ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி)

இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கங்களிடம் உள்ளது. இதனால் சிவில் சேவை அமைப்பு விஸ்தரிக்கப்பட்டதுடன்,அதன் வேலைப்பழுவும் அதிகரித்தது. சிவில் சேவை அமைப்பில் ஏற்பட்ட விஸ்தரிப்பினால் சிவில் சேவையாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டது. அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்தி, மக்களுக்குத் தூய்மையான சேவையை வழங்குவதற்குப் புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் தேவைப்பட்டன. தூய்மையற்ற நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்யக்கூடிய ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. இதுவே பின்னர் ஒம்புட்ஸ்மன் என அழைக்கப்பட்டது.

ஒம்புட்ஸ்மன் என்ற பொறுப்பு வழங்கப்பட்ட நபர், பல்வேறுபட்ட நிறுவனங்களிலிருந்து வரும் முறைப்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பவராக இருப்பார். பல்கலைக்கழகங்கள் வைத்தியசாலைகள் சிறைச்சாலைகள் போன்ற பல நிறுவனங்களின் முறைப்பாடுகளை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்க முடியும். உண்மையான ஒம்புட்ஸ்மன், முறையான, திறனுடைய செயற்பாட்டைக் கொண்டிருப்பார். சட்டசபையின் ஒரு பகுதியாக அல்லது அரசியல் யாப்பின் ஒரு பகுதியாகச் செயற்படமாட்டார்.

பொது நிர்வாகம் மீதான மக்களின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், பொது நிர்வாகத்தைப் புலன் விசாரணை செய்யவும், விமர்சிக்கவும், தனது கருத்துக்களை வெளியிடவும் இவருக்கு அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்புட்ஸ்மன் முறைப்பாடுகளைத், தபால் மூலம், தொலைபேசி மூலம் – சில நேரம் நேரடியாகவும் – பெற்றுக் கொள்ள முடியும். முறைப்பாடுகள் கிடைத்தவுடன் தொடர்புடைய நிறுவனம் அல்லது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதுடன், மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் புலன் விசாரணைகளையும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு பெற்றுக் கொள்ளும் முறைப்பாடுகளை ஆரம்ப நிலையில் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வார்கள். இதன் மூலம் நிர்வாகச் செயற்பாட்டில் காணப்படும் தவறான செயற்பாடுகளைக் கண்டறிய முயற்சிப்பார்கள். தேவைப்படும் பட்சத்தில் முறைப்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனம் அல்லது அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தருவதன் மூலம் அத்தவறுகளைக் கண்டறிந்து திருத்துவதற்கு முயற்சிப்பார்கள்.

உலக நாடுகளின் அனுபவம்

ஓம்புட்ஸ்மன் நிர்வாக முறையானது உலக நாடுகள் பல வற்றில் காணப்படும் ஓரு நிறுவனரீதியான நிர்வாக முறையாகும். சுவீடன்,பின்லாந்து,டென்மார்க், நோர்வே நியூசிலாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், இலங்கை போன்ற நாடுகளில் இவ்வமைப்பு முறைமை சிறப்பாக இயங்குகின்றது. ஆயினும் இந்நாடுகளில் காணப்படும் ஒம்புட்ஸ்மன் முறைகளில் பல்வேறுபட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் தனக்குகந்த ஒம்புட்ஸ்மன் முறையை உருவாக்கிப் பின்பற்றுகின்றன. எனவே பொதுமைப்படுத்தி ஒம்புட்ஸ்மன் முறையை விளங்கிக் கொள்வதை விட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்பான இயல்புகளின் ஊடாக ஒம்புட்ஸ்மன் முறையை விளங்கிக்கொள்வதே சிறப்பானதாகும்.

சுவீடன்

1809ஆம் ஆண்டு சுவீடன் தனது முதலாவது அரசியல் திட்டத்தை உருவாக்கிய போது ஒம்புட்ஸ்மன் என்ற குறைகேள் அதிகாரியையும் உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் உலகத்துக்கு இவ்வாறான ஓர் அமைப்பை உருவாக்கிக் கொடுத்த முதல் நாடு என்ற பெயரையும் சுவீடன் பெற்றுக்கொண்டது.

இவ்வாறான ஓர் அமைப்பு அவசியம் என்பதைச் சுவீடன்; மக்கள் தமது வரலாற்றின் ஊடாக அறிந்து கொண்டார்கள். 1809ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தை உருவாக்கியவர்கள், சுவீடனின் வரலாற்றுப் பரிமாணங்களுக்கு ஊடாகவே இந் நிறுவனத்தின் அவசியத்தை நியாயப்படுத்துகின்றார்கள்.

1709ஆம் ஆண்டு சுவீடனை ஆட்சி செய்த பன்னிரண்டாம் சார்ள்ஸ் (Charles XII) மன்னன் ரஷ்ய மன்னனால் தோற்கடிக்கப்பட்டான். சுவீடிஷ் மன்னன் துருக்கியில் தஞ்சம் புகுந்து பல வருடங்கள் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் சுவீடனில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து காணப்பட்டது.

சுவீடனில் சட்டம், ஒழுங்கைச் சீர்ப்படுத்தவும், சிவில் சேவையாளர்களின் கடமைகளை அவதானிக்கவும் ஓர் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இவ்வலுவலகம் நீதிக்கான அரசனின் அலுவலகம் (Office of the Kings Chancellor of Justice) என அழைக்கப்பட்டது. இவ் அலுவலக நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர் வேந்தர் (Chancellor) என அழைக்கப்பட்டார். நீதிக்கான அரசனின் நிர்வாக அலகு தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதில் காத்திரமாகப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தனிமனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தல் என்பது நிர்வாகத்துறையின் சுதந்திரமான செயற்பாட்டினால் ஏற்படுத்தப்பட வேண்டும். நீதிக்கான அரசனின் நிர்வாக அலகு சட்டத்துறையின் முக்கியத்துவத்தைக் குறைத்திருந்;தது. இதனால் பாராளுமன்றம் நீதிக்கான அரசனின் நிர்வாக அலகின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தப் பல தடவைகள் முயற்சி செய்தது. இம்முயற்சி 1809ஆம் ஆண்டு சாத்தியமானதுடன் பாராளுமன்றம் முதலாவது நீதிக்கான வேந்தரை (Chancellor of Justice) நியமித்துக்கொண்டது. இதுவே ஒம்புட்ஸ்மன் அமைப்பு முறைமையின் முதற்படியாகும்.

1809ஆம் ஆண்டு முதலாவது அரசியல் திட்டம் உருவாக்கப்பட்ட போது, ஒம்புட்ஸ்மன் முறைமை ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் சட்டத்துறைக்கும், நிர்வாகத்துறைக்கும் இடையிலான அதிகாரப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. ஒம்புட்ஸ்மன் முறைமை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை, மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை நிறுவன ரீதியாகப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ஆனாலும் காலத்துக்குக் காலம் இவ் ஒம்புட்ஸ்மன் முறைமையில் நிறுவன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுப் புதிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

முதலாம் உலக யுத்தத்தின் போது இராணுவத்தின் அதிகாரத்தை மேற்பார்வை செய்வதற்கான சிவில் சேவைக்குப் புறம்பான ஒம்புட்ஸ்மன் முறை 1915ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இராணுவ ஒம்புட்ஸ்மன் என அழைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் இராணுவ ஒம்புட்ஸ்மன் நீதி ஒம்புட்ஸ்மனுடன் இணைக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் படைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை இதற்கான காரணமாகும். மேலும் 1957ஆம் ஆண்டு நீதி ஒம்புட்ஸ்மன் மாநகர ஆட்சியின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டது. இதனால் ஒம்புட்ஸ்மனின் வேலைப்பழு அதிகரித்தது.

ஒம்புட்ஸ்மனின் வேலைப்பழு அதிகரித்தமையினால், 1967 ஆம் ஆண்டு ஒம்புட்ஸ்மனின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதாயிற்று. இதனால் மூன்று வகையான ஒம்புட்ஸ்மன் முறைமை உருவாக்கப்பட்டது.

  1. ஒம்புட்ஸ்மன், நீதி மன்ற விசாரணைகளுக்குப் (Courts of Justice) பொறுப்பானதாகும். வழக்குத் தொடுநர்கள், பொலிஸ்,ஆயுதப்படைகள் போன்றவற்றை இவ்வமைப்பு மேற்பார்வை செய்யும்.
  2. ஒம்புட்ஸ்மன், சமூக பொது நலக் கல்வி நிறுவனங்களை மேற்பார்வை செய்யும்.
  3. ஒம்புட்ஸ்மன், வரிவிதிப்பிற்கான மதிப்பீடு, வரி செலுத்தாதோர் மீதான தண்டனை, சிவில் நிர்வாக விடயங்கள் போன்றவற்றை மேற்பார்வை செய்யும்.

புதிதாக ஒம்புட்ஸ்மன் முறைகள் ஏற்படுத்தப்பட்டுப் பணிகள் விஸ்தரிக்கப்பட்டாலும், அதன் வேலைப்பழுக்கள் குறைவடையவில்லை. இதனால், 1975ஆம் ஆண்டு ஒம்புட்ஸ்மன் முறையில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, 1976ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின்படி ஒம்புட்ஸ்மன் நான்காக உருவாக்கப்பட்டது. ஆயினும், இன்று சுவீடனில் ஐந்து வகையான ஒம்புட்ஸ்மன் முறைமைகள் காணப்படுகின்றன.

பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்

பாராளுமன்ற ஒம்புட்ஸ்மன் எல்லா அரசுகள்,மாநகர சபைகள் என்பவற்றை உள்ளடக்கி மேற்பார்வை செய்யும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கும். ஆனால் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோரை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இதற்குக் கிடையாது. இங்கு ஒம்புட்ஸ்மன் என்ற பதமானது பொதுவாக பாராளுமன்ற ஒம்புட்ஸ்மனையே குறித்து நிற்கின்றது.

வர்த்தக ஒம்புட்ஸ்மன்

இது பாராளுமன்ற ஒம்புட்ஸ்மன் போன்றதல்ல. வர்த்தக ஒம்புட்ஸ்மன் (Antitrust Ombudsman) பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டதுமல்ல. இது அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஓர் ஒம்புட்ஸ்மன் ஆகும். இதன் பணி வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை மேற்பார்வை செய்வதாகும். வர்த்தக நடைமுறைச் சட்டம் என்பது சுவீடனில்; யுவெவைசரளவ டுயற என்றே அழைக்கப்படுகின்றது. இவ் ஒம்புட்ஸ்மனின் செயற்பாட்டில் அரைப்பங்கு, சுயமாக ஆரம்பிக்கப்படுகின்றது. அரைப்பங்கு செயற்பாடு ஒரு நிறுவனம் தொடர்பாக மறு நிறுவனம் செய்யும் முறைப்பாடுகளைக் கொண்டு ஆரம்பிக்கப் படுகின்றது. புலன் விசாரணையின் பின்னர் ஒம்புட்ஸ்மன் கட்டுப்பாடான நடைமுறைகளை மேற்கொள்வார். இவ்வகையில், இந் நிறுவனம் அநேக பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது.

நுகர்வோர் ஓம்புட்ஸ்மன்

நுகர்வோர் ஓம்புட்ஸ்மன் 1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் கடமைகள் நுகர்வோர் சட்டத்தைப் பாதுகாப்பதும், நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதுமாகும்.

வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மன்

1917ஆம் ஆண்டு சுவீடனில் வெகுஜனத் தொடர்பு ஊடக மன்றம் (Swedish Press Council) ஆரம்பிக்கப்பட்டது. உலகில் உள்ள இவ்வாறான மன்றுகளில் இது மிகவும் பழைமையானது எனக் கூறப்படுகின்றது. ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மன் அலுவலக உருவாக்கத்துக்கு முன்னர் பத்திரிகைகள் தொடர்பாகச் செய்யப்படும் முறைப்பாடுகளை இவ் வெகுஜனத் தொடர்பு ஊடக மன்றமே விசாரித்து வந்தது.

ஆனால் இப்போது இவ்வாறான முறைப்பாடுகள் முதலில் வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மனுக்கே செய்யப்படுகின்றன. இவ் ஓம்புட்ஸ்மன் பத்திரிகைகளின் வன்முறையான போக்குகளைச் சுயமாக விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரத்தினைப் பெற்றிருந்தது. இதனை விடப் பத்திரிகைகளின் வன்முறைகள் தொடர்பாகத் தனிமனிதர்கள் வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மனிடம் முறைப்பாடு செய்ய முடியும். அதாவது பத்திரிகைகள் தமக்குரிய தர்மத்தை அல்லது நீதியை மீறுகின்றன என ஒரு தனிமனிதன் கருதுகின்ற பட்சத்தில் ஓம்புட்ஸ்மனிடம் முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறான முறைப்பாடுகளை ஓம்புட்ஸ்மன் பெற்றுக் கொண்ட பின்னர், அதனைத் திருத்தியமைத்து அதற்கான பரிகாரத்தினை மேற்கொள்ள முயற்சி செய்வார். அல்லது குறிப்பிட்ட பத்திரிகையின் குறித்த செய்திக்கான நியாயத்தினைக் கேட்டறிந்து மக்களுக்குத் தெரியப்படுத்துவார். இவ்வகையில் இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கான ஓம்புட்ஸ்மன், விசாரணையை ஆரம்பிக்கும். வன்முறை நிகழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டால் இவ்விடயம் வெகுஜனத் தொடர்பு ஊடக மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும். அல்லது வெகுஜனத் தொடர்பு ஊடக மன்றத்தின் அனுமதியின்றிக் குறிப்பிட்ட பத்திரிகையைத் தடை செய்யலாம்.

சம சந்தர்ப்பத்துக்கான ஓம்புட்ஸ்மன்

1980ஆம் ஆண்டு பால் சமத்துவம் தொடர்பாக ஒரு சட்டம் சுவீடனில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி பால் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டப்படுதலோ அல்லது தொல்லைக்கு உட்படுத்தப்படுதலோ கூடாது. பால் அடிப்படையிலான சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சட்டம் அமுல்படுத்தப்படுவதை அவதானித்துக் கொள்வதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே சம சந்தர்ப்பத்திற்கான ஓம்புட்ஸ்மன் ஆகும். இவ் ஓம்புட்ஸ்மன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. ஒருவர் பால் ரீதியாகப் பாகுபாடு அல்லது தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக உணரும் பட்சத்தில் இவ் ஓம்புட்ஸ்மனுக்கு முறைப்பாடு செய்யலாம்.

பின்லாந்து

சுவீடனின் ஒம்புட்ஸ்மன் முறையினால் கவரப்பட்ட முதல் நாடு பின்லாந்து ஆகும். 1919ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தின் மூலம் பின்லாந்து தனது நாட்டில் ஒம்புட்ஸ்மன் முறையை ஏற்படுத்திக் கொண்டது. பின்லாந்தின் ஒம்புட்ஸ்மன் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுகின்றார். இவரது பதவிக்காலம் நான்கு வருடங்களாகும். நிர்வாக அதிகாரங்கள், நீதிமன்றச்சட்டங்கள், மாநகரசபைகள் போன்றவற்றின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வது இவருடைய பணியாகும். சுவீடனின் ஒம்புட்ஸ்மன் போன்று, பின்லாந்தின் ஒம்புட்ஸ்மனின் நீதிவிசாரணை மிகவும் சிறப்பானதாகும். பின்லாந்தின் ஒம்புட்ஸ்மன் ஆழமான புலனாய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். புலனாய்வுக்காக அரசாங்கத்தின் எல்லா ஆவணங்களையும், தகவல் முறைகளையும் பயன்படுத்த முடியும். தேவைப்பட்டால் பொலிஸ் விசாரணையை நடாத்தும் படி கட்டளையிடலாம். அரசாங்க அதிகாரிகள் சட்டப்படி செயற்படவில்லை என ஓம்புட்ஸ்மன் முடிவு செய்தால், சட்டத்தை முறையாகப் பிரயோகிக்கும்படி ஆலோசனை கூறலாம். உத்தியோக பூர்வமான கடும் கண்டனத்தைத் தெரிவிக்கலாம். மோசமான தவறாயின் உத்தியோக பூர்வமாகக் குற்றவியல் வழக்கினைத் தொடுக்கலாம். வழக்குத் தொடுக்க இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் இவரது அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. இவருடைய சட்ட வியாக்கியானத்துக்கு நீதிமன்ற விவாதத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

பின்லாந்தில் விசேட ஓம்புட்ஸ்மன் முறைகளும் உள்ளன. பால் சமத்துவம்,சிறுவர்களின் பொது நலன், சிறுபான்மை இனங்களின் உரிமைகள்,நுகர்வோர் பாதுகாப்பு, நோயாளர் பாதுகாப்பு போன்றவற்றிற்கான ஓம்புட்ஸ்மன் முறைகள் உள்ளன.

டென்மார்க்

1953ஆம் ஆண்டு டென்மார்க் பாராளுமன்றம் சிவில் சேவை, இராணுவ நிர்வாகம் போன்றவற்றை மேற்பார்வை செய்வதற்காக ஒன்று அல்லது இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட ஒம்புட்ஸ்மனைத் தெரிவு செய்து கொண்டது. டென்மார்க் ஒம்புட்ஸ்மன் சிவில் சேவையாளர்கள், அமைச்சர்கள், ஏனையவர்கள் மீது புலன் விசாரணை மேற்கொள்ளும். ஆயினும், சுவீடன், பின்லாந்து போன்று டென்மார்க் ஒம்புட்ஸ்மன் நீதிமன்றச் சட்டங்கள் மீதோ அல்லது வேறு நீதி, நிர்வாக விடயங்கள் மீதோ புலன் விசாரணை செய்ய முடியாது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

  1. நீதி மன்றங்கள் மீது ஒம்புட்ஸ்மன் விசாரணை செய்வது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு முரணானதும் ஆபத்தானதுமாகும்.
  2. நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசேட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.

நோர்வே

1952ஆம் ஆண்டு நோர்வே ஒம்புட்ஸ்மன் முறையை உருவாக்கியது. ஆனால், ஆரம்பத்தில் இது இராணுவத் தேவைகளுக்கான ஓர் ஒம்புட்ஸ்மன் முறையாகவே இருந்தது. 1962ஆம் ஆண்டு நிர்வாகத் தேவைகளுக்கான ஒம்புட்ஸ்மன் உருவாக்கப்பட்டது. நோர்வே ஒம்புட்ஸ்மன் அமைப்பில், சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளின் ஒம்புட்ஸ்மன் முறையின் செல்வாக்குக் காணப்பட்டிருந்தது. ஆனால் நீதி மன்றங்கள், நீதிமன்ற அலுவலகங்கள் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை. தற்போது, நோர்வேயில் பின்வரும் ஓம்புட்ஸ்மன் முறைகள் உள்ளன.

பாகுபாட்டுக்கு எதிரான, சமத்துவ ஓம்புட்ஸ்மன்

1978ஆம் ஆண்டு,பாகுபாட்டுக்கு எதிரான சமத்துவ ஓம்புட்ஸ்மன் நோர்வேயில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பால் சமத்துவத்துக்கான ஓம்புட்ஸ்மனாக மாத்திரமே இது இருந்தது. 2006ஆம் ஆண்டு பால் சமத்துவத்துடன் பொதுவான பாகுபாட்டுக்கு எதிரான ஓம்புட்ஸ்மனாக மீள ஒழுங்கமைக்கப்பட்டது.

இன்றைய ஓம்புட்ஸ்மனின் நோக்கம் பால் சமத்துவச் சட்டத்தை அமுல்படுத்துவதாகும். மேலும் இனத்துவம், தேசிய பிறப்பு, வம்சம், தோலின் நிறம், மொழி, மதம், இனவழித் தொடர்பு என்பவற்றின் வழி பாகுபாடு காட்டப்படுதலைத் தடுக்கும் சட்டத்தை அமுல்படுத்து வதுமாகும். அத்துடன், வேலைசெய்யும் சூழல் சட்டவிதிகளை அமுல்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

பொது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்

பொது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன் மத்திய அரசாங்கம்,உள்ளூர் அதிகார சபைகள் போன்றவற்றின் தவறான நிர்வாகம் அல்லது நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பாகச் சுயமாக அல்லது பிரஜைகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகளைப் புலன் விசாரணை செய்யும்.

சிறுவர்களுக்கான ஓம்புட்ஸ்மன்

1981ஆம் ஆண்டிலிருந்து தேசிய, சர்வதேச சிறுவர்கள் பொதுநல விதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நோர்வே தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இதற்காகச் சிறுவர்கள், தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நோர்வே சட்டரீதியான ஒம்புட்ஸ்மன் முறையை உருவாக்கியுள்ளது. சிறுவர்களுக்கான ஓம்புட்ஸ்மனை உருவாக்கியதில் நோர்வே முதலிடத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் ஓம்புட்ஸ்மன்

நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். சந்தைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைச் சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் சுயநலமாக மாற்றுவதைத் தடுப்பது இதன் நோக்கமாகும். நுகர்வோர் ஓம்புட்ஸ்மன், சுயமாக அல்லது ஏனையவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில், வியாபாரிகள் சந்தைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறாது தமது செயற்பாடுகளைச் செய்வதற்குத் தூண்டுதல் வழங்குவார்.

நியூசிலாந்து.

1962ஆம் ஆண்டு நியூசிலாந்து முதன் முதல் ஒம்புட்ஸ்மன் முறையை நிறுவிக்கொண்டது. நியூசிலாந்து ஒம்புட்ஸ்மன் அமைப்பில், டென்மார்க் ஒம்புட்ஸ்மன் முறையின் செல்வாக்குக் காணப்பட்டிருந்தது. இங்கு ஒம்புட்ஸ்மன் பாராளுமன்றத்தின் சிபார்சுக்கு இணங்க ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார். அமைச்சர்களால் செய்யப்படும் சிபார்சுகளை இவர் புலன் விசாரணை செய்யலாம். அல்லது இயற்றப்பட்ட சட்டங்கள் அல்லது தவிர்க்கப்பட்ட நிர்வாக விடயங்கள் மீது இவர் விசாரணை செய்ய முடியும். ஆயினும், நிர்வாக அதிகாரங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நீதிமன்ற விசாரணைகளில் தலையிடுகின்ற அதிகாரம் இவருக்குக் கிடையாது.

ஐக்கிய இராச்சியம்.

1967ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் ஒம்புட்ஸ்மன் முறையை உருவாக்கியது. விஸ்தரிக்கப்பட்ட சமூக,பொருளாதாரச் செயற்பாடுகள்,மரபு ரீதியான வெஸ்ற்மினிஸ்ரர் அரசாங்க முறைகளுடன் இணைந்து செயற்படுவதைக் கண்காணிக்கப் புதிய நிர்வாக அமைப்புக்கள் தேவைப்பட்டன. இதனால் நிருவாகத்துக்;கான பாராளுமன்ற ஆணையாளர் (Parliamentary Commissioner for Administration – PCA) என்ற ஒருவரை ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, வேல்ஸ்) உருவாக்கிக் கொண்டது. அரசாங்கத்தின் சிபார்சுக்கிணங்க முடியினால் பாராளுமன்ற ஆணையாளர்; நியமிக்கப்படுவார். இவருடைய உத்தியோகபூர்வக் கடமை ஐக்கிய இராச்சியத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், அதன் முகவரகங்கள், ஏனைய பொது நிறுவனங்கள் முறையாகச் செயற்படவில்லை அல்லது நீதியாகச் செயற்படவில்லை அல்லது மோசமான சேவையை வழங்குகின்றன எனக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடாகவே எல்லா முறைப்பாடுகளும் செய்யப்பட வேண்டும். நேரடியாக முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இந்த நடைமுறையானது, அரசுக்கு எதிராகத் தனியாள் ஒருவர் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகத் தடுக்கும் மரபை இது பாதுகாப்பதாக உள்ளது. இவ்வேற்பாடு ஒம்புட்ஸ்மனைத் தனிமைப்படுத்தி மக்களை அவமதிப்பதாகும் எனக் கூறப்படுகிறது.

இன்று ஐக்கிய இராச்சியத்தில் ஒம்புட்ஸ்மன் முறை அபிவிருத்தியடைந்து விரிவாக்கம் பெற்றுள்ளது. சில துறைகளுக்குத் தனியான ஒம்புட்ஸ்மன் முறை உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுடமை சமூகத்திற்கான ஓம்புட்ஸ்மன் (Estate Agents Ombudsman)

  • நிதி ஓம்புட்ஸ்மன் சேவை
  • சுகாதார சேவை ஓம்புட்ஸ்மன்
  • வீடமைப்பு ஓம்புட்ஸ்மன்
  • சுதந்திர பொலிஸ் முறைப்பாட்டு ஓம்புட்ஸ்மன்
  • சட்ட சேவை ஓம்புட்ஸ்மன்
  • உள்ளூராட்சி அரசாங்க ஓம்புட்ஸ்மன்
  • வட அயர்லாந்து ஓம்புட்ஸ்மன்
  • வட அயர்லாந்து பொலிஸ் ஓம்புட்ஸ்மன்
  • பாராளுமன்ற ஓம்புட்ஸ்மன்
  • ஓய்வூதிய ஓம்புட்ஸ்மன்
  • சிறைச்சாலை நன்னடத்தை ஓம்புட்ஸ்மன்
  • பொதுச் சேவை ஓம்புட்ஸ்மன்
  • ஸ்கொட்லாந்து சட்டச் சேவை ஓம்புட்ஸ்மன்
  • ஸ்கொட்லாந்து பொதுச் சேவை ஓம்புட்ஸ்மன்
  • தொலைத் தொடர்பு ஓம்புட்ஸ்மன்

ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்கா பல வருடங்களாக ஒம்புட்ஸ்மன் அமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது. மாநில மட்டத்திலும், சமஷ்டி மட்டத்திலும் காலத்திற்குக் காலம் பல பிரேரணைகள் இது தொடர்பாக முன் மொழியப்பட்டுள்ளன.

ஆயினும் 1969ஆம் ஆண்டு முதன் முதலில் ஹவாய் மாநிலம் ஒம்புட்ஸ்மனை உருவாக்கிக் கொண்டது. இவர் மாநில சட்டசபையினால் தெரிவு செய்யப்படுவார். உள்ளூராட்சி மன்றங்கள், மாநில அரசாங்கம் என்பவற்றுக்கு எதிராகப் பொது மக்களால் செய்யப்படும் முறைப்பாடுகளை இவரால்பெற்றுக் கொள்ள முடியும். மேயர் அல்லது ஆளுநரின் தீர்மானங்களை மாற்றும் அதிகாரம் இவருக்கில்லை. ஆனால் பாரபட்சம் அல்லது அநீதி இழைக்கப்பட்டிருந்தால், வெளிப்படையாக விமர்சனம் செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டு நெப்பிறாஸ்கா (Nebraska) மாநிலமும், 1972ஆம் ஆண்டு ஐஒவா (Iowa) மாநிலமும், 1975ஆம்ஆண்டு அலஸ்கா மாநிலமும் ஒம்புட்ஸ்மன் அமைப்பை உருவாக்கிக் கொண்டன. இம் மாநிலங்களில் உருவாக்கப்பட்ட ஒம்புட்ஸ்மன் அமைப்புக்களின் இயல்புகள் பொதுவாக ஒத்த தன்மையைக் கொண்டு காணப்பட்டிருந்தன.

ஒம்புட்ஸ்மன் மக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஆயினும் நீதி மன்றங்கள், இராணுவம், உள்@ராட்சி நிறுவனங்கள் மீது விசாரணை செய்ய முடியாது. மேலும் அநேக மாநில அரசுகள் சில விசேட துறைகளுக்கான – கல்வி, வியாபாரப்பகுதி – ஒம்புட்ஸ்மனை உருவாக்கியுள்ளன.

பிரான்ஸ்

1973ஆம் ஆண்டு பிரான்ஸ் முதன் முதலாக ஒம்புட்ஸ்மனை உருவாக்கிக் கொண்டது. இது பெருமளவுக்குப் பிரித்தானிய மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிரான்ஸ்ன் ஒம்புட்ஸ்மன் மக்களிடம் இருந்து நேரடியாக முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதில்லை. பதிலாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றிடம் இருந்தே முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றார். நிர்வாகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கு அதிகமாக வந்து சேர்வதைத் தடுப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

இலங்கை

1978ஆம் ஆண்டு ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பின் அத்தியாயம் 19, சரத்து 156 நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஓம்புட்ஸ்மன்) தொடர்பாகக் கூறுகின்றது. இவர் அரசியல் யாப்புப் பேரவையின் ஆலோசனையுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.

அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகள் இழைக்கும் அநீதி தொடர்பான முறைப்பாடுகள் மற்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வார்.

1981ஆம் ஆண்டு 17ஆம் இலக்கச் சட்டம் மக்கள் நேரடியாக ஒம்புட்ஸ்மனுடன் தொடர்பு கொள்வதைத் தடுத்திருந்தது. இச் சட்டம் பொது மக்கள் விண்ணப்பக் குழு ஒன்றை உருவாக்கியது. பொது மக்கள் தமது பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களூடாக விண்ணப்பக் குழுவுக்கு முறைப்பாடுகளை அனுப்பலாம். இக் குழு தீர்மானித்தால் மட்டுமே முறைப்பாடுகள் ஒம்புட்ஸ்மனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒம்புட்ஸ்மன் விசாரணையின் முடிவுகளைப் பொது மக்கள் விண்ணப்பக் குழுவுக்கு அனுப்பிவைப்பார்.

1994ஆம் ஆண்டு 26 ஆம் இலக்கச் சட்டம் இம் முறையை மாற்றியமைத்தது. இச் சட்டத்தின்படி பொது மக்கள் நேரடியாக ஒம்புட்ஸ்மனுடன் தொடர்பு கொண்டு எழுத்து மூலமான முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.

யூரோ ஓம்புட்ஸ்மன் அல்லது ஐரோப்பிய ஓம்புட்ஸ்மன்

யூரோ – ஓம்புட்ஸ்மன் என அழைக்கப்படும் ஓம்புட்ஸ்மன் ஐரோப்பிய யூனியனுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு ஓம்புட்ஸ்மனை நியமனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் தவிர்ந்த ஏனைய சமூக நிறுவனங்கள், அமைப்புக்களின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக அங்கத்துவ நாடுகளின் பிரஜைகள், சட்டரீதியான வதிவிடப் பிரதிநிதி, ஆகியோர் அங்கத்துவ நாடுகள் கொண்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் ஊடாகச் செய்யும் முறைப்பாடுகளை இவர் பெற்றுக் கொள்ளலாம்.

ஐரோப்பியப் பாராளுமன்ற அங்கத்தவர் ஊடாக அல்லது நேரடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அல்லது தான் சுயமாகவே விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.

சில ஆபிரிக்க நாடுகளின் அனுபவம்

சில ஆபிரிக்க நாடுகள் கூட இவ் ஒம்புட்ஸ்மன் முறைமையால் கவரப்பட்டுள்ளன. 1966ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கண்டத்தில் தன்சானியா ஒம்புட்ஸ்மனை உருவாக்கியது. இது மூவர் ஆணைக்குழு (Three- man Commission) என அழைக்கப்பட்டது. இவர்கள் குடியரசின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள். இதன் முக்கிய கடமைகள் பொது அதிகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களை விசாரணை செய்வதாகும். குறிப்பாக, கடமைகளைச் செய்யாது விடுதல், தன்னிச்சையான முடிவுகள் அல்லது கைதுகள், அதிகார துஷ்பிரயோகம், தாமதம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும். இவர்களது நீதி விசாரணை நீதித்துறைக்கோ இராணுவத்திற்கோ விஸ்தரிக்கப்படமாட்டாது.

தன்சானியாவைப் பின்பற்றி கானா,ஸம்பியா, நைஜீரியா போன்ற நாடுகள் ஒம்புட்ஸ்மன் முறையைத் தோற்றுவித்துக் கொண்டன. மேலும் பிஜி 1972ஆம் ஆண்டிலும் லிபியா 1974 ஆம் ஆண்டிலும் ஒம்புட்ஸ்மனை உருவாக்கிக் கொண்டன.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் காணப்பட்ட ஒம்புட்ஸ்மன் மாதிரிகள் யாவும் அந்தந்த நாடுகளுக்கேயுரிய சமூக பொருளாதார,நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப தோற்றம் பெற்றவைகளாகும் என்ற முடிவுக்கு வரமுடியும். ஆயினும் சுவீடனைப் பின்பற்றியே எல்லா நாடுகளும் தமது சமூக பொருளாதார நிர்வாகத் தேவைகளுக்கேற்ப ஒம்புட்ஸ்மனை வடிவமைத்துள்ளன. இதனால் ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடுகின்ற போது வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது தவிர்க்க முடியாததாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,293 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>