(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.25, 2014.01.26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
யூத இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணியாகிய ராபேல் லெம்கின் (Raphael Lemkin) ஜேர்மனியில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிசப்படைகள் மேற்கொண்ட யூத இனமக்கள் மீதான படுகொலைகளை விபரிக்க ஜினோசைட் ; (Genocide – இனப்படுகொலை) என்ற புதியதொரு பதத்தினை பயன்படுத்தியிருந்தார். இவர் Genocide என்ற பதத்தினை புராதன கிரேக்க சொற்பதமாகிய ஜினோ (“Geno”= Race= இனம்) என்ற பதத்தினையும், புராதன இலத்தீன் சொற்பதமாகிய சைட் (“Cide”= Killing = கொலை) என்ற பதத்தினையும் இணைத்து Genocide என்ற ஆங்கிலப்பதத்தினை உருவாக்கியிருந்தார்.
ஐ.நாவும் இனப்படுகொலையும்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1946 ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேசச் சட்டத்தின் விதிகளுக்குள் இனப்படுகொலை ஒரு யுத்தக் குற்றமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தக் குற்றம் என்றால் என்ன? என்பதற்கான சட்டபூர்வமான வரைவிலக்கணத்தினை இத்தீர்மானம் அப்போது உருவாக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கப் பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இனப்படுகொலையினைத் “தடுத்தலும், தண்டனையும்” (Prevention and Punishment) என்றதொரு புதிய தீர்மானத்தினை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணம் முதல் தடவையாக உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்குப் பின்னர், இனப்படுகொலைக்கு எதிரான சட்டத்தினைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இனப்படுகொலை மற்றும் மக்கள் படுகொலை என்ற பதம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
-
உள்நாட்டில் அரசியல்,பொருளாதார காரணங்களினால் திட்டமிடப்பட்டு நடைபெறும் மக்கள் படுகொலை மற்றும் இனப்படுகொலை.
-
ஏதாவதொரு காரணத்தினால் உதவியற்றிருக்கும், ஆயுதபலமற்றிருக்கும் மக்கள் மீது அல்லது இனத்தின் மீது சர்வதேச அரசாங்கம் மேற்கொள்ளும் படுகொலை
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புத் தொடர்பாக 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை தீர்மானங்களின் பந்திகள்,138 மற்றும்,139 ஆகிய இரண்டும் எடுத்துக் கூறுகின்றன. இப்பந்திகள் இரண்டும் 2006 ஆம் ஆண்டு சித்தரைமாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1674 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் “ஆயுத மோதல்களின் போது பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புச் சபைக்கு உள்ளது” எனத் திருத்தப்பட்டது.
இதன்பின்னர் இனப்படுகொலை என்பதற்கான வரைவிலக்கணத்தை 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை “பாலியல் வன்முறை, பாலியல் ரீதியான ஏனைய வன்முறைகள் என்பனவும் யுத்தக் குற்றங்களாகவும், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவும், கருதப்படும் என 1820 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இனப்படுகொலை மற்றும் மக்கள் படுகொலை
இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 174 மில்லியன் மக்கள் (ஆண்கள்ääபெண்கள்ääசிறுவர்கள்) இனப்படுகொலை அல்லது மனிதப் படுகொலைகளால் மரணித்துள்ளார்கள். ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் 21 மில்லியன் மக்களும், சோவியத் ரஸ்சியாவில் லெனின் மற்றும் ஸ்ராலின் பதவிக்காலத்தில் 62 மில்லியன் மக்களும், மாவோ சேதுங் காலத்தில் 35 மில்லியன் மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பல இலட்சம் மக்கள் சித்திர வதைக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதுடன்,தமது இருப்பிடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையினைத் தடுப்பதற்கு முனைப்பான பல செயற்பாடுகளைச் செய்து வந்தாலும், இனப்படுகொலையும் மக்கள் படுகொலையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்களை உதாரணமாக காட்ட முடியும்.
மக்கள் படுகொலைகளைத் தடுக்கும் சபை
2012 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மக்கள் படுகொலைகளைத் தடுக்கும் சபை என்ற பெயரில் புதிய சபையொன்று ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் உருவாக்கப்பட்டது. இச்சபை இனப்படுகொலை மற்றும் மக்கள் படுகொலைகளைத் தடுப்பதற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் அறுபத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த யூதர்கள் படுகொலை இருபது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ரூவென்டா இனப்படுகொலை என்பவைகளுக்குப் பின்னரும், இனப்படுகொலை மற்றும் மக்கள் படுகொலைகளைத் தடுக்கும் வகையிலான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை சிரியா மற்றும் சூடான் நாடுகளில் நடைபெற்ற மக்கள் படுகொலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மக்கள் படுகொலை மற்றும் இனப்படுகொலை செய்யும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கும், சமாதானத்தை உருவாக்குவதற்கும் இதன்மூலம் நீதியான உலக சமுதாயத்தினை உருவாக்குவதற்குமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும், விசாரணை செய்வதற்கும் சர்வதேச சமூகம் தயாராவதற்கு இன்னமும் எவ்வளவு காலம் செல்லும் என்பதை அல்லது இன்னமும் எத்தனை தடைகளைத் தாண்டி சர்வதேச சமூகம் முன்னேற வேண்டும் என்பதை சரியாக கணிப்பிட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. ஏனெனில் மக்கள் படுகொலைகள் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் அண்மைக்காலங்களில் மக்கள் படுகொலைகள், இனப்படுகொலைகள் செய்கின்ற குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி பொறுப்புக்கூறவைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் பல்வேறு பொறிமுறைகளை உருவாக்கி செயற்படுத்தி வருகிறது. இவ்வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பிராந்திய தீர்ப்பு மன்றம், உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்ற பொறிமுறைகளை சர்வதேச சமூகம் உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
2002 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. யுத்தக் குற்றம், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம்,இனப்படுகொலை போன்றவற்றினை விசாரிக்கும் பொறுப்பினை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கங்கோ, சூடான், லிபியா, கென்யா, உகண்டா போன்ற நாடுகளில் நடைபெற்ற யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளது. இவ்வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான சின்னமாக கருதப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்படுவதற்கு முன்னர், சர்வதேச நீதிமன்றம், தீர்ப்பு மன்றம் என்பன உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாடு ஒன்றினுள் சர்வதேச மனிதாபிமானச்சட்டம் மிகவும் கொடூரமாக மீறப்பட்டமை அல்லது இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டிற்குள்ளாக்கப்பட்டவர்கள் மீது விசாரணை நடாத்த முயற்சித்தது.கம்போடியா, யுகோஸ்லேவேக்கியா,ரூவென்டா போன்ற நாடுகளில் நடைபெற்ற மனிதப்படுகொலைகளை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை பல நீதிமன்றங்களையும், தீர்ப்பு மன்றங்களையும் உருவாக்கி விசாரணை செய்துள்ளமை கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
லைபீரியா, குவாட்டமாலா, ஆர்ஜன்ரீனா, எல்சல்வடோர்,தென்ஆபிரிக்கா உட்பட முப்பது நாடுகளில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தேசிய நல்லிணக்கத்திற்கு பங்களிப்புச் செய்ய முடிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினருக்கும் உதவி செய்யமுடிந்துள்ளது. மனிதப்படுகொலைகள் தொடர்பான உண்மைகளைத் தேடுவதற்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்கான தகவல் வங்கியாகவும் இது செயற்படுகின்றது.
பாதுகாப்பிற்கு பொறுப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அறுபதாவது வருடாந்த பொதுச் கூட்;டத்தில்; “பாதுகாப்பிற்கு பொறுப்பு” (Responsibility to Protect – R2P) என்ற கொள்கையானது அங்கத்துவ நாடுகள் மற்றும் , சர்வதேச சமூகம் உலக மக்களுக்குப் பொறுப்பு என்ற கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்;பட்டது.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றங்கள்ää இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு ஒவ்வொரு அரசிற்கும் உள்ளது. இவ்வகையில் “நாங்கள் இந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றோம். இதன்படி நாங்கள் செயற்படுவோம்” என இக் கொள்கையினை ஏற்றுக்கொண்ட நாடுகள் உறுதியெடுத்துள்ளன.
அதேநேரம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக சர்வதேச சமூகத்திற்கும் உள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பிலிருந்து ஒரு அரசு தோல்வியடைந்தால் குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் முடிவான படுகொலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் அத்தியாயம் VII ஏற்ப பாதுகாப்பு சபைக்கு ஊடாக சர்வதேச சமூகம் கூட்டாகச் செயற்படமுடியும்.
பாதுகாப்பிற்குப் பொறுப்பு என்ற கொள்கையினடிப்படையில் சர்வதேச சமூகம் பின்வரும் மூன்று விடயங்களுக்குப் பொறுப்பானதாகும்.
-
தடுத்து நிறுத்தும் பொறுப்பு
-
எதிர்வினைப் பொறுப்பு
-
இழந்த நம்பிக்கையினை மீண்டும் பெறுவதற்குப் பொறுப்பு
பாதுகாப்பிற்குப் பொறுப்பு என்ற கொள்கையின்படி மக்கள் படுகொலையினைத் தடுப்பதற்குச் சர்வதேச சமூகம் முதன்மையான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை நிகழ்வதற்கு முன்னர் தடுப்பது அல்லது மோதல் மற்றும் தகராறினை தடுப்பதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு நேரத்தையும், வளத்தையும் ஒதுக்க வேண்டியதும், சர்வதேச சமூகத்தின் சட்டப்படியான கடமையாகும்.
இனப்படுகொலை நிகழக்கூடிய சூழல் இருந்தால் சர்வதேச சமூகத்திற்கு அதற்கான எதிர்வினைச் செயற்பாட்டினைச் செய்யும் பொறுப்புள்ளது. மக்கள் படுகொலைகள் எழுச்சியடையும் போது சர்வதேச சமூகம் அதனைத் தடுப்பதற்கு சாத்தியமான தலையீட்டினையும், நிர்பந்தத்தினையும் செய்யவேண்டும். பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற கொள்கை சிலநேரங்களில் இராணுவத் தலையீடு அவசியமானது என்பதை அங்கீகரிக்கின்றது. ஆனால் தற்பாதுகாப்புத் தேவையுள்ளது எனக் கருதப்படும் சந்தர்பங்களில் மாத்திரமே இராணுவத் தலையீடு செய்ய முடியும். இராணுவத்தலையீடு நிகழ்ந்தால்,தலையீட்டிற்குப் பின்ரான நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கு சர்வதேசசமூகம் பொறுப்பானதாகும்.
இனப்படுகொலைகளைத் தடுத்தல்
ஜேர்மனியில் நிகழ்ந்த மக்கள் படுகொலைகளைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா உட்பட உலகத் தலைவர்கள் “மீண்டும் நிகழாது” என்ற பிரகடனத்தை வெளியிட்டார்கள். ஆனால் இதன்பின்னர், கம்போடியா, பொஸ்னியா,ரூவென்டா மற்றும் சூடான் (டர்பார் – இனப்படுகொலை) இலங்கை போன்ற நாடுகளில் பல இலட்சம் மக்கள் தமது உயிரையும், குடும்பத்தையும் இழந்துள்ளனர். தாய்நாட்டைவிட்டு துரத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் படுகொலை மற்றும் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா பொறுப்பெடுப்பதுடன், அதனைத் தடுப்பதற்குரிய உத்தரவாதத்தினையும் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்திருந்தார். ஆயினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட இவ்அறிவிப்பு அதன்பின்னர்; நிகழ்ந்த மனிதப்படுகொலைகளைத் தடுப்பதில் தோல்வி கண்டுவிட்டது.
இனப்படுகொலைக் குற்றவாளிகள், மக்கள் படுகொலைக் குற்றவாளிகள் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் வெற்றிகரமாக இவற்றினை செய்யமுடியாது. இக்குற்றவாளிகள் இதற்கான பணத்தினை சேமித்துக் கொள்வதற்கான நிதி வலைப்பின்னல்களை உருவாக்கியுள்ளார்கள்.மக்கள் படுகொலைகளுக்கு பயன்படுத்தப்படும் நிதியினை வழங்கும் அரசாங்கங்கள், நிறுவனங்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும். மக்கள்படுகொலைகளுக்கு பயன்படும் நிதிகளுக்கான வங்கிக் கணக்குகளை நிறுத்துவதற்கு உலக நாடுகள் முன்வரவேண்டும்.
இனச்சுத்திகரிப்பு போன்ற மனிதப்படுகொலைகளிலிருந்து தனது நாட்டுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. சட்டத் திறமையின்மையால் மனிதப்படுகொலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசுகள் தோல்வியடையுமானால், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு சர்வதேச சமூகத்திற்குரியதாகும். இக்கொள்கையானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதன்பின்னர் பாதுகாப்பிற்கு பொறுப்பு என்ற கொள்கையாக இது ஏற்றுக் கொள்ளப்படடுள்ளது.
எனவே கொடுங்கோண்மையான ஆட்சியிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட பல இலட்சம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மிக்க தலைவர்களை தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளது. ஏனெனில் எல்லோரும் ஒன்றுபட்டு மக்கள் படுகொலைகளைத் தடுத்து இனப்படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மக்கள் படுகொலைகளைத் தடுத்தல் என்பது முதல்நிலை அரசியல் விருப்பமாக மாறவேண்டும். மக்கள் படுகொலைகள் , இனப்படுகொலைகள் தடுப்பதற்கான சரியான தெரிவினை உருவாக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலும், செயற்பாடுகளும் அவசியமாக்கபடுதல் வேண்டும்.