(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.05, 2014.04.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2009ஆம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்கப் படைகள் ஆகிய இருதரப்பினராலும் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்,யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறுப்படுகின்றன. அதேநேரம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளுவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இந்நிலையில் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத் தோன்றிய மனித உரிமை மீறல்களும், மனித உரிமைகள் தொடர்பாக தற்போது நிலவும் சூழல்களும் நல்லிணக்கத்திற்கான முக்கிய விடயங்களாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கருத்தில் கொண்டுள்ளது. இதற்காக சர்வதேச மனித உரிமைச் சாசனம்,இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய சர்வதேச கடமைகள், இலங்கையின் அரசியல் யாப்பு, ஏனைய சட்டங்கள் என்பன ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
யுத்தக் குற்றம், சட்டத்திற்கு புறம்பான கொலைகள்
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள்,சுதந்திரம் என்பன மீறப்பட்டமை தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்ட களவிஜயங்களின் போது அதிகளவில் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆட்கடத்தல்கள், நிபந்தனைப்படுத்தல் அல்லது விருப்பத்திற்கு மாறாக காணாமல் போவது, தன்னிச்சையான தடுத்து வைத்தல், பராயமடையாதவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்தல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், உடனடியாக அல்லது தன்னிச்சையாகத் தண்டனைகளை நிறைவேற்றுதல், கருத்துக்கள் வெளியிடும் சுதந்திரத்திரத்தை மீறுதல், நடமாடும், ஒன்றுகூடும், சமய மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற மீறல்கள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்தித்துள்ளனர்.
சமூகத்தில் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்கள் தொகுதியினராகக் கருதப்படும் பெண்கள், சிறுவர்கள்,வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள், உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளாகியவர்கள் ஆகியோர்களின் உரிமைகள் தொடர்பாகவும் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட மனித உhpமைகள் சார்ந்த விடயங்கள் நல்லிணக்க பொறிமுறையுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளதாக ஆணைக்குழு கருதுகிறது. எனவே இச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுமக்கள் மீது வேண்டுமென்றே ஏதாவது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் இவைகள் தொடர்பாக புலன்விசாரணை செய்தல் வேண்டும். புலன்விசாரணையின் போது ஏதாவது குற்றங்கள் புரியப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குத் தொடருவதற்கும், தண்டனை வழங்குவதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
பொதுமக்களுக்குகான உயிரிழப்பு மற்றும் காயங்கள் அதேபோன்று யுத்தகாலத்தில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், அவை நிகழ்ந்த சந்தர்ப்பங்கள் என்பன கண்டறியப்பட வேண்டும். இதற்காக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய தொழில்சார் முறையில் வடிவமைக்கப்பட்ட குடியிருப்பாளர் அளவீடு மேற்கொள்ளுதல் வேண்டும் என ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொடக்கம் கடுமையான மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2006 ஆம் ஆண்டு தை மாதம் திருகோணமலையில் நிகழ்ந்த ஐந்து மாணவர்கள் படுகொலை, 2006 ஆம் ஆண்டு ஆவணிமாதம் திருகோணமலையில் நிகழ்ந்த அரச சார்பற்ற நிறுவனமான ஏ.சி.எவ் இல் பணியாற்றிய பதினேழு பணியாளர்களின் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்பான புலனாய்வுகள் மற்றும் வழக்கு விசாரணைகள் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கும், விசாரிப்பதற்கும் என நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விதந்துரைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான வலுவான சமிக்ஞைகளை உருவாக்குவதுடன், மனக் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு சுகமளிக்கும் நடவடிக்கையாகவும் அமையும் என ஆணைக்குழு வலுவாக விதந்துரைத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடத்தல், பறிமுதல், களவு, கொள்ளை போன்ற பல குற்றங்களை புரியும் குற்றவாளிகள் இருப்பதாக பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தது. ஆயினும் தவறிழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்க எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை ஆணைக்குழு வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.
ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு தமிழீழவிடுதலைப் புலிகளால் கட்டளையிடப்பட்டமைக்கு கட்டுப்பட்டு சரணடைந்த ஏறக்குறைய அறுநூறு காவல்துறை உத்தியோகத்தர்களின் படுகொலை நிகழ்வுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக சாட்சியமளிக்கப்பட்டது.
அறுநூறு பொலிஸ் அலுவலர்களின் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. குற்றத்தின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் மேல் அது கொண்டிருக்கும் தாக்கம் என்பவற்றிற்காக இவ்விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை தேவைப்படுகின்றது என ஆணைக்குழு விதந்துரைந்துள்ளது.
சனல் 4
பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இலங்கைக் கொலைக்களம்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் (Sri Lanka Killing Field : War Crimes Unpunished) என்னும் காணொளி தொடர்பாக பரிசீலனைக்கு எடுத்து தனது அவதானங்களையும்,சிபார்சுகளையும் பதிவுசெய்துள்ளது.
இக் காணொளியிலுள்ள சம்பவங்கள் உண்மையானவையா? அல்லது நடிக்கப்பட்டவையா? என்பதைக் கருத்திலெடுக்காமல் பார்க்கும் போது இக் காணொளியிலுள்ள படங்கள் உண்மையிலேயே பயங்கரமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதுடன்,பேரதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
இக்காணொளி செயற்கையாக சித்தாரிக்கப்பட்ட சில காட்சிகளை வைத்துப் படமெடுக்கப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றது. அதேநேரம் ஐக்கிய நாடு சபை விசேட விசாரணை அறிக்கையாளர்களினால் அமர்த்தப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் குழு சார்பான விசாரணைகளின்றி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதனை ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரங்கள் இந்த காணொளியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவும் இந்த காணொளி காட்சியில் தொழில்நுட்ப ரீதியில் தெளிவின்மை இருப்பதாக சுட்டிக் காட்டுவதுடன், அவை இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளன.
விசேட தொழிநுட்பரீதியில் இக்காணொளி தயாரிக்கப்பட்டதாகவும், காணொளியிலுள்ள இரத்தக்காட்சிகள் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கலாநிதி சத்துர டி சில்வா (Dr. Chathura de Silva) மற்றும் பேராசிரியர் ஈ.ஏ.வைபான்ரிஸ் (Prof. E. A. Yfantis) ஆகியோர்கள் கூறுவதுடன், இக்காணொளிக் சாட்சிகளின் உண்மைத்தன்மை பற்றியும் சந்தேகங்களை எழுப்பியூள்ளனர்.
ஒளிபரப்பப்பட்ட இக்காணொளியின் மூலப்பிரதியொன்று ஆணைக்குழுவிற்குக் கிடைக்காத காரணத்தினால் இது போன்ற தொழில்நுட்பத் தெளிவின்மை குறித்துத் தெளிவாக எதுவும் தீர்மானிக்க முடியாதுள்ளது.
வேதனைக்குரிய சம்பவம் தொடர்பான இக்காணொளியின் ஊகத்தன்மை மற்றும் அதன் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை என்பன பற்றி குறிப்பிடத்தக்களவு சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் பிரச்சினைக்குரிய தொழில்நுட்ப மற்றும் தடயம் தொடர்பான சந்தேகம் ஆணைக்குழுவிற்குள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களில் காணப்படும் காயங்களின் தடயங்கள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒத்திருக்கவில்லையென்றும் இவை அண்மையிலிருந்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால் ஏற்பட்டவையென்றும் ஆணைக்குழு கருதுகின்றது. எனினும், யாரோ ஒருவர் இவற்றினைப் பதிவு செய்து அல்லது இவற்றை உருவாக்கி அவற்றை ஒளிபரப்பிற்கு வழங்கியூள்ளார் என ஆணைக்குழு கருதுகிறது.
ஆணைக்குழுவின் சார்பில் ஈடுபடுத்தப்பட்ட நிபுணர்களில் ஒருவர் காணொளியில் காட்டப்படுகின்ற காட்சிகள் ஒரு இயற்கைச் சுற்றாடலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களினது சடலங்கள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையினால் வேண்டுமென்றே செயற்கை முறையில் மாற்றப்பட்டிருக்கவில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதனை ஒளிபரப்பியவர்கள் ஆணைக்குழுவிற்கு மேலும் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை நிலைநாட்டுவதற்கு இக்காணொளியை தொலைக்காட்சி நிலையத்திற்கு வழங்கிய நிறுவனத்தினதும் இக்காட்சிகளைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் ஒளிபரப்பாளர்களினதும் பாரிய ஒத்துழைப்பு மிக இன்றியமையாததாகும்.
உண்மையினைக் கண்டறிதல்
அரசாங்கம் சுயாதீனமான விசாரணையொன்றை நடாத்தி உண்மையை அல்லது இந்தக் காணொளி மூலம் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாட்டின் உண்மையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இக்காணொளியினைப் பெற்றுத் கொடுத்தவர்கள், தகவல்கொடுத்தவர்களின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படல் வேண்டும். திரு மெஸ்ர்ஸ் எல்ஸ்ரன் (Messrs Alston) மற்றும் ஹெய்ன்ஸ் (Heyns) ஆகியோர்களினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் மீது மரணதண்டனை விதிக்கப்பட்டது உண்மையென்றும்,பாலியல்ரீதியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை உண்மையென்றும் கூறகின்றார்கள். எனவே இது குறித்து விசாரணை செய்து குற்றமிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்.
-
இக்காணொளி செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்குமாயின் இதன் விளைவு மிகவும் ஆபத்தானதாகி விடும். எனவே இது தொடர்பான உண்மைகளைக் கண்டறியவேண்டிய தேவையுள்ளது. யார் இக் காணொளியினைத் தயாரித்தார்களோ, யார் இக்காணொளியினை ஒளிபரப்பினார்களோ அவர்கள் தவறான தகவல்களை வழங்கும் கலாசாரம் ஒன்றிற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும். இக்காணொளி வரலாற்றுப் பதிவாகுமாயின் இலங்கை மக்களின் கௌரவத்தினை எதிர்காலம் முழுவதும் பாரியளவில் பாதிக்கும்.
நல்லிணக் ஆணைக்குழு முன் தோன்றி சர்வதேச மன்னப்புச் சபை, மனித உரிமைகள் விழிப்பு,சர்வதேச Crisis Group போன்ற அமைப்புக்களுக்கு சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோன்று சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய இலங்கைக் கொலைக்களம்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் என்னும் தலைப்பிடப்பட்ட காணொளி தொடர்பான மூலத் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன,அதன் உண்மைத்தன்மைகள் எத்தகையது என்பது போன்ற விடயங்களை நல்லிணக்க ஆணைக்குழு முன் தோன்றித் தெரிவிக்குமாறும் கேட்கப்பட்டது.ஆனால் யாரும் சாட்சியமளிக்கவில்லை. எனவே கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பரிசீலனைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்ட ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பான உண்மைகளை அல்லது காணொளியில் காணப்படும் காட்சிகளிலுள்ள குற்றச்சாட்டுக்களை நிறுவுவதற்கு சுதந்திரமான விசாரணையொன்றினை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென விதந்துரைத்துள்ளது.