(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.18, 2014.01.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மகாநாட்டில் கலந்த கொள்வதற்காக இலங்கை வந்திருந்நத பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் கமரோன் (David Cameron) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கைஇராணுவத்தினால் மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பாக நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட சுதந்திரமான விசாரணையினை செய்வதில் இலங்கை தோல்வியடையுமாக இருந்தால், 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இதற்கான சர்வதேச விசாரணையினை செய்யும்படி பிரித்தானியா பிரேரணை சமர்பிக்கும் என எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவும், இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திரச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இறுதியுத்தம்
நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் பூரணமாக அழிக்கப்படல் வேண்டும் என்ற கருத்தில் ஐக்கிய அமெரிக்கா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டிருந்தது. இதற்காக ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய ஜேம்ஸ் எவ் ஒக்ஸ்லி (James F. Oxley) மற்றும் அரசியல் விவகாரச் செயலாளர் எவன்ஸ் வில்லியம்ஸ் (Evans Williams) ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று இலங்கை இராணுவத்தின் தேவைகள் மற்றும் இராணுவத்திற்குள்ள சூழ்நிலைகள் தொடர்பாக வடபகுதி இராணுவத் தளபதியுடன் கலந்தாலோசனை நடாத்தியதாக றாவய (Ravaya) வாரந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இக் கலந்தாலோசனையின் நோக்கத்தினை 2006 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெவ்றி லன்ஸ்ரெட் (Jeffrey Lunstead) இலங்கை வர்த்தகர் பேரவையில் நடாத்திய உரையில் (Chamber of Commerce) தெளிவுபடுத்தியிருந்தார்.“எங்களின் இராணுவப் பயிற்சிகளாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட செயற்திட்டங்களாலும்,சட்டத்திற்கு முரணான புலிகளின் நிதி சேகரிப்புக்களைத் தடை செய்வதன் மூலமாகவும், இலங்கை அரசு தன் மக்களைப் பாதுகாக்கவும், தன் நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவர்களின் பலத்தினை நாம் வலுப்படுத்தியுள்ளோம். புலிகள் சமாதான நடவடிக்கைகளை கைவிட முடிவெடுப்பின், அவர்கள் வலிமையான, மிகவும் ஆற்றல் வாய்ந்த, அத்தோடு மிகவும் உறுதி மிக்க இலங்கை இராணுவத்தை எதிர் கொள்வர் என நாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிவிக்கின்றோம். புலிகள் யுத்தத்திற்குத் திரும்பின் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க நாம் விரும்புகின்றோம்.” உள்நாட்;டு யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்படுவதன் மூலமே இலங்கையில் சமாதானத்தை உருவாக்க முடியும் என்பதே ஐக்கிய அமெரிக்காவின் முடிவாக இருந்தது. அதாவது யுத்த முனையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் திறக்கப்படுமாயின் அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதனைப் பற்றிக் கருத்தில் கொள்ளாது இலங்கை இராணுவத்தினைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளைப் ப10ரணமாக அழித்துவிட ஐக்கிய அமெரிக்கா முடிவெடுத்திருந்தது என்பதே உண்மையாகும்.
உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முப்படைக்கட்டமைப்புக்களை கொண்டிருந்த ஒரேயோரு தீவிரவாத அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமேயாகும். இவ் அமைப்புத் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பணியகம் வழங்கிய ஆலோசனையில் ”உலகில் காணப்படும் தீவிரவாத அமைப்புக்களில் மிகவும் ஆபத்தானதும், விஷமானதுமான அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்கா அரசாங்கம் இவ்அமைப்பினைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்துவதுடன்,இங்கு அதன் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தனது முழுமையான புலனாய்வுää மதிநுட்பம், திறமைகளைப் பயன்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இதன் ஆலோசனைக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள பொது மக்களின் மீது அச்சுறுத்தக்கூடிய குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதன் மூலம் பொது மக்கள் மீது அழுத்தத்தினைப் பிரயோகித்து பிரபாகரனை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்கும் திட்டமும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்யாமல், அதற்கு மேலே ஒருபடி சென்று 40,000 மேற்பட்ட தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்து அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பொறிமுறையொன்று உருவாக்கி உள்நாட்டு யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்கா வெற்றியடைந்தது.
ரூவென்டா இனப்படுகொலை
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான இனப்படுகொலைகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்குடன், 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை முதல் தடவையாக இனப்படுகொலைகளைத் (Genocide) தடுக்கும் விதிகளை ஏற்றுக் கொண்டன. இதன் பின்னர் இனப்படுகொலை சட்ட பூர்வமான பதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்விதியின்படி இனப்படுகொலைகளை தேசிய ரீதியாக, சர்வதேசரீதியாக அரசு அல்லது தனிநபர் இதில் யார் புரிந்தாலும் அது சர்வதேசக் குற்றமாகும். இவ்விதிகள் இன்றும் சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் ரூவென்டா இனப்படுகொலை மூலம் 1948 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட “இனப்படுகொலைகளைத் தடுக்கும் விதிகள்” முழுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ரூவென்டாவில் எட்டு இலட்சம் (800,000) ரியுற்சி (Tutsi) ) மற்றும் மிதவாத குயுரு (Hutu) சிறுபான்மை இனமக்கள் தீவிரவாத குயுரு இனமக்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐந்து இலட்சம் பெண்கள் (500,000) பாலியல் வல்லுறவிற்கும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்;டனர். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
ரூவென்டாவினை பிறிதொரு சோமாலியாவாக ஐக்கிய அமெரிக்கா நோக்கியதுடன், ரூவென்டா விவகாரத்தில் தலையிடுவதினால் மீண்டும் ஒரு தடவை இராணுவத் தோல்வியை சந்திக்க வேண்டிவரலாம் என ஐக்கிய அமெரிக்கா நம்பியது. சமாதான செயற்பாட்டிற்கான புதிய கோரிக்கை எதுவும் ரூவென்டாவிலிருந்து கோரப்படவில்லை. ஆகவே ரூவென்டாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்கா தலையீடு செய்யவில்லை என ஐக்கிய அமெரிக்கா இராணுவம் மற்றும் பென்ரகன் ஆகிய இரண்டும் நியாயம் கூறியன. உண்மையாதெனில் ரூவென்டாவில் ஐந்து இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்படக்கூடிய சூழல் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க மத்திய புலனாய்வு திணைக்கம் அறிவித்திருந்ததும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு ரூவென்டா இனப்படுகொலை தொடர்பாக அறிவிப்பதில் ஐக்கிய அமெரிக்கா விருப்பமற்றிருந்தது என்பதேயாகும்.
சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேசநாடுகளுக்கு ரூவென்டா அல்லது ரூவென்டாவில் நடைபெற்ற இனப்படுகொலை மூலம் அரசியல் நலன் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரூவென்டா தந்திரோபாய முக்கியத்துவம் இல்லாத நாடாகவும்ää பொருநாதார நலன் இல்லாத சிறியதொரு நாடாகவும் இருந்தது. இதனையும் விட ஆபிரிக்க மக்கள் காட்டு மிராண்டித்தனமானவர்கள், அராஜகம் பண்ணுகின்றவர்கள் என்றதொரு மாறாவுருநிலைப் புலனுணர்வும் மேற்கு நாடுகளிடம் உள்ளது. இதனால் சோமாலியாவின் பிறிதொரு பிம்பமாகவே ரூவென்டாவினை ஐக்கிய அமெரிக்கா நோக்கியது.
ஆகவே ரூவென்டாவில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுப்பதில் அக்கறை கொள்ளாமல் அதன் போக்கிலேயே ஐக்கிய அமெரிக்கா விட்டு விட்டது. “ரூவென்டாவில் எது நடந்தாலும் அதில் எங்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. ஐக்கிய அமெரிக்காவின் நலன் ரூவென்டாவில் நடைபெறும் இனப்படுகொலையுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை. போகின்ற போக்கில் அதனை விட்டு விடலாம்” என்ற மனப்பாங்கில் ஐக்கிய அமெரிக்கா இருந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.
பாசாங்கு
ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் அலுவலகத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரிபன் ஜே.ரெப் (Stephen J. Rapp) 2014 ஆம் ஆண்டு தை மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற இடங்களில் குறிப்பாக 2009 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஆட்லறி ஷெல் தாக்குதலில் நூற்றிற்கு மேற்பட்ட குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சென் அந்தனீஸ் மைதானத்தினை ஸ்ரிபன் ஜே.ரெப் பார்வையிட்டுள்ளார். அதன் பின்னர் வடமாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண முதலமைச்சர், மன்னார் கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப் (Rayappu Joseph) அடிகளார்; மற்றும் சிவில் சமூகம், அரசியல் தலைவர்கள்ää அரசாங்க பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கும் விஜயம் செய்துள்ளதாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீபன் ஜே.ரெப் மேற்கொண்ட சுற்றுப் பயணம் தொடர்பாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் “ உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினையடைந்த போது நடைபெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஸ்ரிபன் ஜே.ரெப் கேட்டறிந்து கொண்டதுடன், யுத்தம் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று இவற்றை இவர் பார்வையிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இச் செய்திக் குறிப்பில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து இலங்கை மக்கள் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறுதல் போன்றவற்றில் அதிக நாட்டமுள்ளவர்களாக உள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சுதந்திரமானää நம்பகத்தன்மையான விசாரணையூடாக உண்மையினைத் தேடும்படி ஐக்கிய அமெரிக்கா இலங்கையினை ஆர்வப்படுத்தி வருகிறது. இலங்கை மக்கள் அனைவருக்கும் சாந்தி, சமாதானம் கிடைக்கவும், பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக நல்லாட்சியும், சட்ட ஆட்சியும் உருவாக இலங்கைக்கு உதவுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பிரேரணை
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவத்தினால் மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையும் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினை ஒன்றை 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத் தொடரில் சமர்பிக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது. இப்பிரேரணை யுத்தக் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையினை வலியுத்துவதாக அமையும் என ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான அடிப்படை நியாயங்கள் சிலவற்றை ஐக்கிய அமெரிக்கா அண்மைக்காலங்களில் வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக மனித உரிமை பாதுகாவலர்களைப் பழிவாங்கும் செயற்பாட்டினை இலங்கை நிறுத்த வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துதல் வேண்டும் என்பன இதில் முக்கியமானவைகளாகும்.
இதனை வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள இணைப் பேச்சாளர் மாரி ஹவ் (Marie Harf ) டெயிலி பிரஸ் (Daily Press) நிறுவனத்திற்கு வழங்கிய தகவலில் “இலங்கையில் சிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிரான வன்முறை, சட்ட ஆட்சி வலுவிழந்து போவது, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற சமகால விடயங்களில் ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இவைகள் யாவும் இலங்கையில் நிறுத்தப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் “பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறம் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும்படியும், சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பன மிகவும் மோசமாக மீறப்பட்டமை தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணைக்கான பொறிமுறையொன்றினை உருவாக்குமாறு நீண்ட காலமாக ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தி வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் தலைமைத்துவம் எங்கு ,எப்போது,யாருக்குத் தேவையாக இருந்ததோ அங்கு ஐக்கிய அமெரிக்கா தனது தலைமைத்துவத்தை வழங்;கவில்லை.
முரண்பாடு
1994 ஆண்டு சித்திரை மாதம் ரூவென்டாவில் ஆரம்பமாகிய இனப்படுகொலையில் ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள் உட்பட 800,000 கொல்லப்பட்டனர். நூறு நாட்கள் நடைபெற்ற இவ் இனப்படுகொலையில் கொலைசெய்யப்ட்ட மக்களில் ¾ பங்கினர் ரியுற்சி இனமக்களாகும். அதேநேரம் இப்படுகொலைகளை எதிர்த்த ஆயிரக்கணக்கான குயுரு மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இவ் இனப்படுகொலை நிகழ்வது தொடர்பாக முழுமையாக அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதில் விருப்பமற்றிருந்தன. ரூவென்டாவில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக்ககொள்ள மறுத்தது.
ரூவென்டா விவகாரத்தில் Genocide (இனப்படுகொலை) என்ற பதம் பயன்படுத்துவதை ஐக்கிய அமெரிக்கா மறுக்காது விட்டால் 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றிய இனப்படுகொலைகளைத் (Genocide) தடுக்கும் விதிகளை ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகள் நடைமுறைப்படுத்த தவறிய குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்படும். 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் இனப்படுகொலைகளைத் தடுக்கும் விதிகளின் அடிப்படையில் இனப்படுகொலையினைத் தடுக்க வேண்டிய சட்ட ரீதியான கடமை ஐக்கிய அமெரிக்காவிற்கு உள்ளது.
ஆனால் இவ் இனப்படுகொலையினைத் தடுக்க ஐக்கிய அமெரிக்கா முயற்சிக்கவில்லை. இதனால் இவ் இனப்படுகொலையினை இரு தரப்பிற்கு இடையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் என தந்திரோபாயமாக வியாக்கியானப்படுத்தியதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா தன்னைத்; தானே சுத்திகரித்துக் கொண்டது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் வகித்து வரும் வகிபாகம் தொடர்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பார்க்கின்ற போது நம்பிக்கை தருவதாகவும், எதிர்காலம் மிக்கதொன்றாகவும் தெரிகின்ற உன்னத காட்சி நிலை தோன்றியுள்ளதாக தமிழ் மக்கள் உணரலாம். சிங்கள மக்கள் தரப்பிலிருந்து பார்க்கின்ற போது இலங்கையின் இறைமை, சுயாதிபத்தியம்,தன்னாதிக்கம் என்பவற்றை கௌரவப்படுத்தாமல் சர்வதேசளவில் அவமானப்படுத்துவதுடன், சர்வதேச ரீதியில் இலங்கையினைத் தனிமைப்படுத்தி தண்டிக்க ஐக்கிய அமெரிக்கா முயலுகின்றது என்றதொரு அரசியல்காட்சி நிலை தெரிவதாக உணரலாம்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கு இருந்த நலனும், யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கும் நலனும் வேறுபட்டவை என்பதை இலங்கை மக்கள் அனைவரும் உணரவேண்டும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் படுகொலைகளை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மீறப்பட்டதாக கூறப்படுகிறதேயன்றி தமிழ் மக்கள் படுகொலையினை இனப்படுகொலையாக கருதவில்லை.
தமிழ் மக்களை மையமாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் வகுத்துள்ள நலன்சார் அரசியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்வதும், அதற்கு ஏற்றவகையில் தமது அரசியல், இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவதும் அவசியமானதாகும். தனது நலன் சார்ந்து ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உள்நாட்டு யுத்த காலங்களில் இலங்கையிலும், ரூவென்டாவிலும் பின்பற்றிய கொள்கைகளும், செயற்பாட்டு அனுபங்களும் தமிழ் தலைவர்களை வழிநடாத்த உதவவேண்டும்.