டில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.15, 2012.09.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002உலகில் இரு பெரும் அதிகார சக்திகளாக எழுச்சி பெறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவத்தினை இந்தியா விளங்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினைப் பயன்படுத்தி பாக்கிஸ்தான், சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தமது கேந்திர நலன்களுக்காக இலங்கையில் காலூன்றுவதையும், இதற்கான வாய்ப்புக்களை இலங்கை வழங்குவதையும் தடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கிருந்தது. தென்னாசியப் பிராந்திய வல்லரசு என்ற வகையில் தனது அயல் நாடுகளில் புதிய உலக ஒழுங்கின் பின்னர் சமாதானச் சூழல் நிலவ வேண்டியது அவசியமென்று இந்தியா கருதுகின்றது. இதனால் இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தையும், யுத்தமும் எத்தகைய நிலையில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாடாக இந்தியாவே இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தது. 1980 களுக்குப் பின்னர், இலங்கையின் உள் விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்ட காலத்திலிருந்து இன்று வரை இக்கொள்கையினையே இந்தியா பின்பற்றுகின்றது. இவ்வகையில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் உதவி முக்கியமானதாக இருந்தது.

இந்திய அரசாங்கம் வழங்கிய ஆயுத உதவி

2002ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை இலங்கையில் நோர்வே மேற்கொண்டு வந்த சமாதானச் செயற்பாட்டை ஆதரித்து இதற்கு இந்தியா உதவி செய்து வந்தது. அதேநேரம் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பினைப் பாதுகாப்பதிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தி வந்தது. இதற்குச் சில உதாரணங்களை இங்கு தொட்டுக்காட்டலாம். 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த பலாலி விமானப் படைத்தளத்தின் ஓடு பாதை பாரிய சேதத்துக்குள்ளாகியது. அப்போதிருந்த சூழலில் இலங்கையின் தென்பகுதிக்கும், வடபகுதிக்கும் இடையிலான தொடர்பிற்கு இருந்த ஒரே ஒரு தொடர்பு மார்க்கம் துண்டிக்கப்படுமாயின் அது திகிலான அல்லது பயங்கரமான ஒரு நிலையினை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும். இந்நிலையில் இலங்கையின் அவசர வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவினால் இவ்விமானநிலைய ஓடுபாதைகள் திருத்தியமைக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு மார்கழி மாதம் விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேரா இந்தியாவின் இவ்வகிபாகம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு பின்வருமாறு விளக்கியிருந்தார். ”இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் விமான நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது ஆறு தொடக்கம் எட்டு மாதங்களில் பூர்த்தியாக்கப்படத் திட்டமிடப்பட்டது. துரதிஸ்டவசமாக காலநிலைமாற்றம் இவ்வேலைகள் துரிதமாக்கப்படுவதில் சிறிய காலதாமதத்தினை ஏற்படுத்தி விட்டது ஆயினும் இவ்வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் எம்முடன் ஒன்றாக இருந்து விரைவாக இவ்வேலைகளை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது” எனக் கூறியிருந்தார். இவ்விமானப் படைத்தளம் தந்திரோபாய ரீதியில் இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய இலகுரக விமானங்கள் இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய இரஸ்சியத் தயாரிப்பு விமானங்களாகிய மிக் போன்றோ அல்லது இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்களாகிய கிபீர் போன்றோ பாரிய சேதத்தினை ஏற்படுத்தக்கூடியவைகளல்ல. இலங்கை விமானப் படைத் தளபதி டொனால் பெரேரா இது தொடர்பாகக் கூறும் போது ”தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிய ரக விமானங்கள் இரண்டை வைத்திருக்கின்றார்கள் இவைகள் ஒற்றை இயந்திரத்தினையும், இரண்டு ஆசனங்களையும் கொண்டவைகளாகும். இவைகள் தாக்கும் திறன் அற்றவைகளாகும். ஒரு மோட்டார் வண்டியில் வெடி பொருட்களை ஏற்றி வெடிக்க வைத்தால் எவ்வளவு சேதம் ஏற்படுமோ அவ்வளவு சேதத்தினையே வானிலிருந்து ஏற்படுத்தலாம்” எனக் கூறியிருந்தார். ஆயினும் இவ்இலகுரக விமானங்களின் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, இலங்கையின் கோரிக்கைக்கிணங்க, இவ் இலகுரகவிமானங்களை அடையாளப்படுத்திக் காட்டக்கூடிய ராடர்களை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கியிருந்ததுடன், இதற்கான தொழிநுட்பவியலாளர்களையும் வழங்கியிருந்தது. 2005ஆம் ஆண்டு ஆனி மாதம் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ராடர் கருவிகளை இலவசமாக வழங்கியிருந்தாலும் 2005ஆம் ஆண்டு மார்கழி மாதம் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்திருந்தன. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இத்தகவல்களும் வெளிவந்தன. அத்துடன் இலங்கை இராணுவதற்கு வருடாந்தம் பயிற்சி வழங்கும் திட்டத்தினை இந்தியா நடைமுறைப்படுத்தி வந்ததுடன், இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பாதுகாப்பு நலன்களைப் பேணுவதற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டு இருகுழுக்களும் அடிக்கடி சந்தித்தும் வந்தன.

இந்திய அரசாங்கம் வழங்கிய ஆயுத உதவியினால் பலமடைந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது சமஸ்டி முறைமையூடான தீர்வு பற்றிய தனது நிலைப்பாட்டினைப் பின்வருமாறு கூறியிருந்தார். ”இலங்கையின் இன மோதலுக்குச் சமஷ்டி முறை தீர்வாக அமைவதை நான் எதிர்க்கின்றேன். இது தொடர்பான உறுதி மொழிகளை எனது கூட்டுக் கட்சிகளாகிய ஜனதா விமுக்திப் பெரமுன, ஜாதிக கெல உறுமய ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளேன். அடுத்து வருகின்ற சில காலங்களில் இலங்கை இராணுவத்தை பலப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தினை ஆரம்பிக்கப் போகின்றேன்” எனக் கூறியிருந்தார். மேலும் சமாதான முயற்சிகளில் மேற்கு நாடுகளுடன் பிராந்திய நாடுகள் தலையிடுவதையும் தான் நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இந்தியாவின் கொள்கை

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக விபரித்தபோது ”இலங்கையுடன் எமக்கு மிகவும் புரிந்து கொள்ளக்கூடிய விரிவான உறவு உண்டு. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையால் இலங்கையில் இந்தியாவிற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை நாம் மறந்து விடக்கூடாது. முக்கியமாக பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையில் தமது கேந்திர நலன்களுக்காகக் கால் பதிக்க முயற்சிக்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் கொழும்பிற்கு அவர்களின் பாதுகாப்பிற்கான நலன்களைக் கவனித்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால் கொழும்பு எம்மை விட்டு மற்றவர்களிடம் அதற்காகப் போகாது விட வேண்டும். இந்தியாவின் பின்புறத்தில் (கொல்லைப்புறம்) சர்வதேச நாடுகளுக்கு விளையாட்டு மைதானத்தை அமைக்க நாம் அனுமதிக்கக் கூடாது” எனக்கூறியிருந்தார். இது தென்னாசியப் பிராந்திய வல்லரசு என்ற வகையில் தனது பிராந்திய வல்லரசு நலன்கள் தொடர்பான அக்கறையினை இந்தியா விட்டுக்கொடுத்து இலங்கை விவகாரத்தினை கையாள முடியாது என்ற செய்தியை கூறியிருந்தது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக வல்லரசுகள் அனைத்திற்கும் கூறப்பட்டதாகும்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 28ஆம் திகதி வெளியிட்ட கருத்தும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். ”இலங்கையுடனும், வெளிநாடுகளுடனும் எமது குரல்கள் இணைகின்றன. வன்முறைகள் விரைவில் முடிவிற்கு வரும் என நாம் நம்புகின்றோம்”. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாகச் சர்வதேச சமூகம் எடுத்துக் கொண்ட இறுதி நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள சிவசங்கர் மேனனின் கருத்துப் போதுமானதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதை இந்தியா எதிர்த்ததுடன், இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதில் உறுதியான நிலைப்பாட்டினையும் கொண்டிருந்தது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அனைத்தையும் சட்டத்திற்கு முரணான தாக்குதல்களாகவே இந்தியா கருதியது. மேலும் ”நாங்கள் வன்முறையினை எதிர்க்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எவ்வித ஆதரவும் வழங்கக் கூடாது. பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் எல்லாவகை உதவிகளையும் நாங்கள் எதிர்க்கின்றோம்” என 2007ஆம் ஆண்டு ஆனி மாதம் 18ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்துக்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருந்தன.

எனவே இந்தியாவின் அங்கீகாரத்துடன் தான் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தது என ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த வேளையில் இந்தியாவினால் அதனைத் தடுத்திருக்க முடியும். இதற்கான வல்லமை இந்தியாவிற்கு இருந்தது என்பதை கடந்தகாலங்களில் நிகழ்ந்த யுத்தங்களை இடைநிறுத்த இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் நிரூபித்திருந்தன. எனவே இப்போதும் யுத்தத்தினை நிறுத்த இந்தியா முயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கை எல்லோரிடமும் இருந்தது. ஆனால் இந்தியா இவ்வாறு சொல்லவோ செய்யவோ இல்லை. பதிலாக இம்முறை தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தின் முழுமையாக அழிக்கப்படுவதையே இந்தியா விரும்பியது. இதனையே செய்வித்தும் கொண்டது. இந்தியாவின் இப்புதிய நிலைப்பாட்டை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய சேவ்வியில் பின்வருமாறு கோடிட்டுக் காட்டியிருந்தார். ”யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பூரணமாக அழித்தொழிக்கப்படுவதைப் நேரடியாகப் பார்ப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. ஆகவே நான் நம்புகின்றேன் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக இந்தியாவிற்கு நன்கு தெரியும். ஏனெனில் பாராட்டப்படக்கூடிய சிறந்த புலனாய்வாளர்களை முற்றுகைக்குள்ளாகியிருந்த யுத்தப்பிரதேசத்திற்குள் இந்தியா வைத்திருந்தது”. எனக் கூறியுள்ளார். அவ்வாறாயின் இந்தியா ஏன் இவ்வாறு சிந்தித்தது என்ற கேள்விக்கு பதில் தேடவேண்டும்.

இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கையின் இன முரண்பாட்டினையும், தமிழ் இராணுவக் குழுக்களையும் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கம் உருவாக்கியிருந்த மேற்குத்தேச நாடுகள் சார்ந்த வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சித்ததுடன், இந்தியாவிற்குச் சாதகமான வெளியுறவுக் கொள்கையினை இலங்கை உருவாக்க தூண்டுதலளித்தது. இலங்கையின் இன மோதலும், அதற்கான தீர்வும் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையதாகும் என்ற சிந்தனை இந்தியாவிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருந்தது. இலங்கையில் இந்தியாவினைத் தவிர வேறுசக்திகள், வல்லரசுகள் நிலைகொள்வது இந்தியாவின் பிராந்திய வல்லரசுக் கோட்பாட்டிற்குப் பாதகமானதாகும். ஏனெனில் இலங்கையில் நிலைகொள்ளும் வல்லரசுகள் இந்தியாவின் பிராந்திய வல்லரசுக் கோட்பாட்டினைச் சிதைக்கவே முயற்சி செய்யும். எனவே இந்தியா இப்பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணவே விரும்புகின்றது.

இதனைப் புரிந்து கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெல்லுவதற்கு இந்தியாவினைப் பயன்படுத்தத் தயாராகவேயிருந்தது. தனது பாதுகாப்பிற்கு யார் அச்சுறுத்தலாகவுள்ளனர் என இந்தியா கருதுகின்றதோ அவர்களை இலங்கைக்குள் உள்ளீர்ப்பதன் மூலம் இந்தியாவினை அச்சம் கொள்ள வைத்து யுத்தத்தில் இந்தியாவினை பங்கேற்க வைக்கும் தந்திரோபாயத்தினை இலங்கை கையாண்டுள்ளது. யார், யாருடைய தேசிய நலன்களுக்காக இலங்கையில் ஆயுதக் குழுக்களை வளர்த்தார்களோ அவர்களைக் கொண்டே அழித்துவிடும் தந்திரோபாயத்தினையும் இலங்கை கையாண்டிருந்தது. இது இலங்கையின் உச்சமட்ட இராஜதந்திரச் செயற்பாட்டினையும், அறிவுபூர்வமான கொள்கைவகுத்தலையும் விளங்கிக் கொள்ளப் போதுமானதாகும்.

நலன்கள் சந்திக்கும் புள்ளி

இந்தியாவின் எதிரிகளாகிய சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்தத்தில் தீவிர பங்கு கொண்டு செயற்பட்டன. இந்நிலையில் தனது நலன்களை விட்டுக் கொடுத்து செயற்பட முடியாத நிலை இந்தியாவிற்கு இருந்தது. இதைப் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் அறிவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கவில்லையா? என்ற சந்தேகம் எழுகின்றது. இது உண்மையாயின் இதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகியிருக்கலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் நிபந்தனையுடனான எந்தவொரு உடன்பாட்டிற்கும் யாருடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் செல்வதற்குத் தயாராக இருக்கவில்லை. இணக்கத்தை விட இறப்பதையே அவர்கள் மேலானதாக நேசித்தார்கள்.

வெளிவிவகாரக் கொள்கையில் கையாளப்படும் ”நலன்கள் சந்திக்கும் புள்ளி” என்ற தத்துவம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை எனக் கருத இடமுள்ளது. ஏனெனில், பௌத்த தேசியவாதிகள் இந்தியா தமிழ் தேசியவாதிகளுக்கு ஆதரவானதொரு நாடு, இந்தியா இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றது என்று நம்பியிருந்தனர். ஆனால் இந்தியாவினை எதிர்த்த பௌத்த தேசியவாதிகள் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்குமளவிற்கு நிலைமையினை தலைகீழாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றிவிட்டனர்.

இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் வகுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாது விட்டதன் மூலம் தமது அழிவினைத் தாமே தேடிக்கொண்டனர். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இலங்கையில் எவ்வித தீர்வினையும் எட்டமுடியாது என்பதற்கு வரலாறு சிறந்த பாடத்தினை புகட்டியுள்ளது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,725 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>