(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.09, 2013.11.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் மீறியது தொடர்பாகக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பொதுச் செயலாளரிடம் கையளித்த அறிக்கையில் யுத்தம் நிறைவடைகின்ற இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கணிப்பிட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும்ää இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையில் இராணுவ முகாம்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதுடன், அரசாங்கத்தின் கொள்கைகளை ஜனநாயக வழிகளில் எதிர்ப்பவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையிலேயே பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் இலங்கையில் மகாநாடு நடைபெறவுள்ளது.
நலன்சார் அரசியல்
பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டினை எதிர்வரும் கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் செய்வதன் மூலம் சர்வதேசளவில் தனக்கிருக்கும் அந்தஸ்த்தை மேலும் அதிகரிப்பதற்கு இலங்கை முயற்சிக்கின்றது. இம் மகாநாட்டிற்காக செய்யப்படும் செலவீனமானது எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய அபிவிருத்திக்கான முதலீடுகளை மேலும் செழிப்பாக்க உதவும் என இலங்கையின் இராஜதந்திரிகள் கணிப்பிட்டுள்ளனர். பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டின் பின்னர் இலங்கை ஜனாதிபதி அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவராகப் பணியாற்றவுள்ளார்.
ஐம்பத்திரெண்டு பிரித்தானிய காலனித்துவ நாடுகளும், பிரித்தானியாவும் ஒன்றாக இணைந்து இலங்கையின் அபிவிருத்திக்கும், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் எதிர் நோக்கும் உச்ச மட்ட மனித உரிமைகள் மீறலுக்கான அழுத்தத்திலிருந்து மீளுவதற்கும் உதவி செய்வார்கள் என இலங்கையின் இராஜதந்திரிகள் நம்புகின்றார்கள். இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையினை மீட்பதற்கு அனைத்து வழிகளிலும் இலங்கையின் இராஜதந்திரிகள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பது அல்லது உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவம் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது அல்லது இலங்கை மக்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பன ஐக்கிய அமெரிக்காவினதும் மற்றும் பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளினதும் நோக்கமல்ல. பதிலாக ஆசிய பிராந்தியத்தில் தமக்குள்ள பொருளாதார , பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய நலன்களுக்கு இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு மிகவும் அச்சுறுத்தலானது என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கருதுகின்றன. எனவே இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான உறவினைக் கட்டுப்படுத்தும் வகையிலான அழுத்தங்களைக் கொடுக்க இம்மகாநாட்டினைப் பயன்படுத்த இந்நாடுகள் முயற்சிக்கின்றன.
இவ்வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு சுதந்திரமான விசாரணை நடாத்தப்படாமையினை கண்டித்து பொதுநலவாய நாடுகள் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதை கனடா தவிர்த்துள்ளதாக பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper) மிகவும் கடினமான அழுத்தத்தினை கொடுத்துள்ளார்..
ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தெரிவித்து வரும் கனடா இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு காட்டும் அதிக முக்கியத்தவம், தந்திரோபாய நோக்கம் கொண்டதாகும்.
பொதுநலவாய நாடுகள் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டிற்கு மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை போன்ற நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தத்திற்குஸ் டீபன் ஹார்பர் வெளிப்படையாக முண்டு கொடுக்க முயலுகின்றார்.
மறுபக்கத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமஷரூன் (David Cameron) பொதுநலவாய நாடுகள் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தான் கேள்வி எழுப்பவுள்ளதாக கூறி மிகவும் மென்மையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளார். தெற்காசியாவில் தனக்கிருக்கக் கூடிய வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க இவ் உச்சிமாநாட்டினைப் பிரித்தானியா பயன்படுத்த முற்படுகிறது என்பதே உண்மையாகும்.
பொதுநலவாய நாடுகள் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டில் கலந்து கொள்ள அவுஸ்ரேலிய பிரதமமந்திர ரொனி அபோட் (Tony Abbott) விருப்பம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையுடன் தனக்கிருக்கும் நட்புறவினைப் பலப்படுத்துவதற்கு இம்மகாநாட்டினைப் பயன்படுத்த எண்ணியுள்ளது. உண்மையில் தற்போது அவுஸ்ரேலியாவில் பதவியேற்றுள்ள கூட்டணி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தினைப் போன்று சீனாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஆசியாவில் உருவாக்கும் இராணுவ தளங்களுக்கு முழுமையானதும்,உறுதியானதுமான உதவிகளை வழங்கி வருகின்றது. எனவே சீனாவுடன் பேணிவரும் நட்புறவிலிருந்து இலங்கையினை விடுவிப்பதற்கு ரொனி அபோட் இதன் போது நலன்சார் அழுத்தம் கொடுக்க முயற்சிலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிரித்தானியா,கனடா,அவுஸ்ரேலியா, இந்தியா,பாக்கிஸ்தான் உட்பட பல பொதுநலவாய நாடுகள் தமது முழுமையான ஆதரவினைத் தெரிவித்திருந்தன. இந்நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை தடைசெய்திருந்ததுடன், அதன் நிதிச் செயற்பாடுகளையும் தடைசெய்திருந்தன.
பிரித்தானியா,இந்தியா,பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இறுதி யுத்தத்திற்குத் தேவையான இராணுவத் தளபாடங்களை விநியோகம் செய்திருந்தன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்நாடுகள் மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றை இலங்கை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதுடன், இதற்குப் பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
எதிர்ப்பலை
மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தை உறுதிப்படுத்துவதற்காக 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொதுநலவாய அமைப்பின் ஹராரே (Harare) பிரகடனம் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இலங்கைக்கு வழங்குவதன் மூலம் மீறப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது எனத் தெரிவித்துள்ளது. மேலும் தனது அங்கத்துவ நாடு மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரியும் போது அதனுடைய உறுப்புரிமையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கின்ற அதிகாரம் பொதுநலவாய அமைப்பிடம் உள்ளதாகவும்” மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய நெறியாளர் பிரட் அடம்ஸ் (Brad Adams) “பாரியளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ள இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை நடாத்துவதற்கு பொதுநலவாய அமைப்பு அனுமதித்தமை வரவேற்கத்தக்;க விடயமல்ல. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பொதுநலவாயத்தின் உத்தியோகபூர்வ விழுமியங்களை மதிக்காது செயற்படுகின்ற இலங்கையிடம் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பது பொதுநலவாய அமைப்பில் காணப்படும் இரட்டை அணுகுமுறை எனக் கருதலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் “பொதுநலவாய அமைப்பானது தன்னால் முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அர்த்தமுள்ளவை என்பதைக் நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த உச்சிமாநாடு அமைய வேண்டும். இதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் நிலையை முன்னேற்றுவதற்கான முகவராக பொதுநலவாய நாடுகள் அமைப்பு செயற்பட முடியும் ” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இம்மகாநாட்டில் இந்தியப் பிரதமமந்திரி பங்கேற்கக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் இம் மகாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி பங்கேற்பதை எதிர்த்து வருகின்றன. மத்திய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாகிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழகத்தில் பதவியிலிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தினை தீர்மானிக்கும் துரும்புச் சீட்டாக மீண்டும் இலங்கை இவ்விவகாரம் மாறியுள்ளது.இலங்கை தமிழ்மக்கள் இல்லாது இவ் இரண்டு கட்சிகளுக்கும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது.
அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா யுத்தக் கைதியாகப் பிடிபட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியால் அதிருப்தியடைந்த இந்திய மத்தியரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அன்ரனி, சுற்றுச்சுசூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டிற்கு செல்லக்கூடாது எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்புவாதம்
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா ”மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்திற்குள் இலங்கையை இணைத்துச் செல்வதில் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம் அத்துடன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்கள் தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருப்பது யதார்த்தமற்றதாகும். எனவே இதற்கு பொதுநலவாய அமைப்பு இணங்கமாட்டாது. பொதுநலவாய நாடுகளின் அமைப்பு இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.நல்லிணக்க நடவடிக்கைகளின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த முனைப்பு எடுக்கப்படுகிறது.இந்தநிலையில் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாடும் ஏனைய மாநாடுகளை போன்றே நடைபெறும்” எனக் கூறுகின்றார்.
திரிசங்கு நிலை
வரலாற்றுக்காலம் தொடக்கம் மிகவும் நெருங்கிய அயல்நாடாகிய இலங்கையுடன் மிகவும் இறுக்கமான நட்புறவினைப் இந்தியா பேணிவருகின்றது. இவ் உறவின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத்தலைவர்களின் மாகாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கான முன் மொழிவினை இந்தியா மேற்கொண்டிருந்தது.
தெற்காசியப் பிராந்தியத்தில் நடைபெறகின்ற எந்தவொரு சர்வதேச மகாநாடும் இந்தியாவின் விருப்பமில்லாமல் அல்லது இந்தியாவின் பங்குபற்றல் அல்லது பின்னணி இல்லாமல் நடைபெறுவது இப்பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருக்கும் வல்லாதிக்கத்தினை நிலை குலைய வைத்துவிடும்.
சமகால சர்வதேச அரசியல் சூழலில் இலங்கையினை விட்டு விலகத் தீர்மானித்தால் அது பெரும் இராதந்திர ரீதியான தோல்வியாகவே அமையும். ஓருமுனையில் சீனாவும் மறுமுனையில் பாக்கிஸ்தானும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான அச்சுறத்தலை இந்தியாவிற்கு கொடுத்த வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் காலூன்றக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து அதனைப் பயன்படுத்த இருநாடுகளும் தயாராக இருக்கின்றன. இச்சூழலில் இலங்கையினை விட்டு விலகுவது இந்தியாவிற்கு அதன் கொல்லைப்புறத்திலிருக்கும் ஆபத்தினை மேலும் ஆழப்படுத்துவதாகவே அமையும்.
மேலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கரையோர நாடுகளில் இலங்கை பிரதான இடத்திலுள்ளது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பாதுகாப்புடனும், இந்தியாவின் தேசிய நலன்களுடனும் புவிசார் அரசியலின் வழி இலங்கை நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது.
“இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இந்தியாவின் கவனத்திற்குரிய விவகாரங்களாக இருப்பது தனக்குத் தெரியும்” என இலங்கையின் யுத்தக்குற்றங்களை அம்பலப்படுத்தி வரும் சனல் 4 ஊடகவியலாளரான கல்லும் மக்ரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா வாக்களித்து இலங்கையினை ஏற்கனவே தனிமைப்படுத்தி விட்டது.
இந்நிலையில் ஓன்றுக்கு ஒன்று எதிரான அரசியல் காட்சி நிலைகள் எங்கிருந்து எவ்வாறு தோன்றினாலும் அதனை எதிர் கொண்டு இந்தியாவின் தேசிய நலனைப் பாதுகாக்க வேண்டிய இராஜதந்திர நிர்பந்தம் இந்தியாவிற்குள்ளது. எனவே தேசிய நலன்களைப் புறக்கணித்து தந்திரோபாய நிலையில் தொடர்ந்து இலங்கையினைத் தனிமைப்படுத்திச் செயற்படுவதினால் இந்தியாவிற்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை இந்தியா கணிப்பீடு செய்தே செயற்படும். தேசியப்பாதுகாப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு என்பவைகளுக்காக இலங்கையுடன்; இருதரப்பு,பலதரப்பு உறவுகளைத் தொடர்ந்து பேணவேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்குள்ளது. எனவே இவைகள் அனைத்தையும் கருத்திலெடுத்தே இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நம்பலாம்.