(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.16, 2014.08.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
1947 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 15 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தெற்காசியாவிலும், பூகோளளவிலும் தனது பொருளாதார, இராணுவ பலத்தினை நிலைப்படுத்திக் கொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வல்லரசு நிலையினையடைதல் என்ற மேற்கோள் (Mottos) வாசகம் பிரதான இடத்தினை பிடித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு புதிய உலக அதிகார ஒழுங்கு விசைப்பண்பிற்கு ஏற்றகையில் சில முன்நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. முதலாவதாக் உள்நாட்டு சமூக,பொருளாதார,அரசியல் தளத்தில் இந்தியா உறுதித்தன்மையினைப் பேணிக் கொள்ளுதல் வேண்டும். இரண்டாவதாக பூகோள வல்லரசாகிய அமெரிக்காவுடனும், அயல்நாடுகளாகிய பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் நல்லுறவினை பேணிக் கொள்ள வேண்டும். மூன்றாதாக அணுசக்தி வல்லமை கொண்ட நாடுகளுடன் சமாதான சக வாழ்வினை பேணுவதில் தொடர்ந்தும் ஈடுபாடு காட்ட இந்தியா வேண்டும். அறுபத்தியெட்டாவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் இந்தியா தனது மேற்கோள் வாசகமாகிய வல்லரசு நிலையினையடைதல் என்பதற்காக அதிகாரச்சமனிலை விசைப்பண்பிற்கு ஏற்ப சர்வதேச நாடுகளை கையாளும் தந்திரோபாயங்கள் பிரதான ஆய்வு விடமாகியுள்ளது.
ஆழ்கடல் கடற்படை
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஜவகர்லால் நேரு உருவாக்கிய அணிசேராக் கொள்கையினை பின்பற்றிவந்தது. குறிப்பாக பனிப்போர்காலத்தில் உருவாகிய இடதுசாரி மற்றும் வலதுசாரி இராணுவக் கூட்டுகளுடன் கூட்டுச்சேராமல் நடுநிலை வகித்தல் என்ற கொள்கையினை இந்தியா பின்பற்றியிருந்தது. பனிப்போர் காலத்தில் சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்குப் படைபலத்தினை பிரயோகித்தல் என்ற கொள்கைக்கு இந்தியா தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
பனிப்போருக்குப் பின்னர் தோன்றிய புதிய உலக அதிகார ஒழுங்கில் உலகநாடுகளுடன் பரஸ்பர நட்புறவினை குறிப்பாக அமெரிக்கா, ரஸ்சியா, சீனா,ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளுடன் பேணுவதில் இந்தியா கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக முத்தரப்பு உறவினைப் பேணுவதன் மூலம் இந்நாடுகளுடன் இணைந்து பலமுனை அதிகார உறவினை உருவாக்கவும்,அதில் ஒருமுனையாக இந்தியாவினை உருவாக்கவும் முயற்சிக்கின்றது.
ஆயினும், இந்தியா படிப்படியாக தனது கடற்படையின் வலுவினை அதிகரித்து வருவதுடன்,இந்து சமுத்திரம் முழுவதும் தனக்கான கடல்பாதுகாப்பு வலைப்பின்னலையும், உறவினையும் விஸ்தரித்து வருகிறது.தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள இந்தியா, இதனை யதார்த்தமாக்கிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது.
தனது பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து ஆழ்கடல் கடற்படை வலுவினை இந்தியா பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. சுதந்திர இந்தியாவின் கடற்படை கரையோர பாதுகாப்பு வலுவினை(Brown water) மாத்திரம் கொண்டிருந்தது. இந்தியக் கடற்படையின் தரத்தினை ஆழ்கடல் கடற்படை வலுவாக (Blue water) தரமுயர்த்துவதில் இந்தியா வெற்றியடைந்து வருகின்றது. இதன்மூலம் ஆசியாவில் பலம்பொருந்திய ஆழ்கடல் கடற்படையினை உருவாக்க இந்தியா முயற்சிக்கின்றது. இதற்காக ரஸ்சியாவின் பாவனையிலிருந்த விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை இந்தியா கொள்வனவு செய்து,அதனை புனரமைத்து விக்கிரமாதித்தியா (Vikramaditya) என்ற புதிய பெயரில் 2014 ஆம் ஆண்டு தை மாதம் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
இதன் மூலம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்ட முதல்தர ஆழ்கடல் கடற்படை வலுவினையுடைய ஆசிய நாடாக இந்தியா தன்னைத் தானே பிரகடனப்படுத்தியுள்ளது. 45,400 தொன் இடையுள்ள விக்கிரமாதித்தியா இந்தியாவிடமுள்ள அனைத்து கடற்படை கப்பல்களையும் விட மிகவும் பெரியதாகும். அத்துடன் முதன்மையான பல யுத்த திறன் வாய்ந்த கருவிகளையும், வசதிகளையும் இவ்விமானம் தாங்கிக் கப்பல் கொண்டுள்ளது.
இக்கப்பலின் வருகையின் பின்னர் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களிலிருந்து சமகாலத்தில் உருவாகக்;கூடிய ஆபத்துக்களை இந்தியாவின் ஆழ்கடல் கடற்படை சமகாலத்தில் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது. புதிய விமானம் தாங்கிக் கப்பல் இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டமை மூலம் சர்வதேச கடல்சார்ந்த பாதுகாப்புத் தந்திரோபாயத்துடன் நெருங்கிய தொடர்பினை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விமானப்படையின் வலுவினையும் இந்தியா உயர்த்தி வருகின்றது. இதன்மூலம் தனது எல்லைப்பிரதேசங்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த விமானப்படையினை சர்வதேச தந்திரோபாய நோக்கத்திற்கான விமானப்படையாகவும், இந்தியாவின் கப்பல் போக்குவரத்தினை கண்காணிக்கும் விமானப்படையாகவும் தரமுயர்த்தி வருகின்றது.
பாதுகாப்பு கூட்டுக்கள்
மொறிசியஸ், சீசெல்ஸ், ஓமான், கட்டார், சிங்கப்பூர் போன்ற இந்துசமுத்திரத்திற்குள் நுழைகின்ற நுழைவாயிலிலுள்ள நாடுகளுடன் தனது நட்புறவினை இந்தியா விருத்தி செய்துள்ளது. இவைகளில் சில அரசுகள் இந்தியாவினை தமக்கான பாதுகாப்பு வழங்குனராக ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்தியா இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. மொறிசியஸ், மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு கூட்டுப்பாதுகாப்பினை வழங்குவது மாத்திரமன்றி இந்நாடுகளின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குபவராகவும் இந்தியாவுள்ளது.
இந்தியாவின் தந்திரோபாயச் சிந்தனையில் கடல்சார் தந்திரோபாயம் பாரிய வகிபங்கினை கொண்டுள்ளது. வல்லரசு என்ற அந்தஸ்த்தினை இந்தியா அடைகின்ற போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதன் தந்திரோபாய செயற்பாடுகள் மேலும் விருத்தியடையும். ஐக்கிய அமெரிக்காவுடன் கூட்டுச் செயற்பாடுகளை இந்தியா மேற்கொண்டாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஆதிக்கத்தினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே இந்தியாவின் நீண்டகாலக் கனவாகும். இதற்காக இந்துசமுத்திரப்பிராந்தியத்திலுள்ள பல அரசுகளுடன் குறிப்பாக இந்து சமுத்திரத்தின் தென்மேற்கிலுள்ள மொசாம்பிக் கால்வாய், வடமேற்கிலுள்ள பாரசீகக் குடா, வடகிழக்கிலுள்ள மலாக்கா நீரிணை போன்றவற்றை மையப்படுத்தி இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தியுள்ளது.
இந்துசமுத்திரப் பிராந்திய கரையோர நாடுகளுக்கான பொதுவான கடற்பாதுகாப்பு தொடர்பாக நீண்டகால தந்திரோபாயத்தினை வகுத்து அதன் அடிப்படையில் இந்தியா செயற்பட்டு வருகின்றது. இதன்மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கடற்பாதுகாப்புத் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கான பொறுப்பினை இந்தியா பொறுப்பெடுக்க முயலுகின்றது. இதற்கான திட்டங்களை வரைந்து அவற்றை நடைமுறைப்படுத்த 2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் கூட்டு ஓப்பந்தம் ஒன்றில் இந்தியா,இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுடன் கைச்சாத்திட்டுள்ளது.
கரையோரங்களில் ஏற்படும் எண்ணெய் கழிவுகளால் சூழல் மாசுபடுதலைத் தடுத்தல், நட்புறவினை விஸ்தரித்தல், கடல் பயிற்சி, கடற்கரையோரங்களில் நிகழும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறுதல், கடற்கொள்ளை போன்றவற்றைத் தடுத்தல் தொடர்பாகவும் இவ் ஒப்பந்தம் எடுத்துக் கூறுகின்றது. இந்தியா தனது தேசிய கடற்பாதுகாப்பின் தரத்தினை உறுதியானதொரு நிலையில் பராமரிக்க எண்ணுவதுடன், பிராந்திய அதிகாரச் சமனிலைக்கான ஒரு ஆரம்பமாக இந்தியா இவ் ஒப்பந்தத்தினை பயன்படுத்தவுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு
யுத்த தளபாடக் கருவிகளை உள்நாட்டில் தயாரிக்கின்ற தொழில்நுட்ப ஆற்றலினை உருவாக்கும் தன்னம்பிக்கையினை இந்தியா வளர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றது. இந்திய தயாரிப்பிலான யுத்த தளபாடங்கள் உலகிலுள்ள சிறிய நாடுகளின் பாதுகாப்பிற்காக விற்பனை செய்யப்படுகின்ற வகையில் ஆயுத உற்பத்திப் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதாவது தனது பிராந்தியத்திலுள்ள அயல் நாடுகளுக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யக் கூடிய உற்பத்திப் பொருளாதார வலைப்பின்னலின் மைய நாடாக இந்தியா மாற்றமடைய வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்காலக் கனவாகும்.
நீண்டகாலமாக இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய பூட்டானின் கிழக்கு, மத்திய, மேற்கு பகுதிகளை சீனா உரிமை கோரி வருகின்றது. இப்பிரதேசங்கள் இந்தியாவின் எல்லைப் பிரதேச பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபட்ட பகுதிகளாகும். இது தொடர்பாக பூட்டானுக்கும், சீனாவிற்குமிடையில் இருபது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இதுவரை களையப்படவில்லை.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையிலான நீண்ட கால எல்லைத் தகராற்றில், இந்தியாவின் தந்திரோபாய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூட்டான் அமைந்துள்ளது. ஆயினும் சீனாவிற்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்பு தந்திரோபாய வலைப்பின்னலில் பூட்டானின் வகிபங்கு இந்தியா எதிர்பார்த்தது போன்று பலமானதாக அமையவில்லை என்ற ஏமாற்றம் நீண்டகாலமாக இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்துள்ளது.
இதனால் சீனா தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்தளவிற்கு தரமுயர்த்திக் கொள்கின்றதோ அந்தளவிற்கு இந்தியாவும் தனது பாதுகாப்பு முன்னேற்பாடுகளைத் தரமுயர்த்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. சீனா ஆழ்கடல் துறைமுகங்களை உருவாக்குவதுடன் சீனாவிலிருந்து பாரசீகக்குடா வரையிலான கடல்வழி தொடர்பாடல் வலைப்பின்னல்களையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் இதனை இந்தியாவினைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் தந்திரோபாய சுற்றி வளைப்பாகவே கருதுகின்றனர்.
எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனக்கு நேரடியான போட்டியாளராக சீனாவினையே எதிர் கொள்கின்றது. இதனால் வளர்ச்சியடையும் சீனாவின் பலத்தை தடுப்பதற்கான அனைத்து வழிவகைகள் தொடர்பாகவும் புதிய இந்திய அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனா எங்கெல்லாம் கால்பதிக்கின்றது என்பது தொடர்பாக இந்தியா விழிப்பாக இருப்பதுடன், தனது இராணுவ வலுவினை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
பூகோள வல்லரசுகளுக்கு இடையில் சமுத்திரங்களில் நிகழும் மோதல்கள் தந்திரோபாய நோக்கம் கொண்டவைகளாகும்.தரையில் நிகழவேண்டிய அரசியல் காட்சிநிலைகளை சாத்தியமாக்குகின்ற சூழலை சமுத்திரங்களில் நிகழும் மோதல்களே தீர்மானிக்கின்றன. கடல் ஆதிக்க கனவினைக் காணாத அரசுகளால் வல்லரசாக வளரமுடியாது. வல்லரசுகளாக வளர்ந்துள்ள ஐக்கிய அமெரிக்கா,ரஸ்சியா, பிரான்ஸ், பிரித்தானியா,யப்பான் போன்ற நாடுகள் கடல் சார்ந்த கட்டமைப்புக்கள்,தொழில்நுட்பங்களை விருத்தி செய்துள்ளன. சர்வதேச வல்லரசுகளின் பொருளாதாரத்திற்குத் தேவையான சக்திவள விநியோகத்தில்; கடல் போக்குவரத்து பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது.
ஆசிய நூற்றாண்டில் இந்தியா
ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் இருபத்தியோராம் நூற்றண்டில் ஐக்கிய அமெரிக்காவிடமிருக்கும் பூகோள அதிகாரம் சீனாவிடம் கைமாறிவிடும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புக்கும் மத்தியில் மாறிவரும் வரும் இச் சூழலை இந்தியா எவ்வாறு தந்திரமாக கையாளப்போகின்றது என்ற பரபரப்பும் உலக மக்களிடம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் பங்குபற்றுதல் இல்லாமல் ஆசியாவின் நூற்றாண்டு விரைவாக வளரும் என எதிர்பார்க்க முடியாது.ஆசிய நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சியும், பங்குபற்றுதலும் அவசியானது என்பது மிகவும் தெளிவானதொரு விடயமாகும். இதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய முக்கிய சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவைகளாவன
ஆசியாவின் புவிசார் அரசியலுக்கான தந்திரோபாய தலைமைத்துவத்தினை இந்தியா தந்திரோபாய ரீதியில் பெற்றுக் கொள்வதன் மூலம் அகன்ற தந்திரோபாய பங்காளர்களை உருவாக்க வேண்டும். இப்பங்காளர் உறவு குறிப்பிட்ட வல்லரசு அல்லது வல்லரசுகளை அல்லது அரசுகளை மையமாகக் கொண்டிருக்க கூடாது.
அண்மையில் தோன்றியுள்ள கிழக்காசிய அதிகாரச் சமநிலைப் போட்டியில் இந்தியா வெளிநிலை சமனநிலையாளராகவா? அல்லது உள்நிலை சமநிலையாளராகவா? பணியாற்றுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். அதிகாரச் சமனிலைக் கோட்பாட்டின் ஒரு பண்பாகிய எப்போதும் வெற்றி பெறும் பக்கததுடனேயே அணிசேருதல் வேண்டும்.அதற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்றவாறு தந்திரோபாயப் பங்காளர்களை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய-பசுபிக் கரையோர ஜனநாயக நாடுகளுடன் நடுநிலயான கூட்டுக்களை படிப்படியாக உருவாக்கி சீனாவிற்கும் அதனது பிராந்திய நலன்களுக்கும் இடையில் இறுக்குமான இடைவெளியினை உருவாக்குவதா? அல்லது ஆசியா மாதிரியிலான (pan-Asian) தெளிவான பிரதியீட்டு சர்வதேச முறைமையினை உருவாக்கி அதன் அதிகார மையத்தினை தனதாக்கிக் கொள்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
காலனித்துவ மரபின் மூலம் பெற்றுக் கொண்ட தந்திரோபாயத்தின் அடிப்படையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தாராண்மை மனவுணர்வுடன் இந்தியா செயற்படுவதா? அல்லது அவசியம் ஏற்படும் போது “தலையீடு செய்தல்” என்னும் நிர்பந்த தந்திரோபாயத்தினை பயன்படுத்துவதா? என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாம் இடத்தினை பிடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் இந்தியா, மலாக்கா நீரிணைப் போக்குவரத்தில் முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.இதன்மூலம் கிழக்காசியாவினைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா பங்காற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக அதிகார ஒழுங்கிற்குள் இந்தியாவின் வகிபாகம், தந்திரோபாயம் என்பன புதிய புதிராக மாறியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ முறைமையில் பங்கு வகிக்காத இந்தியா கிழக்காசிய சர்வதேச முறைமையினை சகித்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.