(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.04, 2014.01.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இந்து சமுத்திரப் பிராந்திய கரையோர நாடுகளின் கடற்பாதுகாப்பிற்கான ஒழுங்கமைப்பிலுள்ள கூட்டுறவினை மேலும் தரமுயர்த்துவதற்காக 2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் கூட்டு ஓப்பந்தம் ஒன்றில் இந்தியா,இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள்; கைச்சாத்திட்டன. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிரேஸ்ட்ட நிலை அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் மட்டத்தில் கடற்பாதுகாப்புத் தொடர்பாக மூன்று நாடுகளும் நடாத்திய தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இவ் ஒப்பந்தத்திற்கான ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டன. முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் விசேட பொருளாதார வலயம் (Exclusive Economic Zones (EEZ) தொடர்பான பரஸ்பர கூட்டு இந்தியா,இலங்கை,மாலைதீவுகள் ஆகியநாடுகளின் கரையிலிருந்து 200 கடல்மைல் தூரத்தினை அவதானிக்க கூடிய வகையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
இதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கரையோரங்களிலுள்ள இந்தியா,இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் எதிர்காலத்தில் தாம் எதிர்கொள்ளவுள்ள கடற்பாதுகாப்பு தொடர்பான சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்குத் தேவையான எதிர்கால திட்டங்களை வரைந்து கொண்டதுடன், அதனை நடைமுறைப்படுத்தவும் உடன்பட்டுக் கொண்டன.
இவ் ஒப்பந்தம் கடற்பாதுகாப்புடன் தொடர்புடைய ஆராட்சி, ஆபத்திலிருந்து விடுவித்தல் போன்றவற்றிற்கான கூட்டுச் செயற்பாடுகளில் பரஸ்பரம் விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும் கடற்கரையோரங்களில் ஏற்படும் எண்ணெய் கழிவுகளால் சூழல் மாசுபடுதலைத் தடுத்தல், நட்புறவினை விஸ்தரித்தல், கடல் பயிற்சி, கடற்கரையோரங்களில் நிகழும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறுதல், கடற்கொள்ளை போன்றவற்றைத் தடுத்தல் தொடர்பாகவும் இவ் ஒப்பந்தம் எடுத்துக் கூறுகின்றது.
இந்தியா தனது தேசிய கடற்பாதுகாப்பின் தரத்தினை எந்தளவிற்கு உறுதியானதொரு நிலையில் பராமரிக்க எண்ணுகின்றதோ அந்தளவிற்கு தமது கடற்பாதுகாப்பின் தரத்தினை இவ் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைந்து கூட்டாகப் பராமரிக்க முடியும் என இலங்கையும், மாலைதீவும் நம்புகின்றன.
சீனாவின் செயற்பாடு
முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில நாட்களில் கவாடர் (Gwadar) துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீன துறைமுக பொறியியல் நிறுவனத்தினால் விஸ்தரிக்கப்பட்ட கொள்கலன் துறைமுகம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இத்துறைமுகத்தின் 85 % பகுதியை சீனாவின் இந்நிறுவனமே அடுத்து வருகின்ற 35 வருட காலத்திற்கு நிர்வகிக்கவுள்ளது.
மேலும் பாக்கிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் துறைமுக அபிவிருத்திக்காக தொடர்ந்தும் சீனா முதலீடு செய்து வருகின்றது. இதன்மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை சீனா அதிகரித்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தகச் செல்வாக்கு அதிகரிக்கின்ற போது வர்த்தகத்தினைப் பாதுகாக்கின்ற வகையில் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை சீனாவிற்கு உள்ளது.
இந்தியாவின் இலக்கு
இந்தியாவின் தெற்காசிய அயல்நாடுகளாகிய பாக்கிஸ்தான், வங்காள தேசம்,நேபாளம், மியன்மார், இலங்கை போன்ற நாடுகள் சீனாவிற்கு மிகவும் விசுவாசமான நாடுகளாக மாறியுள்ளதுடன், இந்நாடுகளுடன் இணைந்து கடல் வழித்தொடர்பாடலையும் சீனா உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புத் தந்திரோபாயச் சிந்தனையில் பெரும் அச்சம் உருவாக்கியது.
தெற்காசியாவில் சீனாவினால் உருவாக்கப்பட்டிருக்கும் முத்துமாலைத் தொடரினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தினை இல்லாமல் செய்வதுடன், பிராந்திய அதிகாரச் சமனிலைக்கான ஒரு ஆரம்பமாக இந்தியா இவ் ஒப்பந்தத்தினை கருதுகின்றது. இதன்மூலம் இந்தியாவும், சீனாவும் தமக்கிடையில் தந்திரோபாய பாதுகாப்பு புரிந்துணர்வினை உருவாக்கியுள்ளதுடன் இருநாடுகளும் ஒருவர்பற்றி மற்றொருவர் கொண்டிருந்த அச்சவுணர்வினை புறந்தள்ள முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவினை சூழவுள்ள நாடுகளின் பௌதீகப் பாதுகாப்பே இந்தியாவின் பாதுகாப்பினைத் எதிர்காலத்தில் தீர்மானிக்கவுள்ளது. இதற்குச் சவாலாக முத்துமாலைத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.இச்சவால்களை எதிர்கொள்ளவே இந்தியா பிராந்திய கடற்கூட்டுறவு என்ற முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையுடனும் மாலைதீவுடனும் கைச்சாத்திட்டுள்ளது. இவ்வாறான ஒப்பந்தங்களை இந்து சமுத்திரப்பிராந்தியத்திலுள்ள ஏனைய கரையோர நாடுகளாகிய கென்யா,ஒமான்,தன்சானியா போன்ற நாடுகளுடன் விஸ்தரிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
இதன் ஒருபகுதியாக இந்து சமுத்திரப் பிராந்திய கரையோரநாடுகளுக்கான “பொதுவான கடற்பாதுகாப்பு” என்பது தொடர்பாக இந்தியா கலந்துரையாடி வருகின்றது. கடற்பாதுகாப்பு தொடர்பாக நீண்டகால தந்திரோபாயத்தினை வகுத்து இதன் அடிப்படையில் இந்தியா மிகவும் விரைந்து செயற்பட்டு வருகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கடற்பாதுகாப்புத் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கான பொறுப்பினை இந்தியா பொறுப்பெடுக்குமாயின், கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலுக்காக இந்து சமுத்திரப் பிராந்திய கடற்கரையோர நாடுகளில் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் சீனாவிற்கு ஏற்படலாம்.
முடிவுரை
நீண்டகாலமாக இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பாக பூகோள வல்லரசுகளுக்கு இடையில் நிலவி வந்த அவநம்பிக்கையின் அளவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பலதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் படிப்படியாக குறைவடைதவற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும்ää சீனாவிற்கும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் உருவாகியுள்ள அவநம்பிக்கை படிப்படியாகக் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆயினும் ஐக்கிய அமெரிக்கா தென்சீனக்கடல், அராபியக்கடல், பாரசிகக்குடா ஆகியவற்றில் உருவாக்கியுள்ள கடல் உட்கட்டமைப்புத் திட்டத்துடன் சீனா உருவாக்கியுள்ள முத்துமாலைத் தொடர் தொடர்புபடுதுடன், சீனாவின் கடல்வழித் தொடர்பாடல் மத்தியகிழக்குடனும் தொடர்புபடுகின்றது. இதனை ஐக்கிய அமெரிக்கா தனக்கான அச்சுறுத்தலாகவே கருதுகின்றது. இந்நிலையில் ஆசியப்பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் வியூகங்களை வகுத்து, ஆசியாவின் அதிகார மையமாக தான் வளர்வதற்கு ஏற்ற இராணுவக் கட்டமைப்பினை ஆசியப் பிராந்தியம் முழுவதும் உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் கடற்தொடர்பாடல் வலைப் பின்னலில் புதியதொரு செய்தியை சீனாவிற்கு வழங்கியுள்ளதாக கருதலாம்.