இலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் திரிசங்கு நிலையில் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.16, 2013.03.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002ஐக்கிய அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியாவினால் கூறப்பட்ட ஆலோசனைகளும் உள்ளடங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பிரேரணை இலங்கை அரசாங்கத்தின் இசைவுடனும், ஆலோசனையுடனும் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக பார்வையிடுபவர்களுக்குரிய விசேட நடைமுறைகளையும், அதிகாரங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையுடன் நட்;புறவினைப் பேணவேண்டிய சர்வதேசச் சூழல் இந்தியாவிற்குள்ளதால், இலங்கைக்கு எதிரான சர்வதேசக் கொள்கையினை வகுக்க இந்தியா விரும்பாது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா சுதந்திரமாகச் செயற்பட்டாலும், இந்தியாவினால் இவ்வாறு சுதந்திரமாகச் செயற்பட முடியாது என்பதே யதார்த்தமாகும். இப்பின்னணியில் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பதை கூர்மையாக அவதானிக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்ற விவாதம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சி ஆகியன இலங்கையில் இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்தியாவினைக் கேட்டுள்ளன.

அதேநேரம் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை தொடர்பாகவும் 2013ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் மேல் சபையில் இந்தியா விவாதம் நடாத்தியுள்ளது.

ஆயினும் இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்து அதன் இறைமைக்கு தீங்கு விளைவிக்க இந்தியா தற்போது முயற்சி செய்யாது என்பதை இவ் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் (Salman Khurshid) தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கையின் இன மோதலில் கடந்த காலத்தில் வலிந்து நுழைந்து கொண்டதால் இந்தியா ராஜீவ்காந்தியின் படுகொலை உட்பட நிறையவே துன்பப்பட்டு விட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு துன்பப்படத் தயாராகவும் இருக்காது. தற்போதைய சர்வதேசச் சூழலில் தனது நட்பு நாடு ஒன்றினை சர்வதேச அரங்கில் தண்டிக்கவும் இந்தியா விரும்பாது. பதிலாக நட்பினைப் பேணவே விரும்பும்.

இச்சூழலில் தனக்கு எதிரானதொரு நாடாக இலங்கைகையை இந்தியா கருதுமானால், இந்தியா தனக்குள்ள வேதனை, கோபம், ஏமாற்றம், பொறுமையின்மை போன்றவற்றைத் தெரிவிக்கத் தயக்கம் காட்டாது. ஆனால் இலங்கையை நட்பு நாடாக பேணவே இந்தியா விரும்புவதுடன், தனது எதிர்கால நலனுக்கு இலங்கை வழங்கக்கூடிய உதவிகளை கருத்தில் கொண்டு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக மோசமான தீர்மானம் எதனையும் இந்தியா வெளிப்படையாக எடுக்க விரும்பாது.

இந்தியா செய்யக் கூடிய பணிகள்

அரசியல் தீர்வினைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியா தனது முன்மொழிவினை முன்வைக்கலாம். இதனூடாக நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றிற்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமைக்கான குற்றச்சாட்டுகளுக்கான, பொறுப்பினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அல்லது தயக்கம் காட்டினால் இந்தியா இது தொடர்பாக எவ்வித கடுமையான ராஜதந்திர நகர்வுகளையும் செய்யாது.

இந்தியாவின் பிரதம மந்திரி மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகதி லோக் சபாவில் நிகழ்த்திய உரையில் ‘இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதமாகச் செயற்படுதல் என்பவற்றில் இந்தியா மிகவும் உறுதியான செயற்பாட்டினை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பதின்மூன்றாவது திருத்தத்தினை இலங்கை முழுமையாக அமுல்படுத்துவதுடன், அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். வட மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவதுடன், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையையும், செயற்திட்டத்தினையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது இந்தியா வலியுறுத்திக் கூறியிருந்தது.

எதிர்வரும் காலங்களில் இந்தியாவினால் சில விடயங்களை மாத்திரமே தொடர்ந்து கூறிக்கொள்ள முடியும். அவைகளாவன

  1. இலங்கை தமிழ் மக்களின் இனமோதலைத் தீர்விற்கு கொண்டு வருவதற்கு பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்ததொரு அடிப்படையாகும். எனவே இதனை கைவிடுவது என்பது பொருத்தமான ராஜதந்திரமாக இருக்க முடியாது.
  2. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இலங்கைக்குக் கிடைத்திருக்கும் பிறிதொரு சந்தர்ப்பம இதுவாகும்.
  3. இலங்கை தமிழ் மக்களிற்கு நீதி, கௌரவம், சமத்துவம் என்பன கிடைப்பதற்கு இந்தியா தன்னால் செய்யக் கூடிய அனைத்து பணிகளையும் செய்யும் எனத் தொடர்ந்து கூறிக் கொள்ளும். அத்துடன் தனது பணியை நிறுத்திக் கொள்ளும்.
  4. இலங்கையில் நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வினையும் அடைவதற்கு தேவையான முன்நகர்வினை இலங்கை எந்தளவில் செய்கிறது என்பதனையும் இந்தியா அவதானித்து வருகிறது.

எனவே ஐக்கிய அமெரிக்காவின் பிரேரணையில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், நீதி, சமத்துவம் போன்ற விடயங்களைச் சர்வதேச குழு ஒன்று மேற்பார்வை செய்ய வேண்டும் என கோரினாலும், இவ்வாறான கோரிக்கைக்கு இந்தியா வெளிப்படையாக இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை.

பொறுப்புக் கூறுதலும் இறைமையும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்த காலத்தில் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் தேவை என அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டுள்ளமைக்கான விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சார்பில் விசேட புலனாய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவதை இந்தியாவும் விரும்பாது. இவ்வாறானதொரு குழு நியமனம் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டால் இதனால் இந்தியாவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்வாறான அழைப்புக்களை இந்தியா தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களாகவே கருதுகின்றது. ஏனெனில் இறுதி யுத்தத்தில் இந்தியா வகித்த வகிபாகம் மிகவும் அதிகமாகும். இதனை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய பேட்டி உறுதிப்படுத்திள்ளது.

இப்பேட்டியில் இவர் ‘யுத்தக்களத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பூரணமாக அழித்தொழிக்கப்படுவதைப் நேரடியாகப் பார்ப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. ஆகவே நான் நம்புகின்றேன் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக இந்தியாவிற்கு நன்கு தெரியும். ஏனெனில் பாராட்டப்படக்கூடிய சிறந்த புலனாய்வாளர்களை முற்றுகைக்குள்ளாகியிருந்த யுத்தப்பிரதேசத்திற்குள் இந்தியா வைத்திருந்தது’ எனக் கூறியுள்ளார். எனவே இந்தியாவின் அங்கீகாரத்துடன் தான் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்திருந்தது என்பதே உண்மையாகும்.

மறுபக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பிரேரணையினை நடைமுறைப்படுத்தப்படுவது இலகுவானதொரு விடயமல்ல என்ற கருத்து இந்திய அரசாங்கத்திற்குள் மிகவும் பலமாக இருக்கின்றது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த யுத்தங்களில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான பொறுப்பினை யாரும் இதுவரை ஏற்கவில்லை. இந்த யுத்தங்கள் குறிப்பிடத்தக்களவிற்கு சர்வதேச சட்டங்களை மீறியிருந்தன.

எனவே இலங்கையின் இனமோதலுக்கு நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றைப் பற்றியே இந்தியா சிந்திப்பதாக காட்டிக்கொள்ளும். இதற்காக இந்தியா தொடர்ந்தும் பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை மட்டுமே தொடர்ந்து வழங்கும்.

பொறுப்புக் கூறுதல் என்ற விடயமானது ஒரு அரசினுடைய இறைமையுடன் தொடர்புபட்டதாகும். இதனை ஒரு அரசிற்கு வெளியிலிருந்து யாரும் திணிக்கவோ அழுத்தம் கொடுக்கவோ கூடாது. உண்மையில் பொறுப்புக் கூறுதல் என்பது அரசுக்குள்ளேயிருந்து வர வேண்டும். அரசுக்குள்ளிருந்து பொறுப்புக் கூறப்படுகின்ற போதே நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தினை உருவாக்கக் கூடிய பாரிய சந்தர்ப்பத்தை உருவாக்கும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

14,739 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>