(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.07, 2014.06.08 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இந்தியாவில் தற்போது பதவியேற்றுள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம் பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பல கருத்துக்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. பாரதீய ஜனதாக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் புதிய அரசாங்கம் பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கை தொடர்பாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆயினும், பாரதீய ஜனதாக்கட்சி இந்து அடிப்படைவாத தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்தும் கட்சி என்ற வகையில், இக் கட்சி பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கை தொடர்பான அச்சம் நிறைந்த பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
கொள்கை உருவாக்கம்
இந்திய வெளியுறவுக் கொள்கை நரேந்திர மோடியின் தனித் திறமை மூலம் உருவாக்கப்படுவதல்ல. பதிலாக மாற்றமடையும் அரசியல் காட்சிநிலைகளுக்கு ஏற்ப இந்திய இராஜதந்திரிகளின் கூட்டு மூளையினால் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு வகுக்கப்படுவதாகும். இராஜதந்திரிகளின் ஆலோசனையுடன் வெளியுறவுக் கொள்கை தொடர்பான எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதே பூகோள யதார்த்தமாகும்.
வெளியுறவுக் கொள்கை தவிர்க்க முடியாதவகையில் தேசிய நலனுடன் கூடிய சர்வதேச அரசியல் காட்சி நிலை சார்ந்தது என்றவகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வகுக்கப்படுகிறது.
-
பாதுகாப்புடன் தொடர்புடைய வகையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் உள்ள மிகவும் சிக்கலான உறவு,
-
பொருளாதாரத்துடன் தொடர்புடைய வகையில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவு,
-
மிகவும் அண்மையிலுள்ள அயல்நாடுகளாகிய சார்க் நாடுகளுடனான உறவு,
-
எல்லைக்கப்பாலுள்ள அயல்நாடுகளாகிய ஆசியபசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடனான உறவு,
-
மேற்காசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவு
இந்தியாவின் பாதுகாப்பு ,வர்த்தகம் மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் தொடர்பாக கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா பின்பற்றி வரும் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சர்வதேச அரசியல் காட்சிநிலை உடனடியாகத் தோன்றப் போவதில்லை. எனவே நரேந்திர மோடி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது சிறிய மாற்றங்கள் நிகழ்ந்தால் அது அவரின் தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்ததாகவே இருக்கும்.
அமெரிக்கா
1990 களில் சோவித்யூனியனில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தம் சோவியத் யூனியனை சிதைத்தது. இதனால் வலதுசாரி மற்றும் இடதுசாரி முகாம்களுக்கு இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததுடன், புதிய உலக ஒழுங்கும் உருவாகியது. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் சர்வதேச அரசியல் காட்சி நிலையில் ஏற்பட்ட இம் மாற்றம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக வளர்ச்சியடைந்ததுடன், அணுசக்தி பரிசோதனையினை மேற்கொள்ளக்கூடியளவிற்கு தனித்துவமான கொள்கையினைப் பின்பற்றக்கூடிய சர்வதேச அரசியல் சூழலும் உருவாகியிருந்தது.
இந்தியாவின் அணுசக்தி பரவல் செயற்பாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த வெறுப்பினை அண்மையில் பதவியிலிருந்து வெளியேறிய மன்மோகன் சிங் தனது வெளிப்படையான அணுகுமுறையினால் சீர்செய்து மீண்டும் இருநாடுகளுக்குமிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தியிருந்தார். நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இக்கட்டமைப்பிற்குள்ளிருந்தே செயற்படவேண்டிய சர்வதேச அரசியல் காட்சி நிலையே தற்போதும் உள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் கொதரா (Godhra) என்னும் இடத்தில் நடைபெற்ற வன்முறையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் புகைவண்டிக்குள் குண்டுவைத்து படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நாட்டிற்குள் நுழைவதற்கான இராஜதந்திர மற்றும் வியாபார நுழைவு அனுமதியை (Visa) ஐக்கிய அமெரிக்கா நரேந்தர மோடிக்கு இடைநிறுத்தியிருந்தது.
ஆயினும், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்கக் கூடிய சந்தர்ப்பம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட ஐக்கிய அமெரிக்கா அண்மையில் அவருக்கு விதிக்கப்பட்ட பிரயாணத் தடையினை விலக்கிக் கொண்டது. மேலும், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
சீனா
அணு ஆயுத வல்லமையினையும் , அதிக சனத்தொகையினைக் கொண்டதுமாகிய இருபெரும் பிராந்திய வல்லரசுகளாகிய சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள எல்லைத் தகராறு தீர்க்கமுடியாது நீண்டகாலமாகத் தொடருகின்றது. இருநாடுகளும் எல்லைத் தகராறு காரணமாக 1962 ஆம் ஆண்டு யுத்தத்தில் ஈடுபட்டன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய 90,000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு தனக்குச் சொந்தமானது என உரிமை கோரி இவ்யுத்தத்தினைச் சீனா தொடங்கியது. இவ் யுத்தத்தின் பின்னர் 38,000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பளவினை ஜம்முகாஷ்மீர் பிரதேசத்திற்கு மேற்காக அக்சாய் சின் பீட பூமியில் (Aksai Chin Plateau) சீனா கைப்பற்றியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியதுடன், இன்றுவரை இப்பிரச்சினைக்கு இருநாடுகளும் தீர்வுகாணவில்லை.
அதேநேரம் எல்லைத்தகராறுகளைத் தீர்ப்பதற்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் பதினைந்து சுற்றுப் போச்சுவார்த்தைகளை சீனாவும் இந்தியாவும் நடாத்தியுள்ளன. ஆனாலும் மிகவும் ஆழமாக இருநாடுகளினதும் மனங்களில் புதையுண்டு போயிருக்கும் எல்லைத்தகராறுகளை தீர்ப்பதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடியாது இருநாடுகளும் இன்றுவரை தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிழக்குத் திசையிலுள்ள எல்லையூடாக லடாக் பிரதேசத்தின் டெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் (Depsang Valley) பத்து கிலோ மீற்றர் தூரத்திற்கு 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15 ஆம் திகதி ஊடுருவிய சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், மேலும் ஒன்பது கிலோ மீற்றர் தூரம் ஊடுருவி பத்தொன்பது கிலோ மீற்றர் தூரத்தினைக் கைப்பற்றியது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனக்குப் போட்டியாக இந்தியாவினையே எதிர்கொள்கின்றது. எனவே வளர்ச்சியடையும் இந்தியாவின் பலத்தை தடுப்பதற்கான வழிவகைகளை எதிர்காலத்தில் சீனா சிந்திக்கக்கூடும். ஆகவே சீனா எங்கெல்லாம் கால்பதிக்கின்றது என்பது தொடர்பாக இந்தியா விழிப்பாக இருக்கின்றது. அதேநேரம் இந்தியா தனது இராணுவ வலுவினை அதிகரிப்பதுடன், இந்திய இராணுவம் பனிமலைத் தொடர்களில் யுத்தம் செய்யக் கூடிய வல்லமை பொருந்தியதாக பயிற்சியளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் எல்லைப்பிரதேசங்களின் உட்கட்டுமான வசதிகளையும் இந்தியா துரிதமாக உருவாக்கி வருகின்றது.
1980 ஆம் ஆண்டு தொடக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இரு பெரும் அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவானது குறிப்பிட்டுக் கூறக்கூடியளவிற்கு சமாந்திரமான அபிவிருத்தியை நோக்கி வளர்ந்து வருகின்றது. ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் பாரிய வர்த்தகப் பங்காளிகளாக வளர்ந்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் இருநாடுகளுக்குமிடையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இது தற்போது எண்பது பில்லியன் அமெரிக்க டொலராக வளர்ச்சியடைந்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டில் இவ்வர்த்தகத்தினை நூறு பில்லியன் அமெரிக்க டொலராக்குவதே இருநாடுகளதும் இலக்கு எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சீனாவின் பிரதமமந்திரி லி கிகுவாங் தொலைபேசி மூலம் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்,சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியாவின் புதிய பிரதமமந்திரியை சீனாவிற்கு விஜயம் செய்யும்படி விடுத்த அழைப்பை நரேந்திர மோடியிடம் தெரிவித்திருந்தார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மிகவும் பிரபல்யமான இரண்டு நாடுகளும் தமக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள பரஸ்பரம் அழைப்பு விடுத்துள்ளன.
எதிர்வு கூறல்
தனித்துவமிக்கவரும், சர்ச்சைக்குரியவருமாகக் கருதப்படும் குஜராத்தின் முன்னைநாள் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ள புதிய அரசாங்கம் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைதாண்டிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாட்டிற்கு மிகவும் தெளிவானதும், உறுதியானதுமான வகையில் பதில் செயற்பாடுகளில் ஈடுபடும். அதேபோன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு மிகவும் கடினமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என பொதுவாக எதிர்வு கூறப்படுகின்றது.
அதேநேரம் அதிகாரத்திற்கும் சமாதானத்திற்கும் இடையில் சமனிலையினை உருவாக்குதல் என்ற வாஜ்பாயின் தத்துவத்தினை நரேந்திர மோடி ஆதரிப்பவராக உள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், ஏற்றுமதி பொருளாதாரத்தினை அதிகரித்தல் , தகவல் தொடர்பாடல் வலைப்பின்னலை மேலும் வலுவானதாக மாற்றுதல், பூகோள மாற்றத்திற்கு ஏற்ப வியாபார பொறிமுறைகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் போன்ற பல விடயங்களுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேராசிரியர் ஸ்ரீராம் சோலியா (Sreeram Chaulia) “பாகிஸ்தானை தளமாக கொண்டு செயற்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு மிகவும் துணிவுடன் பணியாற்றுவதுடன், 2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் எதிர் கொள்ளக்கூடிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் இந்திய இராணுவத்தின் வகிபாகம் தொடர்பான கொள்கையினை உருவாக்கி அதற்கேற்றவகையில் இந்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கூறுகின்றார்.
மேலும், சோலியா பாகிஸ்தானும்,இந்தியாவும் அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் என்ற வகையில் பாகிஸ்தானுடன் நேரடியான இராணுவ மோதலில் இந்தியா ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆயினும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக இயங்கும் பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு அறிவியல் ரீதியான எதிர் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்புக்களின் வலைப்பின்னல்களையும், அதன் தலைவர்களையும் அழிப்பதற்கான இரகசிய தாக்குதல்கள் போன்றவற்றை நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கடினமான போக்கினைக் கடைப்பிடிப்பாராக நரேந்திர மோடி மாறினால் , இக்கடும் போக்கு வெறும் கருத்துநிலை சார்ந்ததாக மாத்திரமே இருக்கும். அதற்கு அப்பால் அவரால் செல்லமுடியாது. ஏனெனில் மோதல்களுக்கு யுத்தம் தீர்வாக அமைந்து விடமுடியாது என்பதே சமகால பூகோள அரசியல் யதார்த்தமாகும். இது இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளுக்கும் பொருத்தமானதாகும். எனவே நரேந்திர மோடியின் அரசாங்கம் பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.
கடந்தகாலத்தில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளினால் இந்தியாவிற்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், சீனா இந்தியாவின் லடாய் பிரதேசத்திற்குள் நடத்திய அத்துமீறல்களையும் காங்கிரஸ் கட்சி மிகவும் மென்மையாகவே கையாண்டது.
இதேபோன்று உலகமே அதிர்ச்சியடையும் வகையில் அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானுடன் பல தசாப்தங்களாக இந்தியாவிற்குள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை தீர்ப்பதற்கான சைகைகளை நரேந்திர மோடி வழங்கினால் கூட ஆச்சரியப்படமுடியாது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்றுவரை தீர்க்கப்படாமலுள்ள காஷ்மீர் பிரச்சினை உட்பட எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய சமாதான செயற்பாட்டினையும் நரேந்திர மோடி மேற்கொள்ளக்கூடும். எனவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதைவிட இந்தியா இதுவரை பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கையினையே தொடர்ந்தும் பின்பற்றும் எனக் கூறலாம்.
இப்பின்புலத்திலிருந்து பார்க்கின்ற போது நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பிரயாணம் மேற்குறிப்பிட்ட ஐந்து பிராந்தியங்களில் எதுவாக இருக்கமுடியும்? என்ற விவாதத்தினை ஆரம்பிக்க முடியும். பிராந்திய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய சில அறிகுறிகள் தென்படுகின்றன. பாரதீய ஜனதாக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆசியான் மற்றும் சார்க் நாடுகளுடன் இந்தியா பேணவேண்டிய உறவின் முக்கியத்துவம் தொடர்பாக கூறியுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று இந்தியப் பிரதமரின் கவனயீர்ப்பிற்குள் இப்பிராந்தியங்கள் இருப்பது இந்தியாவின் அதிகார இருப்பிற்கு அவசியமானதாகும். எனவே நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் தெற்காசிய நாடு ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. –