(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.03, 2014.05.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தின் முடிவு சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் எதிர்காலத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பல சந்தர்பங்களை உருவாக்கியுள்ளது. சுதந்திரம், உரிமை, சமத்துவம் என்பன வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் பொது இலக்கினை உருவாக்குவதற்கான கருவிகளாகும். எதிர்காலத்தினைச் சமமாக அனைவரும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற தெளிவான சிந்தனையினை விருத்தி செய்வதற்கு அனைத்து சமூகங்களினதும் வகிபங்கு அவசியமாகும். கடந்தகால இழப்புக்களையும் துன்பங்களையும் ஒப்புக்கொண்டு அதனை ஈடுசெய்வதற்கான நுட்பத்தை வழங்குவதுடன், சமூகநீதி, சமூகஇயல்பு நிலைமைகளை மீள் நிலைப்படுத்த பல பணிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்.
குடியிருப்பு வசதிகள்
உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு மீளக் குடியேற வரும் மக்களுக்கு வீடு இல்லாது இருப்பது அடிப்படைப் பிரச்சினையாகும். இதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்களிடமிருந்து அனைத்து சாத்தியமான உதவி மூலங்களையும் பெற அரசாங்கம் அணுக வேண்டும்.
பெரும்பாலான மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே இன்னமும் வாழ்வதனால் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியவர்கள் வீடுகளைத் திருத்துவதற்கு அல்லது நிரந்தரமாக வீடுகளைக் கட்டுவதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் வீதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்குப் போதுமான ஏற்பாடுகள் வழங்கப்படல் வேண்டும்.
அபிவிருத்திச் செயற்பாடுகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் யுத்தத்தினாலும், வன்முறையாலும் ஏற்பட்ட அழிவினால் பொருளாதாரம் மற்றும், உட்கட்டமைப்பில் பின்னடைவைச் சந்தித்த மிகப் பாதிப்பிற்குள்ளான பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களில் சாதாரண பிரதேசங்களைப் போன்று பாரிய பொருளாதார மற்றும் வியாபாரத் திட்டங்களை உருவாக்கி உடனடியாக செயற்படுத்த முடியாது. முதலில் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மனத்துயரங்களையும், இழப்புக்களையும், பிரச்சினைகளையும் அடையாளங்காண்பதும், அவர்களின் மனக்குறைகளை கேட்பதும் அவசியமாகும்.
2003 ஆம் 2004ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணம் ஆகக் குறைந்த கல்வியறிவைக் கொண்டிருந்தது என இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. எனவே கிழக்குமாகாணத்தின் மாவட்டங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசரமானதும், போதுமானதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அரசாங்கம் சம அளவிலான வள ஒதுக்கீடுகள் மற்றும் கிராம அபிவிருத்தி என்பவற்றை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதுவிடின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பல இன சமூகத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படும் கிராமங்களில் ஏமாற்றம் மற்றும் இனவாத நெருக்கடிகள் ஏற்படும்.
வடமாகாணம் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பின்னடைந்துள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளுர் மக்களுடன் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக வடமாகாண புனரமைப்பு பணியில் பத்தொன்பது பேர் உள்ளடக்கியுள்ளனர். இதில் ஒரு தமிழரோ அல்லது உள்ளுர் வாசியோ பங்குபற்றவில்லை. உள்ளுர் மக்களின் பங்குபற்றலோடு குறுகிய காலத்தில் பிராந்திய அபிவிருத்திச் சமமின்மையை சீராக்கி வடமாகாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணையாகக் கொண்டு வர முடியும்.
அபிவிருத்திச் செயற்பாடுகள் உள்ளுர் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் ஆலோசனைகளின்படி மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான வெளிப்படையான நிர்வாக அணுகுமுறையானது அபிவிருத்தி நடவடிக்கைகளில் மக்கள் தங்களின் உரிமையை உணரச் செய்வதுடன், நாட்டைக் கட்டியெழுப்புவதில் மக்களிற்கான பங்களிப்பு உணர்வையும் விருத்தி செய்ய உதவும்.
புனர்வாழ்வும் இழப்புகளுக்கான பரிகாரமும்
பயங்கரவாத வன்முறை மற்றும் அரசாங்கப் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு, சேதம் என்பற்றிற்கு நஸ்டஈடு வழங்குதல் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கையினை அமுல்படுத்தும் பொறுப்பு வாய்ந்த சிறப்பு நிறுவனமாக “நபர்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில்களின் புனர்வாழ்வு அதிகாரசபை “ உள்ளது. இதற்கு ஏற்றவகையில் அதன் வகிபாகத்தையும் வளங்களையும், ஒருங்கிணைத்தல் மற்றும் விஸ்தரித்தல் என்ற நோக்கில், அதன் வகிப்பாகத்தையும், இயலளவையும் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்.
கொடுப்பனவுகளை முழுமையாகவும் உரிய நேரத்திலும் மேற்கொள்வதனை அரசாங்கம் முன்னுரிமைப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொடுப்பனவுகள் தேவையினை உறுதிப்படுத்தும் பொறுப்பினை நபர்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் புனர்வாழ்வு அதிகாரசபை எடுக்க வேண்டும். இதற்காக அதிகார சபையானது தனக்குத்தானே ஒரு கால வரையறையினை உருவாக்க வேண்டும்.
உள்நாட்டு யுத்தத்தின் மையமாக காணப்பட்ட பிரதேசங்களில் செயற்பட்டு வருகின்ற ஒட்டுமொத்த மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி உபாயத்துடன் நஸ்டஈடு வழங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது சுகாதாரம், கல்வி, உணவு, நீர் மற்றும் வேளாண்மை உட்கட்டுமானம் போன்ற அடிப்படை தேசிய சமூக நல சேவைகளையும் அதேபோல் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் கிராம அபிவிருத்தி திட்டங்கள் போன்ற முழுமையான அரசாங்கத் திட்டங்களின் செயற்பாடுகளையும் உள்ளடக்க வேண்டும்.
சமூக-உளவியல் புனர்வாழ்வு
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பங்களும், அவர்களின் மனத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு உதவுவது அவசர தேவையாகும். எவ்வகையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் செயல்களும் நீதியின் முன் கொண்டு வரப்படவேண்டும். கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் மீண்டும் ஏற்படாது என்பதனை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகும்.
நல்லிணக்க செயன்முறைக்கான முக்கிய விடயங்களான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேலும் ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உறுதியான அடித்தளம் இடப்பட வேண்டும். யுத்தத்திற்குப் பின்னர் தற்போதைய சூழலில் பெண்கள், சிறுவர், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும். அதேநேரம் நீண்ட காலத்தில், நீடித்திருக்கக் கூடிய தீர்வுகளைக் காண்பது அவசியமாகும். இது இல்லாமல் வலுவானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான நல்லிணக்க செயன்முறைகளை எய்த முடியாது.
விரைவாகப் பாதிக்கப்படக்கூடிய தொகுதியினரால் எதிர் நோக்கப்பட்ட சவால்களும் அவற்றிற்கான தீர்வுகளும் இயல்பில் மறைமுகமாக ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகும். இப்பிரச்சினைகளைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவத்தைக் கொண்ட சர்வதேச அமைப்புக்களினதும் சிவில் சமூக குழுக்களினதும் பணிகளைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றியும் கண்டறிதல் வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டாயமாக ஆட்சேர்ப்பிற்குட்பட்டவர்களின் தடைப்பட்ட மற்றும் தமது முறைசாரா கல்வியினை பூர்த்தி செய்ய எதிர்பார்ப்போர் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைக்கின்றது. விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்களின் வழக்குகள் விரைவாக தீர்க்கப்படல் வேண்டும்.
அரசியல் இணக்கப்பாட்டிற்கான தேவை
இலங்கை அரசியலில் அதிகாரப் பகிர்வு போன்ற சிக்கலான தேசிய பிரச்சினைகள் அரசியல் கருத்து ஒருமைப்பாடின்மை மற்றும் பல கட்சி அணுகுமுறை என்பற்றால் தடுக்கப்பட்டு இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் முட்டுக்கட்டையினை ஏற்படுத்தி வருகிறது. ‘வெறுப்பான பேச்சுக்கள்” சமூக ஒற்றுமையின்மைக்கு பெருமளவில் பங்களித்துள்ளன. இனம். சமயம் மற்றும் இலக்கியம் தொடர்பான ‘வெறுப்பான பேச்சுக்கள்” இன மற்றும் சமய பதற்றத்தை பெருக்குவதோடு ஒற்றுமையின்மை மற்றும் மோதல்களை உருவாக்குகின்றன. இதனால் இவ்வாறான நடைமுறைகளைச் சமாளிப்பதற்கு தடுக்கும் சட்டங்களை இயற்றி இச்சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்.
நல்லிணக்க செயற்பாட்டிற்கு மோதலினால் ஏற்பட்ட துன்பங்களை எல்லோரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து இதற்காக மனம் வருந்த வேண்டும். நடந்து முடிந்த மனித அவல நிகழ்வு தொடர்பாக எல்லோரும் ஆழமான தார்மீக சுய மதிப்பீடு செய்தால் மட்டுமே இம்மனவருத்தம் ஏற்படும். மன்னிப்பு மற்றும் இரக்கம் என்பன இருந்தால் மட்டுமே நல்லிணக்க விதைகள் வேர் ஊன்ற முடியும்.
இன மோதல்கள் உருவாக்குதலை எல்லா பக்கங்களையும் சார்ந்த அரசியல் தலைமைத்துவம் ஒன்று சேர்ந்து தடுக்கத் தவறியமையால் மோதலுக்குப் பலியான அப்பாவி பொதுமக்களுக்கு எல்லாப் பக்கங்களையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் தன்னடக்கத்துடன் ஒருவரோடு ஒருவர் அணுகி மன்னிப்புக் கேட்கும் ஒரு கூட்டு பிரகடனத்தைச் செய்ய வேண்டும். இதற்காக சமயத் தலைவர்களும் சிவில் சமூகங்களும் உழைப்பதுடன் நல்லிணக்க செயற்பாட்டில் குணமாக்கும் தன்மையை இப்பிரகடனம் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் இவ்வாறான இரத்தம் சிந்தும் செயற்பாடு மீண்டும் ஒரு போதும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லோரும் தமக்குள்ள கூட்டுப்பொறுப்பை உறுதி செய்வதுடன் இந்த துயரம் நிறைந்த மோதலில் பலியானவர்களுக்கு எல்லோரும் ஒருமைப்பாடு மற்றும் பச்சாதாபத்தை காட்டுவதற்கு தேசிய இனத்தில் ஒரு தனியான நிகழ்ச்சியை அமைக்க வேண்டுமென ஆணைக்குழு வலிமையாக விதந்துரைக்கின்றது.
தேசிய கீதம் பற்றிய பிரச்சனையில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரே ராகத்தில் பாடப்படும் தேசிய கீத நடைமுறை தொடர்ந்தும் பேணப்படுவதுடன் அதற்கு ஆதரவும் கொடுக்கப்பட வேண்டும்.
நல்லிணக்கம்
முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்திற்குள் நல்லிணக்கத்தை அடைவதென்பது மிகவும் கடினமானதாகும். நல்லிணக்கம் என்பது நீண்ட கால கட்டியெழுப்பும் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நல்லிணக்கம் என்ற இலக்கினை வைத்திருப்பதற்கும், சமூக ஒற்றுமையின் சாத்தியமான தோல்விகளை எதிர்பார்ப்பதற்கும் மற்றும் அவை ஆபத்தான அளவினை எட்டுமுன் அவற்றைத் தணிப்பதற்கும் நிறுவன ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் நீதிக்குப் புறம்பான சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தத் தவறியுள்ளன.இத்தவறுகள் நடைபெறாதிருக்க அரசாங்கம் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இம்முயற்சிகள் பாதிக்கப்பட்ட குழுக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மனதில் வளர்க்கப் பங்காற்ற முடியும். சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர விட்டுக் கொடுப்பு என்பனவற்றினை சிந்தனையாகக் கொண்டு மோதல்கள் மற்றும் அதன் பின் விளைவுகளை நோக்கும் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு சமூகத்திலுள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதேவேளை மோதல், வன்முறை, நம்பிக்கையின்மை, தப்பெண்ணம், சகிப்புத் தன்மையின்மை போன்றன நிவார்த்தி செய்யப்படுதல் வேண்டும். பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன் கூடிய சூழ்நிலை இருந்தால் மாத்திரமே உண்மையான நல்லிணக்கச் செயற்பாடுகளின் நன்மைகளை அனுபவிக்க முடியும்.