(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.19, 2014.04.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கையில் நடைபெற்ற உக்கிரமான உள்நாட்டு யுத்தம் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர்கள், உள்நாட்டில் இடப் பெயர்ந்தவர்கள் போன்ற நலிவடைந்த மக்கள் வாழ்க்கையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள சூழலில் நலிவடைந்துள்ள இம் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும். அதேநேரம் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத்தில் நீடித்திருக்கக் கூடிய தீர்வுகளைக் காண்பதும் அவசியமாகும். இதன்மூலமே வலுவானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான நல்லிணக்க பொறிமுறையினை உருவாக்க முடியும்.
பெண்கள்
பல்லாயிரம் பெண்கள் தமது கணவன்மாரை உள்நாட்டு யுத்தத்தினால் இழந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பதை அறியமுடியாது வாழ்கின்றனர். பயங்கரமானதும், கஸ்டமானதுமான இத்தகைய நிலைமையிலும் இளம் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கும் இப்பெண்கள் ஆதரவளித்து வருகின்றனர்.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 59,501 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்கின்றன. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினுடைய தகவல் மூலங்களின்படி 42,565 குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலும், 16,936 குடும்பங்கள் வட மாகாணத்திலும் வாழ்கின்றனர். பெண்களை குடும்பத் தலைவர்களைக் கொண்ட கணிசமான குடும்பங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் வாழ்கின்றன.
மேலும், கெயர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 2,939 விதவைகள் வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி பிரதேசத்தில் அதிகளவு வறிய விதவைகளும், வயோதிபர்களும் வாழ்கின்றார்கள். இப்பிரதேசத்தில் உக்கிரமான யுத்தம் நடைபெற்றதால் சிறுவர்கள், சிறுமிகள், கணவன்மார் மற்றும் வலுவான மக்கள் எல்லோரும் இறந்துவிட்டனர். பலர் தமது குழந்தைகளையும் இழந்துவிட்டனர்.
உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக முக்கியமான சமூகச் சவால்களாகும்.எனவே மிக வறிய நிலையிலுள்ள கணவனை இழந்த பெண்களின் விசேட தேவைகள் முன்னுரிமைக்குரிய விடயங்களாகக் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இப்பெண்களை உதவிகளைப் பெறுகின்றவர்களாக மாத்திரமன்றி அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளின் பங்காளர்களாகவும் நோக்குதல் வேண்டும்.
பெண்களிற்கான காணி உரிமைகள், பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்கான உரிமைகள் என்பன முக்கியமான அம்சங்களாகும். யுத்த காலங்களில் குறிப்பாக 2006ஆம் ஆண்டு மற்றும் 2007ஆம் ஆண்டு காலத்தில் நடமாடுவதற்கான கட்டுப்பாடு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் என்பனவற்றின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இக்காலப்பகுதியில் பட்டினிக்கான சூழ்நிலையும் காணப்பட்டது. வாழ்வாதார உதவி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குவதிலும் தாமதங்கள் காணப்பட்டன. யுத்தத்தினால் தோன்றிய பல்வேறு வடிவங்களிலமைந்த வன்முறைகளுக்கு உட்பட்ட பெண்கள், இதுவரை எந்தவொரு நீதியையும் பெறவில்லை.
ஆயூதப்படைகளின் நடமாட்டம் பாதுகாப்பற்றது எனப் பெண்கள் உணர்வதுடன் மீளக் குடியமர்த்தப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களில் அத்தகைய நடமாட்டம் பெண்களுக்கு மீள் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கவில்லை. சட்டத்திற்கு மாறான ஆயூதக்குழுக்கள் பெண்களைப் பாதிக்கின்ற அநேக மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பாக இருக்கின்றன. இது தன்னிச்சையாக கைது செய்தல், கடத்துதல், காணாமல் போதல், கட்டாயமாக ஆட்சேர்க்கப்படுதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன.
யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது பால் சமநிலை, பெண்களுக்கான உரிமைகள், மற்றும் பெண்களுக்கெதிரான அனைத்து வகை பாரபட்சங்களும் ஒழிக்கப்படுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களது ஏற்பாடுகள், பெண்களின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆவது தீர்மானம் என்பவைகள் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.
பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களின் தேவைகளை பரந்தளவில் வழங்கக்கூடியதும் தேவையான நிவாரணங்களை வழங்குகின்றதுமான பொறுப்புக்களைக் கொண்ட உள்ளக முகவர் செயலணிக்குழுக்களை தாமதமின்றி நிறுவுதல் வேண்டும்.இப்பணியில் உதவுவதற்கு இத்துறையில் நிபுணத்துவத்தைம் மூலவளங்களையும் கொண்டுள்ள சர்வதேச அமைப்புக்கள்,சிவில் சமூகக் குழுக்கள் என்பவற்றைப் பதிவு செய்து இப்பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீண்ட காலயுத்தம், குடும்பத்திலுள்ள ஆண்கள் காணாமல் போனமை என்பவற்றினால் அநேக பெண்கள் தமது முறைசார்ந்த கல்வியை தொடர முடியாதுள்ளனர். யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் அத்தகைய பெண்கள் முறைசார்ந்த கல்வி அல்லது முறைசாரா கல்வியை அல்லது தொழிற்பயிற்சிக் கல்வியைத் பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். பெண்கள் தாம் பாதுகாப்பான சூழலொன்றில் வாழ்வதாகவும் அவர்களது அடிப்படை மனித கௌரவம் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களை உணரச் செய்வது அவசியமாகும்.
பெண்கள் தமது அன்பிற்குரியவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதனை தெரிந்து கொள்ளும் உரிமையைக் கொண்டிருப்பதனாலும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கான சட்ட ரீதியாக பாரிகாரத்தினை தேடும் உரிமையைக் கொண்டிருப்பதனாலும் இவற்றை அங்கீகரிக்கின்ற விதத்தில் இப்பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து இப்பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானதாகும். இது எந்தவொரு வெற்றிகரமான நீடித்து நிலைக்கக்கூடிய, அனைத்தையுமுள்ளடக்கிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான முற்தேவைப்பாடுகளாக அமைந்துள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆணைக்குழு மேற்கொண்ட கள விஜயங்களின் போது சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பாக பலர் கருத்துக்கூறிள்ளனர். பெற்றோர்களின் கருத்துப்படி இந்த சிறுவர் கள் எங்கிருக்கின்றனர் என்பது இதுவரை தெரியாதுள்ளது.
சிறுவர்களைக் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்தமை தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சட்ட விரோத செயற்பாடாகும். சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதற்காக அரசசார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்விற்கும், குடும்பங்களுடன் அவர்களை மீளவும் இணைத்துக் கொள்ளவும் பயன்படுத்திய அடிப்படை அணுகுமுறைகளை சிறுவர் நன்னடத்தை மற்றும் கவனிப்பு ஆணையாளர் பின்பற்ற ஆணைக்குழு விதந்துரைத்துள்ளது.
சிறுவர்கள் போராளிகளாகச் சேர்க்கப்பட்டமைக்கான முதல் சான்று கிடைக்கும் சந்தர்ப்பத்தில், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு குற்றமிழைத்தோர் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும். ஆயுத மோதல்களுக்கு உட்பட்ட சிறுவர்களைக் கையாள்வதில் அறிவு, அனுபவம் மிக்க யூனிசெவ், ஐக்கியநாடுகள் சபையின் முகவர்கள், சHவதேச செஞ்சிலுவைச் சங்கம், அரச சாHபற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் போன்றவற்றிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பாக அரசாங்கம் ஆராய வேண்டும். இப்பின்னணியில்,யுனிசெவ்வின் உதவியுடன் குடும்பங்களை கண்டுபிடித்து மீள ஒன்றிணைக்கும் பிரிவினை அரசாங்கம் உருவாக்கியுள்ளமை சாரியானதொரு நடவடிக்கை என ஆணைக்குழுவானது கருதுவதுடன் சிறுவர் தொடர்பான நம்பகத் தன்மையான தரவுகளையும் பெற்றிருக்கிறது.
சிறுவர்களுக்கு உதவியளிப்பது, குறிப்பாக அவர்களது கல்விக்கு உதவியளிப்பது முக்கியமான முன்னுரிமையினைப் பெறவேண்டும். பாடசாலைகள், ஆசிரியர்கள், பாடசாலை வளங்கள், நிதி மற்றும் புலமைப்பரிசில் போன்ற உதவிகளையும் பரிசீலனையில் கொள்ளுதல் வேண்டும். சிறுவர் இல்லங்கள் மற்றும் அநாதை இல்லங்களுக்கான சிறந்த கல்விசார்ந்த மற்றும் சுகாதார ஏற்பாடுகளும் இம்முயற்சிக்கு இன்றியமையாதனவாகும்.
விசேட கவனம் தேவையான பிள்ளைகளை இனங்கண்டு, இதனை முன்னுரிமை வாய்ந்த விடயமாக கருதி முறைசார்ந்த கல்வி முறையினூடாகவும் அதேபோன்று இப்பிரதேசங்களில் பணியாற்றும் ஏனைய சனசமூக, குடிசார் அமைப்புக் குழுக்களினூடாகவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தேவையானவிடத்து நிபுணத்துவம் வாய்ந்த மனவள ஆலோசனை உட்பட இச்சிறுவர்களுக்கு விசேட கவனமும் கவனிப்பும் வழங்கப்படுதல் வேண்டும். பெண்களைக் குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களில் வசிக்கும் சிறுவர்களை அடையாளம் கண்டு இப்பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது இன்னொரு வழியாகும்.
முதியோர்
யுத்தப் பிரதேசங்களிலுள்ள முதியோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக குடும்பத்தைவிட்டு விலகியுமிருக்கிறார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்படடுள்ள முதியவர்களின் உடல் ரீதியான கஸ்டங்கள், மனஅதிர்ச்சி, பொருளாதார இடர்பாடுகள் பற்றி கூடியளவு கவனம் செலுத்துதல் வேண்டும். முதியோரின் மன அதிர்ச்சி தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஆன்மீக மற்றும் கலாசார நடவடிக்கைகளை இலகுவாகவும் தடையின்றியும் கிடைக்கச் செய்வது உதவியாக அமையும். முதியோருக்கு உதவும் செயற்பாடுகளுக்காக நிபுணத்துவம் மற்றும் மூலவளத்துடன் கூடிய சனசமூக மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்காக உள்ளுர் சமய நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குருமார் ஆகியோர் உதவி செய்வதற்கு அரசாங்கம் வசதிசெய்து கொடுக்க வேண்டும்.
ஊனமுற்றோர்
உள்நாட்டு யுத்தத்திற்குள்ளான பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நேரடித் தாக்கத்தின் விளைவாக மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் பெரும் எண்ணிக்கையான உடல் ஊனமுற்றோர்கள் வாழக்கூடும். எனவே அவர்களது பொருளாதார, சமூக, கலாசார, ஆன்மீகத் தேவைகள் அதிகாரிகளின் விசேட கவனத்திற்குரியனவாகும். கிளிநொச்சியிலுள்ள பல உடல் ஊனமுற்றவர்களின் சார்பில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்களால் நடக்கமுடியாமல் இருந்தமையினால் இக்கூட்டத்திற்கு வரமுடியாமல் இருந்தது. இதனால் சில உதவிகளை வழங்குவதற்கு ஒழுங்குகளைச் செய்யுமாறு ஆணைக்குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சாட்சியளித்த ஒருவாரின் கருத்துப்படி ‘சேவாலங்கா மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதில் பங்காற்ற முடியும் எனினும் அவை இப்பிரதேசத்திற்கு வரவில்லை. அவை வவுனியா வரை மட்டுமே பணியாற்றின”.
உடல் ஊனமுற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களது குடும்பத்தின் வருவாய் ஈட்டுவோராக இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவி வழங்குவது அவசரத் தேவையாக உள்ளது. ஊனமுற்ற மக்களுக்கு உதவியளிப்பதில் அனுபவத்தினையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்புக்களிடமிருந்தும் சிவில் அமைப்புக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
நல்லிணக்கம்
நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய தேவையுள்ளது. அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் இப்பெண்களுக்கு பின்னால் முழுமையாக இருக்கின்றார்கள் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தில் சிறுவர்களுக்கு மனோதத்துவப் புனர்வாழ்வினை வழங்குதல், அவர்களின் பிரச்சினைகளை ஆன்மீக கோணத்திலிருந்து நோக்குவதுடன் ,அவர்களை அவர்களுடன் தொடர்புடைய சமய பின்னணிக்கு உட்படுத்துவது, சமூக – மீள் இணைப்பு புனர்வாழ்வு செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் இக்காலப்பகுதியில் அவர்களை அவர்களது குடும்பத்துடன் மீளச் சேர்த்து வைக்கமுடியும். ஆரம்ப கல்வியைப் பெற முடியாமல் போன சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி புனர்வாழ்வினை வழங்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதை ஆணைக்குழு வலியுத்தியூள்ளது.
உடல் ஊனமுற்ற மக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட உரிமைகளுக்கு சமமாக உடல் ஊனமுற்ற மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் தேசிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள உடல் ஊனமுற்ற பெருந்தொகையான மக்களைப் பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச உதவிகள் உட்பட பல விடயங்களில் சாதகமான தாக்கமொன்றினை உருவாக்கலாம் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.