நிறைவேற்றுத்துறையானது நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மன்னராட்சியைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை மன்னன் என்றும், ஜனாதிபதியாட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை ஜனாதிபதி என்றும், பாராளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை பிரதம மந்திரி என்றும் பொதுவாக அழைக்கலாம். சில நாடுகளில் இரண்டு தலைமை நிறைவேற்றுத்துறை கொண்ட நிறைவேற்றுத்துறை முறைமை உள்ளது. ஒன்று பெயரளவு நிறைவேற்றுத்துறை எனவும், மற்றையது உண்மை நிறைவேற்றுத்துறை எனவும் அழைக்கப்படுகின்றது. உதாரணமாக பிரித்தானியாவில் முடிக்குரிய இளவரசி பெயரளவு நிறைவேற்றுத்துறை என அழைக்கப்படுகின்றார். எனவே பொதுவாக நிறைவேற்றுத்துறையினை பிரதமமந்திரி தலைமையிலான நிறைவேற்றுத்துறை, ஜனாதிபதி முறையிலான நிறைவேற்றுத்துறை, பிரான்சியமுறை அல்லது இரட்டை நிறைவேற்றுத்துறை , கலப்பு அல்லது ஓரமைப்பு நிறைவேற்றுத்துறை என வகைப்படுத்தலாம்.
நிறைவேற்றுத்துறை என்ற பதம் “அரசாங்க உத்தியோகத்தர்கள்” என்ற கருத்தினையும்; தருகின்றது. அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற விளக்கத்தினடிப்படையில் இதனை இரண்டாக வகைப்படுத்தலாம்.
-
மக்களால் சர்வஜன வாக்குரிமையினடிப்படையில் சட்ட சபைக்குத் தெரிவு செய்யப்படும் பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி அங்கத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதம மந்திரியும், அமைச்சர்களுமாவர்.
-
அமைச்சர்களுக்கு உதவி செய்வதற்கு என்று நிரந்தரமாக நியமிக்கப்படும் சிவில் சேவை உத்தியோகத்தர்களாகும்.
நிறைவேற்றுத்துறை தனது கொள்கைகளை வெற்றிகரமாகவும், வினைத்திறனுடையதாகவும் மேற்கொள்ளுவதற்கு நிரந்தர நிர்வாகிகளின் (பணிக்குழுவினரின்) திறமையில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அரசியல் நிறைவேற்றுத்துறையானது தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுவதால் அரசியல் மனோபாவமுடையதாக காணப்படும். இவர்கள் தேர்தல் மூலம் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்களோ அதே போல தேர்தல் மூலம் வெளியேற்றப்படலாம். இந்நிலையில் நிரந்தர நிரவாகிகள் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு முழுமையாகப் பொறுப்பானவர்களாகும். நிரந்தர நிர்வாகிகள் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் செயலிழந்துவிடும்.
நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகள்
நவீன ஜனநாயகத்தில் சட்டத்துறை, நீதித்துறை ஆகிய இரண்டையும் விட நிறைவேற்றுத்துறையானது மிகப் பலமானது எனக் கூறப்படுகின்றது. இதன் பிரதான கடமை சட்டத்துறை இயற்றும் சட்டங்களை அமுல்படுத்துவதாகும். இவ்வகையில் நிறைவேற்றுத்துறையின் பிரதான செயற்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
-
நாட்டின் உள் நிர்வாகத்தினை கவனித்துக் கொள்வது இதன் பிரதான பணியாகும். நாட்டின் சட்டம், ஒழுங்கினைப் பராமரிப்பது இதன் பிரதான கடமையாகும். இது பெரும்பாலும் உள்விவகார அல்லது பொது நிர்வாகஅமைச்சினால் மேற்கொள்ளப்படும். ஆயினும் இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.
-
வெளி நிர்வாகத்தினை பராமரிப்பதும் நிறைவேற்றுத்துறையேயாகும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நிறைவேற்றுத்துறைக்கேயுள்ளது. நிறைவேற்றுத்துறைத் தலைவர் நாட்டில் ஏதாவது அவசரகால நிலை காணப்படுமாயின் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தக்கூடியவராகும். வெளிவிவகார விடயங்கள் வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது. இது இராஜதந்திர செயற்பாடுகளுடாக மேற்கொள்ளப்படும். எல்லா வகையான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சுவார்த்தைகள் வெளிவிவகார திணைக்களத்தினால் பிரதம நிர்வாகி சார்பில் மேற்கொள்ளப்படும்.
-
சட்டத்துறையினைக் கூட்டுதல், ஒத்திவைத்தல், இடைநிறுத்துதல் போன்ற கடமைகளை நிறைவேற்றுத்துறையே செய்கின்றது. பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் கீழ் சபையினைக் கலைத்து புதிய தேர்தலை நடாத்தும் கட்டளையினை நிறைவேற்றுத்;துறையே பிறப்பிக்கின்றது.
-
சட்டத்துறைக்கு தேவையேற்படும் போது நாட்டிற்குத் தேவையான விசேட செய்திகளை நிறைவேற்றுத்துறை அனுப்புகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி தான் விரும்புகின்ற செய்திகளை நாட்டின் நலன் கருதி காங்கிரசிற்கு அனுப்புகின்றார்.
-
தற்காலத்தில் நிறைவேற்றுத்துறை ஒப்படைக்கப்பட்ட சட்டத்துறை அதிகாரத்தினையும் அனுபவிக்கின்றது. அதாவது சட்டத்துறை சட்டமியற்றுகின்றது என கோட்பாட்டு ரீதியாகக் கூறினாலும், சட்டத்துறை சார்பாக நிறைவேற்றுத்துறை உறுப்பினர்களே (அமைச்சர்கள்) சட்ட மசோதாக்களை சட்டசபையில் பிரேரித்து அதற்கான ஆதரவினைத் தேடுகின்றதுடன், எல்லா மசோதாக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பணிகளைச் செய்கின்றது.
-
நாட்டிற்கான திட்டமிடலையும், ஆராய்ச்சியையும் நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தி, வழிப்படுத்துகின்றது. அனேகமான நாடுகள் தமது நாட்டிற்கான ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுத்துறையூடாக உருவாக்கி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று அமுல்படுத்துகின்றன. திட்டங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தும் பொறுப்பினை நிறைவேற்றுத்துறை ஏற்றுக் கொண்டு இது தொடர்பாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டும்.
ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை
ஜனாதிபதி முறையிலான நிறைவேற்றுத்துறை மிகவும் குறைவாகவே உலகில் நடைமுறையில் உள்ளது. ஜனாதிபதி முறையிலான நிறைவேற்றுத்துறைக்குரிய அம்சங்கள் மிகவும் பரந்தளவில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி முறையிலான நிறைவேற்றுத்துறை உருவாகிய பின்பு பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அதன் செல்வாக்கிற்குட்பட்டது. பாராளுமன்றத்தின் தாயகம் என பிரித்தானியா வர்ணிக்கப்படுவது போன்று ஜனாதிபதி முறையின் தாயகம் அமெரிக்கா எனலாம்.
ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை முறைமை அமைச்சரவை நிறைவேற்றுத்துறையினை விட மிகவும் குறைந்த ஒருங்கிணைப்பினைக் கொண்டதாகும். பேராசிரியர் லஸ்கி “ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை, அமைச்சரவை நிறைவேற்றுத்துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் சாராம்ச வேறுபாடுகள் காணப்படுகின்றது எனக்கூறுகின்றார். பிரித்தானியாவின் சட்ட சபையானது நிறைவேற்றுத்துறையினை தன்னில் இருந்து பிரிப்பதில் விருப்பமற்றிருக்க, ஐக்கிய அமெரிக்கச் சட்டசபையானது நிறைவேற்றுத்துறையினை தன்னிலிருந்து பிரிப்பதில் அக்கறையுடையதாக இருக்கின்றது. இங்கிலாந்தில் பொதுமக்கள் சபை நிறைவேற்றுத்துறையினை வைத்திருப்பதற்கான அதிகாரத்தினைப் பெற்றிருக்கின்றது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி காங்கிரசினை நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார். காங்கிரசினைப் கவிழ்ப்பதற்கான அதிகாரத்தினை அவர் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவரால் காங்கிரசை வழிப்படுத்தவும், பயமுறுத்தவும் முடியும். அதேநேரம் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் தான் விரும்புகின்ற வரையில் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்.
ஜனாதிபதிமுறைமையில் ஜனாதிபதி சட்டசபை அங்கத்தவராக இருப்பதில்லை. ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை ஆகிய இரண்டும் மக்களிடமிருந்து சமமான அதிகாரங்களை நேரடியாகத் தேர்தல் மூலம் பெற்றுக் கொள்கின்றன. இது இவ் இரண்டு சபைகளுக்குமிடையே நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை உணர்வுகள் விரைவாக தூண்டப்படுகின்றன. காங்கிரசிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான இவ் நேர்ப் பெறுமான அல்லது மறைப் பெறுமான உறவினை ஐக்கிய அமெரிக்காவில் அவதானிக்க முடிகின்றது. கொள்கை வகுத்தலுடன் மட்டும் காங்கிரசின் அதிகாரம் நின்று விடுவதில்லை. பதிலாக நிறைவேற்றுத்துறை மூலம் அக்கொள்கையினை அமுல்படுத்துவதாகவுமுள்ளது. ஜனாதிபதியில் அவநம்பிக்கை ஏற்படுகின்ற போது கொள்கையினை நிறைவேற்றுவதற்கு சுதந்திரமான ஆணைக்குழுவினை அல்லது சபையினை காங்கிரஸ் உருவாக்குகின்றது. ஆயினும் இச் செயன்முறை ஐக்கிய அமெரிக்க நிர்வாக அமைப்பில் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐக்கிய அமெரிக்காவில் பத்து திணைக்களங்கள் மட்டுமே ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவைகளாகும். நிர்வாக விடயங்கள் சுதந்திரமான ஆணைக்குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. சபைகளும் ஏனைய துறைகளும் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குட்பட்டவைகளாகும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி அரசாங்கத்தின் நிர்வாக ஒழுங்கிற்கான ஆழமான கட்டகளைகள் அமைச்சரவை நிர்வாக அமைப்பினைப் பின்பற்றும் பிரித்தானியாää இந்தியா போன்ற நாடுகளைப் போன்று இருப்பதில்லை. அமைச்சரவை முறைமையின் உயர் தன்மைகளை விட ஜனாதிபதி நிர்வாக முறைமை உயர்ந்ததாக காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியின் நிலை காங்கிரசிற்கு நேரெதிராகவுள்ள ஓர் நிலையாகும். இந்நிலையிலிருந்து கொண்டே அவர் நிறைவேற்றுத்துறையினை இயக்க வேண்டியவராகவுள்ளார்.
ஜனாதிபதியின் ஸ்திரமான நிலையும், தனியான நிர்வாக முகாமையின் நெறிப்படுத்தலும் நிறைவேற்றுத்துறையின் அதிகார பீடமாக ஜனாதிபதியின் நிர்வாக அலுவலகம் வளர்ச்சியடைய வழிவகுத்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேறுபட்ட தரத்திலிருந்து பொதுக் கொள்கையின் ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் ஆலோசனை வழங்குகின்றார்கள். அவைகளில் சட்ட சபையின் பிரேரணைகளை மீளாய்வு செய்வது, ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மேற்கொள்வது, ஜனாதிபதி தரப்பிலிருந்து கொண்டு நிர்வாக முகாமைகளைப் பற்றி கற்று அவரது திட்டங்களுக்கு உதவுவது, ஆராட்சியில் ஈடுபடுவது, தகவல்களைச் சேகரிப்பது போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
அமைச்சரவை நிறைவேற்றுத்துறை
பாராளுமன்ற ஜனநாயகத்தினைப் பின்பற்றுகின்ற நாடுகளில் அமைச்சரவை நிர்வாகமானது அரசாங்கத்தின் ஏனைய பகுதிகளை விட மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. இது வெவ்வேறான பதங்களால் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவைகளாவன, அரசாங்கம், நிர்வாகம், பொது நிர்வாகம் என்பவைகளாகும். இப்பதங்களின் கருத்துக்களை பகுத்தறியாது ஒன்றிற்காக மற்றொன்றை பொதுவாக உபயோகித்தே வந்தார்கள். இப்பதங்கள் அமைச்சரவையின் மூன்று வகையான செயற்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. இதனை ஹல்டன் பிரபு பின்வருமாறு கூறுகின்றார்.
-
பொதுக் கொள்கையினை இறுதித் தீர்மானத்திற்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
-
பாராளுமன்றத்தினால் உத்தரவிடப்பட்டதைப் போன்று தேசிய நிர்வகத்தினைக் கட்டுப்படுத்துதல்.
-
பல திணைக்களங்களைக் கொண்ட அரசாங்கத்தினுடைய செயற்பாட்டிற்கான எல்லைகளைத் தீர்மானித்து தொடர்ச்சியான ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளுதல் என்பனவாகும்.
அமைச்சர்களின் நியமனம் அரசியல் திட்டத்தின் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது. வேறு எந்த நிர்வாக ஒழுங்கமைப்பு கோட்பாடுகளும் இதற்காகப் பின்பற்றுப்படுவதில்லை. ஆனால் அரசியல் சூழல் கருத்திலெடுக்கப்படும். அமைச்சர்கள் அரசாங்கத்தின் முக்கியமான அரசாங்கத் திணைக்களுங்களுக்குப் பொறுப்பானவர்களாக காணப்படுவார்கள். இவர்களில் உயர் பீடத் தலைவராக கட்சித் தலைவர் காணப்படுவார். இவர்கள் கூட்டுப் பொறுப்பினடிப்படையிலும் கட்சிக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் செயற்படுகின்றார்கள்.
சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்;துறைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் அமைச்சரவை முறைமை நிர்வாக ஒழுங்கமைப்பிற்கான ஐக்கியத்தினையும் நோக்கத்தினையும், கட்டளைகளையும் தெளிவாக வழங்குகின்றது.
நிறைவேற்றுத்துறையாகிய பிரதமமந்நதிரியும், அமைச்சர்களும் சட்டத்துறையில் அதிகப் பெரும்பான்மையினைப் பெற்ற கட்சியின் தலைவரினால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். வழமையாகப் பாராளுமன்றத்தின் தலைவரும் அரசாங்கத்தின் பிரதம மந்திரியுமாக கட்சித் தலைவரே காணப்படுகின்றார். அமைச்சரவை பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியதாகும். இவ்வகையில் நிறைவேற்றுத்துறை சட்டத்துறையின் பெரும்பான்மையினை இழக்கின்ற வரையில் பதவியில் இருக்க முடியும். மறுபுறம் நிறைவேற்றுத்துறை விரும்பும் காலம் வரை சட்டத்துறையின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. பொறுப்பினை மீறம் நிறைவேற்றுத்துறைக்கு எதிராக சட்டத்துறையில் நிறவேற்றப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் படி நிறைவேற்றுத்துறையினை பதவியிலிருந்து அகற்றமுடியும். மேலும் அமைச்சரவை நிர்வாக விடயங்களில் மட்டும் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருப்பதில்லை. புதிலாகப் பாராளுமன்றச் சட்டவாக்கத்திற்கும், நிதிவிடயங்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டியதாகும். நிதி மசோதா அல்லது முக்கியம் வாய்ந்த வேறு மசோதாக்கள் சட்டத்துறையின் அங்கீகாரத்தைப் பெறாது தோல்வியடையுமாயின் நிறைவேற்றுத்தறை பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
பாராளுமன்ற நிறைவேற்றுத்துறை முறையானது அனேகமாக மேற்கைரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அதேபோல அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. இம்முறையில் அரசாங்கத்தின் தலைமைத்துவம் மற்றும் அமைச்சர்கள், அமைச்சரவையின் தலைமைத்துவம் பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் இருந்தே தோன்றுகின்றது. அத்துடன் அதன் தொடர்ச்சியும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் சட்டசபையின் ஆதரவினைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியோ அல்லது பரம்பரையாக இடம்பெறுகின்ற முடியோ இம்முறையின் கீழ் வைபவரீதியான தலைமைத்துவம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.
கூட்டுக்குழு நிறைவேற்றுத்துறை
சுவிற்சர்லாந்தில் நிறைவேற்றுத்துறை சமஸ்டிக் கவுன்சில் என அழைக்கப்படுகின்றது. இது ஏழு அங்கத்தவர்களைக் கொண்டதாகும். இந்த ஏழு அங்கத்தவர்களும் முறையே உள்விவகாரம், வெளிவிவகாரம், நிதி, நீதி, பொருளாதாரம், இராணுவம், போக்குவரத்து, என்ற எழு துறைகளுக்கும் பொறுப்பாக உள்ளனர். சமஸ்டிக் கவுன்சில் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் இருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசியலமைப்பு கூறாவிட்டாலும், பொதுவாக இவர்கள் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்படுகின்றார்கள். சுவிற்சர்லாந்தின் நிறைவேற்றுத்துறை அங்கத்தவர்கள் பெரும்பான்மைக் கட்சியிலிருந்து மாத்திரம் தெரியப்படுவதில்லை. பாரளுமன்றம் சகல கட்சிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்குவதினால், சமஸ்டிக் கவன்சிலுக்கு தெரியப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது. பொதுத் தேர்தல் முடிவடைந்ததும். பாராளுமன்றின் இரு சபைகளும் கூடி சமஸ்டிக் கவன்சிலர்களைத் தெரிவு செய்கின்றார்கள்.
சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் சேர்ந்து சமஸ்டிக் கவுன்சிலின் அங்கத்தவர்களில் ஒருவரை அதன் தலைவராகவும், மற்றொருவரை உப தலைவராகவும் தெரிவு செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் இப்பதவியை ஒரு வருட காலத்திற்கே வகிக்கலாம். ஒரு வருடம் முடிந்ததும் உப தலைவராக இருப்பவர் தாலைவராவார். இவ்வாறு ஒர் சுழற்சி முறையில் சமஸ்டிக் கவுன்சிலின் ஏழு அங்கத்தவர்களும் தலைவராகவோ உபதலைவராகவோ ஆகுவதற்கு அரசியல் திட்டம் வாய்ப்பளிக்கின்றது.
தலைவருக்கோ அல்லது உப தவைவருக்கோ விசேட அதிகாரங்கள் கிடையாது. சமஸ்டிக் கவுன்சில் அங்கத்தவர்கள் ஏழு பேரும் சமமான அதிகாரங்கள் உடையவர்களாகும். சமஸ்டிக் கவுன்சில் கூட்டங்களுக்கு அதன் தலைவர் தலைமை தாங்குவார். ஆனால் அக்கூட்டங்களில் அவர் பொதுவாக வாக்களிப்பதில்லை. ஆனால் வாக்குகள் சமமாக பிரியும் பட்சத்தில் அவர் தமது வாக்கினை வழங்கிச் சமஸ்டிக் கவன்சில் ஏக தீர்மானத்திற்கு வருவதற்கு உதவுவார்.
சமஸ்டிக் கவுன்சில் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றவோ, பிரேரணைகளை சமர்ப்பிக்கவோ அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை. ஏனெனில் சமஸ்டிக் கவுன்சிலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்துவிட வேண்டும் என்பதனாலாகும்.
இரட்டை நிறைவேற்றுத்துறை
இவ்வகையான நிறைவேற்றுத்துறையின் தனிப்பண்பு அதன் இரட்டைத் தன்மையாகும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித்துவ முறைமை தனி நிர்வாக அலகாக அதாவது அங்கு ஜனாதிபதியே அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் காணப்படுகின்றார். ஆனால் வெஸ்ட் மினிஸ்ரர் முறை இயல்பாகவே இரட்டைத் தன்மை கொண்டதாக காணப்பட்டாலும் முதன் முதலாக ஜனாதிபதித்துவ அரசாங்க முறையில் இரட்டைத் தன்மையிலான நிறைவேற்றுத்துறை முறைமையை பிரான்சின் ஜனாதிபதி டீகோல் அறிமுகப்படுதினார். இதனால் இது டீகோல்முறைமை எனவும் அழைக்கப்படுகிறது. டீகோல் ஜனாதிபதித்துவ நிறைவேற்றுதுறைமுறை அரசாங்கமானது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித்துவ அரசாங்க முறையிலும், பிரித்தானிய பிரதம மந்திரி அரசாங்க முறையினதும் அம்சங்களைக் கலந்து புதிதாக உருவாக்கப்பட்டதொன்றாகும். இதன்பின்னர் பின்லாந்து இம்முறைமையினைப் பின்பற்றுவதனை அவதானிக்லாம்.
பிரான்சில் உள்ள இரட்டை நிருவாகம் ஒரு கலப்பு (Hybrid) முறையாக இருக்கின்றது. இந்த இரட்டை நிருவாகம் என்பதற்குப் பதிலாக டுவேநர் (Phrase Durerger – 1980) இதனை பாதி ஜனாதிபதி முறை நிறைவேற்றுத்துறை (Semi – Presidential Executive) எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு குறிப்பிடுவதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது. என்னவெனில் தேசிய நலன்களின் குவிமையமாக தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதியோடு சட்டமன்றத்தின் குறிப்பிட்ட நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற ஒரு பிரதம மந்திரி இணைந்து செயற்படுகின்றார். எனவே இது ஒரு இரட்டை தலைமைத்துவ முறையாகும்.
இவ் நிறைவேற்றுத்துறை முறைமையில் நிறைவேற்றுத்துறைக்குப் பொறுப்பாக பிரதமரும், ஜனாதிபதியும் காணப்பட்டாலும் ஜனாதிபதியே வலிமை வாய்ந்தவராகக் காணப்படுகின்றார். இங்கு ஜனாதிபதி நேரடியாக மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றார். இதனால் இவர் மக்கள் இறைமையினையும், பொதுசன அபிப்பிராயத்தையும் பிரதிபலிக்கும் தேசிய சின்னமாக திகழ்கின்றார். இங்கு ஜனாதிபதியின் ஆளுமை என்பது மிகவும் சிறப்பானதொன்;றாகக் கருத்திலெடுக்கப்படுகின்றது.
பிரதமரும் ஏனைய மந்திரிகளும் பாராளுமன்றத்திலிருந்து ஜனாதிபதியாலேயே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களைத் தெரிவு செய்வதிலும் நீக்குவதிலும் ஜனாதிபதியின் சொந்த விருப்பமே முன்நிற்கின்றது. ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டவோ, கலைக்கவோ, இடைநிறுத்தவோ அதிகாரம் பெற்றதனால், ஜனாதிபதியை பாராளுமன்றம் எதிர்க்கும் பட்சத்தில் ஜனாதிபதி இவ் எதிர்ப்பை அலட்சியம் செய்து விட்டு மக்கள் தீர்ப்பின் மூலம் மக்களிடம் அனுமதி பெற்றுத் தான் நினைத்ததை சாதிக்க முடியும்.