தாராண்மைக் கோட்பாடு

தாராண்மைவாதம் என்பது தனிநபர் சிந்தனையல்ல. மாறாகப் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு காலப்பகுதியிலும் வாழ்ந்த பல்வேறு துறை அறிஞர்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. தாராண்மைவாத சிந்தனைக்கு பெருமளவிற்கு கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டலின் கருத்துக்களும், உரோமானிய அறிஞரான அக்கியூனஸ்சின் கருத்துக்களும் அடிப்படையாக அமைகின்றன. பின்னர், பதினேளாம் நூற்றாண்டில் லொக்கும், பதினெட்டாம்; நூற்றாண்டில் ரூசோ, மல்தஸ், ஸ்பென்ஷர், பென்தம், ஜோன் ரூவெட் மில், கெயின்ஸ், கிறீன், கான்ட் போன்ற சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் அறிஞர்களின் சிந்தனைகள் ஆதாரமாக அமைந்திருந்தன.

தாராண்மைவாதச் சிந்தனைகள் ஜோன் லொக் 1690 ஆம் ஆண்டு எழுதிய “சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்” என்ற நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பதினேளாம்; நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த லொக் தனியாள் வாதம், இயற்கை உரிமைகள் என்பவற்றினடிப்படையில் தாராண்மைவாதத்தினை தெளிவாக விளக்கியுள்ளார். அரசு என்பது ஒப்பந்தம் மூலம் தோற்றம் பெற்றது எனக் கூறும் லொக், மக்கள் தமது நலன் பேணும் நோக்கில் தாமாக முன்வந்து சில அதிகாரங்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கினார்கள் என்றும், இதனால் ஒப்பந்த விதிகளை அரசன் மீறும் போது, அரசனை நீக்கிவிட மக்களுக்கு உரிமை உண்டு எனக் கூறினார். தனிமனித சுதந்திரத்தைப் பேணும் நோக்கில் அரசனின் அளவற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என லொக் குரல் கொடுத்தார். இதுவரை காலமும் நிலை பெற்றிருந்த முழுநிறை முடியாட்சியின் தீய விளைவுகளை உணர்ந்த லொக் தனிமனித சுதந்திரத்திற்கு தடையாக அமைந்த அரசனின் தான்தோன்றித்தனமான அதிகாரங்களை எதிர்க்கின்றார். இது அரசியல் திட்ட முடியாட்சியிலேயே சாத்தியமாகும். எனக் கருதி இவ்வாறான ஆட்சி முறையை ஆதரித்தார். இவரது கருத்துக்கள் புதிய சமூக, பொருளாதார நிலைமைகளின் எழுச்சியுடன் சாத்தியமாக்கப்பட்டது. 1688 ஆம் ஆண்டு ஸ்ரூவேட் மன்னன் பதவி கவிழ்க்கப்பட்டதுடன், இங்கிலாந்து மன்னர்களின் முழுநிறை அதிகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் முழுநிறை அதிகாரக் கோட்பாடும், நடைமுறையும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. லொக்கினுடைய அரசியல்திட்ட முடியாட்சி பற்றிய கருத்துக்கள் பதினேளாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ், மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

லொக்கிற்குப் பின்னர் பதினேட்டம்; நூற்றாண்டின் பிரான்சிய அறிஞராகக் கருதப்படும் ரூசோவின் சிந்தனைகள் தாராண்மைவாதம் தொடர்பில் முக்கியம் பெறுகின்றன. 1762 ஆம் ஆண்டு அவர் எழுதிய “சமூக ஒப்பந்தம்” என்ற நூல் மூலம் இவரின் தாராண்மைவாத சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவர் லொக்கின் கருத்துக்களுக்கு அப்பால் சென்று மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை ப10ரணமாக அங்கீகரித்து “தாராண்மை” பற்றிய கருத்துக்களை முதன்மைப்படுத்துகின்றார். லொக் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் அரசன் இருக்க வேண்டும் எனக் கூறி அரசியல் திட்ட முடியாட்சியை வலியுறுத்துகின்றார். ரூசோ பொது விருப்பு, பொது மக்கள் இறைமை என்பவற்றின் அடிப்படையில் மக்களாட்சியை ஆதரிக்கின்றார்.

ரூசோவிற்குப் பின்னர் பதினேட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடம்ஸ்மித் தாராண்மைவாதத்திற்கு விளக்கமளித்துள்ளார். 1776 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “தேசங்களின் செல்வம்” என்ற நூலின் மூலமாக தனது தாராண்மைவாத சிந்தனைகளை முன்வைக்கின்றார். தனிமனித நலன்கள், உயர் மட்ட சுதந்திரப் போட்டிச் சந்தையூடாகவே அடையப்படும் எனக் கருதும் அடம்ஸ்மித் அதற்காகத் தலையிடா வர்த்தகம், சுதந்திரச் சந்தைகள் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்.

பதினெட்டாம்; நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் மல்தஸ் 1798 ஆம் ஆண்டு எழுதிய “சனத்தொகை” என்ற நூலில் “நடைமுறையில் நிலவும் திறந்த போட்டிச் சந்தையில் சமூகத்தின் உறுப்பினர்கள் யாராவது தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தால் சமூகம் அவ்வாறானவர்களுக்கு உதவி வழங்குவது அதன் கடமையாகும்” என்ற கருத்தை எதிர்த்தார். சமுதாயத்தில் இவ்வாறான கடமை இல்லை எனவும், தொழிலற்றோர் இந்நிலையினை எதிர்பார்க்க உரிமையில்லை எனவும் கூறினார். குறைந்த கூலியும், வேலையின்மையும் தாழ் வர்க்கத்தினருடைய நிலமைகள் என்று கூறினார். ஏனெனில் இவையாவும் இவர்களுடைய உயர் பிறப்பு வீதத்தின் விளைவுகளாகும்.

தாராண்மைவாதம் கூறும்நலன்புரி அரசு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக தாராண்மைவாதிகள் முன்வைத்த சீர்திருத்தமே “நலன்புரி அரசு” என அழைக்கப்பட்டது. ஆயினும் இக்கருத்து, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம்; நூற்றாண்டிலும் ஆரம்பமாகியிருந்தது.

கட்டுப்பாடற்ற வர்த்தகமும், பொருளாதார முயற்சிகளும் சுரண்டலுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிகளுக்குமே வழிவகுப்பதுடன், மக்களாட்சிக்கும் பாதகமாக அமையும். பொருளாதார அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சிலர் அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் போது சமூகத்தின் சிறுபான்மையினரே ஆட்சியைப் பொறுப்பேற்கின்றனர். இது அரசியல் சமுதாயம் ஒன்றின் குறைபாடாகவும் உணர்ந்து கொள்ளப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது உணர்ந்து கொள்ளப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இதற்கான விமர்சனங்கள் றோபேர்ட் ஒஎன், கால்மாக்ஸ் ஆகியோர்களால் முன்வைக்கப்பட்டது. சீர்திருத்த தாராண்மை வாதத்தின் வளர்ச்சியானது “சமூகத்தின் பொதுவான நன்மைக்கு, தனிநபர்களின் அதியுயர் மகிழ்ச்சி அவசியமில்லை என்ற கருத்தை மையமாகக் கொண்டமைந்திருந்தது. சீர்திருத்தத் தாராண்மைவாதிகள், அரசாங்கத்தின் பகுதியளவிலான நேர்கணிய தலையீட்டை சில நிலமைகளின் கீழ், அதாவது தனிமனிதன் தனது திறைமைகளை சரியான முறையில் பிரயோகிக்க அல்லது பயன்படுத்தக் கூடிய எல்லை வரை அனுமதிக்கின்றனர். தாராண்மைவாதத்தின் இம் முரண்பாட்டை இனம் கண்டு சீர்திருத்தியவர் ஜேரமி பென்தம் ஆவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பயனுடைமைவாதியான ஜேரமி பென்தம் தாராண்மைவாதம் பற்றி வேறோர் அணுகுமுறையைக் கையாண்டார். இவர் தனியாள் வாதம், இயற்கை உரிமைகள்,ஒப்பந்த அடிப்படையிலான அரசு முதலான ஆரம்பகாலத் தாராண்மைவாதக் கருத்துக்களையெல்லாம் நிராகரித்தார். பயனுடமை வாதக் கோட்பாட்டின் அடிப்படையில் இவர் புதியதொரு கோட்பாட்டை முன்வைத்தார். இவர் தனியாள் உச்சப் பயன் என்பவற்றுக்குப் பதிலாக “சமூகத்தின் பொது நன்மை” என்பதை வலியுறுத்தினார். அதாவது அரசு என்பது பெரும்பான்மையினருக்கு பெருமளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிறார். விவேகம் அல்லது அறிவின் அடிப்படையிலமைந்த நல்லதோர் சமுதாயத்தை அமைப்பதே இவரின் சிந்தனையாகும். இதனை இயற்கைச் சட்டங்களால் சாதிக்க முடியாதெனவும்,பாராளுமன்ற சட்டங்களின் மூலமே சாதிக்க முடியுமெனவும் கூறுகின்றார். அதாவது பெரும்பான்மையோருக்கு சந்தோசத்தினைக் கொடுப்பதனை அரசாங்கம் சட்டங்கள் வாயிலாக சாதிக்க முடியுமென்றார். சமுதாயத்தின் நல்வாழ்வு என்பது திறமை வாய்ந்த சட்டவாதியின் கையிலேயே தங்கியுள்ளது எனக் கூறி அரச தலையீட்டைப் படிப்படியாக அங்கீகரிப்பதனை அவதானிக்கலாம். மேலும், நிலவுகின்ற சட்டம், மற்றும் சமுதாய அரசியல் மரபுகள் கூட இவ்வாறான அறிவுபூர்வமான சமுதாயத்தை அமைக்கத் தடையாக விளங்கினால் அவை கூட நீக்கப்பட வேண்டும் என்கின்றார். பாராளுமன்றச் சட்டங்கள் கூட “பயன்பாடு” என்பதுடன் தொடர்புபட்டவையாக விளங்க வேண்டும். சமுதாயத்திற்கு சரியானது எது, பிழையானது எது என்பதை “உயர் மகிழ்ச்சி” என்ற தத்துவத்தினடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பென்தமிற்கு பின்னர் ஜோன் ஸ்ருவேட் மில் தாராண்மைவாதத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மில்லின் கருத்துக்கள் பென்தமின் கருத்துக்களுக்கு மேலதிக விளக்கமாக அமைகின்றது. சமுதாயத்தின் வளங்களையும், சந்தர்ப்பங்களையும், தேவைகளையும் சமுதாயத்திலுள்ள மக்களுக்குச் சமமாக பங்கிட வேண்டுமானால் அரசு தீவிரமான சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று மில் கருதினார். இவ்வாறு இயற்றப்படும் சட்டங்கள் மக்கள் விருப்பங்களை பெருமளவிற்கு பிரதிபலிக்க வேண்டுமென்றும் அதனால் மக்களுடைய அபிப்பிராயங்களையும், பங்குபற்றுதலையும் ஏற்படுத்துவதற்காக வாக்குரிமை, பாராளுமன்ற பிரதிநிதித்துவம், போன்ற ஜனநாயக ஒழுங்குமுறைகளை அறிமுகம் செய்கின்றார். இங்கு “சுய விருப்பம்” என்ற விடயம் தாராண்மைவாதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை முற்றாக கைவிட்டுள்ள மில் எல்லோருடையதும் “பொது நலன்” என்பதையே கவனத்தில் கொள்கின்றார். ஆயினும், இவர் “சுதந்திரத்தின் பயன்”, “சுய மரியாதை” போன்றவற்றை வலியுறுத்துகின்றார். பென்தமினைப் போன்றே மக்களாட்சி அரசியல் முறையில் நம்பிக்கை கொண்டிருந்த மில் நாகரீகமடைந்த சமுதாயமொன்று அதனூடாக மட்டுமே கட்டியெழுப்பப்பட முடியும் என்பதை நம்புகின்றார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரி.எச்.கிறீன் என்பவருடைய கருத்துக்களும் தாராண்மைவாதத்தில் குறிப்பிடத்தக்க சீரமைப்புக்ளைச் செய்துள்ளன. தாராண்மைவாதிகள் ஆரம்பம் முதல் தனிமனித நலன்கள் பேணப்படும் போதே சமுதாய நலன்கள் பேணப்பட முடியும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தனர். ஆனால் கிறீன் இக்கருத்திற்கு எதிராக சமூக நலன்கள் பேணப்படும் போதே தனிமனித நலன்கள் பேணப்பட முடியும் என்ற கருத்தினை வலியுறுத்தினார். சமுதாய நலன்கள் பேணப்பட வேண்டுமாயின் அரசு கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பொறுப்பேற்று நடத்த வேண்டுமெனக் கூறுகின்றார். பொது மக்களின் அத்தியவசிய சேவைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டுமானால் அரசு திறமையான சட்டங்களை இயற்றி தொழிற்பட வேண்டுமே தவிர, தனிமனித நன்மையை அபிவிருத்தி செய்ய வேண்டியதில்லை என்கிறார். பொது நலன் பேணும் நோக்கில் திறமையான சட்டங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலமாக சமுதாய நலனும், தனிமனித நலனும், பேணப்பட முடியும் எனக் கூறுகின்றார். இங்கு சட்டம் என்பது நீதித்துறை சார்ந்த விடயமல்ல. இது ஒழுக்கவியல் அம்சமாகும். சமூகம் ஒழுக்கமாக இருப்பின் தனிமனிதன் ஒழுக்கமாக இருப்பான் எனக் கூறுகின்றார். இவரது இக்கருத்துக்கள் தாராண்மைவாதத்தினை தாராண்மை சோசலிசமாக மாற்றியது எனக் கூறுகின்றார்கள். அதாவது வளர்ந்து வந்த சோசலிசக் கருத்துக்களுக்கு தாராண்மைவாதம் ஈடுகொடுத்து நிலைக்க வேண்டுமானால் தாராண்மைவாதத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய இவரது சிந்தனையில் சோசலிசக் கருத்துக்கள் அதிகம் காணப்படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டில் சமூகப், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தாராண்மைவாதம் செல்வாக்கு இழந்து சென்ற போது அதனை தடுத்து நிறுத்தியவர் கெயின்ஸ் ஆவார். ஆரம்பகால தாராண்மைவாத அறிஞர்களில் ஒருவரான அடம்ஸ்மித் “நாடுகளின் செல்வம்” எனும் நூலில் குறிப்பிடும் “தனியுரிமைப் பொருளாதாரம்” தற்காலத்திற்குப் பொருத்தமற்றது என கெயின்ஸ் கூறுகின்றார். 1930 களில் “உலகப் பொருளாதார மந்தம்” நிலவிய போது இவர் பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டின் அவசியத்தை உணர்ந்தார். பொது நலன் கருதி பொருளாதாரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால் அரசின் தலையீடுகள் அதிகமாக இருக்கக் கூடாது. இவை இரண்டிற்குமிடையில் சமநிலையினை உருவாக்கவே இவர் முயற்சிக்கின்றார். ஏற்கனவே தனிமனிதர்கள் தமது ஆற்றலினால் செய்து வருகின்ற எந்த விடயத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆனால் தனிமனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் சமூக நலன் கருதி அரசு தலையிட வேண்டும். அரசின் தலையீடு பின்வரும் மூன்று வகைகளில் அமைய வேண்டும். நீதி தொடர்பான விடயங்கள், சேமிப்பு முதலீடு தொடர்பான விடயங்கள், பொதுக்கொள்கை, வருமானம் தொடர்பான விடயங்கள் என்பவைகளாகும். கெயின்ஸ் தனது கருத்துக்களை “The General Theory of Employment Interest and Money” என்ற நூலில் விளக்குகின்றார். இந்நூல் முதலாளித்துவக் கோட்பாட்டின் அடிப்படை நூலாகக் கருதப்படுகின்றது. கெயின்சினுடைய கருத்துக்கள் இரண்டு உலக மகா யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலும், இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. கெயின்சினால் விளக்கப்பட்ட தாராண்மைவாதம் படிப்படியாக இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவக் கோட்பாட்டுடன் இரண்டறக் கலந்திருந்தது.

தாராண்மைவாதம் பலமான முதலாளித்துவ வர்க்கம் ஒன்றினைத் தோற்றுவித்ததுடன், இவர்கள் சமூகத்தில் சிறுபான்மையினராகவும் காணப்பட்டனர். இவ்வர்க்கம் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தினை சமூக அநீதிக்குட்படுத்தி சுரண்டத் தொடங்கியது. இத்தொழிலாளர் வர்க்கம் சமூக, பொருளாதார, சுகாதார, வதிவிட, கல்வி போன்ற வசதிகளின்றி அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இத் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகத் தம்மை ஒழுங்குபடுத்தியதுடன், கம்யூனிச சித்தாந்தத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டு வந்தனர். இதன் பலனாக 1917 ஆம் ஆண்டு இரஸ்யாவில் “ஒக்டோபர் புரட்சி” என அழைக்கப்படும் புரட்சி மூலம் “சோசலிச அரசு” உருவாக்கப்பட்டது. இது எதிர்காலத்தில் உலகம் பூராகவும் கம்யூனிசம் பரவுவதற்கு ஏற்ற தளமாக பயன்படத் தொடங்கியது. இந்நிலையில் சோசலிச பொருளாதாரச் சிந்தனையிலிருந்து தாராண்மைவாதத்தினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது என உணரப்பட்டது. மறுபக்கத்தில் நடந்து முடிந்த இரண்டு உலக யுத்தங்களினால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் அழிவுகளிலிருந்து உலக நாடுகளை மீண்டும் புனரமைக்க வேண்டிய பொறுப்பும் உணரப்பட்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பேணுதல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்கள் சமத்துவத்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றன. இப்பின்னணியிலேயே இருபதாம் நூற்றாண்டில் தாராண்மைவாத நலன்புரி அரசு பற்றிய சிந்தனைகள் தோற்றம் பெற்றிருந்தன. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் வாக்காளர்களுக்கும் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய தொடர்பினால் மக்களின் மனக்குறைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பிரதிநிதிகள் முயற்சிப்பதால் பொதுமக்களின் நலன்புரி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவைகள் அரசிற்கு உள்ளது. இதன்படி சமூகத்திலுள்ள சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள், பெண்கள், தொழிலற்றோர், வறியவர்கள் போன்றவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில் அரசின் கடமையும், பொறுப்புமாகும். பொளாதாரத்தை முகாமைப்படுத்தி அபிவிருத்தியினால் கிடைக்கும் நன்மைகளை சமூகத்திற்கு பகிர்ந்தளித்தல் நலன்புரி அரசின் கடமையாகும். மேலும் தனியார்கள் கவனம் செலுத்தாது விடும் துறைகளை அரசு பொறுப்பெடுத்து வளர்ப்பதோடு ஏனைய நலன்புரி காப்புறுதி பணிகளை நலன்புரி அரசு நடைமுறைப்படுத்தி, அரசியல், பொருளாதார, சமூகப் பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

தாராண்மைவாதகுறைந்தபட்ச அரசு

1990களில் சோவியத் ய10னியனின் சோசலிச முறைமையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், பூகோளமயவாக்கமும் தாராண்மை வாதத்தில் “குறைந்த பட்ச அரசு” பற்றிய புதிய சிந்தனையினை உருவாக்கியது. தாராண்மைவாதம் கூறிய தலையிடாக் கொள்கையில் “கட்டுப்படுத்தாத அரசு” காணப்பட்டது. தாராண்மைவாதத்தின் நலன்புரிக் கொள்கையில் “அதிகமாக கட்டுப்படுத்தாத அரசு” காணப்பட்டது. தாராண்மைவாதம் கூறும் ”குறைந்த பட்ச கொள்கையில்” “குறைந்தளவு கட்டுப்படுத்தும் அரசு” காணப்படுகின்றது. குறைந்த பட்ச அரசு என்பது நலன்புரி அரசிற்கும், தலையிடா அரசிற்கும் இடைப்பட்ட அரசாகும். “குறைந்த பட்ச அரசு” என்ற கொள்கை இங்கிலாந்தில் மாக்ரட் தட்சர் காலத்திலும், ஐக்கிய அமெரிக்காவில் ரொனால்ட் றேகன் ஆட்சிக் காலத்திலும் நடைமுறைக்கு வந்திருந்தது. பின்னர் பொலிவியா, சிலி, மெக்சிக்கோ, நியுசிலாந்து, இந்தியா, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நலன்புரி அரசின் பொருளாதார முகாமைத்துவத்தில் அரசிற்கு ஏற்பட்ட தோல்வியே குறைந்த பட்ச அரசு தோன்றுவதற்குக் காரணமாகும். நலன்புரி அரசு என்ற கொள்கையில் உற்பத்தி, பங்கீடு, சமூக நலன்புரி செயற்பாடுகளில் அரசு ஈடுபாடு காட்டியது. அரசு பொருளாதார முதலீட்டாளராகவும், சமூக சேவையாளராகவும், செயற்பட்டது. அதாவது, தனியார் துறையினை விடவும் அதிகளவில் பொருளாதாரச் செயற்பாடுகளில் அரசு அதிக ஈடுபாடு காட்ட வேண்டியேற்பட்டது. இதற்காக திணைக்கள முறையிலான நிர்வாகத்தினை பலப்படுத்தியதுடன், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் போன்றவற்றை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டியுமிருந்தது. இந்நிறுவனங்கள் தனியார் துறை நிறுவனங்கள் போலல்லாமல் அரச நிர்வாக, நிதி தொடர்பான பாராளுமன்றச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டியுமிருந்தது. இதனால் இவைகள் அரசாங்க கணக்காய்வாளருக்கும், பாராளுமன்றத்திற்கும் நேரடியாகக் கட்டுப்பட வேண்டியேற்பட்டது. இது இந்நிறுவனங்களின் தீர்மானம் எடுக்கும் செயன்முறையினை வரையறை செய்திருந்தது. இதன் விளைவாக இந்நிறுவனங்களில் ஊழல், மோசடி, வீண்விரயம், செயற்திறனின்மை போன்ற குறைபாடுகள் ஏற்பட்டன. பெருமளவிலான நிறுவனங்கள் நஸ்டத்தில் இயங்கியதுடன், இவற்றினை இயக்குவதற்கு அரசாங்கம் வருடா வருடம் பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டியேற்பட்டது. பொருளாதார புதிய முயற்சிகளுக்கு முதலீடாக்கப்பட வேண்டிய பெருமளவு நிதி, இந்நிறுவனங்களை இயக்குவதற்கு பயன்பட்டது. இதனால் அரசு மேற்கொண்டு வரும் சமூக நலன்புரித் தேவைகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வருடத்தில் பல தடவைகள் அரசு குறைநிலை வரவு, செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டது. இது பணவீக்கத்தினை அதிகரிக்கச் செய்ததுடன், மக்கள் மீது அதிகரித்த வரிச் சுமைகளையும் விதித்தது. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி, அரசியல் நெருக்கடிகள் உருவாகியது.

இவ் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டதே “குறைந்த பட்ச அரசு” என்ற தாராண்மைக் கொள்கையாகும். இதன் பிரதான இயல்பு அரசு தன்னைச் சுருக்கிக் கொள்வதாகும். “குறைந்த பட்ச அரசு” என்ற கொள்கையில் சமூகப் பொருளாதார விடயங்களில் அரசு குறைந்தளவிலேயே தலையீடு செய்யும். நாட்டினை அரசு ஆட்சி செய்யும் அதேநேரம் பொருளாதார முகாமைத்துவம், அபிவிருத்தி, உற்பத்தி, பங்கீடு, சமூக நலன்புரிச் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தாதிருக்கும் நிலை காணப்படும். சமூக, பொது நிர்வாக முகாமைத்துவத்தினை அரசும், பொருளாதார முகாமைத்துவத்தினை தனியார்களும் மேற்கொள்வார்கள். அதாவது, பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான கட்டமைப்புப் பணிகளை அரசு மேற்கொள்வதோடு நின்று கொள்ள வேண்டும். பொருளதார முகாமைத்துவத்தினையும், அபிவிருத்தியையும் தனியார்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதாவது அரசு பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன், மக்களை அரசில் தங்கியிருப்போராக மாற்றும் சில நலன்புரிச் சேவைகளை செய்யாமலிருப்பதுமாகும். இதன் மூலம் அரசிடமிருந்த சில உற்பத்தி, பங்கீடுத் தொழில்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அரசின் கீழ் உள்ள தொழில்கள் புதிய அரச முகாமைத்துவ கொள்கையின் கீழ் மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டன. அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும் அதிக வகிபாகத்தினை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதுவே சமகால அரசு பற்றிய தாராண்மைவாதக் கொள்கையாகும்

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,291 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>