ்வில் மோதலிற்குள்ளாகியுள்ள அணியின் பிராந்தியத்திலுள்ள பிறிதொருவர் நலன்கள் எதுமின்றி நேரடியாக தலையிட்டு மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தராகத் தொழிற்படல்.
3. விசாரணைத் தீர்ப்பு (Adjudication)
நடுநிலையான மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் விசாரணைத் தீர்ப்பு மூலம் மோதலினைத் தீர்த்து வைத்தல்.
நேரடிச் சமாதானப் பேச்சுவார்த்தை
மோதலாளர்களுக்கிடையிலான நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தை என்பது மிகவும் பழமை வாய்ந்தது. யுத்தத்தின் இயல்பு, சர்வதேச உறவுகளில் காணப்படும் ஏனைய அம்சங்கள் யாவும் நூற்றாண்டுகளாகப் பெருமளவில் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. இராஜ தூதுவர் அல்லது இராஜதந்திரிகளுக்கிடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் வரலாற்று விதிகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வனவாகும். ஆனால் அனேக மோதல்கள் இரண்டிற்கு மேற்பட்ட அணிகள் பங்கு கொள்கின்றனவாகக் காணப்படுகின்றன. அதனால் பலதரப்பு மகாநாடுகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. பேரம் பேசுதல் இராஜதந்திரிகளால் அல்லது அரச தலைவர்களால் மேற்கொள்ளப்படும் போது அனேக வழிகளில் தமக்கு ஏற்ற முடிவை பெறக் கூடிய வகையில் காய்நகர்த்தல்கள் இடம்பெறும்.
பேரம் பேசுகின்ற நிகழ்வு நடைபெறுகின்ற போது அவசியமான பொறுப்புக்களை மத்தியஸ்தம் வகிப்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசும் நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தினைத் தீர்மானிப்பதில் இணக்கம் ஏற்பட வேண்டும் மோதலாளர்கள் பொது நலனை அடைவதற்காக தமக்கிடையிலான வன்முறைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். குறைந்தபட்ச நலன்களுக்கு இருதரப்பும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. அவ்வாறு முக்கியத்துவம ளித்தால் சமாதானத்திற்கு வரமுடியாது. பேரம் பேசுகின்ற போது பொது நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டால் பேரம் பேசுதலின் நோக்கம் எதிர்த்தரப்பினை ஏமாற்றுவதாக மட்டுமே அமைந்துவிடும். அத்துடன் பிரச்சாரத்திற்காகவும், நேரத்தை வீணாக்குவதற்குமான பேச்சுவார்த்தையாகவே இது அமையலாம். அதேநேரத்தில் எல்லா பேரம் பேசுதல்களும் வெற்றியடையும் என்ற எடுகோளையும் எடுக்க முடியாது. ஆயினும் எல்லாப் பேச்சுவார்த்தைகளின் இறுதியிலும் சில உடன்பாடுகள் ஏற்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டும்.
இருதரப்பு, அல்லது பலதரப்பு ராஜதந்திரப் பேரம் பேசுதல் தொடர்பான நடைமுறைகள், துணிவு, கோட்பாடுகள் போன்ற அனேக விடயங்கள் எழுத்துருவில் காணப்படுகின்றன. பேரம் பேசுதல் தொடர்பான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் பலவகையானவைகளாக காணப்படுவதுடன், மிகவும் சிக்கலானவைகளுமாகும். ஆனால் கள ஆய்வுகளும், கட்டுப்பாட்டு பரிசோதனைகளும் சில நிபந்தனைகளை உருவாக்கி வைத்துள்ளன. இணக்கப்பாட்டிற்கு அல்லது வெற்றிகரமான இருதரப்பு பேரம் பேசுதலுக்கு தேவையான ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.
-
மோதலிற்குட்பட்டிருக்கும் விடயம், விசேடமாகவும் கவனமாகவும் வரையறுகப்பட வேண்டும். இவ்வரையறையானது வெறும் குறியீடாகவோ அல்லது தெளிவின்றியோ இருக்கக் கூடாது.
-
மோதுகின்ற அணிகள் பலாத்காரத்தினைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
-
மோதலிற்குட்பட்டிருக்கும் அணிகள் அனேக பொது நலன்களை வைத்திருக்கும். அவற்றிற்கிடையில் பொதுவான உறவினை ஏற்படுத்த வேண்டும்.
-
மோதலிற்குக் காரணமாகவுள்ள விடயம் வரையறுக்கப்பட்டதன் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல் அல்லது இரு தரப்பினரும் கூட்டுறவின் ஊடாக இணக்கத்தினை அடைய ஏற்பாடு செய்தல்.
-
ஆயுதப்பரிகரணப் பேச்சு வார்த்தைகள் குறைந்த பட்சம் இரு தரப்பும் சமமான இராணுவத்தினைக் கொண்டிருக்கும் நிலையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
ஒரேவகைப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இருந்த நிலைக்கு இணங்கிச் செல்ல வழிவகுக்கும்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்த நுட்பங்கள் :-
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் நடைபெறும் போது ஏற்படக் கூடிய உடன்பாட்டு அம்சங்கள் முக்கியமானவைகளாகும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகிப்பவர் மோதலிற்குரிய அம்சங்களுக்கு வெளியேயிருந்து, உணர்ச்சிவசப்படாமலும்,மோதலாளர்களுக்கிடையே பழைய நிலையினைக் கொண்டு வரக்கூடிய தொடர்பாடலையும், புலன் விசாரணைக்குட்படும் மோதல்ப்பிரதேசத்தின் சூழலைச் சாந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவராகவும் இருந்து செயற்பட வேண்டும். மத்தியஸ்தரின் இலக்கு உண்மையில் மிகவும் சிக்கலானவையாகும். மத்தியஸ்தம் வகிக்க ஆரம்பிப்பதும், பேரம் பேசுதலுக்குப் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்களும் பிரச்சினையைப் பொறுத்து வேறுபடும். மோதலுக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தகராறுகளைப் பரிமாறுதல் என்பதில் இருந்து பேரம் பேசுதலுக்கான செயற்பாடு பல பரிமாணங்களைக் கொண்டதாகும். அவை முறை சார்ந்த செயற்பாடு, முறைசாராச் செயற்பாடு என வகைப்படுத்தப்படும்.
தகராறுகள், மோதல்கள் என்பவற்றைத் தீர்த்துக் கொள்ள மத்தியஸ்தராக ஒருவர் செயற்படும்போது அவர் ஆற்றக் கூடிய பங்கும், செயற்பாடும் எத்தகையது என்பது தொடர்பாக ஒறன்யங் (Oran Young) என்பவர் வரையறுத்துக் கூறுகின்றார்.
1. மத்தியஸ்தம்:-
மத்தியஸ்த்தம் என்பது மோதலாளர்களுக்கு உதவுவதற்காக எடுக்கப்படும் செயற்பாடாகும். அல்லது இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துதல் அல்லது ஏற்கனவே அடையப்பட்ட உடன்படிக்கையினை அமுல்படுத்துவதற்கு உதவுவதாகும். இது பின்வரும் பண்புகளைக் கொண்டதாகும்.
நல்ல அலுவலகம் (Good Offices)
இதன் கருத்து யாதெனில், மோதலாளர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வழிகளை மூன்றாம் தரப்பு கண்டறிதலாகும். இரு தரப்பிற்குமிடையில் தகவல்களை இவ்வலுவலகம் பரிமாற்றம் செய்யும். மேலும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் முறைசார் இராஜதந்திரப் பிரேரணையினைச் சமர்ப்பித்து முறைசார் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பார்.
தகவல் வளம் (Data Source)
இதன் பங்கு யாதெனின், மோதலாளர்கள் தகவல்களைப் பரிமாறும் போது உண்மையினைத் திரித்துக் கூறாமல் பார்த்துக் கொள்வதாகும்.
குறுக்கிடல் (Interposition)
இதன் செயற்பாடு என்பது இரண்டு மோதலாளர்களும் இராணுவத் தடைகளைப் போட்டு வன்முறையில் ஈடுபட்டு இருக்கும் போதுää அவ்விடத்திலிருந்து இரு இராணுவங்களையும் அகற்றிவிட்டு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் தனது படைகளை அனுப்பி மேற்பார்வை செய்வதாகும். உதாரணமாக 1973ஆம் ஆண்டு அரபு – இஸ்ரவேல் யுத்தத்தின் பின்னர், மத்திய கிழக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது படையினை உடனடியாக அனுப்பி வைத்திருந்தது.
மேற்பார்வை (Supervision)
இக்கடமையானது, மோதும் அணிகள் ஏற்கனவே நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் நிமித்தம் யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததன் பின்னர் நிகழ்வதாகும்.
2. பேரம் பேசுதல்:-
இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மோதலாளர்களுக்கிடையில் மூன்றாம் தரப்பு பேச்சுவார்த்தை நிகழும் போது ஏற்படுவதாகும். இது பின்வரும் பண்புகளைக் கொண்டதாகும்.
இணங்குதல் (Persuasion)
இச் செயற்பாடு, பேச்சுவார்த்தை நிகழ்ந்து கொண்டிருக்கும் போது ஏற்படுவதாகும். மோதலாளர்களைப் பேரம்பேசி இணங்கவைக்க எடுக்கும் முயற்சியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதைக் குறித்து நிற்கின்றது.
விளக்கம் கூறுதல் (Enunciation)
இவ் இலக்கு, மோதலின் சூழ்நிலையின் தன்மையினை வகைப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும். மத்தியஸ்தர் பிரச்சினைக்குரிய விடயம் தொடர்பாகத் தான் விளங்கிக் கொண்டதைத் தெளிவாகக் கூறுவதுடன் தொடர்புடையதாகும். மத்தியஸ்தர், இரு அணிகளும் பொதுவான புரிந்துணர்விற்கு வருவதற்காக உழைக்க வேண்டும்.
விபரித்தலும், தொடக்கிவைத்தலும் (Elaboration and Initiation)
இங்கு மத்தியஸ்தர் பொது நலனை அடைவதற்கு உதவி செய்வதன் மூலம் பேரம் பேசுகின்ற செயற்பாட்டினை நிச்சயிக்கின்றவராக இருப்பார். மோதலினைத் தீர்ப்பதற்கான பிரேரணைகளைத் தனித்து, சொந்தமாக ஆரம்பித்து வைப்பவராக இவர் இருப்பார். மத்தியஸ்தர், மோதலாளர்கள் திருப்தியடையும் வரையும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடியவராக இருக்க வேண்டும்.
பங்கேற்றல் (Participation)
இங்கு மத்தியஸ்தர் பேரம் பேசுகின்ற பிரதானதொரு அணியாக உருவாக வேண்டும். இவர், தனது பிரேரணையினை முன்வைத்து இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைக்குப் பேச்சுவார்த்தையினை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
3. நீதிமன்றத் தீர்ப்பும், மத்தியஸ்தர் தீர்ப்பும். (Adjudication and Arbitration)
சர்வதேச மோதலினைத் தீர்ப்பதற்கு இறுதியாகப் பயன்படும் வழிமுறை நீதி மன்றத் தீர்ப்பும், மத்தியஸ்தர் தீர்ப்புமாகும். சர்வதேச நீதிமன்ற சாசனம் அத்தியாயம் II சரத்து 36 அணிகள் தமக்கிடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டிற்கிணங்கச் சுதந்திரமான சட்ட நியாய சபையின் கீழ் தமது பிரச்சினையினை முன்வைக்கலாம். நியாய சபை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கினை விசாரணைக்குட்படுத்தும், சட்டம் தொடர்பான பிரச்சினை மாத்திரமே இவ்வாறு விசாரிக்கப்படும் எனக் கூறுப்படுகின்றது. அத்தியாயம் III சரத்து 43 இன் படி மோதலிற்குட்பட்ட இரண்டு தரப்பும் உடன்பட்டு நீதி கோருகின்ற விடயங்களையே சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்குட்படுத்தும். அதாவது மோதலுக்குட்பட்ட இரு தரப்பினருக்குமிடையில் பொதுவான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உணரப்படும் போது சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட முடியும். இரண்டு தரப்பினரும் மோதலினைத் தவிர்த்து சமாதானத்திற்கு வருவதற்கு உடன்பட்டால் மாத்திரம் போதாது, பதிலாக மோதலில் ஒரு கட்சி வெற்றிபெற்றது மறுகட்சி தோல்வியடைந்தது என்றில்லாமல், சர்வதேச நீதிமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும்.
மனித நாகரீகம் வளர்ச்சிடையத் தொடங்கிய காலத்திலிருந்து யுத்தமும்,அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நன்குணரப்பட்டுள்ளது. ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் இரு பெரும் யுத்தங்களைச் சந்தித்ததுடன், பெரும் மனித பொருளாதார அழிவுகளையும் சந்தித்தது. மூன்றாம் உலக யுத்தம் ஒன்று தோன்றுவதைத் தடுக்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தோன்றிய கெடுபிடி யுத்த சூழலினால் சர்வதேச அளவில் பல மோதல்கள் தோன்றியுள்ளன. அவைகள் யாவும் ஐக்கிய நாடுகள் சபையினால் திருப்திகரமாகத் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆனாலும் திருப்திகரமான தீர்வுகளையடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இம் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான பங்கினை ஆற்றியிருந்ததாயினும், கெடுபிடி யுத்த காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மோதல்களுக்கு மத்தியஸ்தம் வகித்து சமாதானத்தினை ஏற்படுத்துவது என்பதை விட சேவை செய்வது, தகவல் சேகரித்தல் என்பதில் வெற்றி கண்டுள்ளது எனலாம். கெடுபிடி யுத்த சூழல் முடிவுக்கு வந்ததன் பின்னர் கூட (1990) சர்வதேச மோதல்களுக்குச் சமாதானத் தீர்வினையடைவதில் ஐக்கிய நாடுகள் சபை பின்னடைவினையே சந்தித்து வருகிறது.
பசுபிக் உடன்பாட்டு விதிகளுக்கு ஏற்ப சமகால சர்வதேச நிறுவனங்கள் தொண்டினடிப்படையில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொள்கின்றன. பசுபிக் உடன்பாட்டின்படி மோதிக் கொண்டிருக்கும் இரு தரப்பினரும் மூன்றாம் தரப்பின் செயற்பாட்டினையும், பங்கினையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் மோதலில் முக்கிய பங்கு வகிப்பதற்கு மோதிக் கொண்டிருப்பவர்கள் பொறுப்புடனும், விருப்பத்துடனும் சுயவிருப்பினடிப்படையிலும் இடம் கொடுத்து மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்த முயற்சியின் போது ‘அதிகாரம்’ செலுத்தப்பட இடம் கொடுக்கக் கூடாது.
மறுபக்கத்தில் மோதல்களுக்கான தீர்வினையடைவதற்கு இருதரப்புப் பேச்சுவார்த்தை, பல தரப்பு மகாநாடுகள், மத்தியஸ்தம், நீதிமன்றத் தீர்ப்புக்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் யாவும் ஒப்பீட்டளவில் இணக்கத்தினை (Compromise) ஏற்படுத்துவதில் தான் வெற்றி கண்டுள்ளன. இராஜதந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் முயற்சித்து, பல வழிமுறைகளைப் பயன்படுத்தி மோதல்களுக்கு இணக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அதேநேரம், மோதல்களுக்கு நிரந்தரத் தீர்வினையடைவதற்கு இவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். மோதல்களுக்குத் தீர்வுகாண முயற்சிக்கும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் தூர இலக்குகள், செயற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். மோதல்கள் பல்வேறுபட்ட மாறிகளில் (Veriables) தங்கியிருக்கின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர் இம் மாறிகளைப் பரீட்சித்துப் பார்த்துத் தீர்வினை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும்.