சுதந்திர அரசின் புதிய அரசாங்கம், பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது ஒரு முனையில் அரசியலுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான உறவினைத் தீர்மானித்தது. நிர்வாகப் பொறுப்பைச் சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் பொறுப்பானவர்களாகக் காணப்பட்டார்கள். ஒவ்வொரு அமைச்சும் பல திணைக்களங்களை உருவாக்கியது. இச் செய்முறையானது சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலையை விட முற்றிலும் வேறுபட்ட நிலையாகவே காணப்பட்டது. அமைச்சர்கள் அரசியல்வாதியாக மட்டுமன்றித், தனது அமைச்சின் நிர்வாகத் தலைவர்களாகவும் இருந்தனர்;. ஒவ்வொரு அமைச்சுகளும் நிரந்தர செயலாளர்களைக் கொண்டிருந்தன. இச்செயலாளர், நிர்வாகத்தின் உயர்நிலையில் இருந்து பொது நிர்வாகக் கடமைகளை மேற்பார்வை செய்பவராக இருந்தார். இவரே அமைச்சுத் திணைக்கள நிர்வாகப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார். ஆயினும், பொதுவான வழிகாட்டல்களும், கட்டுப்பாடுகளும் செயலாளர்களுக்கு அமைச்சர்களால் வழங்கப்பட்டன.
நிர்வாகச் செயற்பாடுகள் நிர்வாக நிர்வாகத் திணைக்களங்களை அடிப்படை அலகாகக் கொண்டு நடைபெற்றன. இத்திணைக்களங்கள் எண்ணிக்கையில் பலவாக காணப்பட்டாலும், அமைப்பு ரீதியாக இவைகளைப் பின்வருமாறு பட்டியல்படுத்த முடியும். அவையாவன: அபிவிருத்தித் திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், விஞ்ஞானத் திணைக்களம், நிர்வாகத் திணைக்களம் என்பவைகளாகும். இத் திணைக்களங்கள் நிர்வாகச் செயற்பாட்டுக்கான சுதந்திர நிர்வாக அலகுகளாகும். இவற்றை மையமாகக் கொண்டு பல எண்ணிக்கையிலான திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு பல எண்ணிக்கையில் திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட்டமை நிர்வாக சேவையில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவது, திணைக்களங்களுக்கிடையில் இணைப்பு என்பது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை புதிய, பழைய திணைக்களங்களுக்கு இடையில் நிலவிய போட்டி, பூசல்கள் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்தின.
சுதந்திர இலங்கையின் பொது நிர்வாகத்தில் திறைசேரியின் முக்கியத்துவம் தொடர்ந்தும் உயர்ந்தேயிருந்தது. அதாவது திறைசேரியை மையமாகக் கொண்ட பொது நிர்வாக அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இது நிர்வாக அதிகாரத்தில் திறைசேரி முதன்மையான சக்தியாக எழுச்சியடைவதை ஊக்குவிப்பதாக இருந்தது.
திறைசேரியினை நெறிப்படுத்தும் பொறுப்பு நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. திறைசேரி, திணைக்களங்களின் செலவீனங்களை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டிருந்தது. இதனால் செலவீனங்களுக்கான பிரேரணைகள், பொருளாதார மேம்பாட்டுக்கான செலவீனங்கள் அனைத்திற்கும் முறையான கணக்குகளைப் பேணமுடிந்தது. அத்துடன் எல்லாத் திணைக்களங்களதும் நிதி நிலையை உயர் நிலையில் பேணவும் முடிந்தது. மறுபக்கத்தில், பொது வேலைத்திணைக்களங்கள் அதிகரிக்க நிர்வாகசேவையாளர்களும் நிர்வாக சேவை நிபுணர்;களும் அதிகரித்தனர். இலங்கையில் நிர்வாக சேவை “உயர் வர்க்கப் பணிக்குழுவாக” மாற்றமடைந்தது. மேலும் ஒதுக்கப்பட்ட பல உயர் பதவிகளையும் உருவாக்கிக் கொண்டது. அதாவது கணக்காளர் சேவை, இலிகிதர்சேவை போன்ற நிபுணத்துவ சேவைகள் உருவாக்கப்பட்டன. இப்பண்பு பொதுச் சேவையை “நிபுணத்துவ நிர்வாக சேவையாக மாற்றியதுடன் நிர்வாக சேவை நிபுணர்கள் உருவாக்கப்படுவதற்கும் துணை புரிந்தது.
சுதந்திர அரசியல் திட்டத்தின் கீழ் பொதுச்சேவை ஆணைக்குழு மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. நிர்வாக சேவையாளர்களின் நியமனம், மாற்றம், பதவிநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகிய விடயங்களை உருவாக்கும் மைய அதிகார சபையாக இது மாற்றப்பட்டது. பொதுச் சேவை ஆணைக் குழுவின் சுதந்திரமான செயற்பாடு, சுதந்திர இலங்கையில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் சட்ட சபையானது நிர்வாக சேவையில் தலையீடு செய்யலாம் என்பது முன்னுணரப்பட்டதனால், இதன் வழி நிர்வாக சேவைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுக்கும் நோக்குடன் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடு எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அரசியல் சார்பற்ற ஒரு நிர்வாகசேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும், நிர்வாக சேவைமீது பொதுச் சேவைகள் ஆணைக்குழு மாத்திரமே செல்வாக்கும், கட்டுப்பாடும் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
தொகுத்து நோக்குகின்ற போது சுதந்திர இலங்கையில் நிர்வாக சேவையில் இரண்டு பரிமாணங்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒன்று திறைசேரி நிர்வாகப் படிநிலை அமைப்பின் உச்சஅலகாகக் காணப்பட்டது. இது முழுநிர்வாகத்தின் மையமாகக் காணப்பட்டதுடன், எல்லாத் திணைக்களங்களுக்குமான பொது நிர்வாகப் பொறுப்பு, இணைப்புத் திறமையை உத்தரவாதப்படுத்துதல், முன்னேற்றம் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது. மற்றையது பொதுச்சேவைகள் ஆணைக்குழு நிர்வாக சேவையாளர்களின் நியமனம், மாற்றம், நீக்கம்,ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுகின்ற அமைப்பாகக் காணப்பட்டது. சுதந்திரமான பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாத பாதுகாப்பான நடுவுநிலையான நிர்வாக சேவையின் தோற்றத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருந்தது.
மாவட்ட மட்டநிர்வாகச் செயற்பாட்டைப் பொறுத்த வரையில் மாவட்டங்களின் பொது நிர்வாகத்திற்கான உப அலகுகள் உருவாக்கப்பட்டன. அரசாங்க அதிபர் முறைமை டொனமூர் காலத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பலவீனம் அடைந்த ஒரு நிர்வாக அலகாக மாற்றமடைந்தது. இது அரசாங்க அதிபரின் வரம்பெல்லைக்கு வெளியே பல திணைக்களங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திலிருந்து தனது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் மாகாணமட்டத்தில் செயற்பட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டமையேயாகும். மாகாண மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இணைப்புச் செயற்பாடு என்பது தற்போது மாவட்ட மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட பொது நிர்வாக அபிவிருத்திக்கான பங்களிப்பு வழங்க பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இதன் போது அரசாங்க அதிபரது தலைமையின் கீழ் விவசாயக் குழு, மாவட்ட இணைப்புக் குழு என்பன கொண்டுவரப்பட்டிருந்தன. சுதந்திரத்துக்குப் பின்னரான மாவட்ட நிர்வாகமானது அரசாங்க அதிபரின் அபிவிருத்திச் செயற்பாட்டையும், மத்திய அரசாங்கத்துடனான மைய இணைப்புச் செயற்பாட்டையுமே வெளிப்படுத்தியிருந்தது.
நிர்வாக சேவை முரண்பாடுகளும், மாற்றங்களும்
1956ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் நிர்வாக சேவையின் இலக்கும், சிந்தனையும் மாற்றத்துக்குள்ளாகியது. இன்னொரு வகையில் கூறின் 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் சமூக, அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கமானது நிர்வாக சேவையின் அமைப்பு,தேவை, செயற்பாடு என்பவற்றின் ஊடாகவே பிரதிபலித்திருந்தது. இக்கால கட்டத்தில் அரசியல் நவீனத்துவமும், நிர்வாக சேவையும் சமூக, கலாசார தேவைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளையே உருவாக்கியது. அனுபவம், திறமை என்பன மழுங்கடிக்கப்பட்டன. அதேநேரத்தில் சமூக, பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதற்கான காலத்தேவையாக இது எடுத்துரைக்கப்பட்டது. பிரதமமந்திரி பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய பொறுப்புக்களை நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1965ஆம் ஆண்டு பிரதமமந்திரியின் கீழ் திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் பிரதமமந்திரி திட்டமிடல், இணைப்பு ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்தவராக்கப்பட்டார். நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மாவட்ட மட்டத்தில் நிர்வாகப் பரவலாக்கல் செயல் முறையை வேண்டி நின்றது. மாவட்ட மட்டத்தில் திணைக்களங்கள் அதிகரிக்கப்படலாயிற்று. இதனால் திணைக்களங்களின் ஆட்சேர்ப்புக்கான தேவை அதிகரித்தது. இது நிர்வாக சேவையின் அபிவிருத்தியை மேலும் வளர்ப்பதாக அமைந்திருந்தது.
ஒரு திணைக்களத்தின் ஊழியர்கள் இரு வகையில் தரப்படுத்தப்பட்டனர். ஒரு சாரார் உத்தியோகத்தர்கள் தரத்திலான ஊழியர்களாகவும், மறுசாரார் உத்தியோகம் சாராத ஊழியர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். உத்தியோகத்தர் தரத்தில் உள்ளவர்கள் மாவட்டத் திணைக்களங்களுக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். உத்தியோகம் சாராத தரத்தில் உள்ளவர்கள் பிரதேச, கிராமிய மட்டங்களில் கடமையாற்றுபவர்களாகக் காணப்பட்டார்கள்.நிர்வாக சேவையில் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களை இலகு படுத்தவும் வேலைவாய்ப்பின்மையைப் போக்கவும் 1956ஆம் ஆண்டு அரசாங்க உத்தியோக மொழிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிர்வாக சேவையின் பரிமாணம், வளர்ச்சி, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. நடைமுறையில் உத்தியோக மொழியாக இருந்த ஆங்கிலம் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாகச் சிங்களம் உத்தியோக மொழியாக்கப்பட்டது. ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராகக் கடமையாற்ற வேண்டுமெனின் ஆகக் குறைந்தது கல்வி பொதுச் தராதரப்பத்திர சாதாரண தரத்தில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் ஆங்கிலத்தில் கல்விகற்ற பெரும்பான்மையான தமிழ் அரசஉத்தியோகத்தர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச் சட்டமானது நிர்வாக முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆயினும், 1960ஆம் ஆண்டு; பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமானது, நிர்வாக சேவையில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. நிர்வாக ஒழுங்கமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இது நிர்வாக சேவையின் ஒழுங்கிலும், வழிமுறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிப்படை நிர்வாக அமைப்பு முறைமையில் மாற்றம் ஏற்பட்டது.
1960ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொதுநிர்வாகமானது துரித வேலைத்திட்டங்களுக்கு ஏற்ற ஓர் அமைப்பாக வளர்ச்சி கண்டது. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பங்கு, அபிவிருத்திக் கொள்கைகள், திட்டங்களை அங்கீகரித்து அமுல்படுத்துவதாக இருந்தது. இவ்வாறு மாவட்ட நிர்வாகமானது மீள் ஒழுங்கமைக்கப்பட்டதன் மூலம் பின்வரும் இலக்குகள் அடையப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
-
மத்திய நிர்வாகத்திற்கும், அரசாங்க அதிபருக்கும் இடையில் நேரடியானதும் செயலூக்கம் மிக்கதுமான தொடர்பைப் பேணமுடியும்.
-
கச்சேரி முறைமையில் மீள் ஒழுங்கமைப்பு ஏற்பட்டமை.
-
அபிவிருத்தி ஒழுங்கமைப்பு முறைமை மாவட்ட அலுவலகச் செயற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டது.
-
அபிவிருத்திச் செயற்பாட்டில் வெகுஜனப் பங்குபற்றலுக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
நிர்வாக மீள் ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இறுதியான சிறப்பம்சம் யாதெனில், அரசாங்க முகாமைத்துவமானது வளப்படுத்தப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. முகாமைத்துவப்பயிற்சி, அலுவலக முகாமைத்துவ முறையின் வளர்ச்சி என்பன முதன்மையாக வளப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.
1963ஆம் ஆண்டு “இலங்கை சிவில் சேவை அமைப்பு” ஒழிக்கப்பட்டு, இதற்குப் பதிலாக “இலங்கை நிர்வாக சேவை” (Ceylon Administrative Service-CAS) என்பது தோற்றுவிக்கப்பட்டது. இது நிர்வாக சேவையில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாற்றமும், புதிய ஏற்பாடும் எனக் கூறப்படுகின்றது. பொது நிர்வாக முறைமையில் “இலங்கை நிர்வாக சேவை” உருவாக்கமானது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு மிகவும் திறமையான பங்களிப்பினைச் செய்யக் கூடியதாக இருந்தது. இதற்காகச் நிர்வாக சேவை விஸ்தரிக்கப்பட்டு, அதிகளவு நிர்வாக சேவையாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.நிர்வாகசேவை அமைப்பானது, படிநிலை அமைப்பின் பலபகுதிகளையும், தரங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன், ஒன்றுபட்டுச் செயற்படக் கூடிய தன்மையையும் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வமைப்பு முறையை பின்பற்றியதன் மூலம், சிறப்பான தீர்மானம் எடுக்கும் செய்முறையைப் பேணவும், குறிப்பாக அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்தவும், முக்கியமான நிர்வாக விடயங்களைத் திறமையுடன் செயற்படுத்தவும் துணைபுரிந்ததாகக் கூறப்படுகின்றது.
1965 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன்,திட்டமிடலும் பொருளாதார விவகாரங்களும் என்ற புதியதொரு அமைச்சினை உருவாக்கியது.மேலும் இவ்அமைச்சு ஐந்து பிரிவுகளைக் கொண்டிருந்தது.அவைகளாவன திட்ட உருவாக்கம், திட்டஅமுலாக்கம், வெளிவாரியான வளங்கள்,தனியார்துறை விடயங்கள்,பொதுவான பொருளாதார விடயங்கள் என்பனவாகும்.இதுவரையில் நிதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்த முக்கிய இரண்டு செயற்பாடுகளாகிய வரவு செலவுத்திட்ட மூலதனத்திற்கான வரையறைகள்,வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வரவு செலவிற்கான வரையறை ஆகியன மேற்குறிப்பிட்ட அமைச்சின் திட்ட அமுலாக்கற்பிரிவிற்கும்,வெளிவாரிவளங்கள் பிரிவிற்கும் மாற்றப்பட்டது.
இதனைவிட இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன.ஒன்று திட்ட அமுலாக்கம்,மற்றையது வெளிநாட்ட நாணயப்பரிமாற்றம் என்பனவாகும்.திட்ட அமுலாக்கற்குழு அரசாங்கத்தின் எல்லாத்திட்டங்களினதும் முன்னேற்றத்தினை மதிப்பீடு செய்ததுடன், அமைச்சரவையின் திட்டமிடல் குழுவிற்கு தனது ஆலோசனைகளையும்,தேவையான தீர்வுகளையும் சமர்ப்பித்தது. வெளிநாட்டு நாணய பரிமாற்றக்குழு வருடாந்த வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்திற்கான வழிகாட்டுதல்களை தயார்செய்து அமைச்சரவையின் திட்டமிடல் உபகுழுவின் அனுமதிக்காக சமர்ப்பித்தது.
மேலும். முதற்தடவையாக அமைச்சுச் செயலாளர்கள் தமக்குக் கீழ் உள்ள திணைக்கழங்களை நேரடியாக மேற்பார்வை செய்தல்,மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளுக்கான இணைப்புக் கடமைகளை மேற்கொண்டனர். இது திணைக்கழங்களின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை கோடிட்டுக் காட்டியது.இவற்றை நிவர்த்தி செய்வதற்காக் குழுவொன்ற நியமிக்கப்பட்டது. இக்குழு தனது ஆலோசனைகளில்“உள்ளக பயிற்சி நெறி” நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை முதன்மைப்படுத்தியதுடன், இப்பயிற்சி “உத்தியோகத்தர் கல்லூரி” ஒன்றினால் வழங்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைத்தது. இவ்வாறான சிபார்சு ஏற்கனவே 1961ஆம் ஆண்டு வில்மொற் ஏ பெரேரா (Wilmot A Perera) சம்பள ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஏற்பட்ட முக்கிய பெறுபேறாக 1966 ஆம் ஆண்டு “நிர்வாகக் கற்கைகளுக்கான கல்விநிலையம்” (Academy of Administrative Studies) என்ற பெயரில் உத்தியோகத்தர் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம்; முகாமைத்துவ உள்ளகப் பயிற்சிகள், நுட்பங்கள் போன்றவற்றை நிர்வாக உத்தயோகத்தர்களுக்கு வழங்கியதுடன், முகாமைத்துவ ஆலோசனைகளையும் வழங்கியது.