சுயாதீனமும் தனித்துவமும் உள்ள உயர்கல்வியை நோக்கி

(தினக்குரல் 2012.08.06 அன்று பிரசுரிக்கப்பட்டது)

clip_image002உலகிலுள்ள ஒவ்வொரு அரசுகளும் வளர்ச்சியடைந்த அரசாக தாம் மாறவேண்டும் என்ற கனவுடனேயே செயற்படுகின்றது. வளர்ச்சியடைதல் என்பது நீண்ட, கடினமானதொரு பயணமாகும். இப்பயணத்தில் ஒரு நாடு வெற்றியடைய வேண்டுமாயின் நிலைத்திருக்கக்கூடிய கல்விக்கொள்கையினையும் கல்வி முறைமையினையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். நிலைத்திருக்கக் கூடிய கல்வி முறையினால் தான் பொறுப்புக் கூறக்கூடிய, சிறந்த மனப்பாங்கு, நாட்டுப்பற்றுள்ள பிரஜைகளை உருவாக்க முடியும். இப்பிரஜைகளால் தான் சிறந்த பொருளாதாரத்தை கட்டமைத்து தேசிய அபிவிருத்திக்கும், சர்வதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்ய முடியும். நிலைத்திருக்க கூடிய அறிவுபூர்வமான கல்வி முறை என்பது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் வகிபாகங்களின் ஊடாகவே உருவாக முடியும்.

பொதுக் கல்வியின் நிலை

இலங்கையின் அபிவிருத்திக்குப் பாதகமான சில விடயங்கள் கல்விமுறைமையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆட்சியாளர்களின் இலக்கு இலங்கையினை ஆசியாவினுடைய அறிவு மையமாகவும், ஆசியாவின் அதிசயமாகவும் மாற்றுவதேயாகும்.ஆசிரியர்களின் குறைந்த ஊதியம், பாடசாலைகளின் உட்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி வழங்காமை என்பவற்றை வைத்துக் கொண்டே ஆசியாயாவின் அறிவு மையத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது. மேலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை பெறுவதற்கு குறைந்தது நான்கு வருடங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. இக்கால பகுதியில் மாணவர்கள் தமது முதல் நிலை வயதில் பெருமளவினை இழந்துவிடுகின்றார்கள். நகர்புறப் பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் என்பன ஏனைய பாடங்களுடன் இணைத்துக் கற்பிக்கப்படுகின்றன, பரீட்சிக்கப்டுகின்றன. பெறுபேறுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இவ்விரு பாடங்களிலும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கும் அதில் அனுபவப்பட வைப்பதற்கும் நகர்புறப் பாடசாலைகளில் எடுக்கப்படும் கவனம் மிகவும் குறைவாகும்.கிராமப்புற,மற்றும் பெரும்தோட்டப்புறப் பாடசாலைகளில் இப்பாடங்களுக்காக எவ்வித கவனமும் எடுக்கப்படுவதில்லை.இம்மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் பற்றிய அறிவில்லாமல் வெளியேறுகின்றார்கள்.

மறு பக்கத்தில் ஏறக்குறைய பெருமளவிலான நகர்புறப் பாடசாலை மாணவர்கள் ஆய்வு கூட அநுபவ அறிவு இல்லாமல் விஞ்ஞான அறிவினைப் பெறுகின்றார்கள். பெரும்பாலான கிராமப்புற,மற்றும் பெரும்தோட்டப்புறப் பாடசாலைகளில் விஞ்ஞான,கணித ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. நகர்புறப் பாடசாலைகளில் நிகழும் அநேக கல்வி, நிர்வாகக் கலந்துரையாடல்களில் கல்விக்குரிய இலக்குகள் கருத்தில் கொள்ளப்படாமல் கல்வி பொதுத் தராதர உயர்தரப்பாடங்கள் தொழில் வாய்ப்பினை பெறுவதற்காக பாடங்களாக சிபார்சு செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பறையும் கொண்டிருக்க வேண்டிய நியம மாணவர் எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை கொண்டிருக்கின்றது. இதனால் வகுப்பறை முகாமைத்துவம், ஆசிரியர்கள் மாணவர்களை கவன ஈர்ப்புக்கு உள்ளாக்கும் நிலை என்பன மிகவும் கீழ் நிலையில் உள்ளது. அதே நேரம் பாடசாலை ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையும் குறைவடைந்துவருகின்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடசாலை ஆசிரியர் மீது எதிர் மறையான மனப்பாங்கு வளர்ந்து உள்ளது. பல்கலைக்கழக நுழைவுக்கு பாடசாலைக் கல்வியை விட மேலதிக வகுப்புக் கல்வியே (tuition) தமக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் பலமடைந்துள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கல்வியை புறக்கணிப்பதால் செயல் திட்ட விளக்கங்கள், கள வேலைகள், புத்தாக்கதிற்கான சந்தர்ப்பங்கள், குழு வேலைகள் போன்ற மாணவர் மைய செயற்பாடுகள் குறைவடைந்து விடுகின்றன. இக்குறைபாட்டுடனேயே மாணவர்கள் பல்கலைக்கழக முறைமைக்குள் நுழைகின்றார்கள். பேராசிரியர் என்.ரி.எஸ் விஜயசேகராவின் கருத்துப்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்கள் தமது பாடசாலை நேரத்தில் 37.5% நேரத்தினை பாடசாலை முறைமையின் இருப்பிற்காகவே செலவு செய்கின்றனர். 55.2%நேரத்தினை கல்விக்கான போக்குவரத்து மேலதிக கல்வி வகுப்பு என்பவற்றிற்காக செலவு செய்கின்றனர். இதே போன்று கல்வி பொதுத் தராதர வகுப்பு மாணவர்கள் 29.3% மான நேரத்தினை பாடசாலை முறைமையின் இருப்பிற்காக செலவு செய்கின்றனர். 66.7% மான நேரத்தினை மேலதிக வகுப்பு நேரத்திற்கான பிரயாணங்களிற்கும், மேலதிக வகுப்பிற்கும், பரீட்சைக்குத் தம்மைத் தயார் படுத்துவதற்குமாகச் செலவு செய்கின்றார்கள்.

மாணவர்கள் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பெற்றுக்கொண்ட பெறு பேறுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இசட் புள்ளியின் (Z Score) அடிப்படையில் பல்கலைகழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள். பரீட்சைக்குத் தோற்றுகின்றவர்களில் 15-17% மான மாணவர்களே பல்கலைக்கழக கல்வியினை பெற தகுதியானவர்களாக அல்லது சந்தர்ப்பம் வளங்கப்பட்டவர்களாகின்றார்கள். இங்கு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இவர்கள் மட்டும் தான் சிறந்த மாணவர்களா? மற்றும் சிறந்த பட்டதாரி மாணவர்களை உருவாக்குவதற்கு இவர்கள் போதுமானவர்களா? போன்ற வினாக்களுக்கு விடை தேடவேண்டியுள்ளது.

பல்கலைக்கழகக் கல்வி

சில பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. பல்கலைகழக மட்டத்திலான ஆராய்ச்சிக்கும், அதனை வெளியிடுவதற்குமான அடிப்படை வசதிகள் நடைமுறையில் இல்லாததொன்றாக மாறியுள்ளது. பல்கலைகழக ஆய்வு கூடங்கள், நவீன ஆய்வு வசதிகள், எதுவும் இல்லாது வெறும் காட்சிப் பொருட்களாகி வருகின்றன . போதியளவு வசதியுள்ள விரிவுரை மண்டபங்கள்,பொருத்தமான தளபாடங்கள் ஏனைய நவீன கற்பித்தல் கருவிகள் பல்கலைக்கழகங்களில் குறைவடைந்து விட்டன. சில பல்கலைக்கழகங்களில் விரிவுரை மண்டபங்களைப் பராமரிப்பதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விரிவுரை மண்டபங்களை மாணவர்களே சுத்திகரிக்கின்ற தேவை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றிவிட்டது. மாணவர்கள் தமது கல்விச்செயற்பாட்டில் இருந்து விடுபட்டு தமது நலன்புரித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்வப்போது போராடுகின்ற காட்சிகளையும் காணமுடிகின்றது. எனவே மாணவர்களுக்கு வழங்கப்படுகிற வசதிகள் அனைத்தும் மீள் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவை தோன்றியுள்ளது. வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்டும் மாணவர்களின் தொகையினை அரசாங்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் அதற்கு சமாந்தரமான வகையில் உட்கட்டமைப்பு வசதிகளும்,கல்விசார் கல்விசாரா வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதும் இல்லை அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதும் இல்லை. உதாரணமாக மொத்த தேசிய உற்பத்தியில் பல்கலைக்கழக கல்விக்கு 1980 ஆம் ஆண்டு 1% த்தினையும் 1990 ஆம் ஆண்டு 1.19% த்தினையும் 2000 ஆம் ஆண்டு 1.6% த்தினையும் 2010 ஆம் ஆண்டு 1.2 % த்தினையும் செலவு செய்துள்ளது. இந்த நிலை நீடிப்பதானது நாட்டினுடைய எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும், பயனுடைய கற்பித்தல் செயற்பாடுகளுக்கும், ஆராய்ச்சிகளை செய்வதற்கும் பெரும் தடையாக இருக்கும் .சர்வதேச தரத்திலான ஊதியத்தினை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பெற்றாலும் கூட மேற்கூறப்பட்ட விடயங்களினால் கல்விச் சமூகம் தாழ்வுச்சிக்கலுக்கு உள்ளாவதுடன், மகிழ்ச்சி இல்லாமலும் பணியாற்றுகின்றது. அத்துடன் கல்வியலாளர்கள் தாய் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தொழில் வாய்ப்புக்களையும் தேடுகின்றார்கள். கல்வியலாளர்கள் தாய் நாட்டை விட்டு வெளியேறுவார்களாயின் நிலைத்திருக்கக்கூடிய பல்கலைக்கழக முறைமை பெரும் ஆபத்தினை எதிர் நோக்குவதுடன் ஆசியாவின் அதிசயமாக நாட்டினை உருவாக்கும் கனவிற்கும் தீங்காகிவிடும். சிறந்த பல்கலைக்கழக முறைமை என்பது சிறந்த ஊதியம், சிறப்பான உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான ஏனைய வளங்கள் மற்றும் உதவி உத்தியோகத்தர்கள் என்பவைகளை மிகவும் உயர் தரத்தில் வழங்குவதின் ஊடாகவே உருவாக்க முடியும்.

பல்கலைக்கழகங்கள் சிறந்த மூளை உழைப்பாளர்களை உருவாக்கும் இடமாகும். இவர்கள் தமது உற்பத்திகள், சேவைகள் மூலம் சிறந்த அந்நிய செலாவணியை உழைத்துத் தருபவர்களாக மாற வேண்டும். இவ் அடிப்படையில் பார்க்கின்ற போது பொதுவாக பல்கலைக்கழகங்களை ஒரு நாட்டினுடைய முதுமுதுகெலும்பு எனக்கூறலாம். பல்கலைக்கழகங்கள் மனிதாபிமானம், நாகரீகம் மிக்க சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும். இதுவொன்றும் ரகசியமான விடயம் அல்ல. பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் இதனை மிகவும் இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். சிறந்த ஆசிரியர்கள் மாணவர்கள் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் எல்லாம் ஒன்றிணைந்த சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த பல்கலைக்கழக கல்வியை உருவாக்க முடியும்.

தற்போதைய கல்வி முறைமையின் தரத்திற்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் தம்முடைய பாடவிதானங்களையும், வழிகாட்டுதல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கும் மேலாக கைத்தொழில் துறை எதிர்பாக்கும் தயார் நிலை செயற்பாட்டாளர்கள் (Readymade practitioner) என்னும் எதிர்பார்ப்பினை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப வெளிப்பூச்சு (cosmetic) கல்வித் திட்டங்களை உருவாக்கவேண்டியுள்ளது. இவ்வளவிற்கும் மத்தியில் பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகள் எவ்வித மாற்றமுமின்றி மூன்று அல்லது நான்கு வருடங்களாகவே இன்றும் உள்ளது. இதனால் பல்கலைகழக பாடவிதான மையத்தை (core curriculum) தவிர்க்க முடியாதபடி சுருக்க வேண்டியுள்ளது அல்லது இடை நடுவிலான (sandwich) குறுகிய கல்விச் செயற்பாடாக்க வேண்டியுள்ளது. இதனால் பட்டதாரிகள் தாம் விரும்பும் கல்வியை பெற முடியாதவர்களாக வெளியேறுகின்றார்கள்.

பல்கலைக்கழக பட்டதாரிகளை உருவாக்கும் பீட மட்டங்களிலான பல்வேறுபட்ட கல்வி திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவீனங்களில் பாரிய ஏற்ற தாழ்வுகள் காணப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறான ஏற்றத் தாழ்வுகளை அவதானிக்க முடிவதில்லை. அதே நேரம் பட்டப் பின்படிப்புக் கற்கை நெறிகளுக்கு அரசாங்கம் ஆதரவு தருவதில்லை.

அண்மைக்காலங்களில் பல்கலைக்கழகங்களும், பாடசாலைகளும் அரசியல் வாதிகளின் மேடைகளாகி வருகின்றதை அவதானிக்கமுடிகின்றது .குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்குரிய சுயாதீனம் ,தனித்துவம் என்பன அரசியல்வாதிகளின் தலையீட்டினால் சீரழிக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகங்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி வருகின்றது. இது பாரியளவில் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தாழ்வுணர்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் உயர்கல்வி முறைமையின் நிலைபேற்றினையும் கேள்விக்குள்ளாக்கின்றது. இதுவே இன்றைய உயர் கல்வி முறைமையின் யதார்த்தமாகும்.

பல்கலைக்கழகக் கல்வி என்பது ஒவ்வொரு மாணவனுக்குமுரிய தனித்துவமான கல்வி என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெற்றோர்களின் பண வசதி முக்கியமானதல்ல. நாட்டிற்கான கனவினை மகிழ்ச்சியாக காணுவதற்குரிய சந்தர்ப்பப்ம் ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்கப்பட வேண்டும். ஜனநாயக முறைமைக்குப் பொருந்தி இயங்கக்கூடிய சமூக, அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்குப் பொருத்தமான கல்வி வழங்கப்படல் வேண்டும். பீட மட்டங்களிலான ஆய்வின் மூலம் உயர் அறிவினையும், ஞானத்தினையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களினுடைய மனப்பாங்கினை வழப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படல் வேண்டும். இது உடனடியாக ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய தொன்றல்ல. பதிலாக மாணவர்கள் தமக்காகத் தெரிவு செய்யும் கல்வித் துறையின் ஊடாக வாழ் நாள் முழுவதும் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். மாணவர்கள் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்வதற்கும், சமுதாயத்தில் இருக்கும் வேறுபட்ட சமுதாய கூறுகளையும், பண்புகளையும் புரிந்து விட்டுக்கொடுத்து, சகித்து, மதிப்பளித்து வாழ்வதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாழ்கையின் நோக்கம் என்ன? மனித நாகரிகம் என்றால் என்ன? என்பைவகளை இனங்கண்டுகொள்ள கல்வி உதவ வேண்டும்.

முடிவாக, பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பயன்மிக்க கலந்துரையாடல்களை நாடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார்கள். ஆயினும் நிலைத்திருக்கக்கூடிய கல்விமுறையோன்றினை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்திருக்கின்ற இத்தருணத்திலேயே உருவாகியுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சமேளனம் நிலைத்திருக்கக்கூடிய கல்வி முறைமை ஒன்றிற்காக தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை நடத்துகின்றார்கள்.இப்போராட்டத்தின் பிரதான இலக்கு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

  1. இதுவரை தீர்க்கப்படாத ஊதியம் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய சகல கோரிக்கைகளும் தீர்க்கப்பட வேண்டும்
  2. பின்வருவன உள்ளடங்கலாக பொதுத்துறை கல்வியை பாதுகாத்து வளர்ப்பதற்கு பொதுமக்களுக்கு அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும்
  • மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6 % த்தை ஒதுக்குதல் வேண்டும்
  • கல்வியை அரசியல் மயப்படுத்தாதிருத்தல் வேண்டும்
  • எழுந்தமானமான இரகசியமான கலந்துரையாடலுக்குட்பட்டவகையில் தீர்மானம் எடுப்பதை தவிர்த்தல் வேண்டும்

இப்போராட்டத்தின் பயனாளிகள் நிகழ்கால ,எதிர்கால மாணவ சமுகமேயாகும். ஆகவே இப்போராட்டத்தினை முன்நோக்கி கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை சமூகத்திற்குரியதாகும். எனவே பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் கைகோர்த்து போராட்டத்தினை பலப்படுத்தி வெற்றியடையவைக்க அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

16,069 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>