சமூக ஒப்பத்தக்கோட்பாடு காலத்தால் மிகவும் பழையதொரு கோட்பாடாகும்.இக்கோட்பாட்டின் செல்வாக்கினை கீழைத்தேச,மேலைத்தேச நாடுகளின் இலக்கியங்களில் காணமுடியும். கௌடில்யர் தனது ‘அர்த்த சாஸ்திரம்” என்ற நூலில் ‘ஒப்பந்தம்” பற்றிய கருத்துக்களைக் கூறுகின்றார். இதேபோல, மேற்குத்தேசத்தில் பிளேட்டோவுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சோபிஸ்டுகள் (Sophists) என அழைக்கப்பட்டவர்கள் ‘ஒப்பந்தக் கோட்பாடு” தொடர்பான கருத்துக்களைக் கூறியுள்ளனர். அத்துடன், கிரேக்கச் சிந்தனையாளராகிய பிளேட்டோ தனது நூல்களில் ‘ஒப்பந்தக் கோட்பாடு” பற்றி எழுதியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும்,அரிஸ்ரோட்டல் ‘அரசு இயற்கை நிறுவனம்” எனக் கூறுவதன்மூலம் பிளேட்டோவின் கருத்தினை ஆதரித்திருந்தார்.உரோமர்களும் தமது சட்டங்களில் “சமூக ஒப்பந்தம்” தொடர்பாக கூறியிருந்தனர். பின்னர் இக்கருத்து வலுவிழந்து காணப்பட்டது. ஆயினும், மத்திய காலப்பகுதியிலும்,அதற்குப் பின்னரும் ‘சமூக ஒப்பந்தம்” என்ற கருத்து அரசியல் சிந்தனையாளர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டது. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்கான ஆதரவு பெருகிக் காணப்பட்டது. இக்காலத்தில் வாழ்ந்த ஹக்கர் (Hooker) சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை தர்க்க ரீதியாக விளக்கியிருந்தார். டச்சு சட்டவல்லுனராகிய கியுகோ குறோசஸ் (Hugo Grotius) இக் கோட்பாட்டிற்கு முக்கியமளித்து ஊக்கமளித்திருந்தார். ஆயினும், உண்மையான சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களாக தோமஸ் கொப்ஸ், யோன் லொக், ஜீன் யக்கீயூஸ் ரூசோ ஆகிய மூவருமே முதன்மைப்படுத்தப்படுகின்றார்கள்.
இவர்கள் வெவ்வேறு காலப்பகுதியில்,வேவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர்கள்.தாம் வாழ்ந்த காலம், சூழல் என்பவைகளைப் பொறுத்து தமது அரசு பற்றிய கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.அரசாங்க ஒழுங்கமைப்பு இல்லாதிருந்தபோது மனிதர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததன் விளைவாக எழுந்ததே அரசு என இவர்கள் கூறுகின்றார்கள். அரசு தோன்றுவதற்கு முன்பு அரசாங்கம் என்று ஒன்றிருக்கவில்லை. அங்கு பலத்தைப் பிரயோகித்து நடைமுறைப்படுத்த ஒரு அதிகாரம் இருக்கவில்லை. இக்காலத்;தில் மனிதர்கள் இயற்கை நிலையில் வாழ்ந்தனர். இயற்கை நிலையில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தனர்?, ஒரு அரசாங்கத்தை அமைக்க ஏன் தீர்மானித்தனர்?,இவ்வொப்பந்தத்தைச் செய்த கட்சிகள் எவை?, அவ்வொப்பந்தத்தின் விதிகள் எவ்வாறிருந்தன?, என்பன பற்றி இவர்கள் விளக்குகின்றார்கள்.ஆயினும், இவ்வினாக்களுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் தொடர்பாக இவர்களுக்கிடையில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.ஆனால் அரசு என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அது ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக எழுந்தது என்ற கருத்தில் இவர்களிடையே ஒற்றுமை நிலவுகின்றது.
தோமஸ் கொப்ஸ்
தோமஸ் கொப்ஸ் 1558ஆம் ஆண்டிற்கும் 1679 ஆம் ஆண்டிற்கும் இடையில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர். 1651ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட லெவியாதன் (Leviathan) என்ற நூலில் சமூக ஒப்பந்தக் கோட்பாடு பற்றிக் கூறுகின்றார். இயற்கை நிலையில் மனிதர்கள் சமூகப்பிராணியாக வாழவில்லை.மனிதனின் இயல்பு பற்றிக் கொப்ஸ் கூறும்போது ‘இயற்கையில் மனிதன் சுயநலமிக்கவன், தன்னலம்கருதுபவன், தந்திரமானவன், தற்புகழ்ச்சியுடையவன்,கொடுமையானவன்,பேராசையுள்ளவன், ஆக்கிரமிப்பாளன்” எனக் கூறுகின்றார்.ஒவ்வொரு மனிதனும் சக மனிதனால் எதிரியாக நோக்கப்பட்டான். தனக்காக எல்லாவற்றையும் எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவற்றையும் பெற்று அதனை நீண்ட காலத்திற்குத் தனக்கென மட்டும் பாதுகாத்து வைப்பதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். மனிதர்கள் பசியுடன் திரியும் ஒநாய்களாக,ஏனையவர்களின் வாழ்க்கையினை விழுங்குபவர்களாக இருந்தனர். இதனால் இவர்களின் வாழ்வு தனிமையானதாக, ஏழ்மையானதாக,அபாயகரமானதாக, காட்டுமிராண்டித்தனமானதாக, குறுகியதாக இருந்தது. இச்சூழல் சகிக்கமுடியாததாக, மீளமுடியாததாக இருந்தது.மனிதர்கள் சமுதாயத்திலும்,வாழ்க்கை, சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் தீராத ஆசை கொண்டவர்களாக இருந்தனர். இயற்கையாகவே தமது வாழ்க்கையுடன் பிணைந்திருந்த துன்பம், பெரும்பயம்,போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வது பற்றி சிந்தித்து வந்தனர்.பொதுநலவாயம் அல்லது சிவில் சமுதாயம் ஒன்றினை உருவாக்குவதற்கு ஒவ்வொரு மனிதனும் மற்றைய மனிதர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
கொப்ஸ் வாழ்ந்த காலத்தில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றம்; நிகழ்ந்து கொண்டிருந்தது. மானிய முறைமை வீழ்ச்சியடைந்து முதலாளித்துவமுறை தோன்றிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அரசியலில் அரசனுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் பிணக்குகள் நிலவின. நாட்டில் குழப்பமான சூழ்நிலை இருந்தது. இதனால் நிலையான முதலாளித்துவ முறையினை ஆதரிக்க வேண்டிய அவசியம் கொப்;ஸிற்கு இருந்தது. வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்க்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அவ்வர்க்கம் தமது வியாபாரத்தையும், ஏனைய முயற்சிகளையும் கொண்டு நடத்துவதற்கு சமாதானமும், பாதுகாப்பும் அவசியம் என உணர்ந்தது. ஆனால் அச் சமாதானமும்,ஒழுங்கும் எவ்வாறு ஏற்பட வேண்டுமென்பது பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. இச்சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட கொப்ஸ் நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டுமென்று விரும்பினார். இதனால் தனியதிகார ஆட்சியென்ற கருத்தை உருவாக்கி கொப்ஸ் அரசிற்கு விளக்கம் கொடுத்தார். அதாவது ஏக இறைமை என்ற கருத்தினை உருவாக்குகின்றார். இராணுவ பலத்தாலேயே ஒழுங்கையும், அமைதியையும் நிலை நாட்ட முடியும் என்பது அவரது கருத்தாகும். இங்கிலாந்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையால் மனிதனுடைய இயற்கை வாழ்க்கை மிருகத் தன்மை¬யுடையதாகவும், இழிவானதாகவும் அமைந்திருந்தது. மனிதன் நரிபோல மற்றைய மனிதனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இதனால் மக்கள் தமது உரிமைகளையெல்லாம் தனிமனிதன் ஒருவனிடம் கொடுக்க வேண்டும்.அவன் மக்கள் எல்லோரையும் ஆட்சி செய்வதோடு, தான் இடும் கட்டளைகளுக்கு அடங்கி நடக்குமாறு அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவான் எனக்கூறுகின்றார்.
இயற்கை நிலையில், ஆட்சியற்ற நிலையில் தனிமனிதர்கள் எல்லோரும் சேர்ந்து சர்வாதிகாரம் உள்ள ஆட்சித் தலைவனிடம் தமது உரிமைகளையும்,சுதந்திரங்களையும் ஒப்படைக்கும் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்தைப் பற்றிக் கொப்ஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய சமூகத்தின் நோக்கம் ஒழுங்கையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தி தற்காத்துக்கொள்வதாகும்.இதனால் சமூகத்தில் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என கொப்ஸ் கூறுகின்றார்.சமூகம் என்பது தனிநபர்களின் சேர்க்கையாக இருப்பதால், அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு என்ற அதிகாரமுடைய நிறுவனம் அவசியம்.எனவே கொப்ஸ் சட்டபூர்வமானதும், அரசியல்மயமானதுமான ஒருதனி அரசினைக் கருத்தில் கொண்டிருந்தார் எனக் கூறலாம். சர்வாதிகாரமுடைய ஒருவனின் கரங்களில் அதிகாரத்தினையும், ஆதிக்கத்தையும் கொடுக்கப்பதன் மூலம் மன்னனைச் சட்டபூர்வமானவனாக்க கொப்ஸ் விரும்பினார்.
சமூகத்தில் சமாதானமும், நல்லாட்சியும் நடைபெறுவதற்காக தனிப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து தமது உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிரந்தரமாக எந்தவித நிபந்தனையுமின்றித் தம்மை ஆளுவோரிடம் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். மக்கள் வழங்கிய சம்மதத்தின் பேரிலேயே மன்னனுக்கு அதிகாரம் கிடைத்தது. இன்னோர்வகையில் கூறினால், ஆட்சி அதிகாரமுடையவன் பூரணமான அதிகாரமுடையவனாக இருந்தான்.அவன் கரங்களிலேயே சட்டம் முழுவதும் இருந்தது. இச்சட்டத்துக்கு அடிபணிய வேண்டியது மக்களின் கடமையாகும். சட்டத்திற்குப் பணியாவிட்டால் பலாத்காரத்தை பிரயோகித்துப் பணியச் செய்ய வேண்டும். சொத்து, இராணுவம், நிருவாகம், சட்டம்,நீதி என்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு சகல அதிகாரங்களுமுண்டு.
உள்ளுர் குழப்பங்களும், பிணக்குகளும் நிலவிய அன்றைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு ஒரு பரிகாரமாகவே இக்கொள்கையினை கொப்ஸ் உருவாக்கினார்.நாட்டில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டக் கூடிய ஒரு அரசன் தேவைப்பட்டான். பொருளாதார ரீதியில் புதிய மத்திய வகுப்பு முதலாளிகள் வர்க்கம் ஒன்று அப்போது உருவாகிக் கொண்டிருந்தது. அவர்களுக்கும் அமைதியான ஒரு சூழ்நிலைஅவசியமாயிருந்தது. ஆகவே இப்புதிய வர்க்கத்தின் நலவுரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய பலம் பொருந்திய ஆட்சியாளனும், ஆட்சியும் அவசியமாயிற்று. அத்தகைய ஆட்சியை உருவாக்கக் கூடிய ஒரு தத்துவத்தையே கொப்ஸ் உருவாக்கினார்.ஆகவே,இவரது கொள்கை நடுத்தர வர்க்கத்தினருக்காக எழுந்ததொரு கொள்கையெனவும் கூறுலாம்.
யோன் லொக்
யோன் லொக் 1632 ஆம் ஆண்டிற்கும் 1704 ஆம் ஆண்டிற்கும் இடையில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிறிதொரு அரசியல் தத்துவாசிரியராகும். இங்கிலாந்தில் மன்னனுக்கு முழுநிறை இறைமையினை வழங்க வேண்டும் எனக் கூறும் கொப்ஸின் கருத்திற்கு மாற்றாக,இங்கிலாந்தில் மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சி ஏற்படவேண்டும் என இவர் கூறுகின்றார். 1688 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆங்கிலப் புரட்சியையும், இரண்டாம் ஜேம்ஸின் ஆட்சி நீக்கத்தையும் இவர் ஆதரிக்கின்றார்.மாறியுள்ள புதிய சூழ்நிலையில் கொப்ஸ் கூறிய கருத்துகளுக்கு லொக் புதிய விளக்கம் கொடுத்தார். முழுநிறைவான முடியின் அதிகாரத்திலிருந்து மத்திய தரவர்க்கத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க விரும்புகின்ற லொக், அதற்கு எல்லை வகுக்க விரும்புகின்றார். எனவே சமூக உடன்படிக்கை என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.ஆங்கிலப் புரட்சி நடந்த இரண்டு ஆண்டுகளின் பின்பு சிவில் அரசாங்கத்தின் இரு ஒப்பந்தங்கள் (Two Treaties of civil Government) என்ற நூலை 1690 ஆம் ஆண்டு யோன் லொக் வெளியிட்டார்.இந்நூலில் லொக் தனது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை விளக்குகின்றார்.
லொக் காணும் மனிதன் கொப்ஸ் போலன்றி சுயநலமில்லாதவன்,தன்னலம் கருதாதவன்,ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லாதவன். ஏனைய சக மனிதர்களுடன் இயற்கைச் சட்டத்திற்கு இயைந்து,மனித நேயத்துடன் வாழவிரும்பும் சமூகப் பிராணியாக இருந்தான். அரசு சமாதானம்,அன்புணர்வு,நல்லெண்ணம்,பரஸ்பரஉதவி, பாதுகாப்பு கொண்டதாக இருந்தது.ஆகவே இயற்கை நிலையில் மக்கள் சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தனர் என லொக் கூறுகின்றார். சட்டத்தின் முன் எல்லோரும் சமனானவர்களாகும். வாழும் உரிமை ,சுதந்திரம், சொத்துக்கள்,தேக சுகம் என்பன மனிதர்களின் பிறப்புரிமைகளாகும். இயற்கைச் சட்டத்திற்கு முரணாகாதவகையில் தான் விரும்புகின்ற எதனையும் செய்கின்ற உரிமையே சுதந்திரமாகும். அதாவது, ஒருவர் தான் நினைத்தபடி மற்றவர் தலையீடின்றி தனது வாழ்க்கையை நடத்தும் சுதந்திரம், சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் சுதந்திரம் போன்றனவற்றையே லொக் சுதந்திரம் எனக்கூறுகின்றார்.
ஆனால், துரதிஸ்டவசமாக சிவில் சமூகத்தில் சமாதானத்தினைத் தொடர்ந்து பாகாக்க முடியாது போனது. சமூகத்தில் தரம்கெட்ட மனிதர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகள், இலஞ்ச ஊழல்கள் தொடர்ந்து இடைவிடாது நடைபெற்றன. பயங்கரமானதும், ஆபத்தானதுமான சூழலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும், தன்னைப்பாதுகாத்துக் கொள்வதற்கும், நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மனிதர்கள் சிவில் சமுதாயம் அல்லது அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.இதற்கு லொக் சமூக ஒப்பந்தம் எனப் பெயரிடுகின்றார். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், லொக் இரண்டு ஒப்பந்தங்கள் பற்றி கூறுகின்றார் எனலாம். ஒன்று “சிவில் சமுதாயத்திற்கு இடையிலான ஒப்பந்தம்;”. இரண்டாவது “அரசாங்கத்திற்குரிய ஒப்பந்தம்”. இது கூட்டுப் புரிந்துணர்வுடன் அரசாங்கத்தை உருவாக்கி, ஆட்சியாளனை தெரிவு செய்து, அவன் தீங்கிழைக்கின்றபோது நீக்கிவிடுகின்ற ஒப்பந்தமாகும்.இது சிவில் சமுதாய உருவாக்கத்திற்கு அவசியமாகும்.
சம்மதத்தின் மூலம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரம் மக்களின் அதிகாரமாகும். மக்களின் அதிகாரங்களை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்யாதிருப்பதற்காக லொக் திடமான பாதுகாப்புகளை ஏற்படுத்துகின்றார். அரசாங்கத்தை சட்டத்துறை, நிருவாகத்துறை என இரண்டாகப் பிரித்த லொக்,நிருவாகத்துறை சட்டத்துறையில் தலையிட முடியாது என்று கூறினார். வரி விதிக்கும் உரிமை நி;ர்வாகத்துறைக்குக் கிடையாது. சட்டசபை கூடி தொகுதிப் பிரதிநிதிகளின் சம்மதத்தோடு தான் வரி விதிக்கலாம். நிர்வாகத்துறை தனது உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் ஏகபோக உரிமைகளை வழங்கமுடியாது. சட்டத்துறையின்; அனுமதியோடு தான் வெளிநாட்டு விவகாரங்கள் கையாளப்பட வேண்டும். அரசாங்கம் தான் விரும்பியபடி யுத்தம் நடத்துவதையும், வரி விதிப்பதனையும் தடுக்கும் நோக்குடனேயே லொக் இவ்வாறு கூறியிருந்தார்.
அதிகாரங்களை யார் நிர்வகிப்பது என்பதே இங்கிருந்த மையப்பிரச்சினையாகும். மக்கள் இவற்றை நிர்வகிக்க முடியாது. ஆகவே சட்டத்துறையே இவற்றைச் செய்ய வேண்டும். சட்டத்துறை பிரதிநிதித்துவம் வாய்ந்தது. ஆரம்பத்தில் செய்து கொண்ட உடன்படிக்கையின்படியே சட்டத்துறை ஆட்சி செய்ய வேண்டும். சட்டத்துறைப் பிரதிநிதிகள் சொத்துள்ளவர்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு தெரிவு செய்யப்படும் சொத்துள்ளவர்களின் விருப்பப்படியே அதிகாரம் செலுத்தப்படும். வரி விதிக்கும் அதிகாரத்துக்கு இது பெரிதும் பொருத்தமானதாகும். தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்கின்படியே எடுக்கப்படும். இங்கு இப்பெரும்பான்மை என்பது சொத்துள்ளவர்களின் பிரதிநிதிகளையே குறிக்கின்றது. அவ்வாறாயின் சொத்தில்லாதவரின் நிலையென்ன? அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என லொக் கூறுகின்றார்.
சட்டத்துறை மக்களின் சம்மதத்தோடுதான் ஆட்சி செய்யவேண்டும். ஒப்பந்தத்தின்படி ஆட்சியாளர்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். இவ்வுரிமைகளைச் சட்டத்துறை பாதுகாக்கத் தவறினால்,மக்கள் புரட்சி செய்ய உரிமையுடையவர்களாகும். ஆனால் இவ்வுரிமை சொத்துள்ளவர்-களின் கரங்களிலேயே ஒப்படைக்கப்பட்டிருந்தது..
லொக் முன்வைத்த இறைமை மக்கள் மயமானதெனத் தோன்றினாலும், உண்மையில் சொத்துக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறினால் மாத்திரமே புரட்சி செய்யும் உரிமை அனுமதிக்கப்பட்டது. இவ்வுரிமையை முழுமக்களுக்கும் லொக் வழங்கவில்லை. மத்தியதர வர்க்கத்தினருக்கு மாத்திரமே இவ்வுரிமையை லொக் வழங்குகின்றார். ஆனால் மத்தியதர வர்க்கத்தினருக்கு எதிராகப் புரட்சி செய்யும் உரிமையை அவர் யாருக்கும் வழங்கவில்லை.
எனவே லொக் உருவாக்கிய பாராளுமன்ற ‘மக்கள் இறைமை’ சொத்துடைய ஒரு சிறிய தொகையினருக்கே பயனுடையதாக இருந்தது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சொந்தமான உரிமைகள் அல்ல. அவை சொத்துள்ளவர்களுக்கு மாத்திரம் உள்ள உரிமைகளாகும். எனவே லொக் மக்கள்ஜனநாயகத்தை விரும்பினார் என்று கூறுவதை விட சிறு குழுவினர் ஆட்சி நடத்துவதை விரும்பியவர் என்றே கூறலாம்.அரசாங்கம் பொது மக்களின் அரசாங்கமாகயிருக்கவில்லை. அரசியல் உரிமைகள் ஒரு குழுவுக்கே சொந்தமானதாக இருந்தன.
ஜீன் யக்கீயூஸ் ரூசோ
ஜீன் யக்கீயூஸ் ரூசோ 1712 ஆம் ஆண்டிற்கும் 1778 ஆம் ஆண்டிற்கும் இடையில் பிரான்சில் வாழ்ந்த பிரபலமிக்க கோட்பாட்டாளர்களுள் முதன்மையானவராகும். 1762ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ‘சமூக ஒப்பந்தம்” என்ற நூலில் தனது கோட்பாட்டினை விபரிக்கின்றார்.இவருடைய கருத்துக்கள் 1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்சியப் புரட்சிக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படுகிறது.
ரூசோ இறைமையின் முழுநிறைவான அதிகாரம், குடிமக்களின் முழுநிறைவான சுதந்திரம் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைக்கின்றார். இயற்கை நிலையில் மனிதர்கள் சுதந்திரமானவர்களாகவும், மகிழ்சியாகவும், தன்னிறைவுடனும், ஆரோக்கியத்துடனும், பயமின்றியும், யாரையும் பின்பற்றி வாழவேண்டிய தேவையின்றியும் வாழ்ந்தனர். உண்மையான சுதந்திரத்துடன்,சமத்துவமாக, தூய்மையுடன் எளிமையாக வாழ்ந்தனர்.ஆனால் இச்சூழ்நிலை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை. துரிதமாக ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சி,பொருளாதார துரித வளர்ச்சி என்பன சமூக அமைப்பை மாற்றியிருந்தது.நிரந்தர இருப்பிடம்,சொத்து என்பன ஏற்பட,மனிதன் நேர்மையற்றவனாக மாறத் தொடங்கினான்.இதனால்,எளிமையான இயற்கை வாழ்க்கையும்,மகிழ்சியும் இல்லாமல் போனது.
சமூக ஒப்பந்தத்தின் மூலம் இயற்கைச் சுதந்திரத்துக்குப் பதிலாக சிவில் சுதந்திரம் பெறப்பட்டது. சமூக ஒப்பந்தம் சமுதாயத்தின் தனிப்பட்டவர்களால் செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு தனிப்பட்டவனும் மிக உயர்ந்த ‘பொது விருப்பின்’ வெளிப்பாட்டுக்காகத் தம்மையும், தமது அதிகாரத்தையும் விட்டுக் கொடுத்து ஒவ்வொருவரும் முழுமையான “பொது விருப்பின்” பகுதியாக மாறுகின்றார்கள் என ரூசோ கூறுகின்றார்.
ரூசோவின் கோட்பாட்டின் மையப் பொருள் ‘பொதுவிருப்பம்” என்பதாகும். இக்கோட்பாடு மற்றெல்லாவற்றையும் விட நவீன அரசியல் சிந்தனையை வழிப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. சட்டத்தினை ஆக்கும் அதிகாரம்; மக்களுடையதேயாகும். பொதுவிருப்பத்தோடு ஒத்துப்போகும் சட்டமே உண்மையான சட்டமாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருக்கும் சபையிலேயே இப் பொதுவிருப்பு வெளிப்படுத்தப்படும். மக்கள் இறைமைக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ரூசோ தெளிவாக விளக்கியுள்ளார். பொதுவிருப்பம் என்பது அரசாங்கத்தின் விருப்பமல்ல. பிரதிநிதித்துவ (அரசாங்கம்) அமைப்பொன்று பொதுவிருப்பினை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அரசாங்கத்திற்கு நிர்வாக அதிகாரம் மட்டுமேயுள்ளது. சட்டத்தினை ஆக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கிடையாது. அது இறைமையாளர்களுக்குரியதாகும். அரசாங்கம் மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி மட்டுமேயாகும். சமூக ஒப்பந்தம் மக்களுக்கே முழுமையான அதிகாரத்தை வழங்குகின்றது. இவ்அதிகாரம் பொதுவிருப்பத்தால் வழிப்படுத்தப்படுவதோடு இறைமை என்ற பெயரையும் பெறுகின்றது. ரூசோவின் சிந்தனை இரண்டு விளைவுகளைத் தருகின்றது. ஒன்று,அரசாங்கத்தின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டாவது, அரசாங்கம் இறைமையின் துணை அமைப்பாகும்.இங்கு ரூசோ அரசாங்கத்திற்கு இரண்டாம்தர இடமே கொடுக்கின்றார்.
லொக் மக்களின் உரிமைகளை குறுகியதொரு வாக்காளத்தொகுதியிடம் வழங்கினார். ஆனால் ரூசோ அதை மாற்றி பொது மக்கள் எல்லோரிடமும் வழங்கினார். அதாவது மக்கள் உரிமையான இறைமையை அதிதீவிரமானதாக்கினார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் முக்கிய நோக்காகும். இப் பொதுவிருப்பம் நேரடியாக வெளிப்படுத்தப்படுவதாகும். ஒவ்வொரு மனிதனும்; வாக்குரிமையுள்ள சபை மூலம் பொதுவிருப்பினை வெளிப்படுத்தலாம். பிரதிநிதிகள் மூலம் நடத்தும் ஆட்சியை அவர் விரும்பவில்லை. மக்களிடத்து வழங்கப்பட்ட அதிகாரம் மாற்ற முடியாதது, பிரிக்கமுடியாதது, அழிக்க முடியாததுமாகும் எனக்கூறுகின்றார். இப் பொதுவிருப்பம் பின்வருமாறு வெளிப்படுத்தப்படலாம் என்பது ரூசோவின் கருத்தாகும்.
‘மக்கள் கூடியிருக்கும் சபையில் ஒரு சட்டம் பிரேரிக்கப்பட்டால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது நிராகரிக்¬கிறார்களா? என்பதல்ல விவாதம்.அவர்களின் பொதுவிருப்பத்துக்கு அது பொருத்தமுடையதா? அல்லவா என்பதே விவாதம். ஒவ்வொருவரும் தமது வாக்கினை வழங்கம்போது இவ்வகையிலேயே வழங்குவர். முடிவில் வாக்கு எண்ணப்படும்போது பொதுவிருப்பத்தின் உடன்பாடு கணித்துக்கொள்ளப்படுகின்றது. எனது விருப்பத்துக்கு மாறான அபிப்பிராயம் இருக்குமானால் நான் பொதுவிருப்பம் என்று கருதியது தவறென்றும் அது பொதுவிருப்பம் அல்ல என்பதும் தெரியவருகிறது. அப்போது நான் சுதந்திரமுள்ளவனாய் இருக்க முடியாது. பொது விருப்பத்துக்கு அடங்குவதே பிரஜைகள் எல்லோரது கடமையாகும். யாராவது பொது விருப்பத்திற்கு மாறாக இருந்தால் மற்றப் பிரசைகள் அவரைப் பொதுவிருப்பத்திற்குப் பணியச் செய்ய வேண்டும். அதனால் அவர் சுதந்திரம் உள்ளவராக ஆக்கப்படுவார்.”
ரூசோ சில விடயங்களை கொப்ஸ்சிடமிருந்தும், சில விடயங்களை லொக்கிடமிருந்தும் பெற்றுக்கொள்கின்றார்.உண்மையில் ரூசோ தனது கருத்துக்களை லொக்கின் சிந்தனைகளுடன் ஆரம்பித்து கொப்ஸ்சின் சிந்தனைகளுடன் முடிக்கின்றார். ரூசோவும், கொப்ஸ்சும் இயற்கைநிலையில் மனிதன் சுதந்திரமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தான் எனக்கூறுகின்றார்கள். மேலும், அரசிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் எடுத்துக்கூறுகின்றனர்.
சமூக ஒப்பந்தக் கோட்பாடு கருதுகோளாகக் கொள்ளும் மக்கள் சம்மதத்திலான ஒப்பந்தம் வரலாற்றின் எக்காலகட்டத்திலும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆதிகால மனிதர்கள், எவ்வித அரசியல் அறிவுமின்றி அத்தகைய ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது. தனிப்பட்டவர்கள் அரசியல் ஸ்தாபனங்கள் பற்றிய எவ்வித முன் அறிவுமின்றி, மிகவும் வளர்ச்சியடைந்த சமூக உணர்வுடன் செயற்பட்டார்கள் என்று கூறுவது தவறானது. வரலாற்று ஆதாரங்கள் மட்டுமன்றி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதற்கு வேறுஎவ்வித ஆதாரங்களும் இல்லை. சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்கள் அரசின் தோற்றத்திற்கான ஆதாரங்களைத் தேடவில்லை. பதிலாக, அவர்களின் பிரதான நோக்கம் அரசியல் அதிகாரத்திற்கான அடித்தளத்தினைத் தேடுவதாகவே இருந்தது, ஆயினும்,நவீன எண்ணக்கருவாகிய இறைமையின் வளர்ச்சிக்கு இவர்கள் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.லொக் அரசியல் இறைமையின் தீவிர ஆதரவாளனாகவுள்ளார். அதேநேரம், ரூசோ மக்கள் இறைமையின் தீவிர ஆதரவாளனாகவுள்ளார். ரூசோவின் மக்களிடமிருந்து இறைமைபிரிக்கமுடியாது என்ற கருத்து தற்போதைய சர்வஜனவாக்கெடுப்பின் தோற்றத்திற்குக் காரணமாகியது. ரூசோ அறிமுகப்படுத்திய நேரடி ஜனநாயகம் தற்காலத்தில் மறைந்துவிட்டாலும், அரசாங்க வேலைத்திட்டங்களில் இன்று மக்கள் பங்குபற்றுவதற்குத் துணையாகியது எனலாம். நவீன கோட்பாடாகிய வலுவேறாக்கத் தத்துவம் லொக்கினுடைய கருத்துக்கள் மூலமே பெறப்பட்டன எனலாம்.