இலங்கையின் உள்ளுராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தியும் அமைப்பும்

இலங்கையில் உள்ளுராட்சி நிறுவனங்கள் புராதன காலத்திலிருந்தே செயற்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலங்களில் சுதேசிய மக்களின் தலைசிறந்த மனிதர்கள் என்று கருதப்பட்ட நிலச்சுவாந்தர்கள் உள்ளுராட்சி நிறுவனங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். உதாரணமாக முதலியார்களைக் கூறிக்கொள்ளலாம்.

பிரித்தானியர் வருகையின் பின்னர் உள்ளுராட்சி நிறுவன அமைப்பு முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பிரித்தானியர் தமது வருமானங்களை உச்சப்படுத்தக்கூடிய வகையில் நிர்வாக அலகுகளை நவீனமயப்படுத்தினர். இதன் விளைவாக உள்ளுராட்சி நிறுவன அமைப்பு முறைமை நீண்ட காலமாகத் தோற்றம் பெற்று அபிவிருத்தி அடைந்திருந்தன. இதனைப் பின்பற்றி பிரித்தானியர் இலங்கையிலும் உள்ளுராட்சி நிறுவன அமைப்புக்களை உருவாக்கியிருந்தனர்.

1865 ஆண்டு இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புக்கள் முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், பிரித்தானியர் தாம் இலங்கையக் கைப்பற்றிய போது காணப்பட்ட உள்ளுராட்சி நிறுவன முறைமை தொடர்பாக விவாதித்து அதிலுள்ள குறைபாடுகளை சீர்படுத்த முயற்சி செய்தனர்.

உள்ளுராட்சி அமைப்புக்களைச் சீர்திருத்த வேண்டிய தேவையானது அரசியல் நவீனத்துவத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாகும். இன்னோர் வகையில் கூறின் அரசியல் நவீனமயவாக்கத்திற்கு உள்ளுராட்சி அமைப்புக்கள் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கியது எனலாம். அரசியல் நவீனத்துவமானது அரசியல் திட்ட அபிவிருத்தியாக எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அந்த அளவிற்கு உள்ளுராட்சி அமைப்புக்களைச் சீர்திருத்துவதும் அவசியமாக்கப்பட்டிருந்தது.

இவ்வகையில் அரசியல் திட்ட அபிவிருத்தியில் பெரும் திருப்பு முனையாகக் கூறப்படும் டொனமூர் அரசியல் திட்டத்தின் வருகையுடன் உள்ளுராட்சி நிறுவனங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. டொனமூர் இலங்கையிலிருந்த காலங்களில் உள்ளுராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து பல முன்னேற்றகரமான பிரேரணைகளை முன் வைத்து அதனை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

1931ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் திட்டத்தில் அரசாங்க சபை தோற்றுவிக்கப்பட்டது. இதிலிருந்து மந்திரி சபை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. டொனமூர் யாப்பு ஒவ்வொரு அமைச்சின் பொறுப்புக்களையும் வரையறுத்துக் கூறியதனால், அமைச்சுக்களின் தனிப்பட்ட பொறுப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஓவ்வொரு அமைச்சரின் கீழும் தனித்தனியான திணைக்களங்கள் செயற்படத் தொடங்கின. உள்ளுராட்சி நிறுவனங்களை புதிய அரசியல் திட்டத்திற்கு ஏற்ப மறுசீரமைக்க வேண்டிய தேவைகளும் ஏற்பட்டன. இவ் உள்ளுராட்சி நிறுவனங்கள் மறு சீரமைக்கப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி அமைச்சுத் திணைக்களத்தின் கீழ் செயற்பட்டன.

அரசாங்க முறைமைக்குள் இயங்கிய உள்ளுராட்சி அமைச்சு பல முக்கிய மாற்றங்களை உள்ளுராட்சி நிறுவனங்களின் அமைப்பில் ஏற்படுத்தியது. இதன் படி 1924ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “கிராமக் குழுச்சட்டம்” 1932, 1933, 1938 ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டது. கிராமக்குழு முறையிலிருந்த பரம்பரை உரிமை என்பது இச்சட்டங்களால் இல்லாதொழிக்கப்பட்டது.

டொனமூர் குழுவின் வருகைக்கு முன்னர் கிராமிய மட்ட நிர்வாகங்களுக்குப் பொறுப்பாக முதலியார்களே இருந்தனர். இவர்கள் பெரும் நிலச் சுவாந்தர்களாக இருந்ததுடன், பரம்பரை, பரம்பரையாகச் செல்வம் படைத்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் கிராமிய நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தனர். இவ் அமைப்பானது டொனமூர் குழு இலங்கை வரும்வரை மற்றியமைக்கப்படாமல் இருந்தது.

1932ஆம் ஆண்டு கிராமக் குழுத்திருத்தச் சட்டத்தின் படி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிராமக்குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இக் கிராமக்குழு அங்கத்தவர்கள் கிராமிய மக்களிடமிருந்து வரிகளைச் சேகரித்தல், பொதுச்சுகாதாரத்தைப் பேணுதல், தெருக்கள் அமைத்தல்,பராமரித்தல், பொதுச்சந்தை, நீர் விநியோகம் போன்றவைகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பானவர்களாக இருந்தனர்.

சிறிய நகரங்களில் பட்டினசபைகள் தோற்றுவிக்கப்பட்டன. பெரிய நகரங்களில் நகர சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. அதி பெரிய நகரங்களில் மாநகர சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆரம்ப காலத்திலே கொழும்பு மாத்திரமே மாநகரசபையாக இருந்தது. 1938ஆம் ஆண்டு காலி, கண்டி நகரங்கள் மாநகர சபைகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

டொனமூர் யாப்பின் இறுதிக் காலத்தில் உள்ளுராட்சி நிறுவனங்கள் அமைப்பு ரீதியில் நான்கு வகை அதிகார சபைகளாக மாற்றியமைக்கப்பட்டன. அவைகளாவன, பட்டின சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள், கிராமக் குழுவானது கிராமசபையாக மாற்றியமைக்கப்பட்டது.

ஓவ்வொரு அதிகார சபையும் உள்ளுராட்சி அமைச்சுத் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டன. இம்மாற்றம் இலங்கையில் இதுவரை நிலவி வந்த சுதேசிய அதிகார வர்க்க ஆட்சி முறையினை இல்லாதொழித்தது. டொனமூர் சகாப்த காலத்தில் உள்ளுராட்சி நிறுவனங்கள் அபிவிருத்தியடைந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட, பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்ற நிறுவனங்களாக வளர்சியடைந்தன. இதனால் சோல்பரி பிரபு உருவாக்கிய மந்திரிசபை ஆட்சிமுறையில் உள்ளுராட்சி நிறுவனங்களின் அமைப்பில் பாரியளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவிலிலை.

ஆயினும், சுதந்திரத்தின் பின்னர் உள்ளுராட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வந்த உள்ளுராட்சித் திணைக்களத்தில் காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

1970 களில் பதவி ஏற்ற புதிய அரசாங்கம் உள்ளுராட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த பொதுநிர்வாகம், உள்ளுராட்சி, உள்விவகாரம் என்ற ஓர் அமைச்சையும்,திணைக்களத்தினையும் உருவாக்கியது.இவ் அமைச்சின் கீழ் நகர,கிராமிய திட்டமிடல் திணைக்களம், பொதுப்பதிவாளர் திணைக்களம், உள்ளுராட்சி அமைப்பு ஆணைக்குழு, பொதுச் சேவை, சேமலாபநிதி, ஆசிரியர்கள், விதவைகள் ஓய்வூதிய நிதி, மொழித் திணைக்களம் என்பன அடங்கியிருந்தன.

ஆனாலும், 1975ஆம் ஆண்டு இவ்வமைச்சிலிருந்து உள்ளுராட்சி அமைப்புக்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனியான ஓர் அமைச்சின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இவ் அமைச்சின் கீழ் உள்ளுராட்சி நிறுவனங்கள், அதன் சேவைகள், நகர, கிராமியத் திட்டமிடல்கள், மக்கள் குழுக்கள், தேசிய நீர்வழங்கலும், வடிகால் அமைப்பும், உள்ளுர் கடன்கள், அபிவிருத்தி நிதி போன்றவை ஒப்படைக்கப்பட்டன. ஆயினும், பிரித்தானியர்கள் உருவாக்கியிருந்த உள்ளுராட்சி நிறுவனங்களின் அமைப்பில் பாரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. எனவே இவ்விடத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களின் அமைப்பினை (Structure) விளங்கிக் கொள்வது பொருத்தமாக அமையும்.

இலங்கையில் உள்ளுராட்சி நிறுவனங்களின் அமைப்பு

டொனமூர் சீர்திருத்தக் காலத்துடன் ஸ்திரமடைந்த பிரித்தானிய மாதிரியிலான உள்ளுராட்சி நிறுவனங்கள் காலத்திற்குக் காலம் பல மாற்றங்களை உள்வாங்கியிருந்தது. ஆயினும் பிரித்தானியர்கள் உருவாக்கியிருந்த மாநகரசபைகள், நகரசபைகள் என்பனவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்வில்லை. இலங்கையிலிருந்த உள்ளுராட்சி நிறுவனங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

· மாநகரசபைகள் – 12

· நகர சபைகள் – 39

· பட்டிண சபைகள் – 83

· கிராம சபைகள் – 548

நகரசபைகளுக்கும், பட்டினசபைகளுக்குமிடையில் சனத்தொகைகள் நிலவிஸ்தீரணம் என்பவைகளுக்கு ஏற்ப சிறிய வேறுபாடுகள் காணப்பட்டன. உள்ளுராட்சி நிறுவனங்கள் சட்டக் கோவையின் படி ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவன அதிகாரசபைகளும் ஒரு கூட்டு அமைப்பாகும். இதன் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும். உள்ளுராட்சி நிறுவனங்கள் யாவும் மத்திய அரசின் கீழுள்ள உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும்.

உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளுராட்சி திணைக்களம் உள்ளுராட்சி நிறுவனங்களுக்குப் பொறுப்பானதாகும். உள்ளுராட்சித் திணைக்களத்திற்கு உள்ளுராட்சி ஆணையாளர் தலைமை தாங்குவார். அவருக்கு உதவியாக நான்கு பிரதி ஆணையாளர்கள் அவரின் கீழ் இயங்குவார்கள். இப்பிரதி ஆணையாளர்கள் முறையே

· திட்டமிடலும், மதிப்பும்

· கட்டுப்பாடு

· அபிவிருத்தி

· நிதி

என்பவற்றுக்குப் பொறுப்பானவர்களாகும். திணைக்களத்தின் அமைப்பு வலைப்பின்னலைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்தின் உள்ளுராட்சி நிர்வாகத்திற்கும் பொறுப்பாக பிராந்திய பிரதி உள்ளுராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டார். இவர்களை உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் நெறிப்படுத்துகின்றார். பிரதி ஆணையாளர் தனது தொழிற்பாட்டினை பிரதேச அளவினை (Range System) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்கின்றார். இவ்வகையில் இலங்கையின் மாவட்டங்கள் அனைத்தும் நான்கு வலையங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வலையமும் பிரதேச அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தன. (வரை படம்)

· பிரதேச அளவு A :-

கொழும்பு, களுத்துறை, புத்தளம், குருநாகல் மாவட்டம்

· பிரதேச அளவு B :-

காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தறை மாவட்டங்கள்.

· பிரதேச அளவு C :-

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா,திருகோணமலை, மட்டக்களப்பு,

அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள்.

· பிரதேச அளவு D :-

கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலனறுவை மாவட்டங்கள்.

மாவட்டங்களை இணைத்து, பிரதேசங்களை அளவினைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரதேசத்தினை (Range) கட்டுப்படுத்தி, மேற்பார்வை செய்வதற்கு உள்ளுராட்சி நிறுவன தலைமையகத்தில் Range Assistant Commissioner of Local Government என்ற ஒருவர் ஒவ்வொரு Range யிலும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடைய கடமைகளாக பின்வருவன கூறப்பட்டன.

· பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களின் பணிளைக் கட்டுப்படுத்துவதும், மதிப்பிடுதலும்.

· நிர்வாகத்தின் தொழிற்பாட்டு உறவிற்கான ஆலோசனை வழங்குதல்.

· உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களின் சிபார்சுகளை மதிப்பிடுதல்.

· உள்ளுராட்சி உதவி ஆணையாளர்களுக்கு எதிரான முரண்பாடுகளை விசாரணை செய்வது.

ஓவ்வொரு மாவட்டத்திலுமுள்ள உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள்,உள்ளுராட்சித் திணைக்களங்களுக்கும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பதிகாரிகளாகவும், தொடர்பாளர்களாகவும் செயற்படுகின்றனர். அத்துடன் அவர்களுடைய மாவட்டத்திலுள்ள எல்லாக் கிராமசபைகள், பட்டிணசபைகள், நகரசபைகள் தொடர்பான தகவல் மையத்தினை உள்ளுராட்சித் தினைக்களத்தின் சார்பில் பேணிவருகின்றார்கள்.

Regional ACLG உள்ளுராட்சி நிறுவனங்களின் நகரசபைகள், பட்டிணசபைகள், கிராமசபைகள் ஆகிய மூன்று சபைகளை மாத்திரமே கட்டுப்படுத்தக் கூடியவராக இருப்பார். நான்காவது சபையாகிய மாநகரசபைகள் ஓரளவிற்கு தன்னிச்சையான சபைகளாகும். இதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள விதிகள், பெறுமானங்களுக்கு ஏற்ப இவைகள் சுதந்திரமாக இயங்குகின்றன. ஆனால் இச்சபைகள் (மாநகரசபை) தொடர்பான முறைப்பாடுகள், கிடைக்கின்ற போது மாத்திரம் ACLG இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்கின்றார்கள்.

அதிகாரங்கள்

எல்லா உள்ளுராட்சி நிறுவனங்களினதும் அதிகாரங்கள் ஒருமித்த தன்மைகளைக் கொண்டவைகளாகும். இதனால் இவ் அமைப்புக்களுக்கிடையில் சமநிலையும், சீரான உறவினையும் தொடர்ந்து பேணிக்கொள்ள முடிகின்றது. இச்சமநிலையானது தெரு விளக்குகளை அமைத்துப்பராமரித்தல், பொது சுகாதாரம், சுத்திகரிப்பு, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் எனபவற்றின் மூலம் ஏற்படுகின்றது. ஆயினும் சில வகையான அதிகாரங்கள் சபைகளிடம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மாநகர சபைகள்

மாநகர சபைகள் சட்டக் கோவை 46 இற்கு இணங்க, மாநகர சபைகளின் அதிகாரங்கள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

· தனது எல்லைக்குட்பட்ட எல்லா வீதிகளையும், திறந்த வெளிகளையும் பராமரிக்க, சுத்திகரிக்க மாநகரசபைக்கு அதிகாரம் உண்டு.

· தனிப்பட்ட வீதிகளைப் பராமரிக்க, சுத்திகரிக்க, திருத்த மாநகரசபைக்கு அதிகாரம் உண்டு.

· மாநகரசபைகளின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த அதிகாரம் உண்டு.

· பொதுநல சேவைத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் உண்டு. (உதாரணம் நூலகம், பூங்கா, சிறுவர் விளையாட்டுப் பூங்கா)

· மாநகர சபைகள் சட்டக் கோவைக்கு இணங்க தனது எல்லைக்குட்பட்ட மக்களுக்கு தொந்தரவு தரும் விடயங்களை கண்டறிந்து தடுக்க அல்லது முற்றாகத் தடைசெய்ய அல்லது தணிக்க அதிகாரம் உண்டு.

இவற்றைவிட மாநகரசபைகள் சட்டக் கோவை 40 (1) இற்கு இணங்க பின்வரும் அதிகாரங்களும் மாநகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

· நீர் விநியோகம்

· பொதுக்கட்டிடம், தெரு விளக்குகளை அமைத்தல்

· மின்சார விநியோகம்

· சந்தைகளை அமைத்துப் பராமரித்தல்

· பொதுக் குளியல் பிரதேசங்களைப் பராமரிக்கவும், சலவைத் தொழில் செய்யும் இடங்களைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நகரசபைகள்

1939ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சட்டக்கோவைக்கு இணங்க நகரசபைகள் தோற்றுவிக்கப்பட்டன. பொதுவாக நகரசபைகளின் செயற்பாடு மாநகரசபைகளின் செயற்பாடுகளை ஒத்ததாகவே உள்ளது. நகரசபைகள் சட்டக் கோவைகளில், 44 தொடக்கம் 101 வரையிலான விதிகள் பொதுவான கடமைகளை எடுத்துக் கூறுகின்றன. 103 தொடக்கம் 128 வரையிலான விதிகள் பொதுச் சுகாதார செயற்பாடுகளை எடுத்துக் கூறுகின்றன. 129 தொடக்கம் 152 வரையிலான விதிகள் பொதுப் பயன்பாடுடைய சேவைகள் தொடர்பாக எடுத்துக் கூறுகின்றன.

தொகுத்துக் கூறுகின்ற போது நகரசபைகள், பொதுச் சுகாதாரம், போக்கு வரத்துப்பாதைகள் போன்றவற்றை நிர்வகிப்பதற்கான அதிகாரங்களைக் கொண்ட சபைகளாக உள்ளன எனலாம்.

எல்லா நகரசபைகளும் பின்வரும் கடைமைகளை நிறைவேற்ற வேண்டும் என நகரசபைச் சட்டக் கோவை கூறுகின்றது.

· குழந்தை பராமரிப்பு அல்லது பிரசவ விடுதி அமைக்க பிரசவ விடுதிக்கான தாதிமார்களை பயிற்று விக்க வேண்டும்.

· வீட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

· பூமியதிர்ச்சி,பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும்.

· பேக்கரி, உணவு விடுதிகள், சலூன், சந்தைகளை மேற்பார்வை செய்து நெறிப்படுத்த வேண்டும்.

நடைமுறையில் மாநகரசபைகள் மீது மத்திய அரசாங்கம் செலுத்தும் கட்டுப்பாடுகளை விட, நகரசபைகள் மீது செலுத்தும் கட்டுப்பாடு அதிகமாகும். உள்ளுராட்சி அமைச்சர் நகரசபைகளுக்கான பொதுவான விதிகளை இயற்றவும், புதிய திட்டங்களை, கொள்கைகளை அறிமுகப்படுத்தவும் அதிகாரம் பெற்றுள்ளார்;.

பட்டிணசபைகள்.

1946ஆம் ஆண்டு, இலங்கையில் பட்டிணசபைகள் சட்டமூலம் இலக்கம் 3 இற்கு இணங்க பட்டினசபைகள் உருவாக்கப்பட்டன. பட்டினசபைகள் அமைப்பும், தொழிற்பாடும், கடமைகளும் மாநகரசபையை ஒத்ததாக உள்ளன. பொதுச் சுகாதாரம், பொது நலசேவைகள் என்பவைகளை மேற்கொள்வதே பட்டினசபைகளின் நோக்கமாகும். உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நகரசபைகளை விட பட்டினசபைகளில் கூடிய அதிகாரங்களைச் செலுத்தி வருகின்றார்.

கிராம சபைகள்

1961ஆம் ஆண்டு கிராம சபைகள் சட்டம், நாட்டில் இயங்கிய கிராமிய சங்கங்களை கிராம சபைகளாக மாற்றியமைத்தது. கிராமசபை சட்டக்கோவை,கிராமிய சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. கிராம சபை சட்டக் கோவை இல 36 இன்படி ஒவ்வொரு கிராம சபைகளும் தமக்குத் தேவையான பதவிகளை உருவாக்குவதற்கும், காணிகளை விற்க, மாற்ற, வாடகைக்குப் பெறுவதற்கும், ஒப்பந்த வேளைகளைச் செய்வதற்கும்,கிராமிய மட்ட அபிவிருத்தி நிர்மாணப் பணிகளைச் செய்வதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் அதிகாரமும், உரிமையும் பெறுகின்றன.

கிராமச்சபைச் சட்டக் கோவை 37 இன் படி,வரிவசூலிப்பதற்கும், வரி மதிப்பீடு செய்வதற்கும் அதிகாரம் பெறகின்றன. இதனை விட பொது நல சேவைகளாகிய நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார விநியோகம், சந்தைகள், பொதுக் குளியலறைகளை அமைத்தல்,வறியவர்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவைகளும் கிராமசபைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

1977ஆம் ஆண்டின் அரசியல் மாற்றமும், உள்ளுராட்சி நிறுவனங்களும்.

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த துரித பொருளாதார அபிவிருத்தி என்ற இலக்கை அடைவதற்கு ஏற்ப, உள்ளுர் நிர்வாக அமைப்பினை மீளமைத்துக் கொண்டது. துரித பொருளாதார அபிவிருத்தி என்பது பூரணமான மக்களின் பங்களிப்புடனேயே வெற்றி பெற முடியும் என்பதால் மக்கள் பங்களிப்புடனான, அபிவிருத்திக்கான உள்ளுர் நிர்வாக அமைப்புக்கள் தேற்றுவிக்கப்பட்டன. துரித பொருளாதார அபிவிருத்திக்காக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டச் சட்ட சபைகளும், மாவட்ட அமைச்சர்களுடனும் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஒருங்கினைக்கப்பட்டன.

இதற்கு ஏற்ப 1979ஆம் ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்களை அரசாங்கம் மீள் ஒருங்கமைத்துக் கொண்டது. காலம் காலமாக இருந்த நான்கு வகையான உள்ளுராட்சி நிறுவனங்கள் மூன்று வகையான நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டன. அவைகளாவன.

· மாநகர சபைகள்

· நகர சபைகள்

· மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்பனவைகளாகும்.

இத்திட்டத்தின் கீழ் 1978ஆம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட பட்டின சபைகளும், கிராமசபைகளும் இல்லாதொழிக்கப்பட்டன. தேவைக்கதிகமான உள்ளுராட்சி நிறுவனங்கள் காணப்படுவதால், கிராமிய அபிவிருத்தி பாதிக்கப்பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டமையே பட்டினசபைகளும், கிராமசபைகளும் இல்லாதொழிக்கப்பட்டதற்கான காரணமாகக் கூறப்பட்டது. 1979 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு இணங்க 1980களில் தோற்றுவிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையின் கிராமியப் பிரதேசங்களின் அபிவிருத்திகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆரம்ப காலத்திலிருந்தே கிராமசபை அபிவிருத்திச் சபைகளின் அலுவலகங்களாக மாற்றப்பட்டன.

கிராமசபைகள், பட்டடினசபைகள் இல்லாதொழிக்கப்பட்டமை, அரசாங்கம் உள்ளுராட்சி நிறுவன அமைப்பில் சமமின்மையினை ஏற்படுத்தியது. இதனால்,கிராமிய மக்களுடைய பொது வசதிகள் பாதிப்படையத் தொடங்கின. இது பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அரசாங்கத்திற்குப் பலத்த அழுத்தத்தினைக் கொடுக்கத் தொடங்கியது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயான அழுத்தத்தினை விட, பாராளுமன்றத்திற்கு வெளியேயான அழுத்தத்திற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனால் 1981ல் அபிவிருத்திச் சபைகள் சட்டமூலம் திருத்தப்பட்டு கிராமிய மட்டத்தில் அல்லது கிராமசேவையாளர்கள் மட்டத்தில் கிராமோதைய சபைகளும், உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் பிரதேச சபைகளும் தோற்றுவிக்கப்பட்டமை உள்ளுராட்சி அமைப்பில் மிக முக்கியமான அம்சங்களாகும்.

இவ்விரு நிறுவனங்களும்,ஆரம்பத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத அங்கத்தவர்களிடையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. கிராமோதைய சபை அங்கத்தவர்கள் கிராம மட்டத் தொண்டர் நிறுவனங்களின் அங்கத்தவர்களை ஒன்று கூட்டி அவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களிலிருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் செயலாளராக திட்ட அமுலாக்க அமைச்சினால் நியமிக்கப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் கடமையாற்றினார்.

பிரதேச சபை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுமுள்ள கிராமோதய சபைத் தலைவர்கள் எல்லோரும் பிரதேச சபையின் அங்கத்தவர்களாக்கப்பட்டனர். இதன் தலைவர் இவ்வங்கத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். இதன் செயலாளராக உதவி அரசாங்க அதிபர் கடமையாற்றினார்.

ஆபிவிருத்திச் சபைகள் திருத்தச் சட்டமூலத்தின் படி, பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படும் தலைவர் அரசாங்க உத்தியோகத்தராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இருக்கக் கூடாது. இவ்வொழுங்கு அவசியமானதாகும். பிரதேசசபைத் தலைவர் என்ற பதவியினூடாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது எதிர்கால வாக்குப்பலத்தைத் தீர்மானிக்கவோ, தனது அரசியல் தேவைக்குப் பிரதேசசபையினைப் பயன்படுத்தவோ முடியாதிருக்கும். இவ்வாறானதொரு ஒழுங்கு இருக்குமானால், பிரதேச சபைகள் நீடித்திருக்கக் கூடியதாக இருக்கும். எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

1987ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட மாகாணசபை முறைமை உள்ளராட்சி நிறுவனங்களை பூரணமாக மாற்றியமைத்துக் கொண்டது. உள்ளுராட்சி நிறுவனங்கள் யாவும் மாகாணசபைகள் வசம் விடப்பட்டன. உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதேசசபைகள் தீர்மானம் எடுக்கும் செய்முறைகளில் மக்கள் பங்களிப்பினை மிகவும் துரிதப் படுத்தியிருந்தது. மேலும் எடுக்கப்படும் தீர்மானங்களை கிராமிய மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதிலும் முதன்மை வகித்து வந்தது.

எனவே இதல் கூடுதலான ஜனநாயகப் பன்புகளைப் புகுத்துவதற்காக 1987ஆம் ஆண்டு பிரதேசசபைகள் திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. இச்சட்ட மூலம் புதிய உள்ளுராட்சி முறைமையினை அறிமுகப்படுத்தியதுடன், உள்ளுராட்சி நிறுவன அமைப்பில் ஜனநாயக மரபுகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து பேணப்படவும் வழிவகுத்திருந்தது. திருத்தச்சட்ட மூலத்தின் படி, மாநகர, மாநகர சபைகளுடன் இணைந்து பிரதேச சபைகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கிணங்க 1988 ஆண்டு, ஜனவரி, 01இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டபுதிய சபைகள், தமது நிறுவனங்களைப் பொறுப்பேற்கக் கூடிய வகையில் தேர்தல் நடாத்தப்பட்டது. 08 மாநகரசபைகள் 30 நகரசபைகள், 152 பிரதேசசபைகள் தமக்காகத் தேர்தலை நடாத்தி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள 2 மாநகர சபைகள், 4 நகர சபைகள், 36 பிரதேசசபைகள் நாட்டில் ஏற்பட்டிருந்த சாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக இத் தேர்தல்களை நாடத்தியிருக்கவில்லை.

பாரம்பரியமாக இலங்கையில் இயங்கி வந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.ஆரம்ப காலத்திலிருந்து மாநகர சபைகள், நகர சபைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. கிராமிய மட்ட அமைப்பக்கள் காலத்துக்குக் காலம் மாற்றியமைக்கப்பட்டன நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் தீர்மானம் எடுக்கும் முறைகளில் மக்களின் பங்களிப்பினைத் துரிதப்படுத்தக் கூடிய இச்சபைகள் உருமாற்றம் பெற்றுள்ளன.

இங்கிலாந்திலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வு செய்த ரெட் கிளிவ் மட் குழு (Red Cliffe Maud Committee) உள்ளுராட்சி நிறுவனங்கள் தொடர்பாக பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளது.

“பொதுச்சேவைகளை மேற்கொள்வதற்கு உள்ளுராட்சி நிறுவனங்கள் மிகவும் அவசியமானதாகும். இவ் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்களாகக் காணப்பட வேண்டும். சில சேவைகள் மட்டும் மத்திய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அல்லது இச்சேவைகளை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.”

இக்கருத்திற்கு இசைவாக அனேக மேலைத்தேச அரசுகளில் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் யாவும் கல்வி, பொலீஸ், சமூக சேவைகள் போன்ற முக்கிய அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஆனால் இம் முக்கிய துறைகளில் இலங்கையில் காணப்படும் உள்ளராட்சி நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிளான அதிகாரங்களையே கொண்டுள்ளன. அல்லது சில துறைகளில் அதிகாரமின்றியே காணப்படுகின்றது. நியூசிலாந்தில் வீடமைப்பு, மருத்துவம் என்பன உள்ளூட்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்வி மத்திய அரசிடமே உள்ளது. பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை உள்ளுராட்சி நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 1972ஆம் ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்கள் சட்டக் கோவை இவ்வதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்துள்ளது.

இவ்விடத்தில் Ursula K. Hicks இலங்கையில் உள்ளுராட்சி நிறுவனங்கள் தொடர்பாகக் கூறப்படும் கருத்து கவணத்தில் கொள்ளத்தக்கதாகும். “இலங்கையில் பலமான ஓர் உள்ளூட்சி நிறுவனமுறை வளர்ச்சி அடையவில்லை. இலங்கையிலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களுக்குப் பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆரம்பக்கல்வி, பண்ணைகள், சினிமாக் கொட்டகைகள், Taxi சேவை, சமூக, கலாசார நிலையங்கள் போன்றவைகள் உள்ளுராட்சி நிறவனங்களில் பொறுப்பில் விடப்பட வேண்டும்.”

இக்கருத்தை இலங்கையின் அனுபவங்களுடன் ஒப்பிடுகின்ற போது இவ்வகையான அதிகாரச் செயற்பாடுகள் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தேவையதனதாக இருக்கின்றது என்ற ஓர் வாதமும், தேவையில்லை என்ற ஓர் வாதமும் முன்வைக்கப்படுகின்றது. அதே நேரத்தில் வன்முறையும், ஆயுத அச்சுறுத்தலும் நிலவும் நாடுகளில் பொலிஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தும் காணப்படுகின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,469 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>