மீளுருவாக்கமடையும் வடமாகாணம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.28, 2013.09.29 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002இலங்கையில் நிகழ்ந்த முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 150,000 அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நிகழ்ந்த வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்ட பின்னர் வடமாகாண சபைக்காக நடாத்தப்பட்ட முதல் தேர்தல் இதுவாகும். உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முடிவடைந்த காலத்திலிருந்து சர்வதேச சமுதாயம் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்த உயர் அழுத்தத்தினால் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனால் இத்தேர்தல் தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் அதிக கவன ஈர்ப்புக்குள்ளாகியிருந்ததுடன் இதனைக் கண்காணிக்க பொதுநலவாய நாடுகள் மற்றும் சார்க் நாடுகளின் கண்காணிப்புக் குழுக்களை அனுப்பியிருந்தன.

கொடுக்கப்பட்ட விலை

முப்பது வருடங்கள் நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் ஐக்கியநாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் படி 10,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் எனவும், பின்னர் வெளிவந்த ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் படி 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. சிலர் இவ் எண்ணிக்கை இதனையும் விட அதிகமானது எனக் கூறுகின்றார்கள். ஆயினும் சார்ள்ஸ் பெட்றி 2012 ஆம் ஆண்டு சமர்பித்த உள்ளக அறிக்கையில் 70,000 வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பலர் அவயவங்களை இழந்தனர், பலர் கடும்காயங்களுக்குள்ளாகினர், பல பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர், பலர் காணாமல்போனார்கள், பெரும்பாலானவர்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகினர், பலர் சர்வதேச நியமங்களுக்கு உட்படாத தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அரசியல் அகதிகளாகி பாதுகாப்பிற்காக நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் இதே காரணத்திற்காக உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்தனர்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தவலயத்திற்குள்ளிருந்து உயிர்தப்பி வந்த மக்கள்; இடப்பெயர்வு முகாம்களில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டனர். பலருக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியவில்லை.

வாக்களிப்பில் பங்குபற்றிய பலர் வட மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும், இதிலிருந்து மீள்வதற்காகவே தேர்தலில் வாக்களித்ததாகவும்; கருத்துத் தெரிவித்துள்ளார்கள். வடமாகாணத்தில் இராணுவம் நிலை கொண்டுள்ளமை பாதுகாப்பு நோக்கங்களுக்கானதல்ல.பதிலாக அரசியல் நோக்கங்களுக்கானது இதனால் தமது நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதே மக்களுடைய வாதமாகும்.

ஆகவே யுத்தம் முடிவடைந்த நிலையில் இராணுவம் வடமாகாணத்தில் நிலை கொள்ளத் தேவையில்லை என்பது மக்களுடைய முடிவாகும். தேர்தலைக் கண்காணிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த கண்காணிப்பாளர்கள் “மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகவும் ஆர்வமாகவுள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினரின் பிரசன்னத்தால் பதட்டமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளமை இராணுவத்தின் தேவைக்கு அதிகமான பிரசன்னம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியது.

யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு குறிப்பாக அவயவங்களின் இழப்பு,விதவைகள், அனாதைகள்,மன அழுத்தம் போன்றவற்றினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு நிவாரணம் தேடுவது, யுத்தப்பிரதேசத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினை வெளியேற்றுவது, இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் குடியிருப்பு நிலங்களை மீட்பது, மனித உரிமைகள் விவகாரத்தினை கையாள்வது உட்பட பல அத்தியாவசிய தேவைகளுக்கு புதிய மாகாண சபை முன்னுரிமை வழங்கவேண்டியுள்ளது.

முப்பது வருட யுத்தத்தின் வடுக்கள், துன்பங்கள்,சுயமரியாதை இழப்புக்கள்,அவதூறுகள் போன்றவற்றை சுமந்து நின்ற மக்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டு மீளுருப் பெற்று எழுந்து நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு வாக்களித்து தமது அபிலாசைகளை உலகிற்கு அறிவித்துள்ளார்கள். எனவே தமக்கிடையில் அரசியல் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன்களை உச்சநிலையில் பேணுவதற்கான வேலைத்திட்டங்களை மிகவும் அவதானத்துடனும், தியாக உணர்வுடனும்; செயற்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தலைவர்களுக்கு உள்ளது. அதேநேரம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கத்துடன் வெளிப்படைத் தன்மையுடனும்,கூட்டுறவுடனும் செயற்படவும் வேண்டும்.

யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி மாத்திரமன்றி யுத்தம் கொடுத்த கொடூரமான வடுக்களுக்கும்,முப்பது வருட யுத்தத்தின் மூலம் அடைய முயற்சிக்கப்பட்ட அரசியல் அபிலாசைகளுக்கும் நிரந்;தரத் தீர்வு தரப்பட வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கக் கூடிய அரசியல் அலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற செய்தியை வட மாகாணசபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இவைகளுக்காகவும், அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தான் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புத் தர மறுக்குமாயின் இவ்விடயங்களை சர்வதேச சமுதாயத்திடம் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் எனவும்; தெரிவித்துள்ளமை சாணக்கியமானதாகும்.

இந்நிலையில்; “வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஆரம்பித்தது. அரசாங்கம் மக்களின் மனத்துயரங்களுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை செலுத்தாமல் பௌதிக மீள் கட்டமைப்புக்கள், குறிப்பாக பெருந்தெருக்கள்,புகையிரத சேவை, வைத்தியசாலைகள் புனரமைப்பு ,மின்சாரம் , தொலைத்தொடர்பு என்பவற்றில் முழுமையான கவனம் செலுத்தியது.

வடமாகாண மக்களுக்கு பௌதீக வசதிகள் எந்தளவிற்கு அவசியமோ அதனைவிட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட பேரவலங்கள், துன்பங்கள், மனத்துயரங்கள்,உளவியல் பாதிப்புக்கள்,காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறியமுடியாமல் ஏற்பட்ட பரிதபிப்புக்கள் என்பவற்றிலிருந்து தாம் மீள வேண்டும் என்பதே மிகவும் அதிகமாக இருந்தது.

யுத்தத்தினால் அழிந்த பௌதீகக் கட்டமைப்புக்களை மீண்டும் இலகுவாக உருவாக்கலாம் அல்லது திருத்தியமைக்கலாம். ஆனால் முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் பூச்சியத்தில் முடிவடைந்து விட்டது என்ற ஏக்கத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் மக்கள் மீளுருவாக்கம் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இலங்கை அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அந்த இறுதி நாட்களில் நடாத்திய உச்சமட்ட இனப்படுகொலையின் நினைவுகளிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இதனால் ஏற்பட்ட கோபம் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலை கொண்டுவிட்டது.இதிலிருந்து மக்களை உடனடியாக மீட்டுவிட முடியாது.

உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் தோன்றிய இராணுவமயமாக்கம்,காணி அபகரிப்பு,காணாமல்போதல், மகிழ்ச்சியற்ற வாழ்க்கைச் சூழல், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்,திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்படும் கலாசார சீரழிவுகள் போன்றவற்றால் மக்கள் மனத்துயரத்திற்குள்ளாகி வாழ்கின்றார்கள். வடமாகாண சபைத்; தேர்தல் காலத்தில் அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தரத் தயாராக இருப்பதாகப் பிரச்சாரம் செய்யாமல்,நடைமுறையிலுள்ள மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கே முயற்சித்தது. உள்நாட்டு யுத்தத்தில் தோல்வியடைந்து அவமானப்படுத்தப்பட்டு கேள்விக்குறியாக நிற்கும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. பதிலாக வடமாகாணத்தில் தொடர்ந்து நிகழவுள்ள அபிவிருத்திகள்,புனரமைப்புக்கள் தொடர்பாகவே பிரச்சாரம் செய்தது. சுருக்கமாகக் கூறினால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்த அரசாங்கத்தினால் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை.சுயகௌரவம் இல்லாத குறைந்தபட்ச அபிவிருத்தியால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற செய்தியை தேர்தல் மூலம் மக்கள் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்கள்.ஆயினும் இலங்கையின் எதிர்காலத்திற்கும், நல்லிணக்;கத்திற்கான கலந்துரையாடல்களுக்கும் தேவையான களத்தினை வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகளும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களும் உருவாக்கலாம்.

தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனம் “ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சுய அரசாங்கம்” ஒன்றை உருவாக்கும் இலக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அதிகாரங்களை பாதுகாப்பதற்கான முதல்படியாக கருதப்பட்டன. இதனால் வட மாகாண சபைக்கான தேர்தல் வடமாகாண சபையினைக் கைப்பற்றி நிர்வகிக்கும் தேர்தலாக அன்றி, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் தேர்தலாகவே தேசிய ரீதியாகவும்,சர்வதேச ரீதியாகவும் நோக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவிவந்த மனக்கசப்பு மேலும் உச்சநிலையினை அடைந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் “உண்மையான நல்லிணக்கத்தையும்,நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானது” என வலியுறுத்தியுள்ளது. மேலும் இவ் அதிகாரப் பகிர்வு பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் கோரியள்ளது.

  1. தமிழ் மக்கள் தனித்துவமானதொரு தேசியமாகும். சிங்களமக்களுடனும், ஏனையவர்களுடனும் வரலாற்றுக்காலம் தொடக்கம் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
  2. புவியியல் ரீதியாக இணைந்துள்ளதும், தமிழ் மொழியைப் பேசுகின்ற மக்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றதுமான வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
  3. தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடயவர்கள்.
  4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமஸ்டி கட்டமைப்பினை உருவாக்கி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  5. காணி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பங்கீடு செய்யப்பட்ட இறைமையின் அடிப்படையில் கொண்ட அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தென் இலங்கையில் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக றோகான் குணரட்ணா “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுஅதவாரமாகும்” எனக் கூறியுள்ளார்.அமைச்சர் சம்பிக்க ரணவக்க “மாகாணசபையினை பிரிந்து போகும் நோக்கத்துடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பொறுப்பெடுக்க முற்படுகிறது என்பதை அதன் விஞ்ஞாபனம் எடுத்துக்காட்டுகின்றது. எனவே அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள சில ஏற்பாடுகளை தேர்தலுக்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் டலஸ் அழகப்பெருமா “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தென்பகுதி மக்களுக்கு வெறுப்பூட்டுகின்றது. தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைத்துள்ளது” எனக் கூறுகின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ “பிரபாகரனால் அடையமுடியாது போன நாட்டைத் துண்டாடும் இலக்கினை வேறு எவரும் அடைய நான் அனுமதிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் 67.5 சதவீதமான மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். இதன்மூலம் 38 ஆசனங்களைக்; கொண்ட வடமாகாணசபையில் 30 ஆசனங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் சமர்பித்திருந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும், அரசியல் அபிலாசைகளுக்கும் வழங்கப்பட்ட உயர்ந்த பட்ச அங்கீகாரமாகும்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதாயினும், எவ்வளவு வாக்கு வீதாசாரத்தில் அதன் வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்பதைக் கணிப்பிட வேண்டும். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை எதிர்பார்த்திருந்தது. ஆனால் வட மாகாண மக்கள் தமது விரைவில் மீளும்;திறனையும்,உறுதியான கொள்கையினையும் வாக்களித்தல் மூலம் வெளிப்படுத்தி வரலாற்றில் முதல் தடவையாக ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் மூலம் பேச்சளவிலன்றி செயலில் செய்து காட்ட வேண்டிய பணிகள் அதிகளவில் உள்ளது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமஸ்டிக்கான கோரிக்கை

1925 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற கண்டிய தேசிய பேரவை (Kandyan National Assembly), இலங்கையில் சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் கண்டி மக்களுக்கு பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும் 1927 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் கோரியது. ஆகவே இலங்கையில் சமஸ்டி ஆட்சிக்கான கோரிக்கை முதலில் கண்டிய தேசிய பேரவையிலிருந்தே தோன்றியது என்பது முக்கியமான விடயமாகும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா தமது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் அப்போது நிலவியிருந்த மாகாண நிர்வாகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு சமஸ்டி அரசியல் அமைப்புதான் கூடியளவிற்கு பொருத்தமானது என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இது இலங்கையின் பல்வேறுபட்ட இனங்களிடையே கூடியளவு புரிந்துணர்வு ஏற்படுவதற்கு வழிவகுத்து அரசியல் ரீதியான அமைதி ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என அவர் நம்பியிருந்தார். அவர் கருதிய சமஸ்டி அமைப்பு கண்டியர்கள் கருதிய மூன்று அலகுகள் என்பதை விட விரிவானதொன்றாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டிலிருந்து கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழரசுக்கட்சி (சமஸ்டிக் கட்சி) சமஸ்டி அரசாங்க முறையினைக் கோரிவந்துள்ளது. சமஸ்டியை உருவாக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். பின்னர் இது கைவிடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு மங்கள முனசிங்கா தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள “பொதுப்பட்டியல்” அதிகாரத்தினை இல்லாதொழித்து அதனை மாகாணசபைகளின் அதிகாரப்பட்டியலுடன் இணைக்க வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தார். அப்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இம்மாகாண சபையினைக் கருத்தில் கொண்டே தனது ஆலோசனையினை முன்வைத்திருந்தார்.

1995,1997,2000ஆம் ஆண்டுகளில் முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஒற்றை ஆட்சி முறையினை இல்லாதொழித்து பிராந்தியங்களின் ஒன்றியம் {Union of Regions’ (Article 1(1)} என்ற பெயரில் புதியதொரு அரசாங்கமுறையினை உருவாக்க நகல் அரசியல் யாப்பு ஒன்றினை வரைந்திருந்தார். இந் நகல் யாப்பின் அத்தியாயம் XV பிராந்தியங்களின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக எடுத்துக் கூறியிருந்தது. வடக்கு கிழக்கு பிராந்தியங்களின் இணைப்பு என்பது தமிழ் முஸ்லீம் அரசியல் கட்சிகள் தமக்குள் ஆலோசித்து முடிவெடுத்துக்கொள்ள விடப்பட்டது. இக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சரவை அங்கத்தவராக இருந்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐந்தாம் திகதி தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒஸ்லோவில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது “ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டியை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வு காண்பதற்கு உடன்பட்டிருந்தார்”.

2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நியமித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினை (All Party Representatives Committee) நியமனம் செய்த பின்னர் ஆற்றிய உரையில் “பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்தினை நாங்கள் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும். ஏனைய நாடுகளின் அனுபவங்களிலிருந்து பொருத்தமான பாடங்களை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.தீர்வினை நான் ஒருபோதும் திணிக்கமாட்டேன்.ஆனால் நீங்கள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தரக் கூடிய பேச்சுவார்த்தைகளை உங்களுக்குள் நடாத்துங்கள்… மக்கள் தம்மை தாமே நிர்வகித்துக் கொள்ளவும்,தங்களுடைய அரசியல் பொருளாதார சூழலை தாமே கட்டுப்படுத்திக் கொள்ளவும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்… உலகில் பல நாடுகளில் இது வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல உதாரணங்கள் எமது அயல்நாடாகிய இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ளன. மோதலுக்கான பின்னனியை அடிப்படையாகக் கொண்டு நாட்டினுடைய இறைமையினை தியாகம் செய்யாது ஆகக்கூடுதல் சாத்தியமான பரவலாக்கத்தினை நாம் உருவாக்குதல் வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சமஸ்டிக் கட்டமைப்புத் தொடர்பாக புதிதாக ஒன்றையும் முன்னிறுத்தியிருக்கவில்லை.வரலாறு மீள நிகளும் என்பதே நடந்துள்ளது. வரலாற்றினை மறுதலித்து அரசியலை நோக்குபவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம்.

விவாதம்

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க எடுக்கப்படுகின்ற முயற்சி வடமாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் இலங்கையில் அரசியல் காட்சி நிலையில் சர்ச்சைகளையும், நீண்ட விவாதங்களையும் ஏற்படுத்தப் போகின்றது. இச்சர்ச்சையிலும், விவாதத்திலும் ஈடுபடுகின்றவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பு கோரும் ஜனநாயக அரசியல் சமனிலையினை உள்வாங்கி அறிவுபூர்வமாகச் சிந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பது சிறப்பானதாகும்.

வடமாகாண மக்கள் கிழக்கு மாகாணத்தினை வடமாகாணத்துடன் இணைத்துக் கொள்வதற்குத் தமது விருப்பத்தினை வெளியிட்டுள்ளனர். மாகாணசபைக் கட்டமைப்பிற்குள் நின்று சிந்தித்தால் வடமாகாணசபை மக்களுடைய ஆதரவுடன் கிழக்குமாகாண சபையுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளது என்ற உண்மை புலனாகும்.

ஆனால் கிழக்கு மாகாணமக்களும்,மாகாணசபையும் இதற்கு தமது ஆதரவினை வழங்க வேண்டும். அல்லது சட்டபூர்வமான அங்கீகாரத்தினை அரசியல் யாப்பு ரீதியாகப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பெற்றுக்கொள்வதில் பல சாவால்கள் உள்ளன. இன்றுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருப்பது இதற்கு மேலும் சவாலாக அமையும்.

இதற்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் காட்சி நிலையினையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். மிகவும் இலகுவாக கிழக்கு மாகாண மக்களிடமிருந்து வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கான ஆதரவினைப் பெற்றுவிட முடியாது.மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சமமான வாக்கு வங்கியினை முஸ்லீம் மக்கள் வைத்திருக்கின்றார்கள். பெருமளவிற்கு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதுடன், நிர்ணயம்மிக்க அரசியல் சக்தியாகவும் உள்ளனர். மேலும் கிழக்கு மாகாணத்தின் பல எல்லைப் பகுதிகள் சிங்கள மக்களின் வாழ்விடமாக மாற்றமடைந்துள்ளது என்ற உண்மையினையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இந்நிலையில் வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தினை மீண்டும் இணைத்தால் தமிழ் மக்கள் அரசியல் அதிகாரம் மிக்க சமூகமாக மாற்றமடைந்து விடுவார்கள். அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் தமது அரசியல் செயற்பாட்டுத் தளத்தினை நிரந்தரமாக இழந்துவிடுவதற்கு வாய்ப்பு உருவாகலாம் என்ற அச்சம் கிழக்கு மாகாண முஸ்லீம் சமூகத்திடம் தோன்றலாம்.

அதேநேரம்; கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வடமாகாணத்துடன் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தால் அவர்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்கான விட்டுக் கொடுப்புக்களை தமிழ் மக்களிடமிருந்து எதிர்பார்க்க கூடும். இதே போன்று கிழக்கு மாகாண தமிழ்மக்களும் தமது அரசியல் அபிலாசைகளுக்கான விட்டுக் கொடுப்புக்களை வடமாகாண தமிழ் மக்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடும்.

இவைகள் எல்லாவற்றிற்கும் வடமாகாண தமிழ் மக்கள் தயாராக இருக்கும் நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை அல்லது சமஸ்டி முறைமை உருவாக முடியும். அதுவரையில் தமிழீழம் போன்று இதுவும் கற்பனையே.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,725 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>