அரசாங்கத்தின் முக்கிய மூன்று துறைகளாக சட்டத்துறை, நிர்வாகத்துறை,நீதித்துறை என்பன கூறப்படுகின்றன. இதில் சட்டத்துறையானது நாட்டுக்குத் தேவையான சட்டங்களை ஆக்குகின்ற பிரதான துறையாகவுள்ளது. இன்னோர்வகையில் கூறின் ஒரு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் சபை சட்டத்துறை என அழைக்கப்படும். சட்டத்துறையின் பிரதான கடமை சட்டத்தினை உருவாக்குவதாகும்.
சட்டத்துறை சட்டங்கள் பிறப்பிக்கப்படும் இடம் மாத்திரமல்லாது நாட்டின் ஒவ்வொரு பிரசையும் செய்ய வேண்டிய கடமைகள், அவர்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் என்பவைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் விதிகளை உருவாக்கும் இடமுமாகும். சட்டத்துறை பொது மக்களுடைய நலன்களை கவனித்துக் கொள்ளும் பாதுகாவலனாகும். நாட்டின் பொதுக் கொள்கைகள் சரியான வகையில் உருவாக்கப்படுகின்றனவா என்பதையும், இப் பொதுக் கொள்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை அவதானிப்பதும் சட்டத்துறையாகும்.
அரசாங்கத்தின் ஏனைய இரண்டு துறைகளிலும் பார்க்க சட்டத்துறை மிகவும் உயர்ந்ததாகும். சட்டத்துறை தனது கடமைகளை சரிவர ஆற்றும் போதே நிர்வாகத்துறையும், நீதித்துறையும் தனது கடமைகளைச் செய்ய முடியும். இன்னோர் வகையில் கூறின் சட்டத்துறையே நிறைவேற்றுத்;துறையும், நீதித்துறையும் இயங்குவதற்கான சட்டங்களை இயற்றுகின்றது. பெரும்பாலான நாடுகளில் சட்டத்துறையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுத்துறை உள்ளது. இதனால் சட்டத்துறையின் செயற்பாடுகள் அனைத்திற்கும் நிறைவேற்றுத்துறையும் பொறுப்பானதாகும். உதாரணமாக பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் மந்திரிசபையே உண்மையான நிறைவேற்றுத்துறையாகும். இது சட்டத்துறையின் ஒரு பகுதியாகும். இது சட்டத்துறையின்; செயற்பாடுகளுக்கு கூட்டாக பொறுப்பு வாய்ந்ததாகும்.
சட்டத்துறையின் தொழிற்பாடுகள்
சட்டத்துறை பொதுவாக பின்வரும் தொழிற்பாடுகளைச் செய்கின்றது.
-
சட்டத்துறை சட்டத்தினை ஆக்குகின்றதொரு சபையாகும். அரசாங்கத்தின் பிரதான துறையாகிய சட்டத்துறையினால் எல்லா சட்டங்களும் இயற்றப்படுகின்றன. பழைய சட்டங்கள் தற்போதைய சூழலுக்கு அல்லது தேவைக்குப் பொருத்தமற்றதாக இருப்பின் அதனை சட்டத்துறை திருத்தியமைக்கின்றது. அதேபோன்று வழக்கொழிந்து போன சட்டங்களை இல்லாதொழிக்கின்ற கடமையினையும் சட்டத்துறை செய்கின்றது.
-
சட்ட சபையில் சட்ட மசோதாக்களை சட்டத்துறை அறிமுகப்படுத்துகின்றது. இது சட்டத்துறையின் அடிப்படை கடமையாகும்.
-
மக்களிடமிருந்து வரிகளை அறவிடுவது சட்டத்துறையின் பிறிதொரு தொழிற்பாடாகும். இவ்வாறு அறவிடப்படும் வரிப்பணம் அரசாங்கத்தின் வௌ;வேறு அரச திணைக்களங்கள் சந்திக்கும் செலவீனங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இது சட்டத்துறையின் நிதி அதிகாரம் என வரைவிலக்கணப்படுத்தலாம். வரி எவ்வகையில் அறவீடு செய்யப்பட வேண்டும் என்பது சட்டத்துறையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் பொது மக்களுடைய முக்கியமான வினாக்களுக்கு முக்கியத்துவமளித்து அவற்றினை செயற்படுத்த வேண்டியது சட்டத்துறையின் பிரதான செயற்பாடாகும்.
-
பாராளுமன்ற அரசாங்க முறையுள்ள நாடுகளில் சட்டத்துறையானது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதன் மூலமும், கேள்விகளைத் தொடுப்பதன் மூலமும், தீர்மானங்களை ஒத்திவைத்தல் மூலமும் நிர்வாகத்துறையினைக் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிர்வாகத்துறை சட்டத்துறைக்குப் பொறுப்புக் கூற வேண்டும். நிர்வாகத்துறை தொடர்ந்து இயங்குவதற்கு சட்டத்துறையின் தொடர்ச்சியான நம்பிக்கையினைப் பெற்றிருக்க வேண்டும். அமைச்சரவையின் சட்டத்துறையின் பெரும்பான்மையினை இழக்கின்ற போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் நிர்வாகத்துறை தூக்கியெறியப்படுகின்றது.
-
சட்டத்துறை சில நிர்வாகத் தொழிற்பாடுகளையும் மேற்கொள்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்துறையின் மேற்சபையாகிய செனற்சபை ஜனாதிபதியுடன் இணைந்து சமஸ்டி அரசாங்கத்தில் நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமனத்தில் பங்கு வகிக்கின்றது. ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் எல்லா ஒப்பந்தங்களும் செனற்சபையின் 2/3 பங்கு பெரும்பான்மையினைப் பெற்றிருக்க வேண்டும். லஸ்கியின் வார்த்தையில் கூறுவதாயின் “சட்டத்துறை நிர்வாகத்தின் செயல்முறையினை அவதானித்து தனிநபர்களின் சுதந்திரங்களைப் பாதுகாக்கின்றது”.
-
சட்டத்துறை சில நீதித்துறை தொழிற்பாடுகளையும் செய்கின்றது. பிரித்தானியாவில் மேற்சபை மேன்முறையீட்டிற்கான உயர் நீதிமன்றமாகச் செயற்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் மேற்சபை ஜனாதிபதி அல்லது உப ஜனாதிபதி குற்றமிழைத்தார்களாயின் அவர்களை விசாரிக்கும் குற்றவியல் நீதிமன்றமாகத் தொழிற்படுகின்றது.
-
அனேக நாடுகளில் சட்டத்துறையானது சில தேர்தல் கடமைகளையும் செய்கின்றது. உதாரணமாக இந்தியப் பாராளுமன்றம் ஜனாதிபதி, உப ஜனாதிபதி தேர்தல்களை நடாத்துகின்றது. சுவிற்சர்லாந்து சட்டசபை சமஸ்டிக் கவுன்சில், நீதிபதிகள், இராணுவ ஜெனரல்கள் போன்றவர்களைத் தெரிவு செய்கின்றது. மேலும் தேர்தல் சட்டங்கள், பொதுத் தேர்தல்களுக்கான திகதிகள், இடைத் தேர்தல்கள் போன்றவற்றையும் சட்டத்துறையே தீர்மானிக்கின்றது.
-
சோசலிச சித்தாந்தங்களைப் பின்பற்றும் அரசுகளைத் தவிர ஏனைய அனேக அரசுகளின் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் சட்டத்துறையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் நிதி முகாமைத்துவம்,வங்கிகள், வரிக் கொள்கைகள் போன்றவைகளும் சட்டத்துறையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
-
சட்டத்துறை மக்களின் மனம் பாதிக்கக் கூடிய செயல்களைக் கண்டிக்கின்ற இடமாகவும் உள்ளது. பொது மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு மக்களுக்கு தீங்கு தரக்கூடியவைகள் களையப்படுகின்றன.
சட்டத்துறையின் கூறுகள்
பொதுவாக சட்டத்துறை இரு கூறுகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. ஒரு சபை கீழ் சபை எனவும், மறுசபை மேல் சபை எனவும் அழைக்கப்படுகின்றது. பிரான்ஸ், பிரித்தானியா,ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை இரு சபைகளைக் கொண்ட சட்டசபைக்கு உதாரணமாகக் கூறலாம். ஒரு சபையினைக் கொண்ட சட்ட சபைகளும் உலகில் காணப்படுகின்றன. இவ்வாறான சட்ட சபையினை ஒருசபை சட்ட ஆட்சி முறைமை என அழைக்கின்றார்கள். சட்டசபை இரு சபைகளைக் கொண்டு இயங்குமாயின் அதனை இருசபைகளைக் கொண்ட சட்டசபை ஆட்சிமுறைமை என அழைக்கின்றார்கள்.
இருசபை முறையின் வளர்ச்சி
புராதன காலத்திலிருந்து இங்கிலாந்தின் பாராளுமன்றம் இரு சபைகளைக் கொண்டே இயங்கி வருகின்றது. அங்குள்ள இரண்டு சபைகளும் பின்வரும் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டன. ஓன்று மேற்சபை அல்லது பிரபுக்கள் சபை,இரண்டாவது கீழ்சபை அல்லது பொது மக்கள் சபை ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சித் தத்துவம் ஒரு சபை முறையினை ஏற்பாடு செய்திருந்தாலும், பின்னர் ஐக்கிய அமெரிக்காவிற்கு இரு சபைகள் முறையே சிறந்தது என உணரப்பட்டு இரு சபைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று கீழ்சபை அல்லது பிரதிநிதிகள் சபை எனவும், இரண்டாவது மேற் சபை அல்லது செனட் சபை எனவும் அழைக்கப்படுகின்றது. பிரான்சியப் புரட்சிக்குப் பின்னர் அங்கு ஒரு சபை முறையிலான சட்டத்துறை உருவாக்கப்பட்டாலும், 1795 ஆம் ஆண்டு பிரான்சிய சட்டத்துறை இரு சபைகளைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. பொதுவாக சமஸ்டி அரசாங்க முறைகளைப் பின்பற்றும் நாடுகளுக்கு இரு சபைகளைக் கொண்ட சட்டசபை சிறந்ததாக கூறப்பட்டாலும், ஒற்றையாட்சி அரசாங்க முறைகளைப் பின்பற்றும் நாடுகளிலும் இரு சபைகளைக் கொண்ட சட்டசபை செயற்படுகின்றது.
இரு சபைகளின் நன்மைகள்
சமஸ்டி அரசாங்க முறைமை நிலவும் நாடுகளில் இரு சபை முறைமைகள் அவசியம் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில் சமஸ்டி முறைமையில் இரண்டு சபைகளின் பிரதிநிதித்துவம் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. கீழ் சபை முழு நாட்டினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதுடன், முழு நாட்டு மக்களினதும் நலன்களையும் உயர்த்துகின்றது. மேற்சபை சமஸ்டியில் இணைந்துள்ள அலகுகளின் நலன்களைப் பாதுகாப்பதுடன், அவற்றின் பிரதிநிதித்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
ஈரங்க சட்டத்துறை தனிநபர்களுக்கு எதிராக எடுக்கும் சர்வதிகார அல்லது எதேச்சதிகாரச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு ஈரங்க சட்டத்துறை உதவியாகவுள்ளது. இரண்டாவது சபை என்ற ஒன்று இல்லையாயின் கீழ் சபை கொடுங்கோண்மையாகவும், எதேச்சதிகாரமானதாகவும் வளர்ந்துவிடும். நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட இரு சபைகள் இயங்குமாயின் ஊழல், கொடுங்கோண்மை, வெறுப்பு போன்ற தீய பண்புகளைக் கொண்டதாக சட்டத்துறை வளர்வதைத் தடுக்க முடியும். இவ் இரு சபைகளும் சமமான அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் போது கீழ் சபை விடும் தவறுகளை மேல்சபை தடுத்து நிறுத்த முடியும். லெக்கி (Lecky) ஜே.எஸ். மில் (J.S mill) இக்கருத்தினை ஆதரிக்கின்ற சிந்தனையாளர்களாகும்.
அவசரத்தில் செய்யப்படுகின்றதும், தவறாகச் செய்யப்படுகின்றதுமான சட்ட மசோதாக்களை இரண்டாவது சபை பரிசோதனை செய்யும் பணியினைச் செய்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்ட்ட சட்டசபை பலமான ஆர்வமிகுதியாலும், பதட்டத்தினாலும் சட்டங்களை உருவாக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டாவது சபையிலுள்ள புலமைத்துவமும், அறிவும், ஆற்றலும் மிக்க உறுப்பினர்கள் சட்ட மசோதாக்களை மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும், நடுநிலையாகவும் இருந்து பகுப்பாய்ந்து மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் , மாற்றங்களை செய்து சட்டத்தினை ஆக்குவதற்கு உதவுகின்றனர்.
கீழ்சபை சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் பொது மக்களின் அபிப்பிராயத்திற்கு ஏற்ப தெரிவு செய்யப்படுகின்றது. இதனால் இச்சபை எப்பொழுதும் பொது மக்களின் கருத்துக்களைத் தான் பிரதிபலித்து நிற்கலாம். சமுதாயத்திலுள்ள பிரபுத்துவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படலாம். சட்டத்துறை சமூகத்தினுள் மேல்வர்க்க கீழ்வர்க்க மக்களுக்கு சமமாக பணியாற்றுவதற்கு மேல்சபை அவசியமானதாகும். இதற்கு சிறந்த உதாரணம் பிரித்தானியாவாகும். வர்க்க ரீதியான பாகுபாடு அற்ற சட்டத்துறைக்கு ஈரங்கச் சட்டசபை அவசியமாகும்.
ஈரங்க சட்டசபை நாட்டின் சில நலன்களைப் பூர்த்தி செய்வதற்கு சிறந்ததொரு முறையாகக் கூறப்படுகின்றது. சமுதாயத்தில் பல்வேறுபட்ட நிறுவனங்கள், கழகங்கள், அமைப்புக்கள் செயற்படுகின்றதுடன் ஏதோவொரு வகையில் சமுதாயத்திற்கு வேலை செய்கின்றன. உதாரணமாக தொழிலாளர் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், நிலப்பிரப்புக்கள், வர்த்தக சங்கங்கள் போன்றவற்றைக் கூறலாம். இவ்வமைப்புக்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஈரங்க சபை தேவையாகவுள்ளது.
அரசியல் சிந்தனையாளர்கள் எல்லோராலும் ஏகமனதாக ஈரங்க சட்டசபை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கீழ் சபையுடன் மேல்சபைக்கு குறிப்பிட்ட மசோதா தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மேற்சபையானது தேவையற்ற வினாக்களைத் தொகுத்து கீழ்சபையினை திணறடித்து விடும். கீழ்சபையின் தீர்மானங்கள் அனைத்தையும் மேல்சபை ஏற்றுக் கொண்டால், கீழ் சபை செய்யும் தவறுகள் அனைத்திற்கும் மேற்சபையும் பொறுப்பேற்றதாகிவிடும். மேலும் ஈரங்க சட்டசபையினை எதிர்ப்போர் இரண்டாவது சபையானது தேவையற்ற காலதாமதம், பணவிரயம், கீழ்சபையின் சர்வதிகாரப் போக்கினைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்குத் துணை போகலாம். எனவே இரண்டாவது சபையானது தேவையற்றதாகும் எனக் கூறுகின்றார்கள்.